(உ.வே.சா.வின் என் சரித்திரம் 19 தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம் 12


அரியிலூர் ஞாபகங்கள்

அரியிலூரில் முன்பு நாங்கள் இருந்த வீடு பாதுகாப்பின்மையால் சிதைந்து போயிற்று. அதனால் பெருமாள் கோயில் சந்நிதிக்கு நேர் வடக்கில் தெற்கு வடக்காக உள்ள தெருவில் கீழ் சிறகில் வைத்தியநாதையரென்பவருடைய வீட்டில் இருந்து வந்தோம்.

எங்கள் வரவைக் கேட்ட பழைய அன்பர்கள் மிக்க குதூகலம் அடைந்தனர். பலர் வந்து என் தந்தையாரைப் பார்த்து அன்போடு வார்த்தையாடிச் சென்றனர். அப்போது எனக்கு ஏழாம் பிராயம் நடந்து வந்தமையால் உலகத்துக் காட்சிகளும் நிகழ்ச்சிகளும் நன்றாக மனத்திற் பதிந்தன. நான் அக்காலத்திற் கண்ட இடங்களும் பார்த்த மனிதர்களும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளும் எனக்குப் புதிய சந்தோசத்தையும் ஊக்கத்தையும் அளித்தன. அரியிலூர்தான் எனக்குப் பெரிய நகரம். அந்த ஊர் சமீன்தார்தான் கதைகளில் கேட்ட இராசா. அங்கிருந்த அன்பர்களே பழைய வரலாறுகளில் வரும் உபகாரிகள்.

பழங் கணக்கு


அரியிலூ ரென்பது அரியிலென்றும் வழங்கும். அரிக்கு இல்லாக இருத்தலின் அப்பெயர் வந்தது. அரிய – திருமால்; இல்=இருப்பிடம். இந்த சமத்தானம் அக்காலத்தில் அவரோகண நிலைமையில் இருந்தது. புதிய பெருமை இல்லாதவர்கள் பழம்பெருமை அதிகமாகப் பாராட்டிக்கொள்வது உலக இயல்வு. ‘பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பதுபோல்’ என்ற பழமொழி அதை விளக்கத்தான் எழுந்தது. ஆதலின் அக்காலத்தில் அரியிலூர் சமத்தானம் உயர்ந்த நிலையில் இராவிட்டாலும் அதன் பழைய வரலாறுகள் மிக்க பெருமையோடு யாவராலும் சொல்லப்பட்டு வந்தன. அச்சரித்திரங்கள் எனக்கு மிக்க சுவையுள்ளனவாகத் தோன்றும். நான் முதன்முதலாகத் தெரிந்துகொண்ட சரித்திரச் செய்திகளாதலால் அவற்றில் என் மனம் ஈடுபட்டது.

அரியிலூர் ஒரு சமத்தானத்தின் தலைநகரமாகையால் தமிழ்நாட்டு சமத்தானங்களைப் போலவே வீரர், புலவர், உபகாரிகள் ஆகியவர்களுடைய தொடர்புகொண்டது. ஒவ்வொரு சமத்தானத்திலும் சனங்கள் மனத்தைக் கவரும் இயல்புள்ள சரித்திர வரலாறுகள் உண்டு. அரியிலூர் சமத்தான சம்பந்தமாகவும் அத்தகைய வரலாறுகளுக்குக் குறைவில்லை. [1]  

அரியிலூர் உள்ள நாட்டுக்குக் குன்றவளநா டென்பது பழம்பெயர். அதைக் குன்றையென்றும் சொல்வார்கள். அரியிலூர் சமீன்தார்களுக்கு ‘ஒப்பில்லாதவள்’ என வழங்கும் தேவி குலதெய்வம். அத்தேவியின் அடியவர்களாதலின் அவர்களுக்கு ஒப்பிலாத மழவராயரென்பது குடிப்பெயராக அமைந்தது.

மழவராயரென்பதற்கு வீரர் தலைவர் என்பது பொருள். மழவர்கள் என்பார் தமிழ்நாட்டிற் பழங்காலத்தில் இருந்த சிறந்த வீரர்களில் ஒரு வகையினர்.

அந்தகக்கவி வீரராகவ முதலியார் இந்த ஊருக்கு வந்து பரிசு பெற்றுச் சென்றார். அக்காலத்தில் இங்கே சமீன்தாராக இருந்தவர் கிருட்டிணைய ஒப்பிலாத மழவராய ரென்பவர்.

படியளந்த சமீன்தார்

கிருட்டிணைய ஒப்பிலாத மழவராயர் ஏழைகளுக்கு இரங்கும் தன்மையினர். புலவர்களை ஆதரிக்கும் வள்ளல். தினந்தோறும் தம்மிடம் விருந்தினர்களாக வந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேண்டிய பொருளை வழங்குவதை முதற்கடமையாகக் கொண்டனர். அவரவர்களுக்கு வேண்டியவைகளை அளந்து தரச் செய்தனர்.

