(உ.வே.சா.வின் என் சரித்திரம் 113: அத்தியாயம் – 75: இரண்டு புலவர்கள்-தொடர்ச்சி)

திருக்குற்றாலத்தில் சில தினங்கள் தங்கிப் பிறகு ஆதீனத்திற்குரிய
கிராமங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தபடியே சுப்பிரமணிய தேசிகர் யாத்திரை செய்யலானார். வேணுவன லிங்கத் தம்பிரான் ஆட்சியின் கீழிருந்த அந்தக் கிராமங்கள் திருவாவடுதுறை மடத்தின் சீவாதாரமாக உள்ளவை. அவற்றில் கம்பனேரி புதுக்குடி என்பது ஒரு கிராமம். அதை விலைக்கு வாங்கிய சுப்பிரமணிய தேசிகர் தம்குருவின் ஞாபகார்த்தமாக அம்பலவாண தேசிகபுரமென்ற புதிய பெயரை வைத்தார். அங்கே தேசிகர் ஒரு நாள் தங்கினார்.

அக்காலத்தில் திருப்பனந்தாட் காசிமடத்தில் தலைவராக விளங்கிய சிரீ இராமலிங்கத் தம்பிரானென்பவர் சுப்பிரமணிய தேசிகரிடம் பேரன்பு பூண்டவர். தேசிகர் யாத்திரை செய்வதை அறிந்து தாமும் அவரோடு சேர்ந்து சில நாட்கள் பிரயாணம் செய்ய விரும்பித் தனிப் புகைவண்டி யொன்றை ஏற்பாடு செய்து கொண்டு திருநெல்வேலி மார்க்கமாகச் செவந்திபுரம் வந்து தேசிகரைத் தரிசித்து உடனிருப்பாராயினர். அத்தம்பிரான் கம்பனேரி புதுக்குடியைக் கண்டு மிகவும் மெச்சினார். அந்தக்கிராமம் மிகவும் விசாலமாக இருந்தது. சுப்பிரமணிய தேசிகர் பரிவாரங்களுடன் தங்கினமையால் அப்போது அது ஒரு பெரிய நகரம்போல விளங்கிற்று.

மகாவைத்தியநாதையரும் அவர் தமையனாராகிய இராமசாமி ஐயரும் அணிந்திருந்த உருத்திராட்ச கண்டிகளை வாங்கி அவற்றிற்குத் தேசிகர் தங்க வில்லை போடச்செய்து அளித்தனர். எனக்கு திருவிடைமருதூரில் அளித்த கண்டியில் தங்க முலாம் பூசிய வெள்ளி வில்லைகளே இருந்தன. அந்தக் கண்டிக்கும் தங்க வில்லைகளை அமைக்கச் செய்து எனக்கு அளித்தார். அப்போது இராமசாமி ஐயர் சிலேடையாக, “வெள்ளி வில்லை தங்க வில்லை” என்றார். யாவரும் கேட்டு மகிழ்ந்தனர்.

சங்கர நயினார் கோயில்

தேசிகர் முன்னரே செய்திருந்த ஏற்பாட்டின்படி சங்கர நயினார் கோயிலில் நடைபெறும் ஆடித் தவசு உற்சவத்திற்குச் சென்றனர். சோழ நாட்டில் வைத்தீசுவரன் கோயிலுக்கு எவ்வளவு சிறப்புண்டோ அவ்வளவு சிறப்பு சங்கர நயினார் கோயிலுக்கும் உண்டு. சிவபெருமானும் திருமாலும் பேதமின்றி இயைந்து நிற்கும் சங்கர நாராயண மூர்த்தியைத் தரிசித்து ஆனந்தமடைந்தேன். அவ்வாலயத்திலுள்ள புற்று மண்ணை மருந்தாக உண்டு நோய்கள் தீர்ந்த பக்தர்கள் பலரைப் பார்த்தேன். அங்கே எழுந்தருளியிருக்கும் சிரீ கோமதியம்மையைத் தரிசித்துப் புளகாங்கிதம் அடைந்தேன். இறைவனைக் குறித்து அத்தேவி தவஞ்செய்த சிறப்பை நினைவுறுத்த ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறும். அத்திருவிழாவைத்தான் ‘ஆடித் தவசு’உற்சவமென்று வழங்குகிறார்கள்.

கரிவலம் வந்த நல்லூர்

சங்கரநயினார் கோயிலில் ஒரு வாரம் இருந்து விட்டுத் திருச்செந்தூர் ஆவணி உற்சவ தரிசனத்துக்காகப் புறப்பட்டோம். இடையே ஒரு நாள் கரிவலம் வந்த நல்லூரில் தங்கினோம். தமிழ்ப் பயிற்சியைத் தொடங்கும் மாணாக்கர்களுக்கு அந்தத் தலத்தைப் பற்றித் தெரியாமலிராது. வரதுங்கராம பாண்டியர் இயற்றிய கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, கருவைக் கலித்துறை யந்தாதி, வெண்பா அந்தாதி என்ற மூன்று பிரபந்தங்களும் அத்தலத்தைப் பற்றியனவே யாகும். கரிவலம் வந்த நல்லூர் என்பதன் மரூஉவே கருவை என்பது.

