(உ.வே.சா.வின் என் சரித்திரம் 55 : தளிரால் கிடைத்த தயை – தொடர்ச்சி)

என் சரித்திரம்

  1. என்ன புண்ணியம் செய்தேனோ!

திருக்குடந்தைத்திரிபந்தாதியை இரண்டே தினங்களில் நான் பாடங்கேட்டு முடித்தேன். அப்போது என் ஆசிரியர் ஏடுவாரிச் சுவடி சேர்த்துக் கொடுத்தார்; ஒரு வாரெழுத்தாணியையும் அளித்து அந்நூலைப் பிரதி செய்துகொள்ளும்படி சொன்னார்; அச்சுப் புத்தகங்கள் மிக அருமையாக அகப்படும் அக்காலத்தில் நான் பாடங்கேட்ட புத்தகங்களிற் பெரும்பாலானவற்றை ஏட்டிலே எழுதிப் படித்தேன். இப்பழக்கத்தால் ஏட்டில் விரைவாகவும் தெளிவாகவும் எழுதும் வழக்கம் எனக்கு உண்டாயிற்று.

நான் பாடங்கேட்டபோது சவேரிநாத பிள்ளையும், கனகசபை ஐயரென்னும் வீரசைவரும், அவர் தம்பியாகிய சிவப்பிரகாச ஐயரும் சேர்ந்து பாடங்கேட்டனர். கனகசபை ஐயர் கூறை நாட்டில் ஒரு பள்ளிக்கூடம் வைத்திருந்தார்.

அந்தாதிகள்

குடந்தைத் திரிபந்தாதியைப் படித்தபோது அதை இயற்றியவர் பிள்ளையவர்களே என்று அறிந்து, “ஒரு நூலை இயற்றிய ஆசிரியரிடமே அதனைப் பாடங்கேட்பது எவ்வளவு பெரிய அதிர்ட்டம்!” என்று எண்ணி எண்ணி இன்புற்றேன். அதைப் போன்ற பல பிரபந்தங்களையும் பல புராணங்களையும் அவர் இயற்றியுள்ளா ரென்பதைச் சவேரிநாத பிள்ளை சொல்லக் கேட்டிருந்தேன். “ஆதலால் இனி இவர்கள் இயற்றிய நூல்கள் எல்லாவற்றையும் இவர்கள் வாயிலாகவே தெரிந்துகொள்ளலாம்” என்ற நினைவிலே நான் ஒரு தனி மகிழ்ச்சியை அடைந்தேன்.

குடந்தைத்திரிபந்தாதி முடிந்தவுடன், பழமலைத்திரிபந்தாதி தொடங்கப்பட்டது. அதனை இயற்றியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். சிவப்பிரகாச சுவாமிகள் பழகிய இடங்களிலே இருந்து அவருடைய புகழைக் கேட்டுக் கேட்டு அவரைப் பற்றிச் சிறந்த மதிப்பு வைத்திருந்த எனக்கு அவர் நூலைப் படிக்கத் தொடங்கியபோது பழைய காட்சிகளெல்லாம் நினைவுக்கு வந்தன. சிவப்பிரகாச சுவாமிகளால் நீராடப் பெற்றனவாகச் சொல்லப்படும் நடை வாவிகளை நினைத்தேன். அவருடைய பரம்பரையினரை நினைத்தேன். ஒரு கவிஞர் இயற்றிய நூலை மற்றொரு கவிஞர் பாடஞ்சொல்ல, அதைக் கேட்கப் பெற்ற என் பாக்கியத்தை நினைத்தேன்.

