(உ.வே.சா.வின் என் சரித்திரம் 71 : சரசுவதி பூசையும் தீபாவளியும் – தொடர்ச்சி)

என் சரித்திரம்
அத்தியாயம் 44
திருவாவடுதுறைக் காட்சிகள்


மார்கழி மாதக் கடைசியில் எனக்கு சுர நோய் முற்றும் நீங்கிற்று;
ஆயினும் சிறிது பலக் குறைவுமட்டும் இருந்து வந்தது. பிள்ளையவர்களிடம்
போக வேண்டுமென்ற விருப்பம் வர வர அதிகமாயிற்று. அவர் பட்டீச்சுரத்துக்குப் புறப்படுகையில், சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறைக்கு வந்து அங்குள்ள பலருக்குப் பாடம் சொல்லி வரவேண்டுமென்று கட்டளையிட்டதை அறிந்த நான் அவர்
திருவாவடுதுறையில் வந்திருப்பாரென்றே எண்ணினேன்; ஆயினும் ஒருவேளை
வாராமல் மாயூரத்திலேயே இருக்கக்கூடுமென்ற நினைவும் வந்தது. என்
சந்தேகத்தை அறிந்த என் தந்தையார் தாமே திருவாவடுதுறை சென்று என்
ஆசிரியர் இருக்கும் இடத்தை அறிந்து வருவதாகச் சொல்லிப் புறப்பட்டுச்
சென்றார்.
தந்தையார் விசாரித்து வந்தது
திருவாவடுதுறைக்குச் சென்ற தந்தையார் அங்கே சிவாலயத்தில் சிரீ
குமாரசாமித் தம்பிரானைப் பார்த்தார். தம்பிரானுக்கும் தந்தையாருக்கும்
பழக்கமாதலால் அவரிடம் என் தந்தையார் பிள்ளையவர்களைப் பற்றி
விசாரிக்கவே அவர்கள் மாயூரத்தில் இருப்பதாகவும் தைமாதம் நடைபெறும்
குருபூசைக்கு அவசியம் திருவாவடுதுறைக்கு வரக்கூடுமென்றும் தம்பிரான்
கூறியதோடு என் தேக நிலையைப் பற்றியும் கேட்டார்.
விசயத்தைத் தெரிந்து கொண்ட என் தந்தையார் சூரியமூலை வந்து
அதை எனக்கு அறிவித்து, “குரு பூசைக்கு இன்னும் சில நாட்களே
இருக்கின்றன. இப்போது நீ மாயூரம் போனால் மறுபடியும்
பிள்ளையவர்களோடு திருவாவடுதுறைக்கு வரவேண்டியிருக்கும்.
திருவாவடுதுறைக்கே குரு பூசையின் பொருட்டு அவர்கள் வருவதால் நீயும்
அப்போது அங்கே போய் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம்” என்றார்.
நான் அவ்வாறே குரு பூசையை எதிர் நோக்கியிருந்தேன்.

