உ .வே.சா.வின் என் சரித்திரம் 42 : காரிகைப் பாடம்
என் சரித்திரம் 41 : ஏக்கமும்நம்பிக்கையும் தொடர்ச்சி
அத்தியாயம் 24
காரிகைப் பாடம்
குன்னத்தில் நாங்கள் தங்கியிருந்த வீட்டினராகிய இராமையங்கார் எனது நிலையை அறிந்து மிகவும் இரங்கினார். அப்பால் ஒருநாள் என் தந்தையாரைப்பார்த்து, “இவனைச் செங்கணம் சின்னப் பண்ணை விருத்தாசல ரெட்டியாரிடம் கொண்டுபோய் விட்டால் அவர் பாடஞ் சொல்வாரே” என்றார். “விருத்தாசல ரெட்டியார் என்பவர் யார்?” என்று என் தந்தையார் கேட்டார். “அவர் செங்கணத்திலுள்ள பெரிய செல்வர், உபகாரி, தமிழ் வித்துவான், இலக்கண, இலக்கியங்களை நன்றாகப் பாடஞ்சொல்லும் சக்தி வாய்ந்தவர்.” “அவரிடம் போயிருந்தால் ஆகாரம் முதலியவற்றிற்கு என்ன செய்வது?” “நீங்கள் குடும்பத்துடன் சென்று அங்கே இருக்கலாம். அவரே உங்களுக்கு வேண்டிய சௌகரியங்களை யெல்லாம் செய்து கொடுப்பார். நான் உங்களை அழைத்துச் சென்று அவரிடம் விடுகிறேன். அவர் என் நண்பர்” என்று இராமையங்கார் சொன்னார். அவர் பின்னும் விருத்தாசல ரெட்டியாருடைய குணாதிசயங்களைச் சொன்னார். தமிழ்ச் சித்த வைத்திய நூல்களில் ஐயங்கார் நல்ல பயிற்சியுடையவர். அதனால் அவருக்கும் இரெட்டியாருக்கும் பழக்கம் உண்டாயிற்று. அந்தப் பக்கங்களில் இருந்த தமிழ் வித்துவான்கள் யாவருக்கும் இரெட்டியாருடைய பழக்கம் உண்டு.
செங்கணம் சென்றது
இராமையங்கார் விருத்தாசல ரெட்டியாரைப் பற்றிச் சொன்னபோது எனக்குச் சிறிது ஆறுதல் உண்டாயிற்று. காலத்தை வீணாகக் கழிக்காமல் இயன்றவரையில் பாடம் கேட்கலாமென்று எண்ணினேன். என் தந்தையார் செங்கணம் செல்ல உடன்பட்டார்.
கார்குடியிலிருந்த கத்தூரி ஐயங்கார், சாமி ஐயங்கார், களத்தூர் இராமையங்கார் என்பவர்களுக்கும் விருத்தாசல ரெட்டியார் நண்பர். குன்னம் இராமையங்கார் செங்கணத்திற்குப் புறப்பட ஒருநாளை நிச்சயித்துக் கூறியபின், மேற்கூறிய மூவருக்கும் அதனை அறிவிக்க, அவர்களும் அன்று செங்கணத்திற்கு வந்து என்னை இரெட்டியாரிடம் சேர்ப்பிக்க வருவதாகச் சொல்லியனுப்பினர்.
குறித்த தினத்தில் குன்னம் இராமையங்கார் என்னையும் என் தந்தையாரையும் அழைத்துக்கொண்டு செங்கணம் சென்றார். என் தாயார் குன்னத்தில் இருந்தார். அன்று எங்களுக்கு முன்பே கார்குடி கத்தூரி ஐயங்கார் முதலிய மூவரும் அங்கே வந்திருந்தனர். நால்வரும் என்னைச் செங்கணம் இரெட்டியாரிடம் ஒப்பித்து என் இயல்பைப் பற்றிக் கூறினர்: “இவனை நல்ல நூல்கள் படிக்கும்படிச் செய்யவேண்டும். இவன் அதே நாட்டமாக இருக்கிறான். வேறொன்றிலும் இவன் புத்தி செல்லவில்லை. அன்றியும் படிக்கிற வரையில் இவன் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர். இரெட்டியார் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டார். இயல்பாகவே உபகாரச் சிந்தையை உடைய அவர் இந்த நான்கு பேர்களும் சொல்லும்போது என்னை ஏற்றுக்கொள்வதற்கு என்ன தடை?
இரெட்டியார் என்னை நோக்கி, “என்ன என்ன நூல்களைப் படித்திருக்கிறீர்?” என்று கேட்டார். நான் இன்ன இன்ன நூலை இன்னார் இன்னாரிடத்தில் பாடம் கேட்டேனென்பதைச் சொல்லிவிட்டு, “நான் இந்த நூல்களைப் பாடங் கேட்டிருந்தாலும் ஒரு நூலிலாவது எனக்குத் தெளிவான ஞானம் உண்டாகவில்லை. எல்லாக் குறையும் தாங்கள் தீர்க்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன். அவர் புன்னகையுடன், “அப்படியே ஆகட்டும்” என்றார்.