சிவப்பிரகாச சுவாமிகள் சிறந்த கவி; கற்பனா சாமர்த்தியம் உடையவர். கவிதா சார்வ பௌமர் என்று அவரைப் பெரியோர்கள் சொல்லுவார்கள். அவர் இயற்றியுள்ள வெங்கைக் கோவையை மந்திரிக் கோவையென்றும் திருச்சிற்றம்பலக் கோவையாரை இராசாக்கோவை என்றும் சொல்வது வழக்கம். சோணசைல மாலை என்ற பிரபந்தம் மிக்க சுவையுடையது. ஒவ்வொரு செய்யுளிலும் ஏதாவது கற்பனை இருக்கும். ஒரு காலத்தில் சுவாமிகள் திருவண்ணாமலையில் கிரிப் பிரதட்சணம் செய்தபோது ஒரு தடவை வலம் வருவதற்குள் அந்த நூலிலுள்ள நூறு செய்யுட்களையும் செய்து முடித்தார்களாம்” என்று பிள்ளையவர்கள் கூறிவிட்டுப் பாடஞ்சொல்லத் தொடங்கினார். ஒரு கவிஞர் மற்றொரு கவிஞரைக் குறித்துப் பொறாமையின்றி மனம் குளிர்ந்து பாராட்டுவது அருமை யன்றோ?


‘போகப் போகத் தெரியும்’

திருவண்ணாமலையை ஒரு முறை வலம் வருவதற்குள் நூறு பாடலைச் சிவப்பிரகாசர் பாடி முடித்தார் என்ற செய்தி எனக்கு அதிக வியப்பை விளைவித்தது. பாடங்கேட்டு முடிந்தவுடன் சவேரிநாத பிள்ளையிடம் பேசுகையில், “சிவப்பிரகாச சுவாமிகள் பழகிய இடங்களை நான் பார்த்திருக்கிறேன். வெங்கனூருக்கு அருகிலுள்ள பிரதேசங்களில் ஊர் ஊராக அவருடைய பெருமையைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பார்கள். ஆனாலும் இந்தச் சமாசாரம் இன்று ஐயா அவர்கள் சொல்லத்தான் கேட்டேன். நூறு பாடல்களை ஒரே சமயத்தில் பாடம் சொல்பவர்களையே காணாமே? அப்படியிருக்க ஒரே சமயத்தில் நூறு செய்யுட்களைக் கற்பனையுடன் பாட வேண்டுமென்றால் அவர் தெய்வப் பிறவிதான் என்பதில் சந்தேகமே இல்லை” என்றேன் நான்.

“ஆச்சரியந்தான். அத்தகைய ஆச்சரியத்தை நாம் இங்கேயே பார்க்கலாம். பிள்ளையவர்கள் சிவப்பிரகாசருக்குக் குறைந்தவரல்லர். நூறு அல்ல, இருநூறல்ல, ஒரே மூச்சில் நூற்றுக்கணக்கான சுவையுள்ள செய்யுட்களை இவர்கள் பாடுவார்கள். எல்லாம் போகப் போக உமக்குத் தெரியவரும்’ என்றார் “அத்தகைய சந்தர்ப்பம் வராதா?” என்று நான் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தேன்.


பாட வரிசை

பழமலைத்திரிபந்தாதி முடிந்தது; திருப்புகலூர்த்திரிபந்தாதி ஆரம்பிக்கப்பட்டது. நெற்குன்றவாண முதலியாரென்பவர் பாடிய அதில் என் ஆசிரியருக்கு விருப்பம் அதிகம். அதைப் பாடஞ்சொன்னபோது ஒவ்வொரு செய்யுளிலும் அடிக்கொரு தரம், “என்ன வாக்கு! என்ன நயம்!” என்று பாராட்டுவார்.

அப்பிரபந்தம் முடிந்தவுடன் மறைசையந்தாதியைப் பாடங் கேட்டேன். ஒரே நாளில் அதைக் கேட்டு முடித்தேன். திரிபந்தாதிகளுக்குப் பிறகு பிள்ளையவர்கள் இயற்றிய தில்லையமகவந்தாதி, துறைசையமகவந்தாதி என்பவற்றையும் திருவேரகத்துயமகவந்தாதியையும் கேட்டேன்.

பண்டைக் காலத்தில் பதங்களைப் பிரித்துப் பழகுவதற்கும் பலவகையான பதங்களைத் தெரிந்துகொள்வதற்கும் மனனம் செய்வதற்கும் அனுகூலமாக இருக்குமென்று கருதி அந்தாதிகளை மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லி வந்தார்கள். அம்முறைப்படியே நானும் சவேரிநாத பிள்ளையும் பிறரும் பாடங் கேட்போம்.

