(உ.வே.சா.வின் என் சரித்திரம் 72 : திருவாவடுதுறைக் காட்சிகள் – தொடர்ச்சி)

என் சரித்திரம்
அத்தியாயம் 44 தொடர்ச்சி
திருவாவடுதுறைக் காட்சிகள் 2


அங்கே சுவாமி சந்நிதியிலுள்ள (இ)ரிசபம் மிகப் பெரியது. “படர்ந்த
அரசு வளர்ந்த (இ)ரிசபம்”
என்று ஒரு பழமொழி அப்பக்கங்களில் வழங்குகிறது.
அவ்வாலயம் திருவாவடுதுறை மடத்தின் நிருவாகத்துக்கு உட்பட்டது.
இயல்பாகவே சிறப்புள்ள அவ்வாலயம் ஆதீன சம்பந்தத்தால் பின்னும்
சிறப்புடையதாக விளங்குகிறது.


உற்சவச் சிறப்பு
குரு பூசை நடைபெறும் காலத்தில் இவ்வாலயத்திலும் இரதோத்சவம்
நடைபெறும். உற்சவம் பத்துநாள் மிகவும் விமரிசையாக நிகழும். இரதசப்தமி
யன்று தீர்த்தம். பெரும்பாலும் இரதசப்தமியும் குருபூசையும் ஒன்றையொன்று
அடுத்தே வரும்; சில வருடங்களில் இரண்டும் ஒரே நாளில் வருவதும் உண்டு
ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் சிரீ கோமுத்தீசர் வீதியில்
திருவுலா வருவார். அப்பொழுது ஆதீனகர்த்தர் பரிவாரங்களுடன் வந்து
உற்சவம் ஒழுங்காக நடைபெறும்படி செய்விப்பார் தியாகராச மூர்த்தியின்
நடனமும் உண்டு. அதற்குப் பந்தர்க் காட்சியென்று பெயர்
. ஆலயத்தில்
உற்சவமும் மடத்தில் குருபூசையும் ஒருங்கே நடைபெறுவது ஒரு சிறப்பாகவே
இருக்கும். அயலூரிலிருந்து வருபவர்களுடைய கண்களையும் உள்ளத்தையும்
கவர்வதற்கு உரிய பல விசேடங்களுக்கும் அவ்விரண்டு நிகழ்ச்சிகளே
காரணமாக அமைந்தன. சிவபக்தியுள்ளவர்கள் ஆலய உற்சவத்திலே
ஈடுபட்டனர். ஞானாசிரிய பக்தி உடையவர்கள், குருபூசா விசேடங்களில்
ஈடுபட்டனர். இரண்டும் உடையவர்கள் “எல்லாவற்றையும் ஒருங்கே தரிசித்து
இன்புறுவதற்குப் பல தேகங்களும் பல கண்களும் இல்லையே!” என்று
வருந்தினார்கள்.


சாப்பாடு
நான் திருவாவடுதுறை வீதியில் நுழைந்தது முதல் அங்குள்ள
ஆரவாரமும் நான் கண்டகாட்சிகளும் என்னைப் பிரமிக்கச் செய்தன
.
ஒவ்வோரிடத்திலும் உள்ளவற்றை நின்று நின்று பார்த்தேன். அக்கூட்டத்தில்
பிள்ளையவர்கள் இருக்குமிடத்தை நான் எங்கே கண்டு பிடிப்பது? என்னுடன்
வந்தவரையும் அழைத்துக்கொண்டு தெருத் தெருவாக அலைந்தேன். எங்கள்
கண்களும் அலைந்தன. பன்னிரண்டு மணி வரையில் சுற்றிச் சுற்றிக் கால் வலி
கண்டது; வயிற்றிலும் பசி கிண்டியது. சாப்பிட்ட பிறகு பார்க்கலாமென்று
எண்ணிப் போசன சாலைக்குப் போனோம்.
அடேயப்பா! எத்தனைக் கூட்டம்! என்ன இரைச்சல்! என்ன சாப்பாடு!
எங்களுக்கு அக்கூட்டத்தில் இடம் கிடைக்குமோ என்ற சந்தேகம் வந்து
விட்டது. காலையில் ஒன்பது மணி முதல் அன்னதானம் நடந்து வருகிறது.
நாங்கள் போனபோதும் கூட்டத்திற்குக் குறைவில்லை. மெல்ல இடம் பிடித்துச்
சாப்பிடுவதற்குள் மிகவும் திண்டாடிப் போனோம். அவ்வுணவின் மிகுதியால்
சாப்பிட்ட பிறகும் சிறிது சிரமப்பட்டோம்.