அந்தத் தலத்தை அணுகியவுடன் நான் முன்னே கேட்டிருந்த அந்தாதிச் செய்யுட்க ளெல்லாம் ஞாபகத்துக்கு வந்தன. என் ஆசிரியரிடம் அவ்வந்தாதி நூல்களைப் படித்த காலத்தில் அவர் கூறிய அருத்தத்தைக் காதாற் கேட்டிருந்தேன். தல சம்பந்தமாக அவர் சொன்ன விசயங்களைக் கொண்டு அப்போது நான் மனத்திலே ஒரு கோயிலைக் கற்பனை செய்திருந்தேன். கண் முன்னே பின்பு அவ்வாலயத்தைக் கண்டபோது அதுவரையில் விளங்காத விசயங்கள் விளங்கின. பாடல்களின் அருத்தத்தைக் காதாற் கேட்டபோது அப்பொருள் குறைவாகவே இருந்தது; பால்வண்ண நாதரைக் கண்ணால் தரிசித்த போதுதான் அப்பொருள் நிறைவெய்தியது. சுவாமிக்கு நிழல் அளித்து நிற்கும் பழைய களாச் செடியையும் பார்த்து விம்மித மடைந்தேன்.

சிறந்த தமிழ்ப் புலவரும் அரசரும் அடியாருமாகிய வரதுங்க ராம பாண்டியர் வாழ்ந்த நகரமாதலின் அதனைச் சுற்றிப் பார்க்கலாமென்று சில நண்பர்களுடன் புறப்பட்டேன். அவ்வரசர் வசித்த இடத்தைப் பார்த்து இன்புற்றேன். இப்படி ஊரைப் பார்த்துக் கொண்டு சென்ற போது நடு வீதியில் என் எதிரே ஒருவர் வந்தார். அவருடன் சில குட்டித் தம்பிரான்களும் வந்தார்கள். வந்தவர் என்னைக் கண்டு அஞ்சலி செய்தார். எனக்கு அவர் இன்னாரென்று அடையாளம் தெரியவில்லை.

அவர் தலையில் ஓர் அழகிய உருமாலை கட்டியிருந்தார். காதிற் கடுக்கனும் கையில் மோதிரமும் அணிந்திருந்தார். இடுப்பில் சரிகை வத்திரம் உடுத்திருந்தார். இவற்றையெல்லாம் பார்த்து, “இந்தப் பிரபுவை நாம் பார்த்ததாகக் தெரியவில்லையே” என்று யோசிக்கலானேன். பிறகு, “தங்களைத் தெரியவில்லையே” என்று கேட்டேன். அவர், “அடியேன் அவ்விடத்துச் சிசுயன்தான்” என்றார்.
அப்பொழுதும் எனக்கு விளங்கவில்லை. “பெயர் என்ன” என்று கேட்டேன். “நான்தான் சொக்கலிங்கம்; திருவாவடுதுறையில் தங்களிடம் பாடம் கேட்கவில்லையா?” என்றார்.
“சொக்கலிங்கத் தம்பிரானா? அடையாளமே தெரியவில்லையே!” என்ற
ஆச்சரியமடைந்து நின்றேன். “இப்போது வேடம் மாறி விட்டது; நான் சொக்கலிங்கம் பிள்ளையாகி விட்டேன்.” சௌக்கியமாக இருக்கிறீரா? உமக்கு இரண்டு சாண் நீளம் சடையிருந்ததே! ஏன் இப்படி மாற வேண்டும்?” என்று கேட்டேன்.

“நான் திருவாவடுதுறையில் இருந்த போது துறவிகளின் சகவாசம் இருந்தது. படிப்பில் ஆசை தீவிரமாக இருந்தது. தாங்களும் பாடம் சொல்லித் தந்தீர்கள். சந்நிதானம் கருணையுடன் பாதுகாத்து வந்தது. என்னவோ நினைத்து இங்கே வந்தேன். பழைய பாசம் சுற்றிக் கொண்டது. உறவினர்கள் கிருகத்தாசிரமத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். எனக்கும் அந்த இச்சை உண்டாயிற்று. நான் மனிதன்தானே? காவி உடை தரித்த மாத்திரத்தில் பெரிய ஞானியாகி விடுவேனா? கலியாணம் செய்து கொண்டேன். இங்கே பள்ளிக்கூடம் வைத்து நடத்தி வருகிறேன். ஊரிலுள்ளவர்கள் குறைவில்லாமல் ஆதரித்து வருகிறார்கள். எல்லாம் அவ்விடத்து அனுக்கிரகம்” என்றார்.

