mu.rasaram i.a.s.02tkramachanthiranias01Seal_of_Tamil_Nadu01

சீரான ஒலிபெயர்ப்பை நடைமுறைப்படுத்த

 தமிழக அரசிற்குத் தமிழறிஞர்களின் வேண்டுகோள்

  மூல மொழிச் சொற்களை உள்ளவாறு உணர்வதற்கு உதவுவது ஒலிபெயர்ப்பு. அந்த வகையில் தமிழ்ச்சொற்களைப் பிற மொழியினர் அறிய உதவுவது ஒலி பெயர்ப்பு. பொதுவாக உரோமன்/ஆங்கில எழுத்துகளில் தமிழுக்கான ஒலிபெயர்ப்பு மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. [பிற மொழியாளர்கள் புரிதலுக்காகத்தான் ஒலி பெயர்ப்பே தவிர, தமிழில் ஒலி பெயர்ப்பு முறையில் பிற மொழிச்சொற்களைக் கலக்கக்கூடாது.] ஐரோப்பியர் வருகைக்கு முன்னர், எத்தகைய ஒலி பெயர்ப்பு முறைகளைப் பிற மொழியினர் கையாண்டிருந்தனர் என நமக்குத் தெரியவில்லை. ஐரோப்பியர் வருகைக்குப்பின்னரே தமிழ் மொழிக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தது.

  இன்றைக்கு வெவ்வேறு வகை ஒலி பெயர்ப்பு முறைகள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொருவரும் ஒவ்வோர் ஒலி பெயர்ப்பு முறையைப் பின்பற்றும் போக்கும் உருவாகிறது. எனவே, தமிழக அரசு ஒலிபெயர்ப்பு வரையறை ஆணை ஒன்றை வெளியிட வேண்டும்.

  ஒலி பெயர்ப்பு ஆணையை வெளியிடும் முன்னர் ஒலி பெயர்ப்பு வரையறைக் குழு ஒன்றைத் தமிழக அரசு அமைக்க வேண்டும்.

 “தமிழ் எழுத்துகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு குறித்துத் தனிப்பட்டவர்கள் முடிவெடுப்பது ஏற்கத் தக்கதல்ல. தமிழக அரசே, தமிழ் வளர்ச்சித்துறை மூலமாகத் தமிழுக்கான ஆங்கில ஒலிபெயர்ப்பு தரப்படுத்தும் குழு ஒன்றை அமைத்து, அக்குழு பட்டறிவு மிக்க, மொழிபெயர்ப்பில் ஈடுபாடு கொண்ட தமிழறிஞர்கள் கருத்துகளைக் கேட்டறிந்து பரிந்துரைப்பதன் அடிப்படையில் அரசே தக்க ஆணை பிறப்பிக்க வேண்டும். தொழில் நுட்பர்கள் தமிழ்த் தேவையை நிறைவேற்றும் பணிதான் ஆற்ற வேண்டுமே தவிர, இம் முடிவில் தலையிடக்கூடாது. தமிழ் மரபறியா பிற மொழியாளர்களும் இதில் தலையிடக் கூடாது.”   என மடல் எண் 107/2045 நாள் 04.03.2045 / 18.03.2014 மூலம் முன்னரே தமிழக அரசிற்குத் தமிழ்க்காப்புக் கழகம் தெரிவித்துள்ளது.

மடல் எண்120/2045 நாள் ஆவணி 10, 2045 / 26.08.2014 மடல் மூலம், “தமிழ் இணையக்கல்விக் கழகம் தமிழ் தொடர்பான கருத்துகளை முடிவெடுக்கவோ முன்மொழியவோ ஏற்ற அமைப்பல்ல. “தமிழை வளர்ப்பதற்கான அமைப்பு; ஆதலின் தமிழ்ப்புலமை உடையவர்களே இதன் இயக்குநராக இருக்க வேண்டும்” என்னும் பொழுது இஃது இணைய அமைப்பு என்பதாகத் தவறாகக் கூறி அதற்கேற்ப விதிமுறைகளிலும் புனைவாவணம் உருவாக்கப்பட்டுள்ளதை முன்னரே தங்கள் கருத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். ஆனால், இப்பொழுது தமிழ்பற்றிக் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் தமிழ் அமைப்பு எனக் கூறிக் கொள்வது இரட்டை வேடமன்றி வேறல்ல. தமிழ்ப்புலமையாளர் தலைமையில் இயங்காத,   ஓர் அமைப்பு தமிழ் தொடர்பில் அரசிற்குக் கருத்து கூறுவதோ அதன் முடிவை அரசு ஏற்பதோ தமிழுக்குக் கேடுதருவதாக அமையும்.”   என்றும் அரசிற்குத் தமிழ்க்காப்புக் கழகம் தெரிவித்துள்ளது.

