தலைமைச் செயலகத்தில் தமிழாய்வு மேற்கொள்க!

(தமிழ்க்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி இல்லையா? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 21 தொடர்ச்சி)

தமிழ் ஆட்சிமொழிச்செயலாக்கம் குறித்து ஆட்சியாளர்களும் அதிகாரிகள் மட்டத்தினரும் ஆர்வமுடன் பேசுவதை நாம் அறிவோம். அதே நேரம் ஆட்சிமொழிச் செயலாக்கம் என்பது வெற்றுரையாகத்தான் இன்றும் உள்ளது என்பதையும் நாம் நன்கறிவோம். இந்நிலை தொடரத் தொடரத் தமிழ் வளர்ச்சி என்பது தேய்பிறையாகத்தான் நலிகிறது.

தலைமைச் செயலகத்திலிருந்து துறைத்தலைமைக்கும் சில நேர்வுகளில் பிற சார்நிலையினருக்கும் ஆங்கிலத்தில் அனுப்பி விட்டு அங்கிருந்து அடி நிலை வரை ஒவ்வொரு நிலையிலும் “தமிழில் எழுது, தமிழில் எழுது” என்று சொல்வது முரணாகப் படவில்லையா? தோற்றுவாய் தமிழாக இருந்தால், எல்லா நிலையிலும் இயல்பாகவே தமிழ்தானே தொடரும்! நிலைக்கும்! எனவே, நாம் முதலில் செய்ய வேண்டியது தலைமைச்செயலகத்தில் முழுமையான தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்க ஆய்வை மேற்கொள்வதுதான்.

ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் தமிழைத் தவணை முறையில் பயன்படுத்தி மறந்து விடுவதையும் ஆங்கிலமாயின் எவ்வகை ஆணையுமின்றியும் ஆணைக்கு மாறாகவும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதையும் பார்க்கலாம். இதன் தொடர்பில் சில முன்நினைவுகளையும் குறிப்பிடின் தமிழ்ச்செயலாக்க நிலையைப் புரிந்து கொள்ள உதவும்.

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் தமிழ் ஆட்சிமொழி அமைச்சராக இருந்த பொழுது, தலைமைச் செயலர் அறை முகப்பில் பொன்னெழுத்துகளில் ஆங்கிலம் வீற்றிருக்கிறது. தலைமைச் செயலர்கள் பெயர்ப்பட்டியல் ஆங்கிலத்தில் உள்ளது எனக் குறிப்பிட்டு மடல் அனுப்பினேன்.  மூன்று நாளில் மதுரை வந்த அமைச்சர், “இப்பொழுது போய்ப்பாருங்கள் பொன்னெழுத்துகளில் தமிழைக் காணலாம்” என்றார்.

தலைமைச் செயலகம் வந்து பார்த்த நான், தலைமைச் செயலர் என்னும் பதவிப்பெயரை மட்டும் தமிழில் குறிக்கப்பட்டதைக் கண்டேன். ஆனால், பெயர் நிரல் ஆங்கிலத்தில்தான் இருந்தது. அதை அமைச்சரிடம் தெரிவித்தேன். பின் நடவடிக்கை எடுத்த பின், அப்போதைய தலைமைச் செயலர் பெயரை மட்டும் தமிழில் குறிப்பிட்டனர்.  பின் வலியுறுத்தியதும் இறுதிப்பலகையில் தமிழில் பெயர்களைக் குறித்தனர். அடுத்தும் தமிழில் பெயர்கள் எழுதப்பட்டன. பின்னர் எப்போதோ ஆங்கிலத்திற்கு மாறிவிட்டனர். நேற்று நான் தலைமைச் செயலர்கள் நிரல் பலகை ஆங்கிலத்தில் இருந்ததைக் கண்டு வருத்தமுற்றேன்.

அதேபோல் பத்துத் தளம் கொண்ட நாமக்கல் மாளிகைக் கட்டடத்தில் ஒவ்வொரு தளத்திலும் உள்ள துறைகளின் பட்டியல் ஆங்கிலத்தில் உள்ளதைச் செயலர் திரு வை.பழனிச்சாமி இ்.ஆ.ப. அவர்களிடம் தெரிவித்தேன். அதனால் உரியவர்கள் த.வ.துறைபெயரை மட்டும் தமிழில் குறிப்பிட்டனர். இஃதென்ன கூத்து? என்று கண்டித்த பின், த.வ.துறை இருந்த ஆறாவது தளத்தில் உள்ள தகவல் பலகையை மட்டும் தமிழில் குறிப்பிட்டனர். பிறகு செயலரிடம் தெரிவித்து அவரே நேரடியாகக் கண்டித்து அறிவுறுத்திய பின்னர், அக்கட்டடத்தின் எல்லாத் துறைத்தகவல் பலகைகளையும் தமிழில் குறித்தனர்.

இப்பொழுது அதில் மாற்றமில்லை. ஆனால், அங்கும் பழைய கட்டடத்திலும் செய்தித்துறை காட்சிக்கு வைத்துள்ள தகவல் பலகைகள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. ஒன்றிய அரசு கூட்டும் கூட்டத்தில் பங்கேற்கையில் வைக்கும் துறைப்பெயர்களை ஆங்கிலத்தில்தான் வைத்துள்ளனர். இதனை இரு மொழிகளில் வைக்கலாமே!

