ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 26
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 25. தொடர்ச்சி)
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):26
4. குலமும் கோவும் தொடர்ச்சி
சோழ நாட்டு மன்னர்
விசயாலயன்
பல்லவர் ஆட்சி நிலை குலைந்தபோது தஞ்சைச் சோழர் குலம் தலையெடுத்தது. வடக்கே சாளுக்கிய மன்னரும், தெற்கே பாண்டியரும் பல்லவ வேந்தனை நெருக்கிக் குழப்பம் விளைத்த காலம் பார்த்து விசயாலயன் என்னும் சோழன் முத்தரையரிடமிருந்து தஞ்சை நகரைக் கைப்பற்றினான். அது முதல் அவன் மரபில் வந்த தஞ்சைச் சோழர்கள் படிப்படியாக வளர்ந்தோங்கிப் பேரரசர் ஆயினர், விசயாலயன் பெயர் தாங்கிய ஊர் ஒன்றும் இல்லை யென்றாலும் புதுக்கோட்டையைச் சார்ந்த நாரத்தா மலை மீதுள்ள விசயாலய சோழீச்சரம் என்னும் கற்கோயில் அவன் பெயரால் அமைந்ததென்பர்.52
ஆதித்தன்
விசயாலயனுக்குப் பின்பு அவன் மகன் ஆதித்தன் அரசுரிமை பெற்றான். ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகப் பல்லவர் பெருமைக்கு உறைவிடமாயிருந்ததொண்டை நாடு இவன் கால முதல் சோழர் ஆட்சியில் அமைவதாயிற்று. இராச கேசரி என்ற பட்டப் பெயரும் இவருக்கு உண்டு. தஞ்சை நாட்டுப் பண்டார வாடைக்கு அண்மையில் இராசகிரி என்ற சிற்றூர் உள்ளது.
காவிரியின் தென்கரையில் உள்ள அவ்வூர் முன்னாளில் இராசகேசரி சதுர்வேதி மங்கலம் என்று பெயர் பெற்றிருந்தது. இராசகேசரிப் பெயரே இராசகிரி என் மருவிற்றென்பர்.53 இப்போது இராசகிரி மகமதியர் வாழும் ஊராக இருப்பினும், பழைய கோவில்களின் குறிகளும் அடையாளங்களும் அங்குக் காணப்படுகின்றன.
பராந்தகன்
தஞ்சைச் சோழர் குடியின் ஆதிக்கத்திற்கு அடிப்படை கோலியவன்பராந்தகமன்னன். பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரியணை யேறிய இம் மன்னன் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக அரசு புரிந்தான்; பாண்டிய மன்னனை இரு முறை வென்று, மதுரையைக் கைப்பற்றினான்; மாற்றானுக்கு உதவி செய்த இலங்கை மன்னன் மீது படையெடுத்து வெற்றி பெற்று ஈழ நாட்டையும் கைக்கொண்டான்.54
இவ்வரசனது விருதுப் பெயர்களில் ஒன்று வீர நாராயணன் என்பதாகும். ஆர்க்காட்டு நாட்டில் வீர நாராயணபுரம் என்னும் பெயர் கொண்ட ஊர்கள் சில உண்டு. அவை வீராணம் என் வழங்கும். தென்னார்க் காட்டிலுள்ள வீராணத்தேரியும் இவன் பெருமையை விளக்குவதாகும்.55
மதுரையை வென்று கைப்பற்றிய இம் மன்னனுக்கு மதுராந்தகன் என்ற பட்டப் பெயரும் உண்டு.56 இக்காலத்தில் செங்கற்பட்டு நாட்டில் சிறந்து விளங்கும் மதுராந்தகம் என்ற ஊர் இவனால் உண்டாக்கப்பட்ட சதுர்வேதி மங்கலம் போலும்! கடப்பேரி என்னும் பழமையான ஊரின் அருகே எழுந்தது மதுராந்தகம்.
