(ஊரும்பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 14 தொடர்ச்சி)

ஊரும் பேரும் 15

தொண்டை நாட்டில் ஓர் ஊர் பில வாயில் என்று பெயர் பெற்றிருந்தது. நாளடைவில், ஊர் என்னும் சொல் அப் பெயரோடு சேர்ந்து பிலவாயிலூர் என்று ஆயிற்று. அப்பெயர் குறுகி வாயிலூர் என வழங்கிற்று. இந் நாளில் அது வயலூர் எனச் சிதைந்தது. செங்கற்பட்டைச் சேர்ந்த திருவள்ளுர் வட்டத்தில் அவ்வூர் உள்ளது.9

முற்றம்

வாயிலைப் போலவே முற்றம் என்ற சொல்லும் சில ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கக் காணலாம். சங்க இலக்கியத்தில் குளமுற்றம் என்ற ஊர் குறிக்கப்பட்டிருக்கிறது. கோக்குள முற்றத்தைச் சேர்ந்த புலவர் ஒருவர் கோக்குள முற்றனார் என்று பெயர் பெற்றார். கும்பகோணத்துக்கு நான்கு கல் தூரத்தில் சத்தி முற்றம் என்னும் ஊர் உள்ளது. பழமை வாய்ந்த சத்தி முற்றத்தில் தோன்றிய புலவர் ஒருவர் நாரையைக் குறித்து நல்லதொரு பாட்டிசைத்துத் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றார். அவரைச் சத்திமுற்றப் புலவர் என்று தமிழகம் பாராட்டுகின்றது.

குடி

குடி என்னும் சொல் ஊர்ப் பெயர்களில் அமைந்து குடியிருப்பை உணர்த்துவதாகும். உறவு முறையுடைய பல குடும்பத்தார் ஒரு குடியினராகக் கருதப்படுவர். இத்தகைய குடியினர் சேர்ந்து வாழுமிடம் குடியிருப்பு என்றும் குடி என்றும் சொல்லப்படும். தஞ்சை நாட்டில் . பேரளத்துக் கருகே சிறுகுடி என்னும் ஊர் உள்ளது.10 இளையான் குடியிற் பிறந்த மாறன் என்ற திருத்தொண்டர் இளையான்குடி மாறன் என்று பெரிய புராணத்தில் பேசப்படுகின்றார். மற்றொரு சிவனடியா ராகிய சிறுத்தொண்டர் பிறந்த ஊர் செங்காட்டங்குடியாகும். இன்னும், தேவாரத்தில் கற்குடி, கருக்குடி, விற்குடி, வேள்விக்குடி முதலிய பல குடியிருப்புகள் பாடல் பெற்றுள்ளன. நெல்லை நாட்டில் திருக்குறுங்குடி என்னும் வைணவத் திருப்பதி ஒன்று உண்டு. திராவிட மொழி நூலின் தந்தையென்று புகழப்படுகின்ற காலுடுவெல் ஐயர் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக அரும்பணி செய்த இடம் இடையன்குடியாகும்.

இருப்பு, இருக்கை

இருப்பு, இருக்கை முதலிய சொற்களும், சிறுபான்மையாக ஊர்ப்பெயர்களில் காணப்படுகின்றன. தஞ்சை நாட்டில், புன்னை இருப்பு, இருப்பு, வேட்டைக்காரன் இருப்பு முதலிய இருக்கை குடியிருப்புகள் உண்டு. தொண்டை – நாட்டில் உள்ள ஓரிக்கை என்னும் ஊரின் பெயர் ஓரிர விருக்கை என்பதன் சிதைவென்று சொல்லப்படுகின்றது.11

வாழ்வு, வாழ்க்கை

வாழ்வு, வாழ்க்கை என்னும் சொற்களும் குடியிருப்பைக் குறிப்பன வாகும். பாண்டி நாட்டிலுள்ள பழனி மலைக்கு வழங்கும் பல பெயர்களில் சித்தன் வாழ்வு என்பதும் ஒன்று. தஞ்சை நாட்டில் பாபநாச வட்டத்தில் சித்தன் வாழுர் என்னும் ஊர் இருக்கிறது. இன்னும், எட்டி வாழ்க்கை முதலிய ஊர்ப் பெயர்களில் வாழ்க்கை அமைந்திருக்கக் காணலாம்.