பிறகு “நீர் நன்னூல் காண்டிகை உரையைப் பாடம் கேட்டிருத்தலால் எழுத்துச் சொல் இலக்கணங்கள் ஒருவாறு தெரிந்திருக்கும். இந்த ஞானமே மேலே இலக்கியங்களைப் படித்தற்குப் போதுமானது. அடுத்தபடியாக யாப்பிலக்கணம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்; ஆதலால் முதலில் யாப்பருங்கலக் காரிகையைப் பாடஞ் சொல்லுகிறேன். அப்பால் சௌகரியம்போற் பார்த்துக்கொள்ளலாம்” என்று கூறி என் தந்தையாரைப் பார்த்து, “நீங்கள் குடும்பத்துடன் இங்கே வந்துவிடுங்கள்” என்றார். என் தந்தையாருக்கும் எனக்கும் மகிழ்ச்சியினால் உள்ளம் பூரித்தது. யாவரும் இரெட்டியாரிடம் விடைபெற்றுக்கொண்டு குன்னம் வந்தோம். என் தந்தையார் என் தாயாரையும் என்னையும் அழைத்துக்கொண்டு செங்கணத்துக்கு ஒரு நல்ல நாளில் வந்தார். இடையிலே நின்றிருந்த தமிழ்க் கேள்வித் துறையில் மீட்டும் நான் புகுந்தேன்.
இரெட்டியார் எங்களுக்காக ஒரு சாகை ஏற்படுத்தி அதில் இருக்கும்படி செய்து, உணவுப் பொருள்களையும் வேண்டிய அளவு முன்னதாக அனுப்பி, செலவுக்குப் பணமும் கொடுத்து ஆதரித்தார். ஒவ்வொரு மாத ஆரம்பத்திலும் தவறின்றி இரண்டு கல நெல்லும் இரண்டு ரூபாயும் அனுப்பி விடுவார்
.ரெட்டியார் இயல்பு
செங்கணத்தில் நாட்டாண்மைக்காரரில் பெரிய பண்ணையார், சின்னப் பண்ணையார், பட்டத்துப் பண்ணையார் என்ற பகுப்பினர் இருந்தனர்! விருத்தாசல ரெட்டியார் சின்ன பண்ணையார் என்னும் பகுப்பினர். இம்மூவகையினரையும் நாட்டார் என்று வழங்குவர். அவர்களுக்குத் தமிழ்ப் பயிற்சி இருந்தமையால் எங்களிடம் அன்புவைத்து அவ்வப்போது வேண்டிய உபகாரங்களைச் செய்து வந்தார்கள். அவர்களில் சிலர் சைவ சமயத்தையும் சிலர் வைணவ சமயத்தையும் தழுவியவர்கள். ஆயினும் அவர்களுக்குள் விவாக சம்பந்தம் முதலியன உண்டு.
விருத்தாசல ரெட்டியார் குட்டையான வடிவினர். கறுப்பு நிறத்தினர். தேகம் பளபளப்பாக இருக்கும். எப்பொழுதும் சுத்தமாக இருப்பார். காலை ஐந்து மணிக்கு எழுவார். ஊரைச் சுற்றிலும் காடுகளும் நீரூற்றமும் மணற் பரப்புமுள்ள ஓடைகளும் உண்டு. ஏதேனும் ஒரு பக்கம் சென்று தந்த சுத்தி முதலியவற்றை முடித்துக்கொண்டு ஏழு மணிக்கு வீட்டிற்கு வருவார். கால், கையைச் சுத்தம்பண்ணிக்கொள்வதற்கும் முகத்தைச் சுத்தம்பண்ணிக்கொள்வதற்கும் அரை மணிநேரம் பிடிக்கும். பிறகு திருநீற்றை உத்தூளனமாக இட்டுக்கொண்டு படிக்கத் தொடங்குவார். பதினொரு மணி வரையிற் படித்துக்கொண்டேயிருப்பார். படிக்கும் நூல்களிலுள்ள ஒவ்வொரு விசயத்தையும் ஆழ்ந்து படித்துச் சிந்தித்துச் செல்வார். மத்தியான உணவுக்குப்பின் இரண்டு மணி முதல் இராத்திரி எட்டு மணி வரையில் படித்துக்கொண்டே இருப்பார். படிப்பதில் அவருக்குச் சலிப்பே தோற்றாது. இரவில் போசனம் ஆன பிறகு தம்முடைய மூத்த குமாரராகிய நல்லப்ப ரெட்டியாருக்குக் கம்பராமாயணப் பாடம் சொல்வார். அவர் பேச்சு மிகவும் திருத்தமாக இருக்கும்.
(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா.
Leave a Reply