(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 4. தொடர்ச்சி)

4. தெருப்பள்ளிக்கூடங்களில் படித்தது

முதல் பள்ளிக்கூடம் இப்போது நானிருக்கும் வீட்டிற்கு 100 அடி தூரத்திற்குள் ஒரு வீட்டில் நடை திண்ணையி லிருந்தது. அதில் என்னுடன் பத்து பதினைந்து பிள்ளைகள் தான் படித்தார்கள் என்று நினைக்கிறேன். அதன் ஒரே உபாத்தியாயர் மிகவும் வயது சென்றவர். அவர் நரைத்த முகம் எனக்கு வெறுப்பைத் தந்தது. அவரிடம் தான் என் அண்ணன்மார்களெல்லாம் அட்சராப்பியாசம் ஆரம்பித்தார்களாம். எனது அண்ணனாகிய ஏகாம்பர முதலியாரைப்பற்றி அவர் விசயமாக ஒரு கதை சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் படித்தபோது சமுத்திரமானது புரண்டு பட்டணத்தையெல்லாம் அழிக்கப் போகிறது என்று ஒரு பெரிய வதந்தி பிறந்ததாம். அதைக் கேட்ட என் தமையனார் என் தாயாரிடம் ஓடிப்போய் “சமுத்திரம் பொங்கிவந்தால் எங்கள் உபாத்தியாயரைக்கூட அடித்துக் கொண்டு போகுமா?” என்று கேட்டாராம். இக்கதையை என் தாயார் பன்முறை வேடிக்கையாகக் கூறக்கேட்டிருக்கிறேன். இத்தெரு பள்ளிக்கூடம் சில மாதங்களுள் எடுபட்டது. அதன் பேரில் எங்கள் தகப்பனார் எங்கள் தெருவாகிய ஆச்சாரப்பன் தெருவிலேயே உடையவர் கோவிலுக்கு எதிரிலிருக்கும் மற்றொரு தெருப் பள்ளிக்கூடத்திற்கு என்னை அனுப்பினார். இப் பள்ளிக்கூடத்திற்கு சாத்தாணி வாத்தியார் பள்ளிக்கூடம் என்று பெயர். உபாத்தியாயர் சாத்தாணி சாதியார். அவரிடம் நான் தெலுங்கு பாசை கற்றேன். இந்த வாத்தியார் சுமுகம் உடையவர். அவரிடம் பயமில்லை எனக்கு. நான் டெபடி, இன்சுபெக்டர் ஆப் இசுகூல்சு (Deputy Inspector of Schools) பிள்ளையாதல்பற்றி எனக்கு உபாத்தியாயர் பென்சுக்குப் பக்கக்தில் ஒரு சிறிய பென்சு கொடுக்கப்பட்டது. மற்ற பிள்ளைகளெல்லாம் தரையில் உட்காருவார்கள். இந்த சிறிய பென்சில் உட்கார்ந்து சில சமயங்களில் தூக்கம் மேலிட, உபாத்தியாயர் துடை மீது படுத்து அப்படியே தூங்கிவிடுவேன் உபாத்தியாயர் கோபியாது நான் விழித்தவுடன் என்னை வீட்டுக்கு அனுப்பிவிடுவார். சுமார் 6-மாதங்கள் இங்கு படித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். பிறகு என் தகப்பனார் நான் தமிழ் படிக்க வேண்டுமென்று கருதி வேறொரு பள்ளிக் கூடத்திற்கு அனுப்பினார். நான் மூன்றாவதாக சேர்ந்த தெருப் பள்ளிக்கூடத்திற்கு நரசிம்மலு வாத்தியாயர் பள்ளிக் கூடம் என்று பெயர். இந்தப் பள்ளிக்கூடம் ஆச்சாரப்பன் வீதியிலிருக்கும் ஒரு சந்தாகிய பாலகிருட்டிணன் சந்தில் இருந்தது. இந்த வாத்தியார் கண்டிப்பான மனுசர். ஆயினும் நல்ல சுபாவமுடையவர், இங்கு நான் 1879-ஆம் வருடம் படித்தேன் இங்குதான் நான் ஆங்கிலம் படிக்க ஆரம்பித்தது.

1880-ஆம் வருடம் என்னை, சென்னை பிராட்வே (Broadway) யிலிருந்த இந்து புரொபரைடரி (Hindu Proprietary School) என்னும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினார் எங்கள் தந்தையார். இது தெருப் பள்ளிக்கூடமல்ல, பணக்காரப் பிள்ளைகள் அக்காலம் படித்த பள்ளிக்கூடம், அதற்கேற்ப இங்கு பள்ளிக்கூடத்துச் சம்பளம் மற்ற பள்ளிக்கூடங்களிலிருப்பதைவிட அதிகம்! அச்சமயம் எனக்கு 7 வயது. இங்கு நடந்த பல விசயங்கள் நன்றாய் ஞாபகமிருக்கின்றன.