அறைகளிலுள்ள பெயர்ப்பலகைககளில் தமிழ் முதலெழுத்துகள் இல்லாமல் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. அத்தகைய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பல குறைகளைக் காணலாம்.

திரு கிறித்துதாசு காந்தி இ.ஆ.ப. தமிழ் வளர்ச்சிச் செயலராக இருக்கும்போது, நான் வேண்டியதற்கிணங்க அவர் தலைமைச்செயலகத்தில் தமிழ் ஆய்வுப்பணியை மேற்கொள்ளச் செய்தார். அதற்கு ஓரளவு பலன் இருந்தது. இது தொடர்ந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். பின்னரும் இத்தகைய ஆய்வுகள் மேற்கொண்டதாகவும் ஆனால் புள்ளிவிவரம் கோரிய அத்தகைய ஆய்வுகளால் எதிர்பார்த்த பயனில்லை என்றனர்.

தமிழ் ஆட்சிமொழித்தேர் இயங்கவேண்டுமெனில், தார்க்குச்சி தேவை. ஆனால், தார்க்குச்சியைப் பயன்படுத்த அதிகாரத்தில் உள்ளவர்கள் முன்வரமாட்டார்கள்; ஆட்சித் தேரும் இயங்குவதில்லை. விரைந்தும் முழுமையாகவும் தமிழ் ஆட்சிமொழித்திட்டத்தைச் செயற்படுத்த வேண்டும் என்பதே நம் இலக்காக இருக்க வேண்டும். எனவே, தலைமைச்செயலர், தமிழ்வளர்ச்சித்துறைச் செயலர் தலைமையில் தமிழ் ஆய்வு- கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். தமிழார்வம் மிக்க செயலர்களை உறுப்பினராகச் சேர்க்க வேண்டும்.

செயலர் நிலையில் இல்லாத தமிழார்வம் மிக்க  பிற அதிகாரிகளையும் இக்குழுவில் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும். த.வ.செயலர் மரு.செல்வராசு இ.ஆ.ப. தமிழார்வம் மிக்கவராகவும் எதுவும் முறையிட்டால் உடன் நிறைவேற்றுநராகவும் உள்ளார். புகழ்மிகு எழுத்தாளர் தமிழார்வம் மிக்க தலைமைச் செயலர் முனைவர் வெ.இறையன்பு அவர்களுக்குத் தமிழார்வம் மிக்க அதிகாரிகளைத்  தெரிந்தே  இருக்கும். எனவே, குழுவை அமைப்பதில் சிக்கல் இராது.  தமிழ்வளர்ச்சி இயக்குநர் முனைவர் ஒளவை ந.அருள், தமிழ் ஆட்சிமொழித்திட்டத்தை முழுமையாகச் செயலாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் உள்ளார். எனவே, அவர் தலைமையிலான தமிழ் வளர்ச்சித்துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்களைக் களத்தில் இறக்க வேண்டும். தமிழ் ஆணைகள் எண்ணிக்கை, ஆங்கில எண்ணிக்கை, தமிழ்ப்பதிவேடுகள் எண்ணிக்களை, ஆங்கிலப் பதிவேடுகள் எண்ணிக்கை, தமிழ்க்கையொப்பமிடுவோர் எண்ணிக்கை, ஆங்கிலக் கையொப்பமிடுவோர் எண்ணிக்கை என்ற முறையில் வெறும் புள்ளி விவரம் திரட்டுவதாக ஆய்வு அமையக் கூடாது. அரசுப்பணியாளர் நடத்தை விதிகளின் கீழ், ஆட்சித்தமிழ்ச்செயலாக்கத்தை நிறைவேற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே ஆணை உள்ளது. எனவே, பணி நீக்கம் வரை தண்டனை வழங்க வழி உள்ளது. இதனை உணர்ந்து  ஒழுங்கு நடவடிக்கை, தண்டனை வழங்கும் அதிகாரம் ஆகியவற்றை ஆட்சிமொழிச்செயலாக்க நேர்வில் மட்டும் துறைத் தலைவர்களிடமிருந்து மாற்றி ஆட்சிமொழி ஆய்வுக் கண்காணிப்புக் குழுவிற்கு வழங்க வேண்டும். இந்த ஆய்வின் மூலம் தவறிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்கினால்தான் மேற்கொண்டு ஆங்கிலப் பயன்பாடு நிலைக்காது.

வழிகாட்டுதலின்றியே பலர் தமிழில் எழுதுவதில்லை. எனவே, செயலக அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் தமிழில் எழுதுவதற்குத் தக்கவர்களைக் கொண்டு தக்க வழிகாட்டுதல் வழங்க வேண்டும். 

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்

(திருவள்ளுவர், திருக்குறள் 648)

அத்தகைய வல்லாரைக் கொண்டு ஆட்சித்தமிழ்ச்செயலாக்க ஆய்வு-கண்காணிப்புப் குழுவை அமர்த்தி, என்றும் தமிழ் எதிலும் தமிழ் என்று சொல்வதை நனவாக்க வேண்டுகிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்