(உ.வே.சா.வின் என் சரித்திரம் 10 இன் தொடர்ச்சி)

அத்தியாயம் 6
என் தந்தையார் குருகுலவாசம்
 (தொடர்ச்சி)

“இவனுக்குக் கலியாண வயசாகி விட்டது. நல்ல இடத்திலே கலியாணம் ஆகவேண்டும். உங்களுடைய சம்பந்தத்தால் இவனுக்கு நல்ல யோக்கியதை உண்டாகியிருக்கிறது. ஆனாலும் இவனுடைய கலியாணச் செலவுக்கு வேண்டிய பணம் எங்களிடம் இல்லை. நாங்கள் இவனைப் பெற்றதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை. எல்லாப் பொறுப்பையும் நீங்களே வகித்துக்கொண்டீர்கள். உங்களுடைய கிருபையால் இவனுக்குக் கலியாணமாக வேண்டும்.”

“அதைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? ஈசுவர கிருபை எல்லாவற்றையும் நடத்தும்” என்றார் கிருட்டிணையர்.

இந்த வார்த்தை என் பாட்டியார் காதில் அமிர்தம்போல் விழுந்தது. தம் அம்மானது பெருந்தன்மையான குணத்தை உணர்ந்தவராதலின், “இவர் எப்படியாவது கலியாணத்தை நிறைவேற்றி வைப்பார்” என்ற தைரியம் அவருக்கு உண்டாயிற்று. அந்தத் தைரியத்தோடு அவர் உத்தமதானபுரத்துக்குத் திரும்பிச் சென்றார்.

கனம் கிருட்டிணையர் இந்தச் சுபகாரியத்தை சமீன்தார் உதவியைக்கொண்டு நிறைவேற்றுவது மிகவும் சுலபமென்று அறிந்தவர். அதனால்தான் என் பாட்டியாரிடம் அவ்வளவு உறுதியாகப் பேசினார். ஒருநாள் தம் கருத்தை அவர் சமீன்தாருக்குத் தெரிவித்தார். எல்லோரையும் போலத் தெரிவிக்கும் வழக்கந்தான் அவருக்கு இல்லையே. ஒரு செய்யுள் மூலமாக அதனைத் தெரிவித்தார். அந்தச் செய்யுள் ஒரு கட்டளைக் கலித்துறை. அது முற்றும் இப்போது கிடைக்கவில்லை.

“வன்ய குலோத்தமன் இரங்க மகீபன் வரிசைமைந்தா” என்ற முதலடி மாத்திரம் என் சிறிய தந்தையார் எழுதி வைத்துள்ள குறிப்பிலிருந்து கிடைத்தது. கனம் கிரு ட்டி ணையருடைய வேண்டுகோள் நிறைவேறுவதில் தடையொன்றும் உண்டாகவில்லை. கச்சிக் கலியாணரங்கர், கலியாணத்துக்குப் பொருளுதவி செய்வதாக ஏற்றுக் கொண்டார். பெண் நிச்சயமானவுடன் பணம் உதவுவதாக வாக்களித்தார். அது முதல் என் தந்தையாருக்கு ஏற்ற பெண்ணை என் பாட்டியாரும் பாட்டனாரும் ஆராயத் தொடங்கினர்.

இவ்வாறு இருக்கையில் திடீரென்று கனம் கிருட்டிணையருக்கு வறள்வாயு என்னும் ஒருவகை நோய் கண்டது. முதுமையினால் இயல்பாகவே அவருக்கு உடல் தளர்ச்சியும் இருந்து வந்தது. அந்த நிலைமையில் உடையார்பாளையத்திலே இருப்பதைக் காட்டிலும் தம்முடைய ஊராகிய திருக்குன்றத்தில் போய் இருந்தால் நலமென்று அவருக்குத் தோன்றியது. சமீன்தாரிடம் விடைபெற்றுக்கொண்டு திருக்குன்றம் சென்று இருக்கலானார். சமீன்தார் அக்காலங்களில் வேண்டிய பணமும் நெல் முதலியனவும் அனுப்பி உதவி புரிந்தார். தக்கவர்களை அடிக்கடி விடுத்துச் செய்தியைத் தெரிந்து வரச் செய்தார்.

கிருட்டிணையர் திருக்குன்றம் சென்றபோது அவருடன் என் தந்தையாரும் சென்றார். அவர் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் அவருக்கு வேண்டிய பணிவிடைகளை எல்லாம் எந்தையார் செய்து வந்தார். அவருடைய மெலிவைக் கண்டு மிகவும் மனம் வருந்தினார். அவர் தம்மைப் பாதுகாத்து வந்த அருமையை நினைக்கும் போதெல்லாம் விம்மினார்; அவருடைய கட்டு வாய்ந்த அழகிய மேனிகுலைந்து தளர்ந்து வாடுவதைக்கண்டு அழுது புலம்பினார்.

