(உ.வே.சா.வின் என் சரித்திரம் 56 : என்ன புண்ணியம் செய்தேனோ! – தொடர்ச்சி)

என் சரித்திரம்

  1. அன்பு மயம்

என் ஆசிரியர் பாடஞ் சொல்லி வரும்போது அங்கங்கே அமைந்துள்ள இலக்கண விசேடங்களை எடுத்துச் சொல்வது வழக்கம். அரிய பதமாக இருந்தால் வேறு நூலிலிருந்து அதற்கு ஆதாரம் காட்டுவார். செய்யுட்களில் எதுகை, மோனைகள் எப்படி அமைந்திருக்கின்றன என்பதைக் கவனிக்கச் செய்வார். கவிஞராகிய அவர் செய்யுள் செய்யப் பழகுபவருக்கு இன்ன இன்ன முட்டுப்பாடுகள் நேருமென்பதை நன்றாக அறிவார். எங்களுக்கு அத்தகைய இடையூறுகள் நீங்கும் வழியைப் போதிப்பார்.

செய்யுள் இயற்றும் வழி

“செய்யுள் செய்வதற்கு முன் எந்த விடயத்தைப் பற்றிச் செய்யுள் இயற்ற வேண்டுமோ அதை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும். எந்த மாதிரி ஆரம்பித்தால் கடினமாக இராதோ அதை அறிந்துகொள்ள வேண்டும். பாட்டில் எதுகையில் இன்னதை அமைக்க வேண்டுமென்பதை வரையறுத்துக்கொண்டு அதற்கேற்ற எதுகையை வைக்க வேண்டும். மனம் போனபடி ஆரம்பித்து அதற்கேற்றபடி அடிகளைச் சரிப்படுத்துவது கூடாது. முதல் அடியில் அமைக்க வேண்டிய பொருளை மாத்திரம் யோசித்துத் தொடங்கிவிட்டு நான்காவது அடிக்கு விசயமோ வார்த்தைகளோ அகப்படாமல் திண்டாடக் கூடாது. நான்கு அடிகளிலும் தொடர்ச்சியாக அமையும் அமைப்பை நிச்சயித்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறுவார்.

ஒரு நாள் மாலையில் அவர் அனுட்டானத்தை முடித்துக்கொண்டு வந்து வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தார். நானும் கனகசபை ஐயரும் சவேரிநாத பிள்ளையும் அருகில் நின்றோம். அப்போது அவர் எங்களை நோக்கி, “உங்களுக்குச் செய்யுள் இயற்றும் பழக்கம் உண்டா?” என்று கேட்டார். மற்ற இருவர்களும் பிள்ளையவர்களிடத்திற் பல நாட்களாகப் பாடம் கேட்டுப் பழகியவர்கள். அவர்கள் “உண்டு” என்று சொன்னார்கள். நான் இந்த மகாகவியினிடத்தில் “நமக்கும் செய்யுளியற்றத் தெரியும் என்று சொல்வது சரியல்லவே?” என்று முதலில் எண்ணினேன். ஆனாலும், மற்றவர்கள் தமக்குத் தெரியுமென்று சொல்லும்போது நான் மட்டும் சும்மா இருப்பதற்கு என் மனம் இடங்கொடுக்கவில்லை. ஆதலால், “எனக்கும் தெரியும்” என்று சொன்னேன்.

“ஏதாவது ஒரு பாட்டின் ஈற்றடியைக் கொடுத்தால் அதை வைத்துக்கொண்டு மற்றவற்றைப் பூர்த்தி செய்ய முடியுமா?” என்று ஆசிரியர் கேட்டார்.

“முயன்று பார்க்கிறோம்” என்றோம்.

உடனே அவர் எங்கள் மூவருக்கும் மூன்று வெண்பாக்களுக்குரிய ஈற்றடிகளைக் கொடுத்தார். சவேரிநாத பிள்ளை கிறித்தவர்; ஆகையால் அவருக்கு ஏற்றபடி, “தேவா வெனக்கருளைச் செய்” என்பதையும், கனகசபை ஐயருக்கு, “சிந்தா குலந்தவிரச் செய்” என்பதையும், எனக்கு, “கந்தா கடம்பாகு கா” என்பதையும் கொடுத்தார். நாங்கள் யோசித்து நிதானமாக ஒருவாறு வெண்பாக்களைப் பூர்த்தி செய்தோம்.