அந்தாதிகள் ஆன பிறகு பிள்ளைத்தமிழ் வரிசை தொடங்கப் பெற்றது. எனக்குக் கொண்டாட்டந்தான். கால் நூலும், அரை நூலும், ஒரு செய்யுளுமாகப் படித்த எனக்கு வரிசை வரிசையாகப் பிரபந்தத் தொகுதிகள் ஒன்றன்பின் ஒன்றாக அனாயாசமாகக் கிடைத்தன. சோர்வில்லாமற் பாடங் கேட்டு வந்தேன். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் என்பவற்றைக் கேட்டேன். திரிபந்தாதியா? ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு யமக அந்தாதியா? அதிலும் இரண்டு, மூன்று. பிள்ளைத் தமிழா? அதிலும் ஐந்துக்குக் குறைவில்லை. பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றிய அட்டப்பிரபந்தங்களில் ஐந்தாறு பிரபந்தங்கள் பாடங் கேட்டேன். அசுவதாட்டியில் நான் பாடங் கேட்டு வந்ததை என்னாலேயே நம்பமுடியவில்லை. இப்படி நான் பாடங் கேட்கும் காலம் ஒன்று வருமென்று கனவிலும் நான் எதிர்பார்க்கவில்லை. விருத்தாசல ரெட்டியார், “நாங்களெல்லாம் மேட்டுநிலத்துக் கிணற்றில் ஊறும் ஊற்றுகள். அவர் காவேரிப் பிரவாகம்” என்று சொன்னது எவ்வளவு உண்மையானது? காவேரிப் பிரவாகமா? கங்காப் பிரவாகமென்று சொல்லலாம்; அதுகூடப் போதாது. “கடல் மடை திறந்தது போன்றது” என்று சொன்னாலும் தகும். ஒவ்வொரு பிரபந்தமும் கேட்டு முடிந்தவுடன் அதனைச் சிந்தித்து இன்புற்று அந்தத் திருப்தியிலே, “என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே” என்று பெருமிதம் அடைந்தேன்.

பாடம் சொல்லப் பிறந்தவர்

என் ஆசிரியர் பாடம் சொல்லும்போது கையிலே புத்தகம் வைத்துக்கொள்ளும் வழக்கமில்லை. அப்பெரியாருக்கு அவ்வளவு செய்யுட்களும் மனப்பாடமாகவே இருந்தன; சிறிதேனும் தடையின்றிப் பாடல்களைச் சொல்வதும் பொருள் சொல்வதும் பதசாரம் சொல்வதுமாகவே அவர் பெரும்பாலான நேரத்தைக் கழிப்பார். “இவர்கள் இதற்காகவே உதித்தவர்கள்” என்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. பாடஞ் சொல்வதில் அவருக்குச் சலிப்பே ஏற்படாது.

அவரிடம் பாடங் கேட்கும்போது நாங்கள் அடையும் பயன் பலவகைப்படும். நூலுக்குப் பொருளுரைப்பதோடு நூலாசிரியர் சம்பந்தமான வரலாறுகளையும் சொல்வார். பல தனிப்பாடல்களைச் சொல்வார். இன்னும் சந்தர்ப்பத்திற்கேற்ற பல விசயங்களை இடையிடையே எடுத்துரைப்பார். அவற்றையெல்லாம் மிகவும் உபயோகமுள்ள செய்திகளாகவே இருக்கும். நாங்கள் கேட்ட பாடங்களைச் சிந்திக்கும்போதுகூட அவர் அருகிலேயே இருப்போம். அவர் எங்களிடம் அன்போடு பேசுவதும் எங்கள் சௌகரியங்களை அடிக்கடி விசாரிப்பதும் எங்கள் உள்ளத்தைப் பிணித்தன.

