தமிழக வேலை வாய்ப்பு ஆங்கிலேயருக்கு மட்டும்தானோ!

(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 15 – தொடர்ச்சி)

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் தொடரில் இப்பொழுது அறநிலையத்துறை குறித்துத்தான் தொடர்ந்து எழுதியிருக்க வேண்டும். எனினும் சில ஆணைகளும் அறிவிப்புகளும் ஆங்கிலத் திணிப்புகுறித்து எழுதத் தூண்டுகின்றன. ஏற்கெனவே இது குறித்துத் தெரிவித்தாயிற்றே! மீண்டும் தேவையா என எண்ணலாம். மீண்டும் மீண்டும் ஆங்கிலத் திணிப்பைத் தொடரும் போது நாமும் அது குறித்து மீண்டும் எழுதக் கடமைப்பட்டுள்ளோம் அல்லவா?

சில நாள் முன்னர் தீயணைப்புத்துறை இயக்குநர் மாறுதலாணை, காத்திருப்பு ஆணை ஆகியவை செய்திகளில் இடம் பெற்றன. தொடர்பான ஆணைகள் ஆங்கிலத்தில்தான் இருந்தன. ஒருவேளை ஒன்றிய அரசின் ஆணைகளோ எனப் பார்த்தால் தமிழ்நாட்டரசின் ஆணைதாம்.  இதில் என்ன அதிர்ச்சி. தமிழில் இருந்திருந்தால்தானே வியப்படைந்திருக்க வேண்டும் என்கிறீர்களா? ஆம். அரசு பிறப்பிக்கும் மாறுதல் ஆணைகள், பிற ஆணைகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது உயர் அதிகாரிகளின் மூட நம்பிக்கைகளில் ஒன்று. இதே போன்ற மற்றொரு மூடநம்பி்க்கை ஆளுநர் இல்ல ஆணைகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது.

சட்டமன்ற உறுப்பினராக இருந்த உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்பது குறித்த அரசின் ஆணை, செய்திக்குறிப்புகள் ஆகியனவும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்புகளும் ஆங்கிலத்தில்தான் உள்ளன.

அமைச்சுப் பொறுப்புகள் மாற்றத்தால் அமைச்சர்கள் பொறுப்பேற்கும் ஆணைமட்டும் இணைப்பில் தமிழ்ப்பட்டியலுடன் இருந்தது. பிற வெல்லாம் ஆங்கிலத்தில்தான். ஆளுநர் செயலர் அழகாகத் தமிழில் கையொப்பமிட்டுள்ளார். அப்படி என்றால் தமிழறிந்த செயலர்தான் அவர்.  ஆனால், தமிழ் தெரியா ஆளுநர் ஆங்கிலத்தில்தானே ஆணை பிறப்பிக்க வேண்டும் என்ற மூட நம்பிக்கை உள்ளதே! எங்ஙனம் தமிழில் ஆணைகளையும் செய்திகளையும் வெளியிடுவது? எனவே, ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன.

உ.பி. ஆளுநர் மாளிகைத் தளத்தைப் பாருங்கள். இந்தியிலும் தளம் உள்ளது. ஆளுநர் மாளிகை வெளியிடும் செய்திக் குறிப்புகள் யாவும் இந்தியில்தான் உள்ளன. அட்டவணையில் பொருளடக்கப் பகுதியில் மட்டும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இந்தியில்தான் செய்தி வெளியீடுகள். உ.பி. மாநில ஆளுநர் அம்மாநில மக்கள் மொழியில் செய்திகளை வெளியிடும் பொழுது தமிழ்நாட்டின் ஆளுநர் மாநில மக்கள் மொழியான தமிழில் செய்திகளை வெளியிடக் கூடாதா?

அமைச்சரவை பொறுப்பேற்கும் அறிவிப்பாணை, அமைச்சுத்துறை பகிர்வு ஆணை முதலியற்றைப் பாருங்கள். ஆங்கிலத்தில்தான் உள்ளன. ஆங்கிலப்புலவர்கள், அதனால் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் என எண்ண வேண்டா. ஆங்கிலத்திலும் எழுதத்தெரியாதவர்களே மிகுதி. முந்தைய ஆணைகளையும் அறிக்கைகளையும் பார்த்து, பெயர், புள்ளிவரஙக்ளை மட்டும் மாற்றிப் புதிய ஆணைகள், அறிக்கைகளை  உருவாக்குநரே பெரும்பான்மையர். இவர்களுக்குத் தமிழில் மாதிரி வரைவுகள், மாதிரி அறிக்கைகளைக் கொடுத்து விட்டால தமிழில் எழுதத் தொடங்கி விடுவார்கள். தொடர்ந்து இவ்வாறு எழுதினால், நாளடைவில் தாமாகவே தமிழில் எழுதும் திறமைகளைப் பெறுவார்கள்.