  தமிழ் வளர்ச்சி – செய்தித்துறையின் செயலர் முனைவர் மு.இராசாராம் இ.ஆ.ப., ஒரு நாளின் பெரும் பொழுதை அலுவலகப் பணிக்காகவே செலவிடும் உழைப்பாளி. எனினும் ஒலி பெயர்ப்பு தொடர்பான பொருண்மை முதலில் தகவல் தொழில்நுட்பத்துறையில் எழுப்பப்பட்டுள்ளதால், அது குறித்த முடிவு எடுத்தலை அடுத்து துறையின் பணியில்தலையிடவதாகக் கருதுகிறார் போலும். இந்த எண்ணம் தவறானது. எனவே, தமிழ் வளர்ச்சித்துறையின் பணி என்பதை உணர்ந்து இது குறித்து விரைவில் முடிவெடுத்துத் தக்க அரசாணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இப்பொழுது ஒருங்குகுறிச் சேர்த்தியம் முன்வைக்கப்பட்டுள்ள பின்னங்கள், குறியீடுகள் முன்மொழிவு தொடர்பில் சுவடு முதலான சொற்களுக்கு ஒலிபெயர்ப்பு தேவைப்படுகின்றது. அதற்கெனத் தனியாகத் தகவல் தொழில் நுட்பக் குழுவில் குழு அமைக்க வேண்டிய தேவையில்லை. முன்மொழிவின் பிற பொருண்மைகள் பற்றி மட்டும் முடிவெடுத்தால் போதுமானது. நமது வேண்டுகோளுக்கிணங்க ஒருங்குகுறி தொடர்பான நடவடிக்கை எடுத்து வரும் தகவல் தொழில்நுட்பச் செயலர் திரு தா.கி.இராமச்சந்திரன் இ.ஆ.ப., இது தொடர்பான குழுவை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில் ஒலி பெயர்ப்பு தொடர்பான உட்குழுவை அமைக்காமல் தமிழ் வளர்ச்சித்துறையின் பொறுப்பில் விட்டுவிட்டு அதன் அடிப்படையிலான முடிவைச் செயல்படுத்துவதே சிறப்பாக அமையும். தமிழ் வளர்ச்சித்துறையும் தமிழுக்கான ஒலி பெயர்ப்பு வரையறை ஆணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் இதனடிப்படையில் முடிவெடுக்குமாறு தொழில்நுட்பத்துறைக்கு அறிவுறுத்தி, இதற்கெனத் தனியே குழு அமைப்பதை நிறுத்த வேண்டும்.

எனவே,

  • தமிழ்வளர்ச்சித்திணைக்களத்தின் – அஃதாவது செயலகத்துறையின் – செயலர் கட்டுப்பாட்டில் இக்குழு அமைதல் வேண்டும்.
  • தமிழ்வளர்ச்சி இயக்குநர், உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் ஆகியோரை இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக அமர்த்துதல் தமிழறிஞர்களைத் தெரிவு செய்ய எளிமையாக இருக்கும்.
  • இக்குழுவில் தமிழ்ப்பற்று மிக்க தமிழறிஞர்களையும்   தமிழிலக்கியமொழிபெயர்ப்பு படைப்பாளர்களையும் உறுப்பினராகச் சேர்க்க வேண்டும்.
  • மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியிடும் தமிழ்ப்பல்கலைக்கழகம் முதலான பல்கலைக்கழகங்கள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சாகித்ய அகாதமி, ஆசியவியல் நிறுவனம் முதலான நிறுவனங்கள், தமிழ்க்காப்பு அமைப்புகள் ஆகியவற்றின் சார்பாளர்களையும் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும்.
  • குழுவின் நோக்கம், உறுப்பினர்கள் விவரம் முதலியவற்றை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
  • இப்போது நடைமுறையில் உள்ள ஒலி பெயர்ப்பு முறைகளை அட்டவணைப்படுத்தி, செய்தித்தாள்களில் விளம்பரமாக வெளியிட்டும் இணையத்தளங்கள் வழியாகப் பகிர்ந்தும் உலகத் தமிழறிஞர்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும். தொடர்பான கருத்து தெரிவிப்பவர்கள் கட்டுரையாக அளிக்காமல், தேவைப்படும் மாற்றங்களைக் குறிப்பிட்டுத் தொடர்பான குறிப்புகள் அளி்த்தால் போதுமானது என்றும் தெரிவிக்க வேண்டும்.
  • இவ்வாறு பெறப்படும் கருத்துகளைத் தொகுத்து ஒலி பெயர்ப்பு வரையறைக் குழு ‘ஒலிபெயர்ப்புத் தெரிவு அட்டவணையை’ உருவாக்க வேண்டும்.
  •  ஒலி பெயர்ப்புத் தெரிவு அட்டவைணையை விளம்பரங்கள் இணையப் பகிர்வுகள் மூலம் மீண்டும் மக்கள் முன்னிலையில் வைக்க வேண்டும்.

  • இவ்வாறு பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் ஒலிபெயர்ப்பு வரையறைக் குழுவானது ‘ஒலிபெயர்ப்பு வரையறை ஆணை வரைவை’ உருவாக்க வேண்டும்.

  • இவ்வரைவாணையை மீண்டும் மக்கள் முன்னிலையில் தெரிவித்து நிறைவுக் கருத்து எதுவும் இருப்பின் பெற வேண்டும்.

  • அதன்பின்னர், தமிழக அரசு தமிழுக்கான ஒலி பெயர்ப்பு வரையறை ஆணையை வெளியிட வேண்டும்.

எனவே, ஒலிபெயர்ப்பில் சீர்மை நிலவுவதற்காகவும் தனிப்பட்டவர்கள் இது தொடர்பில் தத்தம் விருப்பம்போல் முடிவெடுப்பதை நிறுத்துவதற்காகவும் தமிழக அரசு உடனே தமிழுக்கான ஒலி பெயர்ப்பு வரையறைக் குழுவை அமர்த்திச் சீரான ஒலி   பெயர்ப்புகளுக்கான ஆணையைப் பிறப்பிக்க வேண்டுகிறோம்.

 

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை

அகரமுதல 78 சித்திரை 27, 2046, மே 10, 2015

 feat-default