மறுபடியும் ஆசிரியரைத் தேடும் வேலையைத் தொடங்கினோம்.
சாப்பிட்ட சிரமத்தால் காலையில் தேடியபோது இருந்த வேகம் எங்களுக்கு
அப்போது இல்லை. மெல்ல ஒவ்வொரு தெருவாகச் சுற்றினோம்.
இடையிடையே காண்போரை, ‘பிள்ளையவர்கள் எங்கே தங்கியிருக்கிறார்கள்?”
என்று கேட்போம். “அவர்கள் எங்கும் இருப்பார்கள்; பண்டார சந்நிதிகளோடு
சல்லாபம் செய்து கொண்டிருப்பார்கள்; வித்துவான்கள் கூட்டத்தில்
இருப்பார்கள், இல்லாவிட்டால் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லி
வருவார்கள்” என்று விடை கூறுவர். “மாணாக்கர்களுக்குப் பாடம்
சொல்லுவார்கள்” என்பதைக் கேட்கும்போது எனக்கு ஒருவிதமாக வேதனை
உண்டாகும். “
அக்கூட்டத்தில் சேராமல் இப்படி நாம் தனியே திரிந்து
கொண்டிருக்கிறோமே!” என்ற நினைவு எழும். உடனே காலடியை வேகமாக
எடுத்துவைப்பேன்.


பிள்ளையவர்களைக் கண்டது
கடைசியில், தெற்கு வீதியில் மடத்துக் காரியத்தராகிய நமச்சிவாய
முதலியாரென்பவர் வீட்டுத் திண்ணையில் என் ஆசிரியர் அமர்ந்திருந்ததைக்
கண்டேன். அவர் பக்கத்திலே சில கனவான்களும் தம்பிரான்களும்
இருந்தார்கள். எல்லாரும் மிகவும் சந்தோசமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
பிள்ளையவர்கள் என்னைக் கண்டவுடன், “எப்பொழுது வந்தீர்? ஆகாரம் ஆயிற்றா? தேக சௌக்கியம் எப்படி இருக்கிறது?” என்று அன்பு ததும்ப விசாரித்தார்கள். நான் பதில் சொன்னவுடன், “உடம்பு இளைத்திருக்கிறது. இன்னும் ஏதாவது மருந்து சாப்பிடுகிறீரோ?” என்றார். “இல்லை” என்றேன்
பிறகு என் தாய் தந்தையரைப் பற்றி விசாரித்தனர்.
“குரு பூசையை இதுவரையில் நீர் பார்த்ததில்லையே?” என்று
கேட்டார்.
“இல்லை” என்றேன்.
“இந்த மாதிரி விசேடம் எங்கும் இராது. எல்லாம் சந்நிதானத்தின்
பெருமையினாலும் கொடையினாலுமே நடக்கின்றன.”
சந்நிதானமென்றது ஆதீனத் தலைவராகிய சிரீ சுப்பிரமணிய தேசிகரை.
“இனிமேல் பாடம் கேட்க வரலா மல்லவா?”
“நான் காத்திருக்கிறேன்.”
“குருபூசை யானவுடன் மாயூரத்திற்குப் போவேன். அங்கே போனவுடன்
பாடம் ஆரம்பிக்கலாம்” என்று ஆசிரியர் கூறியபோது என் உள்ளம்
குளிர்ந்தது. பாடம் கேட்பதில் எனக்கு இருக்கும் ஆவலைப் புலப்படுத்துவதற்கு
முன்பே பாடம் சொல்வதில் தமக்குள்ள சிரத்தையை அவர் புலப்படுத்தினார்
.
நான் பிள்ளையவர்களுடன் இருந்து அங்கே நிகழும் சம்பாசணைகளைக் கவனித்து வந்தேன். பல கனவான்கள் வந்து வந்து பேசி விட்டுச் சென்றார்கள். ஐந்து மணியளவுக்கு ஆசிரியர் மடத்திற்குச் சென்றார்.
நானும் அவர் பின் சென்றேன். எதிரே வந்தவர்கள் யாவரும் அவரைக்
கண்டவுடன் ஒதுங்கி நின்று முக மலர்ச்சியால் தம் அன்பை வெளிப்படுத்தினர்.
உட்கார்ந்திருந்த தம்பிரான்கள் அவரைக் கண்டதும் எழுந்து நின்று
வரவேற்றார்கள். அங்கே குமாரசாமித் தம்பிரானும், பரமசிவத்
தம்பிரானென்பவரும் இருந்தனர்
. அவர்கள் பிள்ளையவர்களோடு பேசிக்
கொண்டே மடத்தின் கிழக்கே இருந்த குளத்தின் கரையிலுள்ள (இப்போது
குளம் தூர்ந்து விட்டது) கீழைச் சவுக்கண்டிக்குச் சென்று அமர்ந்தனர்.
எல்லோரும் தமிழ் சம்பந்தமாகவும் மடத்தின் சம்பந்தமாகவும் பல
விஷயங்களைப் பேசியிருந்தனர்.

