(தமிழ்நாடும் மொழியும் 8 தொடர்ச்சி)

தமிழ்நாடும் மொழியும்

கடைச்சங்கக் காலம் தொடர்ச்சி

கரிகாலனைப் பற்றி உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலை என்னும் நூல் பாடியுள்ளார். பொருநராற்றுப்படையும் இவனை நன்கு புகழ்ந்து பேசுகின்றது. இவனது ஆட்சிக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் சிறந்து விளங்கியது. இத்துறைமுகத்தில் அயல் நாட்டுக் கப்பல்கள் பல வணிகத்தின் பொருட்டு வந்துசென்றன. வெளிநாட்டு வணிகர் பலர் இவ்வூரில் வந்து குடியேறினர். வெளிநாடுகளிலிருந்து பல பொருள்கள் வந்து இந்நகரில் குவிந்தன. தமிழ்நாட்டுப் பொருள்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. மேலும் இப்பெருநகர் சோழர் தம் தலை நகராகவும் விளங்கியது. இந்நகர் திண்ணிய மதிலினையும், புலி அடையாளம் பொறிக்கப்பட்ட வலிய கதவுகளையும், பல உணவுச் சாலைகளையும், பலவகை ஓவியங்கள் தீட்டப்பெற்ற வெண் சுவருடைய கோவில்களையும், அமணப்பள்ளிகளையும், குளங்களையும், முனிவர் தங்கும் இளமரக்காவினையும், காளி கோட்டத்தையும் கொண்டு விளங்கியது.

பட்டினப்பாக்கத்தில் பரதவர் வாழ்ந்தனர். இவர்கள் உயர் நிலை மாடங்களிலிருந்து செல்வ மகளிர் பாடும் பாடல்களைக் கேட்டு மகிழ்வர். மாடங்களில் எரியும் விளக்குகளின் உதவியால் அவர்கள் வைகறையில் கட்டுமரங்களிற் செல்வர். இவர்கள் வாழும் அகன்ற தெருவில் உள்ள பண்டகசாலை முற்றத்தில், சுங்கம் மதிப்பிடப்பட்டு, புலி முத்திரை இடப்பட்ட ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்கள் குவிந்துகிடக்கும்.

பட்டினக்கடைத்தெருவில் வாயில்கள் தோறும் பலவகைக் கொடிகள் இரண்டு வரிசைகளிலும் கட்டப்பட்பட்டிருக்கும். மிளகு, பொன், சந்தனம், அகில், முத்து, பவளம் பிறவும் எங்கும் மிகுதியாகக் காணப்படும். வெளி நாட்டார் பலரும் பட்டினத்தில் குடியிருப்பர். இந்நகர்வாழ் வேளாளர் அருள் ஒழுக்கம் நிறைந்தவராகவும், வணிகர் நடுநிலை பிறழாத நெஞ்சினராகவும் விளங்கினர். அதிகாலையில் மகளிர் பக்திச்சுவையுடைய பாடல்களைப் பாடுவர். கோவில்களில் குழல், யாழ், முரசு முதலியன ஒலிக்க விழாக்கள் சிறந்த முறையில் நடைபெறும். பல படிகளையுடைய உயர்ந்த மாடங்களில் சிவந்த அடியினையும், கிளிமொழியினையும், பவள நிறத்தினையும், மயிலின் சாயலையும் உடைய மங்கையர் நின்று விழாவினைக் கண்டுகளிப்பர். இச்செய்திகளை எல்லாம் பட்டினப்பாலையில் பரக்கக் காணலாம்.

கரிகாலனுக்குப் பின்பு கிள்ளிவளவன் சோழ நாட்டின் அரசுரிமையைக் கைப்பற்றினான். இவன் காலத்தில்தான் புகாரைக் கடல் விழுங்கியது என மணிமேகலைக் காப்பியத்தால் நாம் அறிகிறோம். இதன் பின்பு சோழநாட்டில் குழப்பமும் கொந்தளிப்புமே ஏற்பட்டன. இக்காலை சேரன் செங்குட்டுவன் சோழநாட்டு அரசியலில் தலையிட்டு அமைதியினை ஏற்படுத்தினான். புறநானூற்றின் மூலம் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருநற்கிள்ளி, கோப்பெருஞ்சோழன் போன்ற சோழ அரசர்களும் சோழ நாட்டை நல்ல முறையில் ஆட்சி புரிந்தனர் என்பதை நாம் அறிகின்றோம்.