வளவன் மாதேவி
வளவன் மாதேவி என்பாள் பராந்தக சோழனுடைய தேவி.57 அவள் பெயரால் நிலைபெற்ற சதுர்வேதி மங்கலம் வளவன் மாதேவி என வழங்குவதாயிற்று. தென்னார்க்காட்டு எரும்பூர் என்னும் உருமூர்க் கோயிற் சாசனத்தால் வளவன் மாதேவி என்ற ஊர் மேற்கா நாட்டைச் சேர்ந்த பிரம தேயம் என்பது விளங்கும்.58 அவ்வூர் இப்பொழுது வளைய மாதேவி என்னும் பெயரோடு சிதம்பரம் வட்டத்தில் உள்ளது.
உத்தம சீலி
உத்தமசீலி என்பான் பராந்தகன் மைந்தருள் ஒருவனாகக் கருதப் படுகின்றான். அவன் பெயரால் அமைந்த உத்தம் சீலி சதுர்வேதி மங்கலம் என்னும் ஊர் இப்பொழுது உத்தம சேரி என வழங்குகின்றது.59
கண்டராதித்தன்
பராந்தக சோழனுக்குப் பின்னே அரசு புரிந்தவன் அவன் மைந்தனாகிய கண்டராதித்தன். ‘ஈசன் கழல் ஏத்தும் செல்வமே செல்வம்’ என்று கருதி வாழ்ந்த இக் காவலனைச் ‘சிவஞான கண்டராதித்தன்’ என்று சாசனம் சிறப்பிக்கின்றது.60 தில்லைச் சிற்றம் பலத்து இறைவன்மீது இம் மன்னன் பாடிய திருவிசைப்பா ஒன்பதாம் திருமுறையில் சேர்த்துப் போற்றப்படுவதாகும். அவ் இசைப்பாட்டில்,
“காரார் சோலைக் கோழிவேந்தன் தன் தஞ்சையர் கோன் கலந்த
ஆரா இன்சொற் கண்டராதித்தன்”
என்று வருதலால், அரசாளும் பெருங்குலத்திற் பிறந்தும் அரனடியே தஞ்சமெனக் கருதிய சீலன் இவன் என்பது நன்கு விளங்குகின்றது. திருச்சி நாட்டில் கொள்ளிட நதியின் வடகரையில் உள்ள கண்டராதித்தம் என்னும் ஊர், இவன் உண்டாக்கிய சதுர்வேதி மங்கலம். இம்மன்னனது மறுமை நலங்கருதி அம் மங்கலம் நிறுவப்பட்டதாகத் தெரிகின்றது.61 இன்னும், கண்டராதித்தன் பெயரால் நிலவும் ஊர் ஒன்று தென்னார்க்காட்டுத் திருக்கோவிலூர் வட்டத்தில் உண்டு. கண்டராதித்தபுரம் என்று பெயர் பெற்ற அவ்வூர் இந் நாளில் கண்டராச்சிபுரம் என்று வழங்கும்.62
தென்னார்க்காட்டிலுள்ள கண்டமங்கலமும் கண்டராதித்த மங்கலமாய் இருத்தல் கூடும்.63 அங்ஙனம் இம்மையிலும் மறுமையிலும் செம்மையே நாடிய இம் மன்னரின் திருவுருவம் கோனேரி ராசபுரம் என்னும் திருநல்லத்துக் கோவிலில் இன்றும் காணப்படுகின்றது.64
செம்பியன் மாதேவி
சோழர் குடியில் சீலத்தாற் சிறந்தவள் செம்பியன் மாதேவி. சிவநேசச் செல்வராகிய கண்டராதித்தரின் முதற் பெருந்தேவி என்னும் உரிமைக்குத் தக்க முறையில் அம் மாதேவி செய்த திருப்பணிகள் பலவாகும்.65 தஞ்சை நாட்டில் செம்பியன் மாதேவி என்ற ஊர் இன்னும் அவள் பெருமைக்கு அறிகுறியாக நின்று விளங்குகின்றது.66 அங்குள்ள கைலாச நாதர் கோவில் இவளாலே கட்டப்பட்டதாகும். செம்பியன் மாதேவியின் மைந்தனாகிய உத்தம் சோழன் அரசு புரிந்த காலத்தில் அவன் தேவியர்கள் அக் கோயிலுக்குப் பல சிறப்புகள் செய்தார்கள்.67
இராசேந்திரன் என்னும் கங்கை தொண்ட சோழன் செம்பியன் மாதேவியின் படிவத்தை அக் கோவிலில் நிறுவி, அதன் பூசைக்கு வேண்டிய நிவந்தமும் அளித்தான்.68
அரிஞ்சயன்
கண்டராதித்தன் காலம் சென்ற பின்பு, அவன் தம்பியாகிய அரிஞ்சயன் பட்டம் எய்திச் சில காலம் அரசாண்டான். பாண்டியனோடு நிகழ்த்திய போரில் அவன் உயிர் இழந்தான் என்பர்.69 இவ்வாறு அகால மரணமுற்ற அரிஞ்சயன் உயிர் சாந்தி பெறுமாறு பள்ளிப் படையாக இராசராசன் அமைத்த ஆலயம் அரிஞ்சயேச்சுரம் என்று பெயர் பெற்றது.70
(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை)
ஊரும் பேரும்
அடிக்குறிப்பு
52. முதல் இராசராச சோழன் (உலகநாத பிள்ளை) ப. 11.