எனக்காகப் பிரார்த்தனை

நாங்கள் மூவரும் இந்த மூன்று வெண்பாக்களையும் சொன்னோம். கேட்ட அவர், “நானும் ஒரு பாடல் முடித்திருக்கிறேன்” என்று சொல்லி,

பாடப் படிக்கப் பயனா நினக்கன்பு
கூடக் கருணை கொழித்தருள்வாய்-தேடவரும்
மந்தா நிலந்தவழு மாயூர மாநகர்வாழ்
கந்தா கடம்பாகு கா”

என்று அந்த வெண்பாவையும் சொன்னார். “நம்மோடு சேர்ந்து நமக்கு ஊக்கத்தை உண்டாக்குவதற்காகத் தாமும் ஒரு செய்யுளை இயற்றிச் சொல்லுகிறார்” என்பதை நான் உணர்ந்தேன். தமிழை இன்பந் தரும் விளையாட்டாகக் கருதி வாழ்ந்த அப்பெரியார் எங்களுக்கும் தமிழ்க் கல்வியை விளையாட்டாகவே போதித்து வந்தார். பிள்ளைகளுக்கு உற்சாக மூட்டுவதற்காகத் தந்தை அவர்களோடு சேர்ந்து விளையாடுவதில்லையா? அதைப் போல அவரும் எங்களுடன் சேர்ந்து செய்யுள் இயற்றினார்.

எங்கள் மூவருக்கும் அவர் கூறிய செய்யுளைக் கேட்டவுடன் ஆனந்தமுண்டாயிற்று. எனக்கு ஒருபடி அதிகமான சந்தோசம் ஏற்பட்டது. என் ஆசிரியர் எனக்குக் கொடுத்த சம்சுயையையல்லவா தம்முடைய பாட்டிற்கு ஈற்றடியாகக் கொண்டார்? அவருடைய அன்பு என்பால் எவ்வாறு பதிந்துள்ளதென்பதை அது காட்டவில்லையா? அது மட்டுமா? அப்பாட்டு ஒரு கவியினது பாட்டாக இருந்தாலும் பொருளமைப்பில் ஒரு மாணாக்கனது பிரார்த்தனையாக வல்லவோ இருக்கிறது? ‘பாடவும் படிக்கவும் அன்பு கூடவும்’ எல்லாரும் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டியவர்களே. ஆயினும் என் ஆசிரியர் அத்தகைய பிரார்த்தனையை எவ்வளவோ காலத்திற்கு முன் செய்து அதன் பலனை அனுபவித்து வந்தவர். ஆகையால் அப்போது அந்தப் பிரார்த்தனையை அவர் சொல்ல வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. குழந்தைக்காகத் தாய் மருந்தை உண்பதுபோல, பாடவும் படிக்கவும் அன்பு கூடவும் வேண்டுமென்று மாயூர நகர் வாழும் கந்தனை நான் பிரார்த்திப்பதற்குப் பதிலாக அவரே பிரார்த்தித்தார். எனக்காகவே அப்பாடல் இயற்றப் பெற்றது.

இத்தகைய எண்ணங்கள் என் உள்ளத்தில் தோன்றின. நான் மகிழ்ந்தேன்; பெருமிதமடைந்தேன்; உருகினேன். அதுமுதல் அச்செய்யுளை நாள்தோறும் சொல்லி வரலானேன். நான் சொந்தமாக இயற்றிய செய்யுள் என் நினைவில் இல்லை. எனக்காக என் ஆசிரியர் பாடித் தந்த செய்யுளே என் உள்ளத்தில் இடங்கொண்டது.

முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்

முருகக் கடவுள் தமிழுக்குத் தெய்வம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். தமிழ்க் கல்வியையே விரும்பி வாழ்ந்த எனக்கு அப்பெருமானிடத்தே பிரார்த்தனை செய்ய வேண்டுமென்ற எண்ணம் உதித்தது. மந்திர சபத்தால் அவரது உபாசனையை ஒருவாறு செய்து வந்தாலும் தமிழ்க் கடவுளைத் தமிழ்ச் செய்யுளாலே உபாசித்துவர வேண்டு மென்ற அவா உண்டானமையால் எந்தத் தமிழ் நூலையாவது தினந்தோறும் பாராயணம் செய்து வர வேண்டுமென்று உறுதி செய்துகொண்டேன். குமரகுருபர சுவாமிகள் முருகக் கடவுள் திருவருள் பெற்றவரென்று அறிந்து அவர் இயற்றிய நூல்களில் ஒன்றாகிய முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழைத் தினந்தோறும் காலையில் பாராயணம் செய்து வரலானேன். இப்பழக்கம் உத்தமதானபுரத்திலேயே ஆரம்பமாயிற்று. பிள்ளையவர்களிடத்தில் வந்த பிறகும் இப்பாராயணம் தொடர்ந்து நடைபெற்றது.

இந்நிலையில் என் ஆசிரியர் எனக்காகப் பாடிக்கொடுத்த வெண்பாவும் கிடைத்ததென்றால் எனக்குண்டான திருப்தியைச் சொல்லவா வேண்டும்? அதனையும் ஒரு மந்திரமாகவே எண்ணிச் சொல்லி வந்தேன்.

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் முழுவதையும் பாராயணம் செய்து வருவதால் காலையில் சில நாழிகை பாடங் கேட்க இயலாது. நான் பாராயணம் செய்து வருவது பிள்ளையவர்களுக்குத் தெரியும். மற்றவர்களுக்குப் பாடஞ் சொல்ல ஆரம்பிக்கும்போது நான் இல்லாவிடின் எனக்காகக் காத்திருப்பது அவரது வழக்கமாயிற்று. இத்தகைய தாமதம் ஏற்படுவதை மாற்றும் பொருட்டு அவர் ஒரு நாள் என்னிடம், “முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழை முற்றும் இவ்வாறு பாராயணம் செய்வது நன்மையே; ஆனாலும் தினந்தோறும் செய்து வரும்போது சில நாட்கள் உமக்குச் சிரமமாக இருக்கும். காலையில் சுறு சுறுப்பாகப் பாடம் கேட்பதற்கும் சிறிது தாமதம் நேருகிறது. அதற்கு ஒரு வழி சொல்லுகிறேன். பிள்ளைத் தமிழில் வருகைப் பருவம் மிகவும் முக்கியமானது. நீர் அந்நூலில் வருகைப் பருவத்தின் கடைசி இரண்டு செய்யுட்களை மாத்திரம் பாராயணம் செய்து வந்தாற் போதும். இவ்வாறு செய்யும் வழக்கமும் உண்டு” என்றார். அவர் கூறியது எனக்கு அனுகூலமாகவே தோற்றியது. ஆதலின் அவர் கட்டளைப்படியே நான் அது தொடங்கி அந்த இரண்டு செய்யுட்களை மாத்திரம் தினந்தோறும் சொல்லி வரலானேன்.

தம்பியின் சனனம்

பிரசோற்பத்தி வருடம் ஆடி மாதம் பிறந்தது. எனக்குப் பதினேழாம் பிராயம் நடந்தது. என் தந்தையாரும் தாயாரும் சூரியமூலையில் இருந்தனர். ஆடி மாதம் மூன்றாந் தேதி திங்கட்கிழமை (17-7-1871) யன்று இறைவன் திருவருளால் எனக்கு ஒரு தம்பி பிறந்தான். இச்செய்தியை எனக்குத் தெரிவித்து அழைத்துச் செல்வதற்காக என் தந்தையாரே வந்தார். என் தாய், தந்தையர் என்னைப் பிரிந்து வருந்துவதை நான் அறிந்தவன். அவ்வருத்தத்தை ஒருவாறு போக்கி ஆறுதல் உண்டாக்கவே கடவுள் இக்குழந்தையைக் கொடுத்திருக்கிறார் என்று நான் நம்பினேன்.