‘சோழ அரசர்களுள்ளே கரிகாலன் எப்படியோ அப்படியேதான் சேரமன்னருள் செங்குட்டுவன். சேரன்செங்குட்டுவன் சிறந்த வீரன்; செங்கோலன். தமிழரசரை வடவர் இகழ்ந்தனர் எனக்கேட்டு உடனே வடநாட்டின் மீது படையெடுத்துச்சென்றான். செல்லும் வழியிலே நூற்றுவர் கன்னர் என்ற வடநாட்டு மன்னர்களின் உதவி கிடைத்தது. பின்னர் வடக்கே சென்று கனகவிசயர் என்னும் ஆரிய மன்னரை முறியடித்துச் சிறைப்பிடித்தான். பனிவரையில் விற்கொடி பொறித்துவிட்டுப் பத்தினித்தேவிக்குப் படிமஞ்சமைக்க எடுத்த கல்லைக் கனகவிசயர் தலைமீதேற்றித் தமிழகம் மீண்டான். முன்னர் கொங்கர் செங்களத்தே நடந்த போரில் இவன் தன்னை எதிர்த்த சோழ பாண்டியரை வெற்றிபெற்றான். அடுத்துக் கடலை அரணாகக்கொண்டு இடர்விளைத்த பகைவரைக் கடலிற் படைகளைச் செலுத்தி, செங்குட்டுவன் வென்றனன். மேலும் தன்னை எதிர்த்த பாண்டிய நாட்டுத் தளபதி பழையனையும், சோழர் ஒன்பதின்மரையும் இவன் தனித்தனியே வெற்றிகொண்டான் என்றும் தெரியவருகின்றது. சுருங்கக்கூறின் சேரன் செங்குட்டுவன் தலைசிறந்த தமிழ்நாட்டு வேந்தர்களில் ஒருவன். சிலப்பதிகார வஞ்சிக் காண்டம் முழுவதும் இவன் வெற்றி பற்றியதேயாகும்.

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் காலத்தில் பாண்டியர் செல்வாக்கு அடைந்தனர். தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியனாகிய இந்நெடுஞ்செழியனால் கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை தோற்கடிக்கப்பட்டான். இந்நெடுஞ்செழியன் மீது பாடியதே நெடுநல்வாடை. இதனைப் பாடியவர் நக்கீரர். மதுரைக் காஞ்சியும் இவனைப் பற்றியதே. இவன் இளமைப் பருவத்தில், சேரலிரும்பொறையோடு, சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ, வேண்மான், பொருநன் என்ற எழுவரையும் ஒருசேர வென்றான். இவன் புலவர்களிடத்து மிக்க அன்புடையவன். ‘நகுதக்கனரே’ என்னும் புறப் பாடலைப் பாடியவனும் இவனே.

இவனது காலத்தில் பாண்டியர் கோநகரமாகிய மதுரை தலைசிறந்த நகரமாய் விளங்கியது என்பதை மதுரைக்காஞ்சி மூலம் அறியமுடிகின்றது. நிலமடந்தையின் முகத்தைப் போலப் பொலிவுடன் விளங்கும் மதுரையினை வையை ஆறு அணி செய்ய, ஆழமுடைய அகழியாலும், பேரரசராலும் அழிக்கமுடியாத கோட்டை மதில்களாலும் முறையே சூழப்பட்ட இந்நகரினது கோட்டை வாயில் நெடிய நிலைகளையும், திண்ணிய கதவினையும், மாடங்களையும் கொண்டிலங்கியது. இக்கோட்டைக்குள் இருபுறங்களிலும் உயர்ந்து தோன்றும் சாரளங்களுடன் கூடிய வீடுகளை உடைய அகன்ற தெருக்கள் இருந்தன. கடைத்தெருக்கள் எப்பொழுதும் ஆரவாரத்துடன் விளங்கின. கட்டடங்கள் தோறும் கொடிகள் பறந்து பட்டொளி வீசின. நால்வகைப் படைகளும் நகரத்தில் இருந்தன. கோவில்களில் எப்பொழுதும் விழா நடந்துகொண்டே இருக்கும். இசையுடன் இன்னியம் எங்கும் கேட்கும்; முரசம் முழங்கும். இரவிலும் கூட கடைகள் பல திறந்திருக்கும். சுருங்கக்கூறின் பகலென்றும் இரவென்றும் பாராமல் மதுரை மக்கள் மகிழ்ச்சியுடன் எழுப்பிய ஆரவாரம் எங்கும் கேட்கும். இந்நிலையில் மதுரைமாநகர் மாண்புடன் விளங்கியது.

முடியுடை மூவேந்தரைப்போலவே உரிமையுடனும் வள்ளண்மையுடனும் வாழ்ந்த வள்ளல்கள் எழுவராவர். இவர்கள் புலவரைப் பெரிதும் போற்றிப் புரந்தனர். வறிஞரைத் தம் வண்மையாற் காத்தனர். நத்தத்தனார் என்னும் புலவர் இந்த எழுபெரும் வள்ளல்களையும் தன் சிறுபாணாற்றுப்படை என்னும் நூலில் பாடியுள்ளார்.

பாரி என்பவன் பறம்பு நாட்டை ஆண்ட வள்ளல். இவனோடு நட்புப் பூண்டு ஒழுகியவர் கபிலராவர். இவன் வறியவர்க்கும் அறிஞர்க்கும் வரையாது வழங்கிய வள்ளல் ஆவான். இவனையே முடியுடை மூவேந்தர் எதிர்த்தனர். காரி என்பவன் வீரத்திலும் கொடை ஈரத்திலும் சிறந்தவன். பேகன் என்பவன் பழனிமலைப் பகுதியை ஆண்டவன். மயிலுக்குப் போர்வை தந்தவன். இவ்வாறே ஓரி, நன்னன், அதியமான், நள்ளி முதலிய வள்ளல்களும் தம் வண்மையால் நாளும் புகழ்பரப்பி வாழ்ந்தனர்.

மக்கள்

பண்டைத் தமிழகத்திலே மக்கள் தம் தொழில் பற்றிப் பிரிக்கப்பட்டார்களே தவிர வருணாசிரமத் தருமப்படி பிரிக்கப்படவில்லை. தமிழர்கள் நிலத்தை ஐவகையாகப் பிரித்தனர். மலைப்பகுதி குறிஞ்சி எனவும், காட்டுப்பகுதி முல்லை எனவும், ஆற்றுப்பகுதி மருதம் எனவும், கடற்கரைப்பகுதி நெய்தல் எனவும், வளங்குன்றிய பகுதி பாலை எனவும் வழங்கப்பட்டன . குறிஞ்சி நிலத்தவர் குறவர்; முல்லை நிலத்தவர் ஆயர்; மருத நிலத்தவர் வேளாளர்; நெய்தல் நிலத்தவர் பரதவர்; பாலை நிலத்தவர் வேடர், மறவர். மேற்குறித்தவாறு நிலத்தை ஐவகையாகப் பிரித்த தமிழ் மக்கள், அவற்றிற்கேற்ப ஐவகைப்பட்ட அகவொழுக்கம் வகுத்து, அதனை ஐந்திணை என்று பெயரிட்டழைத்தனர்.

காதல் வாழ்வு பெரிதும் மதிக்கப்பட்டது. தமிழ் மக்கள் அறத்தைப் பெரிதும் போற்றினர். பொருளீட்டலுக்கும், இன்பம் பெறுவதற்கும் அறத்தின் உதவியினையே நாடினர். தமிழர்கள் வீரஞ்செறிந்தவர்களாகத் திகழ்ந்தனர். நாட்டுக்காக, மன்னனுக்காக உயிரைக்கொடுக்கும் எண்ணம் உள்ளவர்களாய் வாழ்ந்தனர். ஆடவர்போலவே பெண்டிரும் தறுகண்மை உடையவர்களாய் வாழ்ந்தனர்.

(தொடரும்)
பேரா..திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்