இங்கு இருந்த ஏழு வகுப்புகளின் உபாத்தியாயர்கள் பெயர்கள் இன்னும் ஞாபகமிருக்கின்றன. இப்பள்ளிக்கூடத்தில் படித்தபோது என்னுடன் படித்த இரண்டு நண்பர்கள் ஞாபகமிருக்கிறது. ஒருவர் மணலி சரவண முதலியார், பிறகு இவருக்கு இராவ்பகதூர் பட்டம் அளிக்கப்பட்டது; இவர் சில வருடங்களுக்குமுன் காலமானார். மற்றொருவர் பாலசுந்தரம் செட்டியார். இவர் ஒரு பாங்கில் பொக்கிசதாராகி 1940-ஆம் வருடம் காலமானார். இங்கு சம்பவித்த மற்றொரு விசயம் என் மனத்தில் நன்றாய் படிந்திருக்கிறது. ஒருமுறை இரண்டு வெள்ளைக்காரர்கள் சிறுவர்களாகிய எங்களுக்கு பஞ்ச் அண்டு சூடி (Punch and Judy) பொம்மலாட்டம் காட்டுவதாக இசைந்தனர். நாங்கள் எல்லோரும் டிக்கட்டுகள் வாங்கிக் கொண்டு ஆவலுடன் அதைப்பார்க்கக் காத்திருந்தோம், அது ஆரம்பமானவுடன் இந்த இரண்டு வெள்ளைக்காரர்களும் குடித்துவிட்டு சண்டையிட்டு வெளிவந்தனர். பிறகு ஒருவன் அக்குடி வெறியில் மெத்தைக்குப் போகும் வழியில் முட்டிக் கொண்டு சுத்தம் பெருக மூர்ச்சையானான். அதைப் பார்க்கவும் சிறுவர்களாகிய நாங்கள் பயந்தோம். குடி வெறியினால் இது நேர்ந்தது என்று ஒரு பெரியவர் சொல்ல குடியைப் பற்றி திகிலடைந்தேன். இது நான் பிறகு மதுவிலக்கு சங்கத்தைச் சேர ஒரு காரணமாயிருந்ததெனலாம்.

மூன்றாவது ஞாபகமிருக்கும் சமாச்சாரமும் ஒரு முக்கியமானதே. இப்பள்ளியின் வருடாந்திரக் கொண்டாட்டத்திற்கு எங்களையெல்லாம் பச்சையப்பன் சபா மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். அச்சமயம் என் மூத்த அண்ணன் ஏகாம்பர முதலியாருடைய சிநேகிதரான டபுள்யூ. இராமசுவாமையா என்பவர் (Recitation) ஒப்புவித்தார். சனங்கள் அதை கரகோசத்துடன் ஏற்றனர். அது சேக்குசுபியர் மகா நாடகக் கவி ஆங்கிலத்தில் எழுதிய சூலியர்சு சீசர் என்னும் நாடகத்தில் ஆன்டொனி (Antony) என்பவரின் சொற் பொழிவு என்று பிறகு கண்டுணர்ந்தேன். அம்மாதிரி நானும் சொற்பொழிவு செய்யவேண்டுமென்று எனக்கு ஆசை பிறந்தது. பிறகு நான் படித்துக்கொண்டிருந்த ஆங்கில புத்தகத்திலிருந்த இரண்டு மூன்று சிறு செய்யுட்களை குருட்டுப் பாடம் செய்து உரக்க ஒப்பித்துக்கொண்டிருந்தேன். இதைக் கேட்ட என் தமையனார் ஏகாம்பா முதலியார் “இது என்னடா’ என்று வினவ என் விருப்பத்தைத் தெரிவித்தேன், அதன்பேரில் ‘ரெசிடேசன்’ என்றால் உரக்க ஒப்புவித்தல் மாத்திரமல்ல. சரியான பாவத்துடன் அதை ஒப்பிக்கவேண்டும் என்று கற்பித்தார். இதுதான் பிறகு தான் ‘ரெசிடேஷன்’ செய்ய நன்றாய்க் கற்று முடிவில் நடிக்கக் கற்றுக்கொண்டதற்கு அடிபீடமாகும்.

1881ஆம் வருசம் முடிவில் இப்பள்ளிக்கூடம் எடுபட்டுப் போயது. இதனால் என் வகுப்பில் நான் முதலாவதாக இருந்ததற்காக எனக்குச் சேரவேண்டிய பரிசு கிடைக்காமற் போயது.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை