ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):29
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 28. தொடர்ச்சி)
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):29
- குலமும் கோவும் தொடர்ச்சி
கங்கைகொண்ட சோழன்
இராசேந்திரன் தாங்கி நின்ற விருதுப் பெயர்களுள் நாடறிந்தது கங்கைகொண்டான் என்பதாகும். அப்பெயரால் எழுந்த கங்கை கொண்டான் என்னும் ஊர்கள் தமிழ்நாட்டிற் பல பாகங்களில் உண்டு.103
கடாரம் கொண்டான்
கடாரங்கொண்டான் என்ற விருதுப் பெயரும் தாங்கி நின்றான் இாசேந்திரன். கப்பற்படை கொண்டு காழகம் என்னும் கடார நாட்டை இம் மன்னன் வென்று, இவ் விருதுப் பெயர் பூண்டான். தஞ்சை நாட்டு மாயவரம் வட்டத்தில் கடாரம் கொண்டான் என்பது ஓர் ஊர்ப் பெயராக
வழங்குகின்றது. தொண்டை நாட்டு மணவிற் கோட்டத்தில் கடாரங் கொண்ட சோழபுரம் இருந்ததென்று சாசனம் கூறும்.104
குலோத்துங்க சோழன்
இராசேந்திர சோழனுக்குப் பின் அரசாண்ட மன்னரில் பெருமை சான்றவன் முதற் குலோத்துங்க சோழன். கலிங்கத்துப் பரணியிற் பாராட்டப்படுகின்ற சிறந்த அரசன் இவனே. கருணாகரத் தொண்டைமான் என்னும் படைத்தலைவன் இச் சோழ மன்னனது ஆணையால் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து வெற்றியும் புகழும் பெற்ற செய்தியைக் கலிங்கத்துப் பரணி எடுத்துரைக்கின்றது. குலோத்துங்கன் திரிபுவனச் சக்கரவர்த்தி முதலாய பட்டங்களைத் தாங்கி நின்றான். சுங்கந்தவிர்த்த சோழன் என்னும் விருதுப் பெயரும் அவனுக்குரிய தாகும். தஞ்சாவூரின் அருகேயுள்ள கருந்திட்டைக்குடி அம் மன்னன் காலத்தில் சுங்கந்தவிர்த்த சோழ நல்லூர் என வழங்கலாயிற்று.
முதற் குலோத்துங்க சோழன் தன் தேவியாகிய கம்பதேவியின் விருப்பத்திற் கிணங்கித் தொண்டை நாட்டுச் சிற்றீசம்பாக்கம் என்ற ஊருக்குக் கம்பதேவி நல்லூர் எனப் பெயரிட்டுக் காஞ்சிபுரக் கோவிலுக்கு நிவந்தமாக அளித்தான் என்னும் செய்தி ஒரு சாசனத்தால்
விளங்குகின்றது.105
தீன சிந்தாமணி
இன்னும், குலோத்துங்கன் தேவியாகிய தீன சிந்தாமணியின் பெயரால் அமைந்த ஊர்கள் சில உண்டு. தென் ஆர்க்காட்டிலுள்ள சிந்தாமணி என்னும் ஊர் முன்னாளில் தீன சிந்தாமணி நல்லூர் என வழங்கிற்று.106 எனவே, சிந்தாமணி என்பது அதன் குறுக்கமாகத் தோன்றுகின்றது. இன்னும், வட ஆர்க்காட்டிலுள்ள கடைக்கோட்டுப் பிரம தேசம், தீன சிந்தாமணி சதுர்வேதி மங்கலம் என்று சாசனங்களிற் குறிக்கப்படுதலால் அவ்வூரும் இத் தேவியின் பெயர் தாங்கி நிற்பதாகத் தெரிகின்றது.107
அநபாய சோழன்
இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கு அநபாயன் என்ற சிறப்புப் பெயர் உண்டு. அப் பெயர் சில ஊர்களுக்கு அமைந்தது. சோழ மண்டலத்தில் ஜயங்கொண்ட சோழ வளநாட்டு திருவழுந்தூர் நாட்டில் அநபாய புரம் என்னும் பெயருடைய ஊர் ஒன்று இருந்ததாகச் சாசனம் கூறுகின்றது.108
தொண்டை நாட்டில் அரும்பாக்கம் என்னும் ஊரில் இருந்த சில நிலங்களை ஓர் எடுப்பாகச் சேர்த்து, அநபாய நல்லூர் என்று பெயரிட்டுத் திரு ஆலக்கோயிலுடையார்க்கு அளித்தான் அநபாய சோழன்.109
மூன்றாம் குலோத்துங்கன்
மூன்றாம் குலோத்துங்கன் காலத்துச் சாசனத்தால் தென் ஆர்க்காட்டு வேலூரில் குலோத்துங்க சோழ விண்ணகரம் விளங்கிற்று என்பது தெரிகின்றது. இம் மன்னன் பெயரால் உண்டாகிய குலோத்துங்க சோழ நல்லூர் அத்திருக் கோவிலுக்குத் தேவதானமாக வழங்கப்பட்டது.110
திரிபுவன வீரன்
தஞ்சை நாட்டில் கும்பகோணத்துக்கும், திருவிடை மருதூருக்கும் இடையே திரிபுவனம் என்ற ஊர் உள்ளது. மூன்றாம் குலோத்துங்கன் சிறப்புப் பெயர்களில் ஒன்று திரிபுவன வீரன் என்பதாகும். . அப் பெயரால் அமைந்த ஊர் திரிபுவன வீரபுரம் என்ற பெயர் பெற்றுத் திரிபுவன மாயிற்று. அவ்வூரில் சிறந்து விளங்கும் சிவாலயம் குலோத்துங்கனாற் கட்டப்பட்ட தென்று சாசனம் கூறும்.111
கட்டுமான முறையில் அது தஞ்சைப் பெரிய கோவிலை ஒத்திருப்பதாக அறிந்தோர் கருதுகின்றார்கள். இன்னும் சீகாழி வட்டத்திலுள்ள திரிபுவன வீரமங்கலம் என்ற ஊரும் இக் குலோத்துங்கன் பெயர் பெற்றதாகத் தோன்றுகின்றது.
பல்லவராயன்
இரண்டாம் இராசராசன் காலத்தில் பெருமான் நம்பிப் பல்லவராயர் என்பவர் தலைமை அமைச்சராக விளங்கினார். அம் மன்னன் முதுமையுற்றபோது தனக்குப்பின் பட்ட மெய்தி அரசாளுதற்குரிய மைந்தன் இல்லாமையால் மனம் வருந்தினான். அந் நிலையில் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து அவன் மரபைச் சேர்ந்த இளம் பிள்ளையைப் பல்லவராயர் அழைத்து வந்து முடிசூட்டி அரசியற் பொறுப்பனைத்தையும் வகித்து முறையாகவும் திறமையாகவும் நடத்தினார். இவ்வாறு நாட்டுக்கும் அரசுக்கும் நலம் புரிந்த பல்லவராயர் காலஞ்சென்ற பொழுது அவர் குடும்பத்தைப் பாதுகாக்கும் பொருட்டு அம் மன்னனால் இறையிலியாக அளிக்கப்பட்ட ஊர் பல்லவராயன் பேட்டை என்று பெயர் பெற்றது.112
பரகேசரி
சிதம்பரத்துக்கு அண்மையில் பரகேசரி நல்லூர் என்னும் ஊர் உள்ளது. பரகேசரிப் பட்டம் உடைய மன்னன் காலத்தில் அஃது உண்டாயிருத்தல் வேண்டும் என்று தோன்றுகின்றது. அங்கு இருங்கோளன் என்னும் குறுநில மன்னன் கட்டிய கோவில் விக்கிரம சோழேச்சரம் என்று பெயர் பெற்றது.113 இப்பொழுது அவ்வூர் பரமேஸ்வர நல்லூர் என்று அழைக்கப்படுகின்றது.
வானவன் மாதேவி
இன்னும், வானவன் மாதேவியின் பெயரால் எழுந்த நகரம் வானவன் மாதேவிபுரம் ஆகும். இந்நாளில் தென்ஆர்க்காட்டுக் கூடலூர் வட்டத்தில் வானமாதேவி என அவ்வூர் வழங்குகின்றது.114 செங்கற்பட்டுக் காஞ்சிபுர வட்டத்தில் வானவன் மாதேவி என்பது ஓர் ஊர். அங்கு எழுந்த சிவாலயம் வானவன் மாதேவீச்சுரம் என்று பெயர் பெற்றது. பழைய வெண்குன்றக் கோட்டத்துப் பெருநகர் நாட்டில் அவ் வானவன் மாதேவி இருந்ததென்று சாசனம் கூறும். அவ்வூர் இப்பொழுது மானாம்பதியென வழங்குகின்றது.115
(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை)
ஊரும் பேரும்
அடிக்குறிப்பு
103.
கங்கை கொண்டான் – திருநெல்வேலி வட்டம், திருநெல்வேலி நாடு.
கங்கை கொண்டான் – முதுகுளத்தூர் வட்டம், இராமநாதபுரம்.
கங்கை கொண்டான் – பரமக்குடி.
கங்கை கொண்டான் – விருத்தாசலம், தென் ஆர்க்காடு.
104. 244 / 1910.
105 45 / 1921.
106. 389 / 1922.
107. 271 / 1915.
108. 484 / 1907.
109. 359 / 1911.
110. 114 / 1919.
111. 190 / 1907.
112. 433 / 1924.
113. 309 / 1918.
114. வானவன் மாதேவி என்ற பெயருடைய அரச மாதேவியார் பலர்: (1) சுந்தர சோழன் தேவியும் முதல் இராசராச சோழன் தாயும் ஆகிய வானவன் மகாதேவி, (2) உத்தமசோழன் தேவியாகிய வானவன் மகா தேவி, (3) இராசராசன் தேவியும், இராசேந்திரன் தாயும் ஆகிய வானவன் மகாதேவி, (4) இராசேந்திரன் தேவியாகிய வானவன் மகாதேவி.
115. 160 / 1902.
Leave a Reply