உள்ளன்பு

ஒவ்வொரு நாளும் நான் சாப்பிட்டு வந்தவுடன், “சாப்பிட்டாயிற்றா? ஆகாரம் சௌகரியமாக இருந்ததா?” என்று விசாரிப்பார். எண்ணெய் தேய்த்துக்கொள்ளும்படி வற்புறுத்துவார். ஒரு நாள் பிள்ளையவர்கள் தாம் எண்ணெய் தேய்த்துக்கொள்ள எண்ணி எண்ணெயை வருவித்தார். அப்போது அருகிலிருந்த என்னைப் பார்த்தார். “உமது முகம் தெளிவாக இல்லையே; கண் சிவந்திருக்கிறதே. எண்ணெய் தேய்த்துக்கொள்ளும்” என்று எண்ணெயும் கொடுத்தார். உடனே நான் சென்று எண்ணெய் தேய்த்துக்கொண்டு குளித்துப் போசனம் பண்ணிவிட்டு வந்தேன். பிள்ளையவர்கள் அப்போது என்னைப் பார்த்தவுடனே அருகிலிருந்த ஒருவரிடம் “இப்போது எப்படி இருக்கிறது இவர் முகம்? தெளிவாக இருக்கிறதல்லவா?” என்று கேட்டனர். என் முகத்தில் இருந்த தெளிவு என்னைக் காட்டிலும் அவருக்கு அதிகமான மகிழ்ச்சியை உண்டாக்கியது.


எனக்கு ஏதேனும் வேண்டுமென்று தெரிந்தால், உடனே அவர் வாங்கிக் கொடுப்பார். நான் சாப்பிட்டு வருவதற்கு நேரமானால், “இன்னும் வரவில்லையே?” என்று கவலையோடு இருப்பார். இராத்திரி வேளைகளில் அக்கவலை அதிகமாக இருக்கும்; தெருத் திண்ணையில் அமர்ந்தபடியே என் வரவை எதிர்பார்த்திருப்பார். “ஏன் இவ்வளவு நேரம்? கவலையாக இருந்தது” என்று உள்ளன்போடு விசாரிப்பார். இத்தகைய செயல்களால் நான் அவரது அன்பை அறிந்து உருகினேன். அந்த அன்பிலே நனைந்து தமிழமுதத்தை உண்டு வந்தமையால் என் தாய், தந்தையரைப் பிரிந்திருப்பதனால் உண்டான துயரம் நீடிக்கவில்லை. பிள்ளையவர்களைப் பிரிந்திருக்க நேருமாயின் அதுவே கஷ்டமாக இருக்குமென்று தோன்றியது.

கோபால கிருட்டிண பாரதியாரிடம் சென்று சங்கீத அப்பியாசம் செய்யும் நேரம், உணவுகொள்ளும் நேரம் ஆகிய சமயங்கள் தவிர மற்றக் காலங்களில் அப்புலவர் சிகாமணிக்கு அருகிலேயே இருந்து வந்தேன்; அருகிலே உறங்கி வந்தேன். அப்படிப் பழகுதலிலே ஒரு தனி இன்பத்தை நான் அடைந்தேன்.

பெயர் மாற்றம்

நான் இவ்வாறு பாடங் கேட்டு வந்தபோது ஒருநாள் ஏதோ விசாரிக்கையில் பிள்ளையவர்கள் என்னை நோக்கி, “உமக்கு ‘வேங்கடராமன்’ என்று ஏன் பெயர் வைத்தார்கள்?” என்று கேட்டார். நான், “வேங்கடாசலபதி குல தெய்வமாதலால் எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவரும் அக்கடவுள் பெயரையே வைத்துக்கொள்வது வழக்கம்” என்பதைத் தெரிவித்தேன். வேங்கடராமன் என்ற பெயரை அவர் விரும்பவில்லையென்று எனக்குக் குறிப்பாகப் புலப்பட்டது.

“உமக்கு வேறு பெயர் ஏதேனும் உண்டா?” என்று அவர் கேட்டார்.
“எங்கள் வீட்டில் என்னை ‘சாமா’ என்று அழைப்பார்கள்” என்றேன்.
“அப்படி ஒரு பெயர் உண்டா, என்ன?”
“அது முழுப் பெயரன்றே! சாமிநாதனென்பதையே அவ்வாறு மாறி வழங்குவார்கள்.”