காசிக் கலம்பகம்
“இன்று நல்ல நாள். ஐயாவிடம் நல்ல தமிழ் நூல் ஒன்றைப் பாடம்
கேட்க வேண்டுமென்ற ஆசை உண்டாகிறது” என்று குமாரசாமித் தம்பிரான்
சொன்னார்.
“கேட்கலாமே” என்று சொல்லவே, அவரும் பரமசிவத் தம்பிரானும்
காசிக் கலம்பகம் கேட்க வேண்டுமென்றார்கள்.
“காசிச் சாமிக்கு முன் காசிக் கலம்பகம் நடப்பது பொருத்தமே” என்று
ஆசிரியர் கூறினார்.
எனக்கு முதலில் விசயம் விளங்காவிட்டாலும் பிறகு விசாரித்துத்
தெரிந்து கொண்டேன். பரமசிவத் தம்பிரான் சில வருடங்கள் காசியில்
இருந்தவர். அத்தகையவர்களைக் காசிச்சாமியென்று அழைப்பது மடத்துச்
சம்பிரதாயம்.
காசிக் கலம்பகத்தை நானே படித்தேன். அந்தப் பெரிய குருபூசை
விழாவில் வெளியில் அங்கங்கே வாத்திய கோசங்களும் கொண்டாட்டங்களும்
சந்தோச ஆரவாரங்களும் நிரம்பியிருக்க, நாங்கள் ஒரு குளத்தங் கரையில்
சிறிய சவுக்கண்டியில் காசி மாநகர்ச் சிறப்பையும் கங்கையின் பெருமையையும் சிரீ
விசுவநாதரது கருணா விசேடத்தையும் காசிக்கலம்பகத்தின் மூலம்
அனுபவித்து வந்தோம். சிரீ குமரகுருபர சுவாமிகள் வாக்காகிய அக்கலம்பகம்
சொற்சுவை பொருட்சுவை நிரம்பியது. சில காலமாகப் பிள்ளையவர்களையும்
தமிழ்ப் பாடத்தையும் விட்டுப் பிரிந்திருந்த எனக்கு அன்று
பிள்ளையவர்களைக் கண்ட இலாபத்தோடு பாடம் கேட்கும் இலாபமும் சேர்ந்து
கிடைத்தது.


இரவு எட்டு மணி வரையில் அப்பிரபந்தத்தைக் கேட்டோம். ஐம்பது
பாடல்கள் நடைபெற்றன. பிறகு அவரவர்கள் விடை பெற்றுச் சென்றார்கள்.
பிள்ளையவர்கள் தெற்கு வீதியில் தாம் தங்கியிருந்த விடுதியாகிய
சின்னோதுவார் வீட்டுக்குச் சென்றார்.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.