(தோழர் தியாகு எழுதுகிறார் 140 : (உ)ரோகித்து வேமுலா இறுதி மடல் தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

சென்ற ஆண்டு நான் பொள்ளாச்சியில் இருந்த போது அந்தத் துயரம் நிகழ்ந்தது. வளர்ந்து வந்து கொண்டிருந்த இளந்தோழர் ஒருவரைச் சாலை விபத்தில் இழந்தோம். சந்தோசு என்ற இயற்பெயர் கொண்ட தோழர் மகிழவனின் அந்தக் கொடிய இழப்பின் நினைவை அவருக்கு நெருங்கிய நண்பரான தோழர் ப. ஆறுச்சாமி பகிர்கிறார்…

மகிழவன் நினைவுகள்! கனவுகள்! – ப. ஆறுச்சாமி

22.02.2022 அன்று “நடக்கக் கூடாதது நடந்து விட்டது !”.

தந்தை பெரியாரின் இலக்கினை உயிர்மூச்சாக எடுத்துக்கொண்டு “தமிழ்நாடு தமிழுருக்கே” என்ற கொள்கையை நெஞ்சில் சுமந்து பயணித்த இளந்தோழர் இன்று நம்மோடு இல்லை! காலம் விரைவாக எடுத்துக் கொண்டது தோழர் மகிழவனை !.

காலத்திற்குப் பேசும் சக்தி கிடையாது, ஆனால் காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும். தோழர் மகிழவனது நினைவுகள் இன்றும் மனதோடு மனதாகி பேசிக் கொண்டும், கண்ணீரோடு வந்து கொண்டும் இருக்கின்றன. வாழ்க்கை பொருளுள்ளது என்பதை எனக்கு உணர்த்தியவன் மகிழவன்.

தோழர் மகிழவனது ஆசைகள், கனவுகள் அனைத்தும் இவ்வுலகை விடப் பெரியவை! என்பதை நான் நன்கு அறிவேன்.

ஆனால் அந்த ஆசைகளை, கனவுகளைத் தூக்கிச் செல்ல நம் தோள்கள் அணியமாகி விட்டனவா? இல்லை, அணியமாகிக் கொண்டுள்ளனவா? என்பதை அவரவர் மனத்தில் போட்டுக் கொளுத்திக் கொள்ளுங்கள். “நானும் கொளுத்துகின்றேன் “!.

“உண்மைச் சுடர் போல… அதை என்ன முயன்றாலும் மறைத்து வைக்க முடியாது. சீறிக் கொண்டு வெளிச்சம் தரும். திலீபனும் வெல்வான், பிரபாகரனும்  வெல்வான், தமிழர் ஆளத் தமிழீழம் படைக்கப்படும்.” – தோழர் மகிழவன்

இந்த வரிகளை உணர்வோடு  நீங்கள் அனைவரும் பகிர்ந்து கொண்டு இருக்கின்றீர்கள், மகிழ்ச்சி!

எல்லாவற்றையும் ஒதுக்கி நிதானித்து யோசித்துப் பாருங்கள். திலீபனும் வெல்வான், பிரபாகரனும் வெல்வான்.தமிழர் ஆளத் தமிழீழம் படைக்கப்படும். இந்த உறுதிதான் தோழர் மகிழவன்!

“வாருங்கள் தங்கைகளே, தோழர்களே! தோழர் மகிழவனது ஆசைகள், கனவுகள் ஆகியவற்றைச் சுமந்து கொண்டுபோய் உலகிற்கு விருந்தாக மாற்றுவோம் !”.

ப.ஆறுச்சாமி

22.02.2023

   தாழி மடல் 110