“அப்படியா? சாமிநாதன் என்ற பெயர் எவ்வளவு நன்றாக இருக்கிறது! உம்மை நானும் அப்பெயராலேயே அழைக்கலாமென்று எண்ணுகிறேன். நீரும் இனிமேல் அப்பெயரையே சொல்லிக்கொள்ளும்” என்று அவர் சொன்னார்.
நான் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டேன். வேங்கடராமனாக இருந்த நான் அன்று முதல் சாமிநாதனாகிவிட்டேன். பிள்ளையவர்கள் விருப்பத்தின்படி எல்லோரும் சாமிநாதன் என்ற பெயரையே வழங்கலாயினர். அன்புகனிந்த அவர் உள்ளத்திற்கு உவப்பைத் தந்த அப்பெயரே எனக்கு நிலைத்துவிட்டது.
என் பெயர் மாறின சில நாட்கள் வரையில் எனக்குச் சிறிது கடினமாக இருந்தது. “சாமிநாதையர்” என்று யாராவது என்னை அழைத்தால், நான் என்னைத்தான் அப்படி அழைக்கிறார்கள் என்பதை உடனே உணர்ந்துகொள்ளவில்லை. என் காது ‘வேங்கடராமன்’ என்றும் ‘சாமா’ என்றுமே கேட்டுப் பழகியிருந்தது. யாரேனும் என் பெயரைக் கேட்டால் ‘வேங்கடராமன்’ என்று சொல்ல வாயெடுப்பேன்; சட்டென்று மாற்றிக்கொண்டு ‘சாமிநாதன்’ என்பேன். நாளாக ஆகப் புதிய பெயரே வழக்கில் வந்தது.

விளையாட்டு வேலைகள்

பிள்ளையவர்கள் வீடு பழையது. ஆகையால் அதற்குப் புதிதாக ஓடு மாற்றினார்கள். அப்போது அப்புலவர்பிரான் அருகிலிருந்து கவனித்து வந்தார். தாமே ஓடுகளை வாங்கி வாங்கிக் கொடுத்தார். பார்த்த நானும் ஓடுகளை வாங்கிக் கொடுத்தேன். “இந்த வேலையெல்லாம் உமக்குப் பழக்கம் இராது” என்று அவர் சொன்னார். “எனக்கா? நான் கிராமங்களிலே பழகினவன். அம்மாதிரி வேலைகளை யெல்லாம் நன்றாகச் செய்வேன்” என்று சொல்லி அவரைச் சிரமப்படாமல் இருக்கச் செய்து அவ்வேலையை நான் கவனித்தேன். மூங்கிற் பிளாச்சுகளை வெட்டிக் கொடுத்தேன். என்னுடன் சவேரிநாத பிள்ளையும் அவ்வேலையைச் செய்தார்.

தோட்டத்தில் கிணறு ஒன்று புதியதாக வெட்டப்பட்டது. அப்போது கிணற்று சலத்தை வாங்கிக் கொட்டுவதற்காக வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு பிள்ளையவர்கள் சென்றார். ஒரு குடம் வாங்கிக் கொட்டுவதற்குள் வேர்த்துப் போய்விட்டது. அவர் தம் தொந்தி குலுங்கத் தளர்ந்த உடம்புடன் அவ்வாறு செய்வதைக் கண்டவுடன் நான் ஓடிச் சென்று அக்குடத்தை வாங்கிக்கொண்டேன். “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லி ஜலத்தை வாங்கிக் கொட்டினேன். இத்தகைய காரியங்களைச் சோம்பலில்லாமல் நான் செய்தேன். படிப்பிலேயே பொழுது போக்கிய எனக்கு இவ்வேலைகள் இடையிடையே விளையாட்டைப் போலிருந்தன. சிரமம் தோன்றாமல் சந்தோஷத்துடன் செய்யும் காரியம் எதுவாயிருந்தாலும் அது விளையாட்டுத்தானே?

“சாமிநாதையர் சுறுசுறுப்பாக இருக்கிறார். எல்லா வேலைகளும் தெரிந்துகொண்டிருக்கிறார்” என்று பிள்ளையவர்கள் என்னைப் பாராட்டுவார். அப்பாராட்டு உண்மையன்போடு வெளிவருவதாதலின் என் உள்ளத்தைக் குளிர்விக்கும்.

