(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 3 தொடர்ச்சி)

ஊரும் பேரும் – 4

நாவல்

நாவல்‌ என்பது ஓர்‌ ஊரின்‌ பெயர்‌. தேவாரம்‌ பாடிய மூவருள்‌ ஒருவராகிய சுந்தரர்‌ அவ்வூரிலே பிறந்தருளினார்‌. ‘அருமறை நாவல்‌ ஆதி சைவன்‌ என்று பெரிய புராணம்‌ கூறுமாற்றால்‌ அவர்‌ பிறந்த ஊரும்‌ குலமும்‌ விளங்கும்‌. அந்நாவல்‌, சுந்தரர்‌ தோன்றிய பெருமையால்‌ திருநாவல்‌ ஆயிற்று. ஈசனால்‌ ஆட்‌ கொள்ளப்பெற்ற சுந்தரர்‌ அவரடியவராகவும்‌, தோழராகவும்‌ சிறந்து வாழ்ந்த நலத்தினை அறிந்த பிற்காலத்தார்‌ அவர்‌ பிறந்த ஊரைத்‌ திருநாவல்‌ நல்லூர்‌ என்று அழைப்பாராயினர்‌. நாளடைவில் அப்பெயர்‌ திரிந்து திருநாமநல்லூர்‌ ஆயிற்று.41

புலியூர்

கெடில நதியின்‌ தென்கரையில்‌ பாதிரி மரங்கள்‌ நிறைந்த புலியூர்‌, திருப்பாதிரிப்புலியூர்‌ என்று பெயர்‌ பெற்றது. விருத்தாசலத்துக்குத்‌ தெற்கே மற்றொரு புலியூர்‌ உண்டு. அதனை எருக்கத்தம்புலியூர்‌ என்று தேவார ஆசிரியர்கள்‌ போற்றியுள்ளார்கள்‌. அத்தம்‌ என்பது காடு.எனவே, எருக்கத்தம்‌ என்பது எருக்கங்காடாகும்‌. எருக்கஞ்‌ செடிகள்‌ நெருக்கமாக நிறைந்திருந்த காட்டில்‌ எழுந்த ஊர்‌ எருக்கத்தம்புலியூர்‌ என்று அழைக்கப்‌ பெற்றது. சிவபெருமானுக்கு இனிய வெள்ளெருக்கு இன்னும்‌ அவ்வூர்க்‌கோவிலின்‌ மூலத்தானத்தருகே விளங்குகின்றது. இக்‌ காலத்தில்‌ அவ்வூர்‌ இராசேந்திரப்‌ பட்டணம்‌ என வழங்கும்‌.

பாடி

முல்லை நிலத்திலே தோன்றும்‌ ஊர்கள்‌ பெரும்பாலும்‌ பாடி என்று பெயர்‌ பெறும்‌.42 திருத்தொண்டராகிய சண்டேசுரர்‌ பசுக்களை மேய்த்து,  ஈசனுக்குப்‌ பூசனை புரிந்த இடம்‌ திருஆப்பாடி என்று தேவாரம்‌ கூறுகின்றது.43 கண்ணன்‌ பிறந்து வளர்ந்த கோகுலத்தை ஆயர்பாடி என்று தமிழ்‌ நூல்கள்‌ குறிக்கின்றன.44 வட ஆர்க்காட்டில்‌ ஆதியில்‌ வேலப்பாடி என்னும்‌ குடியிருப்பு உண்டாயிற்று. வேல மரங்கள்‌ நிறைந்த காட்டில்‌ எழுந்த காரணத்தால்‌ அது வேலப்பாடி என்று பெயர்‌ பெற்றதென்பர்‌. நாளடைவில்‌ காடு நாடாயிற்று.

வேலப்பாடியின்‌ அருகே வேலூர்‌ தோன்றிற்று. கோட்டை கொத்தளங்களையுடையதாய்‌ வேலூர் சிறப்புற்றபோது ஆதியில்‌ உண்டாகிய வேலப்பாடி அதன்‌ அங்கமாய்‌ அமைந்துவிட்டது.45 தொண்டைநாட்டுப்‌பாடல்‌ பெற்ற ஊராகிய திருவலிதாயம்‌ இப்பொழுது பாடியென்றே அழைக்கப்படுகின்றது.46

பட்டி

பட்டி என்னும்‌ சொல்லும்‌ முல்லை நிலத்து ஊர்களைக்‌ குறிக்கும்‌ என்பர்‌. தமிழ்நாடு முழுதும் பட்டிகள்‌ காணப்படினும்‌ பாண்டி நாட்டிலேயே அவை மிகுதியாக உள்ளன. கோவிற்பட்டி முதலிய ஆயிரக்கணக்கான பட்டிகள்‌ தென்னாட்டில்‌ உண்டு.

மந்தை

ஆடு மாடுகள்‌ கூட்டமாகத்‌ தங்குமிடம்‌ மந்தை எனப்படும்‌. வட ஆர்க்காட்டில்‌ வெண்‌ மந்தை, புஞ்சைமந்தை முதலிய ஊர்கள்‌ உள்ளன.47 நீலகிரியில்‌ தோடர்‌ எனும்‌ வகுப்பார்‌ குடியிருக்கும்‌ இடத்திற்கு மந்து என்பது பெயர்‌.48 மாடு மேய்த்தலே தொழிலாகக்‌ கொண்ட தோடர்‌ உண்டாக்கிய ஊர்களிற்‌ சிறந்தது ஒத்தக்க மந்து என்பதாகும்‌. அப்‌ பெயர்‌ ஆங்கில மொழியில்‌ ஒட்டகமண்டு எனத்‌ திரிந்தும்‌, ஊட்டி எனக்‌ குறுகியும்‌ வழங்கி வருகின்றது. ஒத்தைக்கல்‌ மந்தை என்பதே இவ்வாறு சிதைந்து வழங்குவதாகத்‌ தெரிகின்றது.

குறிப்புகள்:

41. திருநாம  நல்லூர்‌ பழைய திருநாவலூரே யென்பது சாசனத்தால்‌ விளங்கும்‌. 360/1902. 

42. “புறவம்‌ புறம்பணை புறவணி முல்லை,  அந்நிலத்‌

தூர்ப்பெயர்‌ பாடி யென்ப” -பிங்கல நிகண்டு

43. “சண்டியார்க்கு அருள்கள்‌ செய்த தலைவர்‌ ஆப்பாடியாரே” என்பது திருநாவுக்கரசர்‌ தேவாரம்‌ – திருவாபாடிப்‌ பதிகம்‌, 4.

44, “ஆயர்பாடியின்‌ அசோதைபெற்‌ றெடுத்த பூவைப்‌

புதுமலர்‌ வண்ணன்‌ கொல்லோ” – சிலப்பதிகாரம்‌, கொலைக்களக்‌ காதை, 46-47.

45. வேலப்பாடி வேலூர்க்‌ கோட்டைக்குத்‌ தென்‌ கிழக்கே இரண்டு கல் தூரத்தில்‌ உள்ளது.

46. 221/1910. 

47, மாட்டுக்‌ கொட்டிலைக்‌ குறிக்கும்‌ தொழு என்னும்‌ சொல்‌ சில ஊர்ப்பெயர்களில்‌ அமைந்துள்ளது: மூங்கில்‌ தொழு, வெட்டியான்‌ தொழு முதலிய ஊர்ப்பெயர்கள்‌. இதற்குச்‌ சான்றாகும்‌. 

48. எருமை மாடுகளே தோடரது செல்வம்‌. ஆதலால்‌, மந்தை என்பது அவர்‌ வசிக்கும்‌ ஊருக்குப்‌ பொருத்தமான பெயராகும்‌. இலக்கியத்தில்‌ மன்று , என்னும்‌ சொல்‌ பசு

மந்தையைக்‌ குறிக்கும்‌. அச்‌ சொல்‌ மந்து எனத்‌ தோடர்‌ மொழியிலும்‌, மந்தையெனப்‌ பேச்சுத்‌ தமிழிலும்‌ மருவி வழங்குவதாகத்‌ தெரிகின்றது.

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்