53. 239 / 1923. சோழர்கள் (Cholas Vol. I. p. 542.)
54. இவன் “மதுரையும் ஈழமும் கொண்ட பரகேசரி” என்று பாராட்டப் பெற்றான்.
55. வட ஆர்க்காட்டுத் திருவண்ணாமலை வட்டத்தில் வீரணம் என்ற ஊரும், வாலாசா வட்டத்தில் மேல் வீராணமும், தென் ஆர்க்காட்டுச் சிதம்பர வட்டத்தில் வீராண நல்லூரும், விழுப்புர வட்டத்தில் வீராணமும் உள்ளன. இன்னும் தென் ஆர்க்காட்டிலுள்ள உடையார் குடி, வீர நாராயண சதுர்வேதி மங்கலம் எனவும், சித்தூர் நாட்டைச் சேர்ந்த மேல்பாடி, வீர நாராயணபுரம் எனவும் வழங்கிய செய்தி சாசனத்தில் விளங்கும். 562 / 1920, 101 / 1921.
56. சோழர் (Cholas,Vol. I,145; 735 / 1905.)
57. 248 /1894.
58. 398 / 1913.
59. இது திருச்சி நாட்டு வட்டத்தில் திருப்பாற்றுறையை அடுத்து உள்ளது.( சென்னை மாகாணக்கல்வெட்டுகள்/I.M.P.p. 1580.)
60. சாசனத் தமிழ்க் கவி சரிதம், ப. 37.
61. தென்னிந்தியக் கல்வெட்டுகள் ( S.I.I., Vol. II. P.374.)
62. சென்னைக்கல்வெட்டு அறிக்கைகள்( M.E.R.,1934-35.)
63. 356 / 1917.
64. “கண்டராதித்தர் திருநாமத்தால் திருநல்லமுடையார்க்குத் திருக்கற்றளி எழுந்தருளுவித்து” என்பது சாசன வாசகம், 450 / 1908.
65. இம் மாதேவி இப்போது கோனரி இராசபுரம் என வழங்கும் திருநல்லத்தில் கற்கோயில் கட்டினார்; தென் குரங்காடுதுறை, திருமணஞ்சேரி முதலிய தலங்களிலும் கற்றளிகள் அமைத்தார்; உய்யக்கொண்டான் திருமலையென்று பிற்காலத்தில் பெயர் பெற்ற திருக்கற்குடியில் அடைந்த விழுமியார்க்குப் பொன்னாலும் மணியாலும் இழைத்த திருமுடி யணிந்து மகிழ்ந்தார்; 85 / 1892.
66. 490 / 1925.
67, 480 / 1925; 494 / 1925.
68. 481 / 1925.
69. பாண்டியர் வரலாறு (சதாசிவ பண்டாரத்தார்) ப 39.
70. தென்னிந்தியக் கல்வெட்டுகள் (S.I.I., Vol. III, Nos.15,16 17.)
Leave a Reply