கண்ட காட்சிகள்
தை மாதத்தில் அசுவதி நட்சத்திரத்தில் திருவாவடுதுறை ஆதீன
தாபகராகிய சிரீ நமசிவாய மூர்த்தியின் குரு பூசை நடைபெறும். குரு பூசை
நாளன்று காலையில் நான் என் சிறிய தாயார் குமாரர்
கோபாலையரென்பவருடன் திருவாவடுதுறை வந்து சேர்ந்தேன். நான் முன்பு
பார்த்த திருவாவடுதுறையாக அவ்வூர் அப்போது காணப்படவில்லை. குரு
பூசை, குரு பூசையென்று அயலிலுள்ள கிராமத்தினர்கள் மிகவும் சிறப்பாகப்
பேசிக் கொள்வதைக் கேட்ட எனக்கு அத்திருநாள் ஒரு பெரிய உத்சவமாக
நடை பெறுமென்ற கருத்து மாத்திரம் இருந்தது. ஆனால் அன்று நான் கண்ட
காட்சிகள் என் கருத்துக்கு எவ்வளவோ அதிகமாக விளங்கின.
எங்கே பார்த்தாலும் பெருங்கூட்டம். தமிழ் நாட்டிலுள்ள சனங்களில்
ஒவ்வொரு வகையாரையும் அங்கே கண்டேன். நால்வகை வருணத்தினரும்,
பாண்டி நாட்டார், சோழ தேசத்தினர் முதலிய வெவ்வேறு நாட்டினரும்
வந்திருந்தனர்.
வித்துவான்களில் எத்தனை வகையினர்! சங்கீத
வித்துவான்களில் நூற்றுக் கணக்கானவர்களைக் கண்டேன். அவர்களில் கதை
பண்ணுபவர்களும், வாய்ப் பாட்டுப் பாடுபவர்களும், வீணை, புல்லாங்குழல்,
கோட்டு வாத்தியம், பிடில் முதலிய வாத்தியங்களில் கை தேர்ந்தவர்களும்
இருந்தனர். சம்சுகிருத வித்துவான்களில் தனித்தனியே ஒவ்வொரு
சாத்திரத்தையும் கரை கண்டவர்கள் அங்கங்கே தங்கியிருந்தனர்
வேதாத்தியயனம் செய்தவர்கள் கோசுட்டி கோசுட்டியாக வேத பாராயணம்
செய்தபடி ஆலயத்திலும் பிற இடங்களிலும் இருந்தனர். தேவாரங்களை
இன்னிசைப் பண்ணுடன் ஓதும் இசை வாணர்கள் விபூதி உருத்திராட்ச
தாரணத்தோடு முகத்திலே ஒரு வகையான தேசசு விளங்க மனத்தைக் கவரும்
தேவாரம் முதலியவற்றை ஓதிக் கொண்டிருந்தனர்.
பல இடங்களிலிருந்து தம்பிரான்கள் வந்திருந்தனர். மடத்து முக்கிய
சிசுயர்களாகிய தக்க கனவான்கள் பலர் காணிக்கைகளுடன் வந்திருந்தனர்.
மற்றச் சந்தர்ப்பங்களில் தங்கள் ஞானாசிரியரைத் தரிசிக்க இயலாவிட்டாலும்
வருசத்துக்கு ஒரு முறை குருபூசை தினத்தன்று தரிசித்துப் பிரசாதம் பெற்றுச்
செல்வதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. சிரீ சுப்பிரமணிய
தேசிகருடைய அன்பு நிரம்பிய சொற்கள் அவர்கள் உள்ளத்தைப் பிணித்து
இழுத்தன. தமிழ்நாட்டில் தென்கோடியில் இருந்தவர்களும் இக்குருபூசையில்
வந்து தரிசிப்பதை ஒரு விரதமாக எண்ணினர். அவரவர்கள் வந்த வண்டிகள்
அங்கங்கே நிறுத்தப் பட்டிருந்தன. குடும்ப சகிதமாகவே பலர் வந்திருந்தார்கள்.
அன்ன தானம் குரு பூசைக் காலங்களில் அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
யார்வரினும் அன்னம் அளிக்கப்படுமென்பதற்கு அறிகுறியாக மடத்தில்
உற்சவத்தின் முதல் நாள் அன்னக்கொடி ஏற்றுவார்கள். பல வகையான
பரதேசிகளும் ஏழை சனங்களும் அங்கே வந்து நெடு நாட்களாகக் காய்ந்து
கொண்டிருந்த தங்கள் வயிறார உண்டு உள்ளமும் உடலும் குளிர்ந்து
வாழ்த்துவார்கள். பிராமண போசனமும் குறைவற நடைபெறும்.
தெருத் தெருவாக வீடு வீடாகக் குரு பூசையின் விமரிசை விளங்கியது.
அவ்வூரிலுள்ளவர்கள் தங்கள் தங்கள் வீட்டில் விசேடம் நடப்பது போன்றே மாவிலைகளாலும் தோரணங்களாலும் வீடுகளையும்
தெருக்களையும் அலங்கரித்திருந்தனர். விருந்தினர்களை வரவேற்று
உண்பித்தனர். குரு பூசை மடத்தில் மாத்திரம் நிகழ்வதன்று;
திருவாவடுதுறைக்கே சொந்தமான திருநாள் அது. ஒரு வகையில்
தமிழ்நாட்டுக்கே உரியதென்றும் சொல்லலாம். தமிழ் நாட்டிலுள்ள பலரும்
அத்திருநாளில் அங்கே ஒன்று கூடி ஆனந்தமுற்றார்கள்.


