உ .வே.சா.வின் என் சரித்திரம் 43 : காரிகைப் பாடம் தொடர்ச்சி
(உ .வே.சா.வின் என் சரித்திரம் 42 : காரிகைப் பாடம் தொடர்ச்சி)
அத்தியாயம் 24 தொடர்ச்சி
காரிகைப் பாடம் தொடர்ச்சி
கல்விச் செல்வமும் பொருட் செல்வமும் ஒருங்கே பெற்றிருந்தமையின் அவருக்கு நல்ல மதிப்பு இருந்தது. அடிக்கடி யாரேனும் அயலூரிலிருந்து வந்து இரண்டொரு நாள் தங்கி அவரிடம் சம்பாஷித்துச் செல்வார்கள்
.
அவர் கன்னையரென்னும் வீரசைவரிடம் பாடங் கேட்டவர். வீரசைவர்களுக்கும் இரெட்டியார்களுக்கும் ஒற்றுமையும் நட்பும் அதிகமாக இருந்தன. வீரசைவ வித்துவ சிகாமணியாகிய துறைமங்கலம் சிவப்பிரகாசரை அண்ணாமலை இரெட்டியார் என்னும் செல்வர் ஆதரித்துப் பாதுகாத்த வரலாற்றை அவ்விருவகையினரும் அடிக்கடி பாராட்டிச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். சிவப்பிரகாச சுவாமிகள் பழகிய இடங்களையும், அவர் நீராடும்பொருட்டு அமைக்கப்பெற்ற நடை வாவிகளையும் நான் பார்த்திருக்கிறேன்.
பல தமிழ் ஏட்டுச் சுவடிகளையும் அச்சுப் புத்தகங்களையும் விருத்தாசல இரெட்டியார் தொகுத்து வைத்திருந்தார். எழுத அநேக ஏட்டுச் சுவடிகளைச் சித்தமாக வைத்திருப்பார். தம்மிடம் இல்லாத அரிய தமிழ் நூல்கள் கிடைத்தால் அவற்றில் எழுதிக்கொள்வார். ஏட்டுச் சுவடியில் விரைவாகவும் நன்றாகவும் எழுதுவார். எனக்காகச் சில தமிழ் நூல்களை ஏட்டுச் சுவடியில் எழுதித் தந்திருக்கிறார். சில சமயங்களில் நானும் அவரும் ஒரே சமயத்தில் ஒரு நூலைப் பிரித்துக்கொண்டு தனித்தனியே பிரதி பண்ணுவோம்.
படித்தலும் பாடம் சொல்லுதலும் வந்தவர்களிடம் சம்பாசணை செய்தலுமின்றி வேறு ஒரு காரியத்திலும் அவர் புத்தியைச் செலுத்துவதில்லை. மிகுதியான பூத்திதி உள்ளவர் அவர். அவற்றை அவருடைய பிள்ளைகளும் காரியத்தருமே கவனித்து வந்தனர். இவ்வாறு அவர் இருத்தலில் குடும்பத்தாருக்கும் உறவினருக்கும் மிக்க வருத்தம் இருந்தது. அதனை இரெட்டியார் உணர்ந்தும் சிறிதும் கவலைகொள்ளவில்லை.
நல்லப்ப ரெட்டியார்
நான் விருத்தாசல ரெட்டியாரிடம் பாடங்கேட்ட காலத்தில் அவருக்குச் சற்றேறக் குறைய ஐம்பத்தைந்து பிராயத்திற்கு மேல் இருக்கும். அவருக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தனர். மூத்தவராகிய நல்லப்ப இரெட்டியாருக்கு சீதன வருவாய் மிகுதியாக இருந்தது. பெண்மணிகளுக்கு அதிக சீதனம் வழங்குவது அந்தச்சாதியினருடைய வழக்கம். அதனால் பெண்மணிகள் சுதந்திரமும் விவேகமும் கணவர்களிடத்தில் மரியாதையும் உடையவர்களாக இருப்பார்கள்.
நல்லப்ப இரெட்டியார் நல்ல தியாகி. தமிழிலும் பயிற்சியுள்ளவர். உத்தமமான குணமுடையவர். என் தந்தையாரிடம் பேரன்பு பூண்டிருந்தார். அவர் தனியே எங்களுக்குச் செய்துவந்த உதவிகள் பல.
யாப்பருங்கலக் காரிகையைப் பாடங்கேட்டது
நல்லவேளையில் நான் காரிகை படிக்கத் தொடங்கினேன். யாப்பிலக்கணத்தைப் பற்றிச் சிறிதும் அறியாதநிலையில் இருந்தேன் நான். எனக்கு அதைக் கற்பிப்பது சிரமமான காரியந்தான். ஆனாலும் இரெட்டியார் தெளிவாக எனக்குக் கற்பித்தார். அவருடைய ஞானமும் என்னுடைய ஆவலும் சேர்ந்து அந்தத் தெளிவுக்குக் காரணமாயின.