பிள்ளையவர்களிடம் என் தந்தையார் இச் சந்தோசச் செய்தியைத் தெரிவித்தபோது அவர் மகிழ்ந்தார். என்னை நோக்கி, “தம்பியுடையான் படைக்கஞ்சான்” என்பது பழமொழி. குழந்தை சௌக்கியமாக வளர்ந்து உமக்குச் சிறந்த துணையாக இருக்க வேண்டுமென்று சிவபெருமானைப் பிரார்த்திக்கிறேன்” என்றார். அப்பால், சிறிது நேரம் வரையில் என் படிப்பு சம்பந்தமாகப் பேசிவிட்டு, “நான் இவனை ஊருக்கு அழைத்துச் சென்று புண்யாக வாசனம் வரையில் வைத்திருந்து பிறகு அனுப்பிவிடுகிறேன்” என்று என் தந்தையார் பிள்ளையவர்களிடம் அனுமதிபெற்று என்னை அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.

மாயூரத்திலிருந்து சூரியமூலை ஏறக்குறைய 10 கல் தூரம் இருக்கும். நாங்கள் நடந்தே சென்றோம். எங்கள் பிராயணம் பெரும்பாலும் நடையாகத்தான் இருந்தது. செல்லும்போது தந்தையார் என்னுடைய காலப்போக்கைப் பற்றி விசாரித்தார். நான் கூறிய விடையால் எனக்கிருந்த உத்சாகத்தையும் சந்தோசத்தையும் என்பால் உண்டாகியிருந்த கல்வி அபிவிருத்தியையும் அறிந்தார்.

“நான் வரும்போதே உன்னைப் பற்றித் தெரிந்துகொண்டேன். வரும் வழியில் மாயூரத்திலிருந்து யாரேனும் எதிரே வந்தால் அவரிடம் பிள்ளையவர்களைப் பற்றி விசாரிப்பேன். அவர்கள் சொன்ன பதில் எனக்குத் திருப்தியை உண்டாக்கிற்று. மாயூரத்திலிருந்து வரும் ஒருவரைப் பார்த்து ‘பிள்ளையவர்கள் சௌக்கியமாக இருக்கிறார்களா?’ என்று விசாரித்தேன். ‘அவர்கள் ஊரில் இருக்கிறார்களா?’ என்று கேட்டுத் தெரிந்துகொண்டேன். ‘அவரிடம் ஒரு பிராமணப் பையன் படிக்கிறானே! உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டேன். ‘ஆகா, தெரியுமே. பிள்ளையவர்களைப் பார்த்தவர்கள் அவர்களுடைய மாணாக்கர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் இருக்க முடியாதே. ஒவ்வொருவரையும் பற்றி வருபவர்களுக்குச் சொல்லி உத்சாகமூட்டுவது அவர்கள் வழக்கமாயிற்றே. இப்போது வந்திருக்கும் பிராமணப் பையனிடம் அவர்களுக்கு அதிகப் பிரியமாம். அப்பிள்ளை நன்றாகப் பாடல் படிக்கிறாராம். சங்கீதங்கூடத் தெரியுமாம். பிள்ளையவர்கள் அவரிடம் வைத்துள்ள அன்பு அவரோடு பழகுகிறவர்கள் யாவருக்கும் தெரியும்’ என்று சொன்னதைக் கேட்டு என் உள்ளம் குளிர்ந்தது. உன் அம்மா உன்னைப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டுமென்று துடித்துக்கொண்டிருக்கிறாள்” என்று என் தந்தையார் கூறினார்.

அன்னையின் ஆவல்

நாங்கள் சூரியமூலை போய்ச் சேர்ந்தோம். வீட்டிற்குள் சென்றேனோ இல்லையோ நேரே, “அம்மா!” என்று சொல்லிக்கொண்டே பிரசவ அறைக்கு அருகில் சென்றுவிட்டேன். உள்ளே இருந்து மெலிந்த குரலில், “வா, அப்பா” என்று அருமை அன்னையார் வரவேற்றார்.

“உன் தம்பியைப் பார்த்தாயா?” என்று அங்கிருந்த என் பாட்டியார் குழந்தையை எடுத்து எனக்குக் காட்டினார். நான் அந்தக் குழந்தையைப் பார்த்துப் பார்த்துச் சந்தோசமடைந்தேன். அதே சமயத்தில் என் தாயார் அந்த அறையில் இருந்தபடியே என்னை நோக்கிச் சந்தோசம் அடைந்தார்.