தல விசேடம்
திருவாவடுதுறையிலுள்ள மடம் மிகச் சிறப்புடையதாயிருப்பது
அவ்வூருக்கு முக்கியமான பெருமை. அதனோடு இயல்பாகவே அது தேவாரம்
பெற்ற தலம். திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம் தந்தையார் செய்த
வேள்விக்காக ஆயிரம் பொன் சிவபெருமானிடமிருந்து அத்தலத்திற் பெற்றனர்.

அதனால் அங்கே உள்ள தியாகராச மூர்த்திக்கு சுவர்ணத் தியாகரென்ற பெயர்
வழங்கும்.
சுவாமியின் திருநாமம் மாசிலாமணியீசரென்பது; அம்பிகையின்
திருநாமம் அதுல்யகுசநாயகியென்பது; ஒரு முறை அம்பிகை சிவாக்ஞையால்
அங்கே பசுவடிவத்துடன் வந்து அங்குள்ள தீர்த்தத்தில் குளித்து
அப்பசு வடிவம் நீங்கப் பெற்றமையின் அத்தலத்திற்குக் கோமுக்தி,
கோகழி
யென்னும் பெயர்கள் வழங்கும். அம்பிகை தன் சுயரூபம் பெற்ற
காலத்து அப்பிராட்டியைச் சிவபெருமான் அணைத்தெழுந்தாரென்பது
புராணவரலாறு. அதற்கு அடையாளமாக அணைத்தெழுந்த நாயகரென்ற
திருநாமத்தோடு ஒரு மூர்த்தி அங்கே எழுந்தருளியிருக்கிறார். உற்சவத்தில்
தீர்த்தங் கொடுக்க எழுந்தருளுபவர் அம்மூர்த்தியே.
அத்தலத்தின் ஆலயத்தில் பல அரசமரங்கள் உள்ளன. அவை படரும்
அரசு. மண்டபத்தின் மேலும் மதிலின் மேலும் படர்ந்திருக்கும் தல விருட்சம்
அந்த அரசே; அதனால் அதற்கு அரசவனம் என்ற காரணப் பெயர்
உண்டாயிற்று. சிறந்த சித்தரும் நாயன்மார்களுள் ஒருவருமாகிய திருமூலர்
இத்தலத்தில் தவம் புரிந்து திருமந்திரத்தை அருளிச் செய்தனர்
. ஆலயத்தினுள்
அவர் எழுந்தருளியிருக்கும் கோயில் ஒரு குகையைப் போன்ற
தோற்றமுடையது.
மடத்தைச் சார்ந்த ஓரிடத்தில் திருமாளிகைத்தேவரென்னும் சித்தருடைய
ஆலயம்
உண்டு. போகரின் சிசுயரும் திருவிசைப்பாப் பாடியவர்களுள்
ஒருவருமாகிய அவர் ஒரு சமயம் அக் கோயில் மதில்களின் மேலுள்ள நந்தி
உருவங்களையெல்லாம் உயிர் பெறச் செய்து ஒரு பகையரசனோடு போர்புரிய
அனுப்பினாரென்பது பழைய வரலாறு. அது முதல் அவ்வாலய மதிலின்மேல்
நந்திகளே இல்லாமற் போயினவாம்.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.