பிறகு அவர் விடை பெற்றுச் சென்றார். நாங்கள் தேசிகரிடம் சென்று
சொக்கலிங்கம் பிள்ளையைப் பற்றிச் சொன்னோம். அவர், “துறவுக் கோலம் பூண்டு அந்நிலைக்குத் தகாத காரியங்களைச் செய்வதை விட இம்மாதிரி செய்வது எவ்வளவோ உத்தமம்” என்று சொல்லிப் புன்முறுவல் பூத்தார்.

கரிவலம் வந்த நல்லூரிலிருந்து புறப்பட்டு ஆழ்வார் திருநகரி முதலிய ஊர்களின் வழியாகத் திருச்செந்தூரை அடைந்தோம். செந்திலாண்டவனுக்குத் திருவாவடுதுறை யாதீனத்தின் மூலம் நடைபெறும் பணிகள் பல உண்டு. அவற்றிற்குரிய மடங்களும் பல உள்ளன. அங்கே ஆவணி மாதத்தில் நடைபெறும் உற்சவ தரிசனம் ஆயிற்று. தேசிகர், பிராமண போசனம், மகேசுவர பூசையாகியவற்றை நடப்பித்தார்.
சமுத்திரக் கரையில் அமைந்துள்ள செந்திற்பெருமான் திருக்கோயில்
கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆண்டவனுக்குப் பிரார்த்தனை
செலுத்துவோர்களுடைய கூட்டம் மிக அதிகம். உலகத்தில் தெய்வபக்தியென்னும் சுடரை அவியாமலே காப்பாற்றி வரும் தலங்களுள் திருச்செந்தூர் ஒன்று. கலியுக வரதனாகிய முருகக் கடவுளின் திருவருளைப் பலவிதமான அதிசயச் செயல்களால் காணுவதற்கு இடமாயிருப்பது அந்தத் திவ்ய ஸ்தலம்.

கந்தர் கலிவெண்பா

எங்களுடன் வந்திருந்த இராமலிங்கத் தம்பிரானுடைய ஆட்சியிலுள்ள
திருப்பனந்தாள் மடத்தில் ஆதி புருசராக வணங்கப்படுபவர் குமரகுருபர சுவாமிகள். அப்பெரியார் இளமையில் ஐந்து வருடம் வரையில் ஊமையாக இருந்து பிறகு செந்திற் பெருமான் திருவருளால் வாக்குப் பெற்றனர். அப்போது அவர் முதல் முதலில் செந்திலாண்டவன் விசயமாக, ‘கந்தர்கலி வெண்பா’என்ற பிரபந்தத்தைப் பாடினார். திருவருளால் அமைந்த வாக்கென்ற கருத்தினால் தமிழ் நாட்டில் அந்நூலைப் பயபக்தியோடு பலர் பாராயணம் செய்து வருவார்கள். நான் அதை அடிக்கடி படித்து மகிழ்வதுண்டு. திருச்செந்தூரில் தங்கிய காலத்தில் அதனைப் பல முறை பாராயணம் செய்தேன். இராமலிங்கத் தம்பிரான் தம் ஆதீன முதல்வரால் இயற்றப் பெற்ற தென்ற பெருமையுள்ளத்தோடு படித்தும் கேட்டும் வந்தார். கந்தர் கலிவெண்பாவின் இறுதியில் குமர குருபரர் தமக்கு ஆசு முதல் நாற்கவியும் பாடும் வன்மை வேண்டுமென்று பிரார்த்திக்கின்றார். நான் அந்தப் பகுதியை மீட்டும் மீட்டும் படித்துச் செந்திலாண்டவனைத் துதித்தேன். எனக்கும் நல்ல கவித்துவம் வேண்டுமென்ற ஆசை உள்ளிருந்து தூண்டியது.

எனது தீர்மானம்

திருச்செந்தூரில் இருந்தபோது சுப்பிரமணிய தேசிகர் என்னையும்
மகாவைத்திய நாதையரையும் அழைத்து, ஊருக்குப் போய்ச் சில தினங்கள் இருந்து விட்டுத் திருப்பெருந்துறைக்கு வந்து விடும் படியும், அதற்குள் தாமும் திருப்பெருந்துறைக்கு வந்துவிடக் கூடுமென்றும் கட்டளையிட்டனுப்பினார்.நாங்கள் புறப்பட்டோம். இராமலிங்கத் தம்பிரானும் விடை பெற்றுத்திருப்பனந்தாளுக்குச் சென்றார். செந்திலாண்டவன் திருவருளால் இனிச் செய்யுட்களை மிகுதியாக இயற்றிப் பழக வேண்டுமென்ற தீர்மானத்துடன் நான் திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்தேன்.

(தொடரும்)