தமிழ்நாட்டிற்கு வரும் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுடன் நெருக்கம் இருப்பதாகக் காட்டிக் கொள்ளத் தமிழில் ‘வணக்கம்’, ‘நன்றி’ சொல்லியும் தமிழ் மீதான விருப்பம் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டு ஆளுநராகப் பொறுப்பேற்பவர்கள், தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்பவர்கள்  தமிழை மதிப்பதாகக் கூறித் தமிழ் கற்கப் போவதாக அறிவிக்கிறார்கள். அவ்வாறிருக்க ஆளுநர்களை நன்கு தமிழ் கற்கச் செய்யலாமே. இ.ஆ.ப., இ.கா.ப. அதிகாரிகள் தமிழ்த்தேர்வில் வெற்றிபெற வேண்டும் எனச் சொல்வதுபோல்,  ஆளுநர்களையும் தமிழ்த்தேர்வில் வெற்றி பெறச் செய்யலாமே! ஆளுநர்கள் தமிழ் அறியாதவர்களாக இருப்பினும் ஆளுநர் மாளிகை அறிவிப்புகள், அறிக்கைகள், ஆணைகள் தமிழில் இருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். ஆளுநர் மாளிகையின் ஆட்சி மொழி என்றும் தமிழாகத்தான் இருக்க வேண்டும்.

தமிழக அரசின் தேர்வாணையம் என்பது தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்குத்தான் என எண்ணிக் கொண்டுள்ளோம். ஆனால், இந்த அமைப்பு ஆங்கிலேயர்களுக்கானதோ! இதன் இணையத்தளத்தில் தமிழ் ஆங்கிலம் இருமொழிகளிலும் வெளியிடும் வசதி உள்ளது. ஆனால், பல விளம்பரங்கள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. வேலைவாய்ப்பு விளம்பரத் தொகுப்பு அல்லது தேர்வு அட்டவணைகள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. சில நேர்வுகளில் தலைப்புகளைமட்டும் தமிழில் குறிப்பிட்டு விட்டுப் பதவிப் பெயர்களை ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றனர். பதவிப்பெயர்களைக்கூடத் தமிழில் குறிக்கத் தெரியாதவர்களை எதற்கு வேலையில் வைத்திருக்க வேண்டும்? போதிய தமிழறிவு இல்லாதவர்கள் என அவர்களை யெல்லாம் தூக்கி எறிய வேண்டியதுதானே! தமிழறிந்த தமிழருக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமே!

தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் ஆங்கிலத்தைப் பார்த்தால் நமக்கு இரத்தம் கொதிக்கிறது. இவர்களோ சடம்போல் இருக்கிறார்களே! இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் இன்னும் ஓயவில்லை. நாம் அத்துடன் ஆங்கிலத்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தையும் நடத்த வேண்டும் என அரசு விரும்புகிறதோ! கவலைப்படவேண்டா. உங்கள் விருப்பம் அதுதான் என்றால் இதே நிலை தொடர்கையில் பெரிய அளவில் ஆங்கிலத்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் வரத்தான் போகிறது. அதனால் ஆங்கிலத் திணிப்பாளர்கள் நாடு கடத்தப்பட்டாலும் வியப்பதற்கில்லை. அதற்குள் அவர்கள் தம்மைத் திருத்திக் கொள்வது நல்லது.

அரசு ஒரு முறையேனும் அலுவலக நடைமுறைகளில் தமிழைப் பயன்படுத்தாத உயரதிகாரிகள், துறைத்தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சிப்பீடத்தின் அடி முதல் முடிவரை ஆங்கில வெறி ஓடி விடும். நடவடிக்கை எடுப்போம் என்றெல்லாம் வாய்ப்பேச்சு எச்சரிப்பு கூடாது. நேரடியாக நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். அதற்குத் தமிழார்வம் மிக்க முதல்வரும் தலைமைச் செயலரும் முன்வரவேண்டும். இப்பொழுது அமைச்சரவை பொறுப்பேற்றது தொடர்பான ஆங்கில ஆணைகள், அறிவிப்புகள் தொடர்பில் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அடுத்து எந்த அறிவிப்பாக, ஆணையாக இருந்தாலும் தமிழில்தான் வரும். செய்வார்களா?

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
(திருவள்ளுவர், திருக்குறள் 561)

– இலக்குவனார் திருவள்ளுவன்