(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 22. தொடர்ச்சி)

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 23

4. குலமும் கோவும் தொடர்ச்சி

அழகிய பாண்டியன்

      பூதப் பாண்டியனுக்குப் பின்னே வந்த அழகிய பாண்டியன் பண்டைக் காலத்துப் பாண்டி மன்னருள் மிகச் சிறந்தவன். பொதியமலைச் சிற்றரசனாகிய ஆய் என்பவனை வென்று மேம்பட்ட அப் பாண்டியன் தன் வெற்றிச் சிறப்பு விளங்குதற் பெருட்டு அம் மலையடி வாரத்திலுள்ள ஓர் ஊருக்கு அழகிய பாண்டியபுரம் என்று பெயரிட்டான் என்பர்.24

சேந்தன்

     ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரை மாநகரில் அரசாண்டவன் சேந்தன் என்னும் செழியன். அவன் சிறந்த வீரனாகவும், செங்கோல் வேந்தனாகவும் விளங்கினான் என்பது  ‘சிலைத் தடக்கைச் செழியன்’என்றும், ‘செங்கோல் வேந்தன்’ என்றும் வேள்விக் குடிச் செப்பேடுகள் கூறுதலால் அறியப்படும். சேந்தமங்கலம் என்ற ஊர் பாண்டி நாட்டில் உண்டு.

கோச்சடையன்

திருஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்திருந்த பாண்டியன், அரிகேசரி மாறவர்மன்.25 அவனுக்குப்பின் அவன் மகனாகிய கோச்சடையன் அரசனாயினான். நாற்பதாண்டுகள் அரசு வீற்றிருந்த அம் மன்னன் பல்லவனோடு போர் புரிந்த பல நாடுகளை வென்று புகழ் பெற்றான். இராமநாதபுர நாட்டிலுள்ள கோச்சடை என்னும் ஊர் அவன் பெயரைத் தாங்கி நிற்கின்றது.

வரகுணன்

     கோச்சடைக் கோமகனுக்குப் பின்பு பட்டமெய்திய பாண்டிய மன்னருள் வீரமும் சீலமும் ஒருங்கே வாய்ந்தவன் வரகுண பாண்டியன்.26 அவன் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசு புரிந்தவன். பல்லவ மன்னர் வீறு குறைந்திருந்த அக்காலத்தில் நந்திவர்மன் என்னும் பல்லவனிடமிருந்து சோழ நாட்டை அவன் கைப்பற்றி ஆண்டவன் என்பது நன்கு விளங்குகின்றது. திருச்சிராப்பள்ளிக்கு அருகே வரகனேரி என்னும் ஊரொன்று உண்டு. வரகுணன் ஏரி என்ற பெயரே வரகனேரி யென மருவிற் றென்பர். இவ்வூர் வரகுணபாண்டியன் பெயரைத் தாங்கி நிலவுகின்றது போலும்!

சேரவன் மாதேவி

     வரகுண வருமனுக்குப் பின்னே அவன் தம்பியாகிய பராந்தக பாண்டியன் பட்டம் எய்தினான். வீர நாராயணன் என்னும் விருதுப் பெயர் கொண்ட அம்மன்னன் இயற்றிய அறங்களும், நிகழ்த்திய போர்களும், பிறவும் சின்னமனூர்ச் செப்பேடுகளில் விரித்துரைக்கப்படுகின்றன. வானவன் மாதேவி என்னும் சேரகுல மங்கை அவன் தேவியாய்த் திகழ்ந்தாள். நெல்லை நாட்டிலுள்ள சேரமாதேவி என்னும் சேரவன் மாதேவி, அம் மங்கையின் பெயரால் அமைந்த ஊர் என்று கருதலாகும்.27

வீரபாண்டியன்

    தஞ்சைச் சோழர் தலையெடுத்தபோது பாண்டியர் பணியத் தொடங்கினர். பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசாண்ட பராந்தக சோழன் பாண்டி மன்னனை இருமுறை வென்று, அவன் தலைநகராகிய மதுரையையும் கைப்பற்றிக் கொண்டான். இங்ஙனம் பதங் குலைந்த பாண்டியன் மூன்றாம் இராச சிம்மன் என்பர். ஆயினும், அவன் மைந்தனாகிய வீரபாண்டியன் சோழரை வென்று, வசை தீர்ப்பதற்குக் காலம் பார்த்திருந்தான். அதற்கேற்ற வாய்ப்பும் வந்துற்றது. வடபுலத்து வேந்தன் ஒருவன் சோழ நாட்டின்மீது படையெடுத்துக் குழப்பம் விளைவித்தான்.28

அக்காலத்துச் சானங்கள் வீரபாண்டியனைச் ‘சோழன் தலைகொண்ட கோவீர பாண்டியன்’ என்று பாராட்டுதலால், அவன் போர்க்களத்தில் சோழன் ஒருவனைக் கொன்று புகழ் பெற்றிருத்தல் வேண்டும் என்று தெரிகின்றது. அவ்வெற்றியின் காரணமாக அவன் சோழாந்தகன் என்னும் விருதுப் பெயர் பூண்டான்.29 மதுரை நகரின் அருகேயுள்ள சோழாந்தக சதுர்வேதி மங்கலம் என்னும் ஊர் அவன் பெயர் தாங்கி நிலவுகின்றது.சோழந்தகன் என்பது சோழவந்தான் என மருவியுள்ளது.30

    வீர பாண்டியன் பெயரால் அமைந்த ஊர்கள் இன்னும் சில உண்டு. நெல்லை நாட்டு நாங்குனேரி வட்டத்தில் வீரபாண்டியன் நல்லூர் என்று முன்னாளிற் பெயர் பெற்றிருந்த ஊர் வீரபாண்டியம் என இன்று வழங்குகின்றது.31 மதுரை நாட்டுப் பெரிய குளம் வட்டத்தில் மற்றொரு வீரபாண்டியன் நல்லூர் உண்டு. புல்லை நல்லூர் என்னும் பழம் பெயர் வாய்ந்த அவ்வூர் வீரபாண்டியன் பெயரைப் பிற்காலத்தில் பெற்றதென்பது கல்வெட்டுகளால் விளங்கும்.32 அவ் வீரபாண்டிய நல்லூர் வீரபாண்டி எனக் குறுகியுள்ளது.

மூன்று பாண்டியர்

     பாண்டி நாட்டைச் சோழர் ஆட்சியினின்றும் விடுவிப்பதற்குப் பன்முறை முயன்றனர் பாண்டியர். இராசாதி ராச சோழன் காலத்தில் மூன்று பாண்டியர் ஒன்று சேர்ந்து உள்நாட்டுக் கலகம் விளைத்தார்கள். சோழன் படையெடுத்தான். பாண்டியர் மூவரும் எதிர்த்தனர். அவர்களில் மானாபரணனும், வீர கேரளனும் போர்க்களத்தில் இறந்தார்கள். அன்னார் பெயர் கொண்டு நிலவும் ஊர்கள் நெல்லை நாட்டிற் சில உண்டு. அம்பாசமுத்திர வட்டத்திலுள்ள மானாபரண நல்லூரும், தென்காசி வட்டத்திலுள்ள வீர கேரளன் புத்தூரும் அவரது சுதந்தர ஆர்வத்திற்குச் சான்றாக நிற்கின்றன.

சுந்தர பாண்டியன்

     பாண்டி நாட்டிலுள்ள ஊர்களில் ஒன்று மாறனேரி.33 முற்காலத்தில் அது மாறமங்கலம் என்னும் பெயரால் வழங்கிற் றென்பது சாசனத்தால் விளங்குகின்றது. அவ்வூர் சுந்தர பாண்டிய நல்லூர் என்ற மறு பெயர் பெற்றிருந்த தென்பதும், சுந்தர பாண்டீச்சரம் என்னும் சிவாலயம் அங்கு அமைந்திருந்த தென்பதும் கல்வெட்டால் அறியப்படுவனவாகும்.34 இத்தகைய மாறமங்கலம் அங்கெழுந்த ஏரியின் சிறப்பினால் மாறனேரி யாயிற்றென்று கொள்ளலாம்.

குலசேகரன்

     பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையில் அரசு புரிந்த மன்னன் குலசேகர பாண்டியன். அவன் ஆட்சியின் இருபத்தைந்தாம் ஆண்டில் சில சிற்றூர்களைச் சேர்த்து, இராச கம்பீர சதுர்வேதிமங்கலம் என்னும் பெயரால் ஓர் ஊரை உண்டாக்கினான் என்று திருப்பூவணத்துச் செப்பேடு கூறுகின்றது. இராச கம்பீரன் என்பது குலசேகர பாண்டியனது விருதுப் பெயர் என்று தெரிகின்றது. இக் காலத்தில் இராமநாதபுரச்சிவகங்கை வட்டத்திலுள்ள இராசகம்பீரமே அவ்வூராகும்.

 (தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்

அடிக்குறிப்பு

24. The Chronology of the Early Tamils, p. 122, F.N.

25. இவனைச் சுந்தர பாண்டியன் என்றும், நெடுமாறன் என்றும் புராணங்கள் கூறும். நெல்லை நாட்டிலுள்ள அரிகேசரி நல்லூர் இவன் பெயரால் அமைந்தது போலும், இப்பொழுது அஃது அரிகேச நல்லூர் என வழங்கும்.

26. சின்னமனூர்ச் செப்பேடுகளில் இம்மன்னர் “கொற்றவர்கள் தொழு கழற்கால் கோவரகுண மகராசன்” என்று புகழப்பட்டுள்ளார். பட்டினத்தடிகள் திருவிடை மருதூர் மும்மணிக் கோவையில் இவருடைய சிவ பக்தியின் பெருமையைப் பாராயுள்ளார். “பெரிய அன்பின் வரகுண தேவர்” என்பது அவர் வாக்கு.

27. The Pandyan Kingdom, p. 79.

28. இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருட்டிண தேவன்.

 29. I.M.P.1175; 474 of 1909

30. The Pandyan Kingdom, p. 120 அதன் பழம் பெயர் குருவித் துறை.

31. T.A.S. Vol. I.p.90.

32. 426 of 1907. அங்குள்ள பழமையான சிவாலயம் கண்ணுடை ஈச்சரம் என்று கல்வெட்டிற் குறிக்கப்பட்டுள்ளது. அஃது இப்பொழுது கண்ணீசுவரர் கோயில் எனப்படும்

33. இஃது இராமநாதபுரம் நாட்டுச் சாத்தூர் வட்டத்தில் உள்ளது.

34. 481 of 1909