“சாமா, உன் உடம்பு இளைத்துவிட்டதே; வேளைக்கு வேளை ஆகாரம் சாப்பிடுகிறாயா? எண்ணெய் தேய்த்துக்கொள்கிறாயா?” என்று என் தாயார் விசாரித்தார்.

“எனக்கு ஒன்றும் குறைவில்லை. சௌக்கியமாகவே இருக்கிறேன்” என்றேன் நான்.

“என்னவோ, அநாதையைப்போலத் தனியே விட்டுவிட்டோம். ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்” என்று தழுதழுத்த குரலில் என் அன்னையார் கூறினபோது அவருடைய இருதயத்திலிருந்த துக்கத்தின் வேகம் என்னையும் தாக்கியது; என் கண்களில் அதன் அடையாளம் தோற்றியது.

அன்புப் பிணைப்பு

புண்ணியாகவாசனம் நடைபெற்றது. அதன் பின்பும் சில நாட்கள் அங்கே இருந்தேன். “குழந்தை அங்கே தனியாக இருக்கிறான். வாய்க்கு வேண்டியதைத் தருவதற்கு யார் இருக்கிறார்கள்? ஏதாவது பட்சணம் பண்ணிக்கொடுங்கள்” என்று என் தாயார் கூற, அங்கிருந்த ஒவ்வொரு நாளும் விதவிதமான சிற்றுண்டிகளை வீட்டிலுள்ளவர்கள் செய்துகொடுத்தார்கள். நான் உண்டேன். என்னிடம் பிள்ளையவர்கள் வைத்துள்ள அன்பைக் குறித்து நான் விரிவாகச் சொன்னேன். அதைக் கேட்டபோது என் தாயாருக்கும் மற்றவர்களுக்கும் ஆறுதல் உண்டாயிற்று.

என் பாட்டனார் பிள்ளையவர்களைப்பற்றி விசாரித்தார். அவருடைய சிவபக்தியையும் பாடஞ் சொல்லும் ஆற்றலையும் அவர் கேட்டு மகிழ்ந்தார். அவரியற்றிய சிவோத்கர்சத்தை விளக்கும் பாடல்களைச் சொல்லிக் காட்டினேன். நான் சொன்ன விசயங்களெல்லாம் பாட்டனாருக்கு மிக்க ஆச்சரியத்தை விளைவித்தன.

சூரியமூலைக்குச் சென்றபோது என் தாயாரையும் தந்தையார் முதலியோரையும் குழந்தையையும் பார்த்த மகிழ்ச்சியிலே சில நாட்கள் பதிந்திருந்தேன். தினந்தோறும் தவறாமல் தமிழ்ப்பாடங் கேட்டு வரும் பழக்கத்தில் ஊறியிருந்தவனாகிய எனக்கு அப்பழக்கம் விட்டுப்போனதனால் ஒருவிதமான குறை சிறிது சிறிதாக உறைக்கத் தொடங்கியது. தமிழ்ப்பாடம் ஒருபுறம் இருக்க, பிள்ளையவர்களைப் பிரிந்திருப்பதில் என் உள்ளத்துக்குள் ஒருவிதமான துன்பம் உண்டாகியிருப்பதை உணர்ந்தேன். தாயார், தகப்பனார் முதலியவர்களோடு சேர்ந்திருப்பதனால் உண்டாகிய சந்தோச உணர்ச்சியினூடே அந்தத் துன்ப உணர்ச்சி தலைகாட்டியது. இப்புதிய அனுபவத்தில் எனக்கு ஓர் உண்மை புலப்பட்டது: “ஆண்டவன் என் ஆசிரியர் உள்ளத்திற்கும் என் உள்ளத்திற்கும் மிகவும் நுண்மையான பிணைப்பை அன்பினால் உண்டாக்கிவிட்டான். அப்பிணைப்பு என்னை அறியாமலே என்னைக் கட்டுப்படுத்திவிட்டது! அவர் எனக்காகப் பிரார்த்திக்கிறார். நான் என் தாயார் அருகிலிருந்தும் அவரருகில் இல்லாத குறையை உணர்கிறேன்” என்பதுதான் அது. “இந்த அன்பு நிலைத்திருக்க வேண்டும்” என்று அந்தரங்க சுத்தியோடு நான் பிரார்த்தித்தேன்.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.