ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):30 – குலமும் கோவும்
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 29. தொடர்ச்சி)
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):30
4. குலமும் கோவும் தொடர்ச்சி
சாமந்தர்
இன்னும் செங்கற்பட்டு நாட்டுச் செங்கற்பட்டு வட்டத்தில் மானாமதி என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. அங்குள்ள பழமையான கோவில் திருக்கரபுரம் என முற்காலத்தில் வழங்கியதாகத் தெரிகின்றது. இப்பொழுது ஊர்ப் பெயராக வழங்கும் மானாமதி என்பது வானவன் மாதேவியின் சிதைவாகும். இராசேந்திர சோழன் காலத்தில், அவ்வூரில் திருக்கயிலாயநாதர் கோயில் எழுந்தது. அதன் அருகே காணப்படுகின்ற அகரம் என்னும் ஊரும் அம் மன்னனால் உண்டாக்கப்பட்டதே யாகும்.116
தஞ்சைச் சோழ மன்னர் ஆட்சியில் அவர்க்குக் கீழ்ப்பட்ட சிற்றரசர் பலர் இருந்தனர். கொங்குராயன், சேதிராயன், மழவராயன், பல்லவராயன் முதலியோர் சாமந்தராய்ச் சோழ நாட்டின் பல பாகங்களைக் கண்காணித்து வந்ததாகத் தெரிகின்றது. தென் ஆர்க்காட்டிலுள்ள கொங்குராய பாளையம், கொங்குராயனூர் முதலிய ஊர்களும், நெல்லை நாட்டிலுள்ள கொங்குராய குறிச்சியும் அக்காலத்திய கொங்குராயர் பெயரை நினைவூட்டுகின்றன.
சேதிராயப் பெயர் தென் ஆர்க்காட்டிலுள்ள சேதிராய நல்லூர், சேதிராயன் குப்பம் முதலிய ஊர்களிலும், நெல்லை நாட்டிலுள்ள சேதிராய புத்தூரிலும் விளங்குகின்றது. இன்னும் தென் ஆர்க்காட்டிலுள்ள மழவராயனூர், மழவராய நல்லூர் முதலிய ஊர்களும், இராமநாதபுரத்திலுள்ள மழவராயனேந்தல் என்னும் இடமும் மழவராயரோடு தொடர்புடையன. இனி, பல்லவராயன் பெயர் பல ஊர்களில் காணப்படுகின்றது. பல்லவராயன் பாளையம், பல்லவராய நத்தம், பல்லவராயனேந்தல், பல்லவராயன் மடை முதலிய ஊர்கள் நாட்டில் பல பாகங்களிற் காணப்படும்.
மராட்டிய மன்னர்
சோழ மன்னரது ஆதிக்கம் நிலைகுலைந்த பின்பு, பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் தஞ்சை நாட்டில் மராட்டிய மன்னரது ஆட்சி நிலை பெறுவதாயிற்று. இந்திய சரித்திரத்தில் புகழ் பெற்று விளங்கும் வீர சிவாசி மன்னனது தம்பியாகிய எக்கோசி என்பவன் தஞ்சையில் மராட்டியர் ஆட்சியை நிலை பெறுத்தினான். தஞ்சை நாட்டிலுள்ள எக்கோசி மகாராசபுரம் என்னும் ஊர் அவன் பெயரால் இன்றும் நிலவுகின்றது. எக்கோசியின் மகன் சரபோசி. அவன் பெயர் தஞ்சையிலுள்ள சரபோசிராசபுரம் என்னும் ஊர்ப் பெயரில் விளங்குகின்றது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பட்டம் எய்திய துளசி மன்னன் பெயரும் சில ஊர்ப்பெயர்களில் அமைந்துள்ளது. துளசாபுரம், துளசேந்தி புரம், துளசேந்திரபுரம் என்ற மூன்று ஊர்கள் தஞ்சை நாட்டிலே காணப்படுகின்றன.
தஞ்சையில் மராட்டிய மன்னருக்குக் கண்போல் விளங்கிய அமைச்சர் பெயரும் ஊர்ப் பெயராக வழங்குகின்றது. பாவாசி என்பவன் அத்தகைய அமைச்சர்களில் ஒருவன். தஞ்சை நாட்டில் பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள வாவாசிக் கோட்டை என்னும் ஊரின் பெயர் அவன் பெயரே ஆகும். மானோசி என்பவன் மற்றோர் அமைச்சன். மானோசியப்பச் சாவடி என்னும் இடம் அவன் பெயரால் நிலவுகின்றது.
விசய நகர மன்னர்
விசய நகர மன்னருள் பல்லாற்றானும் தலை சிறந்தவன் கிருட்டிண தேவராயன். இம் மன்னன் பெருமையை,
“படைமயக் குற்றபோதும் படைமடம் ஒன்றி லாதான்
மடைசெறி கடகத் தோளான் மதிக்குடை மன்னர் மன்னன்.”
என்று ஒரு தமிழ்க் கவிஞர் பாடிப் போந்தார்.117 மாற்றாரை வென்று மாபெரும் புகழ்பெற்று வாழ்ந்த கிருட்டிண தேவன் கும்பகோணத்தில் நிகழ்ந்த மகாமக விழாவிற்குச் செல்லும் பொன்னேரி வட்டத்திலுள்ள அரகண்டபுரம் என்னும் ஊரிலே தங்கினான். அங்கு அரிதாசர் என்று பெயர் பெற்ற பரம வைணவர் ஒருவர் இருந்தார். அவர் கனவிலே பெருமாள் அறிவித்த வண்ணம் கிருட்டிணதேவராயன் அவ்வூரிலே திருமால் கோயில் ஒன்று கட்டுவித்தான். அது வேதநாராயணன் கோயிலென இன்றும் விளங்குகின்றது. அக் கோயிலுக்கு வேந்தன் அளித்த நிவந்தங்கள் கோபுரத்திற் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று ஆரிய வேதமும், திராவிட வேதமும் ஓதுவார்க்கு ஏற்படுத்திய நன்கொடையாகும். கோயிற் காரியங்களை எல்லாம் மன்னன் அரிதாசரிடம் ஒப்புவித்தான்; பெருமாள் அருளைப் பெறுவதற்குக் காரணமாக இருந்த அரகண்ட புரத்தை என்றும் நினைத்து இன்புறும் வண்ணம் நாகலாம்மாள் என்னும் தன் தாயின் பெயரை அவ்வூருக்கு இட்டான். அன்று தொட்டு அகண்டபுரம் என்னும் பழம்பெயர் மாறி நாகலாபுரம் என்ற புதுப் பெயர் வழங்கலாயிற்று.118
பொன்னேரி வட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் என்னும் ஊரின் வரலாறும் உணரத்தக்கதாகும். ஆதியில் கூவம் என்பது அதன் பெயர். குன்றூர் நாட்டுக் கூவம் என்பது சாசன வாசகம். விசய நகர மன்னனாகிய அச்சுதராயன் அங்கு நரசிங்கப் பெருமாளுக்கு ஒரு கோயில் கட்டுவித்தான்; அவ்வளவில் அமையாது நரச நாயக்கன் என்னும் தன் தந்தையின் பெயர் விளங்குமாறு நரச நாயகபுரம் என்று அவ்வூருக்குப் பெயரிட்டான். ஆயினும் பெருமாள் நாமத்தையே பெரிதும் பேசக் கருதிய பொது மக்கள் நரச நாயகபுரத்தை நரசிங்கபுரமாக்கி விட்டனர்.119
(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை)
ஊரும் பேரும்
அடிக்குறிப்பு
116. 380 / 1923; செ.க.அ., பக்.30
117. பெருந்தொகை, 1243,
118. 628 / 1904.
119. செ.மா.க., பக்கங்கள் 400-401.
Leave a Reply