எந்தையாருடைய மன வருத்தத்தைக் கனம் கிருட்டிணையர் அறிந்து, “என்னுடைய வாழ்வு இவ்வளவுதான் என்று தோன்றுகிறது. நான் இராசயோகத்தை அனுபவித்தேன், இனியும் அப்படியே அனுபவிப்பதென்பது இயலாத காரியம். அவரவர்கள் கொடுத்து வைத்ததுதான் அவரவர்களுக்குக் கிடைக்கும். அந்த அளவுக்குமேல் ஒன்றும் கிடைக்காது” என்று சொல்லிச் சிறிது மௌனமாக இருந்தார். பிறகு “அப்பா, வேங்கடசுப்பு ஏட்டை எடு; ஒரு கீர்த்தனம் சொல்லுகிறேன்; எழுதிக்கொள்” என்று கூறிவிட்டு,

“கொடுத்துவைத் ததுவரும் ஏறாசை யால்மிகக்
குறைப்பட்டால் வருகுமோ பேய்மனதே”

என்ற பல்லவியை முதலாக உடையதும் பைரவி இராகத்தில் அமைந்ததுமாகிய கீர்த்தனத்தைச் சொல்லத் தொடங்கினார். எல்லாவிதமான பலமும் போன அந்த நிலையில் அந்த வித்துவானுக்கு இறைவனது தியானந்தான் பயனுடைய தென்ற உணர்வு மேலெழுந்து நின்றது.

“படுத்தால் பின்னாலே கூட வருவாருண்டோ
பயறணீ சரைநிதம் பக்தியாய்த் தொழுதிரு”

என்ற அநுபல்லவியைப் பாடினார். அவர் மனம் உடையார்பாளையம் ஆலயத்திலுள்ள சிவபெருமானாகிய பயறணீசரிடம் சென்றது. மேலே மூன்று சரணங்களையும் பாடி முடித்தார். என் தந்தையார் அக்கீர்த்தனத்தை எழுதினார். அந்த நிலையிலும் அப்பெரியாருடைய சாகித்திய சக்தி முன் நிற்பதை நினைந்தபோது வியப்பும், “இத்தகைய பெரியோரை இழந்து விடுவோமோ” என்று எண்ணியபோது துக்கமும் உண்டாயின. கண்ணில் நீர் வழிய அதை எழுதினார். அதன் பின்பும் கனம் கிருட்டிணையர் தாம் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பந்துவராளி இராகத்தில் சிதம்பரம் ஆனந்த நடராசமூர்த்தி விசயமாக,

“தில்லையப் பாவுனது பஞ்சாட்சரப்படியிற்
சின்மயமாய்த் தினந்தினமும் வந்துதரி சிப்பேன்”

எனத் தொடங்கும் ஒரு கீர்த்தனத்தைச் சொல்லி எழுதச்செய்தார்.

கனம் கிருட்டிணையரிடத்தில் இயல்பாகவே பக்தியுடைய என் தந்தையாருக்கு அவரது இறுதிக்கால நிகழ்ச்சிகள் அதனைப் பன்மடங்கு அதிகமாக்கின. கனம் கிருட்டிணையருடைய உள்ளத்துள்ளே புதைந்திருந்த பக்தி அப்போது வெளிப்பட்டது. அந்தப் பக்தியின் மலர்ச்சியை அதுகாறும் அவ்வளவு விளக்கமாக எந்தையார் கண்டதில்லை. அக்காலத்தில் அறிந்தபோது என் தந்தையாரிடம் முளைத்திருந்த சிவபக்தி வலிவுடையதாயிற்று.

கனம் கிருட்டிணையர் வாழ்க்கை முடிவடைந்தது. அப்போது என் தந்தையார் துடித்துப் போனார். தம் அருமைக் குருவினிடத்தில் அவர் வைத்திருந்த பக்தி அவர் வாழ்நாள் முழுவதும் மங்கவே இல்லை. அடிக்கடி, “அவர்களைப்போல் இனி யாரைப் பார்க்கப் போகிறேன்!” என்று சொல்லுவார். அப்போது அவர் கண் கலங்கும்.

அப்பால் என் பிதா உடையார்பாளையம் சென்று சமீன்தாருடைய ஆதரவிலே இருந்து வரலானார். கனம் கிருட்டிணையருக்குப் பிறகு அவரது தானத்தை வகிப்பதற்கேற்ற சங்கீத வித்துவான் ஒருவரைக் கச்சிக் கலியாணரங்கர் தேடிக் கொண்டிருந்தார். தாளப்பிரசுதாரம் சாமா சாசுதிரிகளின் குமாரராகிய சுப்பராயரென்னும் வித்துவானை வருவித்து அவரைத் தம்முடைய ஆசுதான சங்கீத வித்துவானாக நியமித்துக் கொண்டார்.

என் தகப்பனார் சுப்பராயரிடம் மிக்க பக்தியோடு ஒழுகியும், கனம் கிருட்டிணையருடைய கீர்த்தனங்களைப் பாடி சமீன்தாரையும் மற்றவர்களையும் உவப்பித்தும் வாழ்ந்து வந்தனர். இவ்வாறு அவரும் சமசுதானத்து வித்துவானாகவே சில காலம் இருந்து வந்தார்.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.