நான் பாடங்கேட்கத் தொடங்கியது சுக்கில வருடம் மார்கழி (1869) மாதத்திலாகும். விடியற்காலையில் நான்கு மணிக்கே அவர் என்னை எழுப்பிவிடுவார். திருவாசகத்தில் திருவெம்பாவையைப் படிக்கச் செய்வார். முதல்நாள் நடந்த பாடத்தை மறுபடியும் சொல்லிக் கேள்விகள் கேட்டு என் மனத்தில் பதியச் செய்வார். அக்கேள்விகள் எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தன. பாடம் கேட்பவர் எவ்வளவு தூரம் கிரகித்துக்கொண்டார் என்பது தெரியாமலே தொடர்ச்சியாகப் பாடம் சொல்வதில் பயன் ஒன்றுமில்லை என்பதை அவர் அறிவார். கேட்ட பாடத்தைச் சிந்திக்கச் செய்து அடிக்கடி கேள்வி கேட்பதனால் கற்பித்த பாடம் உறுதிப்படும்.
யாப்பருங்கலக் காரிகையும் உரையும் மேற்கோட் செய்யுட்களும் என் உள்ளத்தே பதிந்தன. மேற்கோட் செய்யுளின் அருத்தத்தையும் எந்த இலக்கணத்திற்கு உதாரணமாக அது காட்டப்படுகிறதோ அந்த இலக்கணம் அமைந்திருப்பதையும் இரெட்டியார் எடுத்துரைப்பார். அந்த இலக்கணத்தை அமைத்துப் புதிய செய்யுட்கள் எழுதும்படி சொல்லுவார். நான் எழுதியதைப் பார்த்து இன்ன இன்ன பிழைகள் இருக்கின்றன என்று விளக்குவார். ஒருவகைச் செய்யுளுக்குரிய இலக்கணத்தை அவ்வகைச் செய்யுளாலேயே உரைக்கும் இலக்கண நூல் தெலுங்கிலும் வட மொழியிலும் உள்ளனவாம். இரெட்டியாருக்குத் தெலுங்கு தாய்மொழி. அதிலும் அவருக்குப் பயிற்சி உண்டு. தெலுங்கு நூலைப் பற்றி என்னிடம் சொல்லி “அவ்வாறே நீரும் செய்து பழகும்” என்று உரைத்து அவ்வழியையும் கற்பித்தார். அப்படியே நேரிசை வெண்பாவின் இலக்கணத்தை நேரிசை வெண்பாவிலேயே அமைத்தேன்; ஆசிரியப்பாவின் இலக்கணத்தை ஆசிரியப்பாவாலேயே கூறினேன். மிகவும் சிரமப்பட்டு இவ்வாறு பாடிக் காட்டுவேன். அச்செய்யுட்களில் உள்ள குணத்தைக் கண்டு முதலில் எனக்கு உத்சாகம் ஊட்டுவார்; பிறகு பிழை இருந்தால் அதனையும் எடுத்துக்காட்டுவார்.
காரிகையின் முதற்செய்யுளின் உரையில் உரையாசிரியராகிய குணசாகரர் வேறு மொழிகளிலுள்ள நூல்களை உவமையாக எடுத்துச் சொல்லுகிறார். அந்நூல்களைப் பற்றிய வரலாறுகள் மாத்திரம் ரெட்டியாரால் சொல்ல இயலவில்லை. ஆதலின் அவ்விசயத்தில் சந்தேகம் இருந்தது. இடையிடையே வரும் மேற்கோள்களில் சைன சமயத் தொடர்புடைய பாடல்கள் பல. அவற்றில் அச்சமய சம்பந்தமான சில செய்திகளை அவர் விளக்கவில்லை. இவற்றைத் தவிர மற்ற எல்லாம் தெளிவாகவும் அழுத்தமாகவும் என் அறிவில் பதிந்தன. அந்த அஸ்திவார பலம் இன்னும் இருந்து வருகிறது. இலக்கணமென்றால் கடினமானதென்ற நினைவே இல்லாமல் சுலபமாகவும் மனத்துக்கு உத்ஸாகமுண்டாகும்வண்ணமும் ரெட்டியார் பாடஞ்சொன்ன முறையை நான் என்றும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். அவரிடம் நான்கு மாதங்கள் நான் பாடங்கேட்டேன். ஆயினும் என் வாழ்வு முழுவதும் அப்பாடம் பயன்பட்டு இன்பம் தருவதாயிற்று.
(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா.
Leave a Reply