கவி வீரராகவ முதலியார் வந்த காலத்தில் சமீன்தார் படியளந்து கொண்டிருப்பதை அறிந்தார். பல பேர்களுக்கு வழங்க வேண்டியிருந்தமையின் நெடுநேரமாயிற்று, அதை உணர்ந்த கவிஞருக்குப் பெருவியப்பு உண்டாயிற்று. ‘ஏதேது! இன்றைக்கு இ லட்சம் பேருக்குப் படி அளந்திருப்பார்போல் இருக்கிறதே’ என்று நினைத்தார். கவிஞர் நினைப்பதற்கும் மற்றவர்கள் நினைப்பதற்கும் வித்தியாசம் இல்லையா? அவர்  நினைப்பு ஒரு கவியாக மலர்ந்தது, ‘இந்த ஒப்பில்லாத மழவராயருக்கு மகாவிட்ணு ஒப்பாவரோ? திருமால் அளந்தது மூன்றுபடியே (படி-உலகம்) இவர் அளப்பது ஒரு நாளைக்கு இ லட்சம் இருக்குமே’ என்ற பொருளுடையது அந்தச் செய்யுள்:-

சேயசெங் குன்றை வருமொப்பி லாதிக்குச் செங்கமலத் தூயசெங் கண்ணன் இணையொப்ப னோதண் துழாயணிந்த மாயன் அளக்கும் படிமூன்று கிருட்டிணைய மாமழவ ராயன் அளக்கும் படியொரு நாளைக் கிலக்கமுண்டே.”

இத்தகைய வரலாறுகள் பல உண்டு.

அரியிலூரில் ஒரு கோட்டையும் அதற்குள் ஓர் அரண்மனையும் இருந்தன. அவை இடிந்து போயின. கோட்டைக்குப் பாதுகாப்பாக இருந்த கோட்டைமுனி என்ற தெய்வத்தின் கோயில் இன்றும் இருக்கிறது இந்த சமத்தானத்துக்குத் தனியே படைகள் இருந்தன. இப்போதும் இவ்வூரில் தளகர்த்த பிள்ளை வீடென்று ஒரு வீடுண்டு. அதில் முன்பு படைத்தலைவர் வசித்திருந்தார். அதனால்தான் அப்பெயர் வந்தது. தானாதிபதி குமாரசாமி பிள்ளை என்பவரது வீடொன்று உள்ளது. இவை இவ்வூரின் பழம்பெருமையைக் காட்டும் அடையாளங்கள்.

குளங்களும் கோயில்களும்

இவ்வூரில் செட்டிகுளம், குறிஞ்சான்குளம் என இரண்டு பெரிய குளங்கள் உள்ளன. குறிஞ்சான் குளக்கரையில் அரசு நட்ட பிள்ளையார் கோயில் என்ற ஆலயம் இருக்கிறது. அந்தப் பிள்ளையார் சம்பந்தமாகவும் ஒரு கதை உண்டு: ஒரு சமீன்தார் தம்முடைய பகையரசருக்குப் பயந்திருந்தாராம். அப்பால் ஒருவாறு தைரியமடைந்து பகைவர்களை எதிர்க்கச் சென்றார். செல்லும்போது அந்த விநாயகரை வேண்டிக்கொண்டு சென்றாராம். பகைவர்களுடன் நடத்திய போரில் அவர் வென்றார். விநாயகருடைய திருவருள்தான் தமக்குப் பலமாக இருந்ததென்று நம்பினார். அந்தப் பிள்ளையாருக்குக் கோயில் அமைத்துப் பூசை செய்வித்தார். அவரது அரசைப் பகைவர் கையில் சிக்காதபடி பாதுகாத்து நிலைநாட்டியமையால் விநாயகருக்கு அரசு நட்ட பிள்ளையார் என்ற திருநாமம் வழங்கலாயிற்று. அந்த சமீன்தார் பிறகு அரசு நட்டான் ஏரி என்பதையும் அருகில் வெட்டுவித்தார்.

குறிஞ்சான் குளத்துத் தென்கரையில் மீனாட்சி மண்டபமென்ற இடத்தில் விநாயகர் கோயிலும் சிவ விட்ணு ஆலயங்களும் உள்ளன. அம்மண்டபம் முதலியன இந்த சமத்தானத்தில் அதிகாரியாக விளங்கிய சிரீ மீனாட்சி தீட்சித ரென்பவராற் கட்டப்பட்டவை. அங்குள்ள மூர்த்திகளுக்கு உரிய பூசைகள் நன்றாக நடைபெற்று வந்தன.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.