பயனுள்ள பழக்கங்கள்

பிள்ளையவர்களைப் பார்ப்பதற்கு அடிக்கடி யாரேனும் வந்துகொண்டே இருப்பார்கள்; பிரபுக்கள் வருவார்கள்; வித்துவான்கள் வருவார்கள்; அப்போது நானும் மற்ற மாணாக்கர்களும் அருகிலே இருப்போம். வந்தவர்களோடு பேசிக்கொண்டே இருக்கையில் பல விசயங்கள் அவர் வாக்கிலிருந்து வரும். எல்லாம் மிகவும் உபயோகமானவையாகவே இருக்கும். எங்கள் ஆசிரியர் அவர்களுக்கும் எங்களுக்கும் பழக்கம் பண்ணி வைப்பார். ஏதாவது பாடலைச் சொல்லச் சொல்லுவார்; பொருளும் சொல்லும்படி செய்வார் நான் இராகத்துடன் பாடல் சொல்வதனால் அடிக்கடி என்னைச் சொல்லும்படி ஏவுவார். இத்தகைய பழக்கத்தால் பல பேருக்கிடையில் அச்சமில்லாமல் பாடல் சொல்லும் வழக்கம் எனக்கு உண்டாயிற்று; பாடல்களுக்கு அருத்தம் சொல்லும் பழக்கமும் ஏற்பட்டது.

ஒரு நாள் தருமதானபுரம் கண்ணுவையர் என்ற வித்துவானொருவர் வந்தார். அவர் பாரதப் பிரசங்கம் செய்வதிற் புகழ் வாய்ந்தவர். அங்கங்கே வில்லிபுத்தூராழ்வார் பாரதத்தைப் பிரசங்கம் செய்து சம்மானம் பெற்று சீவனம் செய்து வந்தார். அவர் பிள்ளையவர்களிடம் அபிமானமுடையவர். அவர் வந்த காலத்தில் பாரதத்திலிருந்து இசையுடன் செய்யுட்களைக் கணீரென்று சொல்லிப் பிரசங்கம் செய்தார். அத்தகைய பிரசங்கத்தை முன்பு நான் கேட்டதில்லையாதலின் அப்போது எனக்கு ஒரு புதிய இன்பம் உண்டாயிற்று.

மற்றொரு நாள் சபாபதி ஐயர் என்ற ஒரு வித்துவான் வந்தார். அவர் எழும்பூர் திருவேங்கடாசல முதலியாரிடம் பாடம் கேட்டவர். அவர் இராமாயணப் பிரசங்கம் செய்பவர். கூறை நாட்டில் உள்ள சாலிய கனவான்கள் விருப்பத்தின்படி தினந்தோறும் கம்ப ராமாயணம் படித்துப் பொருள் சொல்லி வந்தார். அவர் வந்த காலத்தில் பிள்ளையவர்களிடம் கம்ப இராமாயணத்தைப் பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தனர்; சில சந்தேகங்களையும் தீர்த்துக்கொண்டார்.

இவ்வாறு வரும் வித்துவான்களுடைய சம்பாசணையால் உண்டான இலாபம் வேறு எங்களுக்குக் கிடைத்தது. வந்து செல்லும் வித்துவான்களும் பிரபுக்களும் நாங்கள் பிள்ளையவர்களிடம் பாடங் கேட்டு வருவது தெரிந்து எங்களிடம் பிரியமாகப் பேசி அன்பு பாராட்டத் தொடங்கினர். அப்பொழுதிருந்த மாணாக்கர்களுள் பிராயத்தில் சிறியவன் நானே; ஆதலின் அவர்கள் என்னிடம் அதிகமான அன்பை வெளிப்படுத்தினார்கள்.

இப்படி என்னுடைய குருகுல வாசத்தில் நாளுக்கு நாள் அறிவும் பலருடைய அன்பும் இன்பமும் விருத்தியாகி வந்தன.

(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா.