(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 24. தொடர்ச்சி)

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):25

4. குலமும் கோவும் தொடர்ச்சி

பல்லவர் குடி மன்னர்

பல்லவர் ஆட்சி

    பல்லவர் குடியைச் சேர்ந்த அரசர்கள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு மூன்றாம் நூற்றாண்டிலே தமிழ் நாட்டையாளத் தலைப்பட்டார்கள். ஏறக் குறைய அறு நூறாண்டுகள் அன்னார் அரசு புரிந்தனர் என்னலாம்.

சுந்தரர் தேவாரத்திலும், திருமங்கை யாழ்வார் திருப்பாசுரங்களிலும் பல்லவர்பீடும் பெயரும் குறிக்கபடுகின்றன.41 பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர் அரசாட்சி நிலைகுலைந்து அழிந்தது. ஆயினும் அக்குல மன்னர் பெயர் சில ஊர்ப் பெயர்களில் இன்றும் விளங்குகின்றது.

சிம்ம விட்ணு

     ஆறாம் நூற்றாண்டின் பிற் பகுதியில் அரசு புரிந்த பல்லவன், சிம்ம விட்ணு வருமன் என்னும் பெயரினன். அவன் சோழ மன்னனை வென்று, காவிரி நாட்டிலும் ஆணை செலுத்தினான் என்று சாசனம் அறிவிக்கின்றது.

அவன் காலத்தில் காவிரிக்கரையில் கும்பகோண வட்டத்திலுள்ள கஞ்சனூர், சிம்மவிட்ணு சதுர்வேதி மங்கலம் என்னும் மறுபெயர் பெற்றது.42 வட ஆர்க்காட்டிலுள்ள சீயமங்கலமும் அவன் பெயரால் அமைந்த தென்பர்.43

மகேந்திரன்

     ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசு புரிந்தவன் மகேந்திரப் பல்லவன். அவன் பெயர் வட ஆர்க்காட்டிலுள்ள மகேந்திரவாடி என்னும் ஊரால் விளங்குவதாகும். அவ்வூரில் திருமாலுக்குக் கோயில் கட்டியும், குளம் வெட்டியும் பணி செய்தான்

மகேந்திரன். அவ்வூர் முன்னாளில் பெரியதொரு நகரமாக இருந்திருத்தல் வேண்டும் என்று தோன்றுகிறது. அந் நாளில் மகேந்திர வாடியின் கீழ வீதியாயிருந்த இடம், இப்பொழுது தனியூராகக் கீழவீதி என்னும் பெயரோடு அதற்குக் கிழக்கே மூன்று கல் தூரத்திற் காணப்படுகின்றது.44

குன்றுகளைக் குடைந்து குகைக் கோயில் ஆக்கும் வழக்கம் தமிழ் நாட்டில் மகேந்திரன் காலத்தில் எழுந்தது என்பர். தேவார வைப்புத் தலங்களுள் ஒன்றாகிய அண்ணல் வாயில் என்னும் சித்தன்ன வாசற் குகைக் கோவிலில் அவன் காலத்துச் சிற்பமும் ஓவியமும் சிறந்து விளங்குகின்றது.

     இன்னும், பல்லவ மன்னர் பெயர் தாங்கி நிற்கும் ஊர்களில் ஒன்று சென்னைக்கு அண்மையிலுள்ள பல்லாவரம் ஆகும். பல்லவபுரமே பல்லாவரம் என் மருவியுள்ளது. அங்குள்ள குகைக் கோயிலில் மகேந்திரவர்மன் விருதுப் பெயர்கள் பொறிக்கப் பட்டிருத்தலால் அஃது அப் பல்லவன் காலத்தே எழுந்த ஊர் என்று கருதலாம்.45

நரசிங்கன்

     மகேந்திர வருமனுக்குப் பின்னர் அரசாண்டவன் நரசிங்கவர்மன். வாதாபி கொண்ட நரசிங்கன் என்று சாசனங்களில் புகழப்படுபவன் அவனே.46 திருத்தொண்டர் புராணத்திற் குறிக்கப்படுகின்ற சிறுத்தொண்டரைத் தலைவராகக் கொண்ட பெருமை வாய்ந்தவனும் அவனே என்பது நன்கு விளங்குகின்றது. பரஞ்சோதி என்னும் இயற்பெயருடைய சிறுத்தொண்டர்.

மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித்

          தொன்னகரம் துகளாகச்”

செய்தார் என்னும் சேக்கிழார் பாட்டால் அவர் பெற்ற வெற்றியின் சிறப்பு விளங்குவதாகும்.

    மாமல்லன் என்னும் மறு பெருடைய நரசிங்கவர்மன் தொண்டை நாட்டின் பண்டைத் துறைமுகமாகிய கடல் மல்லையைத் திருத்தினான்;

கடற்கரையில் கற்கோயில்களை ஆக்கினான். அவன் காலத்தில் மல்லை நகரம் மாமல்லபுரம் என்று பெயர் பெற்றது போலும்.47 அது பிற்காலத்தில் மகாபலிபுரமென மருவிற்று.

பரமேசுவரன்

    ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசு புரிந்த பரமேசுவரன் ஒரு சிறந்த பல்லவன். இவனே விக்கிரமாதித்தன் என்னும் சாளுக்கிய வேந்தனைத் திருச்சி நாட்டுப் பல்லவபுரத்திற்கருகேயுள்ள பெருவள நல்லூர்ப் போரில் வென்று புகழ் பெற்ற வீரன். இவன் சைவ சமய சீலன் என்பதைப் பரமேசுவரன் என்ற பெயரே உணர்த்துவதாகும். காஞ்சி புரத்திற்கு அண்மையிலுள்ள பரமேசுவர மங்கலம் என்னும் ஊர் இவன் பெயரால் விளங்குகின்றது. இம் மன்னன் கூரம் என்ற ஊரில் ஒரு சிவாலயம் எடுத்து, அதற்குப் பரமேசுவர மங்கலத்தை நன்கொடையாகக் கொடுத்த செய்தி கூரத்துச் செப்பேடுகளிற் கூறப்பட்டுள்ளது.

நந்திவர்மன்

    கும்பகோணத்துக்கு அண்மையில் நந்திபுரம் என்னும் பெயருடைய நகரம் ஒன்று பல்லவர் காலத்திற் சிறந்திருந்தது. திருமங்கை ஆழ்வார் அந் நகரில் அமைந்த  விண்ணகரத்தைப் பாடிள்ளார். ‘நந்தி பணி செய்த நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே’ என்பது அவர் திருவாக்கு.அவ்வூர் இன்று நாதன் கோயில் என வழங்கும். எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசுரிமை பெற்ற நந்தி வருமனின் பெயர் தாங்கி நிற்பது அந்நகரம் என்பர்.

உதய சந்திரன்

    அந் நந்திபுர நகரத்தில் வைகிய நந்தி வருமனைத் தாக்கினர் பகைவேந்தர். அப்போது பல்லவ சேனாதிபதியாகிய உதய சந்திரன் உருத்தெழுந்து, மாற்றார் சேனையைச் சின்ன பின்னமாக்கித் தன் மன்னனை விடுவித்தான் என்று உதயேந்திரச் செப்பேடுகள் உணர்த்துகின்றன. இவ்வாறு, காலத்தில் உதவி செய்து, காவலன் நன்றிக் குரியனாய் உதயசந்திரன் மாற்றாரைப் பின்னும் பல போர்க்களங்களில் வென்று பல்லவர் பெருமையைப் பாதுகாத்தான். அவ் வீரன், வேகவதி யாற்றங்கரையிலுள்ள வில்லிவலம் என்னும் ஊரிற் பிறந்தவன். அவன் பெயரால் விளங்குவது உதயேந்திர மங்கலம் என்னும் ஊர். இப்பொழுது வட ஆர்க்காட்டுக் குடியாத்த வட்டத்திலுள்ள உதயேந்திரமே அவ்வூராகும்.48

வயிர மேகன்

    தென்னாட்டில் நில வளத்தைப் பேணி வளர்த்த பல்லவ மன்னருள் ஒருவன் வயிரமேக வருமன். பயிர்த் தொழில் சிறக்கும் வண்ணம் அவன் தொட்ட குளமும், வெட்டிய வாய்க்காலும் சாசனங்களில் குறிக்கப்பட்டுள்ளன. தந்திவர்ம  பல்லவனே வயிரமேகன் என்னும் விருதுப் பெயர் தாங்கி விளங்கினான்என்று சரித்திர நூலோர் கருதுவர்.49 தென்னார்க்காட்டுத் திண்டிவன வட்டத்திலுள்ள வயிரமேகபுரம் என்னும் ஊர் அவன் பெயரை விளக்குகின்றது. அவ்வூர் வயிர மேக நகரம் என்று ஒரு சாசனத்திற் குறிக்கப்படுதலால் அதன் பண்டைச் சிறப்பினை ஒருவாறு அறியலாகும்.50 இடைக் காலத்தில் ஜனநாதபுரம் என்ற பெயரும் அதற்கு வழங்கலாயிற்று.51 இக் காலத்தில் வயிரபுரம் என்பது அதன் பெயர்.

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்

அடிக்குறிப்பு

41. “பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கம் செய்யும்” – தேவாரம்.

42. 265 / 1907. திருவொற்றியூருக்கு அண்மையிலுள்ள மணலி என்ற ஊரும், சிம்ம விட்ணு சதுர்வேதி மங்கலம் எனப்பட்டது- (Pallavas, p. 87.)

43. ஒரு பாறையில் குடைந்தெடுத்த கோயில் அங்குள்ளது. அது தூணாண்டார் கோயில் என்று பெயர் பெற்றிருந்தது. (61/1900) சிங்கமங்கலத்துத் திருக்கற்றளியென்று அக்கோயில் கல்வெட்டிற் குறிக்கப்படுகின்றது. (69/1900). குலோத்துங்க சோழன் காலத்தில் சாம்புவராயன் என்று சாமந்தன் அக் கோயிலில் ஒரு மண்டபம் கட்டினான். சாம்புவராயனைச் செம்புராசா என்ற கருண பரம்பரைக் கதை கூறும். சீயமங்கலக்கோயில் செம்புராசாவால் குடைந்தெடுக்கப்பட்டதென்று அவ்வூரார் கூறுவர். (North Arcot Manual, Vol. II. p. 438.)

44. வட ஆர்க்காட்டுத் தொகுதி, தொ.2, பக். 438 (North Arcot Manual, Vol. II, p. 438.)

45. திருச்சி நாட்டு இலால்குடிக் கருகே மற்றொரு பல்லாவரம் உண்டு. அவ்வூரில் முதல் நரசிங்கவர்மன் காலத்திற் கட்டிய கோட்டையின் அடையாளங்கள் இன்றும் காணப்படும். (பல்லவர் சரித்திரம், தொ.2, பக். 44). வட ஆர்க்காட்டுச் செய்யாற்று வட்டத்தில் மற்றொரு பல்லாவரம் உள்ளது. இவ்வூரில் குரங்கணில் முட்டம் என்னும் பாடல் பெற்ற சிவாலயம் அமைந்ததாகச் சாசனம் கூறும். (290 / 1912.)

46. வாதாபி என்ற பாதாமி, பீசப்பூர் தேசத்தில் உள்ளது.

47. பல்லவர் (Pallavas, p. 102.)

48. இவ்வூர் உதயேந்திர மங்கலம் என்னும் சாசனத்தில் வழங்கும், உதயேந்திரச் செப்பேடுகள் எனப்படும். அச் சாசனத்தில் நந்திவர்மப் பல்லவனுக்கு உதயேந்திரன் செய்த அருஞ்சேவையும் பகைவரைப் பல போர்க்களங்களிற் புறங்கண்ட செய்தியும் விரித்துரைக்கப் படுகின்றன.

49. பல்லவர் (Pallavas, p. 144.)

50. 254 / 1913.

51. 253 / 1913.