சேரி

பல குடிகள் சேர்ந்து வாழ்ந்த இடம் சேரி என்று பெயர் பெற்றது. பள்ளர் வாழுமிடம் பட்சேரி எனப்படும். பறையர் வாழும் சேரி பறைச்சேரி, ஆயர் வாழுமிடம் ஆயர் சேரி; பிராமணர் வாழுமிடம் பார்ப்பனச் சேரி.12 எனவே, சேரி என்னும் சொல் ஒரு குலத்தார் சேர்ந்திருந்து வாழும் இடத்தினை முற்காலத்தில் குறிப்பதாயிற்று. சோழ மண்டலக் கரையில் புதிதாகத் தோன்றிய சேரி புதுச்சேரி என்று பெயர் பெற்றது. அவ்வூர்ப் பெயரை ஐரோப்பியர் பாண்டிச்சேரியாகத் திரித்துவிட்டனர். இக் காலத்தில் சேரி என்னும் சொல் இழிந்த வகுப்பினராக எண்ணப்படுகின்ற பள்ளர், பறையர் முதலியோர் வசிக்கும் இடங்களைக் குறிக்கின்றது. ஒவ்வோர் ஊரிலும் சேரி உண்டு. அஃது ஊரின் புறத்தே தாழ்ந்த வகுப்பார்க்கு உரியதாக அமைந்திருக்கின்றது.

ஊரும் தொழிலும்

பயிர்த் தொழிலே பழந் தமிழ் நாட்டில் பழுதற்ற தொழிலாகக் கருதப்பட்டதெனினும், கைத்தொழிலும் பல இடங்களிற் சிறந்திருந்ததாகத் தெரிகின்றது. நெய்யும் தொழில் தமிழ் நாட்டுப் பழந் தொழில்களில் ஒன்று. பட்டாலும், பருத்தி நூலாலும் கம்பளத்தாலும் நேர்த்தியான ஆடை நெய்ய வல்ல குலத்தார் காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்தனர் என்று. சிலப்பதிகாரம் கூறுகின்றது.13 இன்னோரன்ன தொழில்கள் நிகழ்ந்த இடங்களைச் சில ஊர்ப்பெயர்களால் அறியலாம்.

கூறை என்னும் சொல் ஆடையைக் குறிக்கும். கூறை நெய்யும் தொழில் மிகுதியாக நடைபெற்ற நாடு கூறை நாடு என்று பெயர் பெற்றது. அந்நாடு இப்பொழுது ஒரு சிற்றூராகக் கொரநாடு என்னும் பெயர் கொண்டு மாயவரத்தின் ஒருசார் அமைந்துள்ளது. நெசவுத் தொழிலைச் செய்யும் வகுப்பார் சாலியர் எனப்படுவர். அன்னார் சிறப்புற்று வாழ்ந்த இடங்கள் ஊர்ப் பெயர்களால் விளங்கும். தஞ்சாவூருக்கு அருகே சாலிய மங்கலம் என்னும் ஊர் உள்ளது. அங்கு நெசவுத் தொழில் இன்றும் நடை பெறுகின்றது.

பேட்டை

இங்ஙனம், தொழில்களால் சிறப்புறும் ஊர்கள் பேட்டை எனப்படும். சேலத்தின் மேல்பாகத்தில் செவ்வாய்ப் பேட்டை என்னும் சிற்றூர் உள்ளது. வாரந்தோறும்  செவ்வாய்க்கிழமையில் சந்தை கூடும் இடமாதலால், அஃது அப்பெயர் பெற்றது என்பர். திருநெல்வேலிக்கு மேற்கே பேட்டை என்ற பெயருடைய ஓர் ஊர் உண்டு. பலவகையான பட்டறைகள் அங்கு இன்றும் காணப்படும்.

ஐரோப்பிய இனத்தவருள் போர்ச்சுகீசியரைத் தமிழ் நாட்டார் பறங்கியர் என்று அழைத்தனர். ஆங்கில வருத்தகக் கம்பெனியார் இந் நாட்டில் ஆதிக்கம் பெறுவதற்கு முன்னமே பறங்கியர் வாணிகம் செய்து வளமுற்றிருந் தனர். அவர்களால் திருத்தப்பட்ட ஊர்களில் ஒன்று தென்னார்க்காட்டிலுள்ள பறங்கிப் பேட்டையாகும். சிங்கப்பூர், சிங்களம் முதலிய நாடுகளோடு கடல் வழியாக வருத்தகம் செய்யும் சோழ மண்டலத் துறைமுகங்களில் பறங்கிப்பேட்டையும் ஒன்று. ஆடை நெய்தலும், பாய் முடைதலும் அங்கு நடைபெறும் கைத்தொழில்கள்.

சென்னை மாநகரத்தில் சில பேட்டைகள் உண்டு. தண்டையார் பேட்டை, வண்ணார் பேட்டை, சிந்தாதிரிப் பேட்டை முதலிய இடங்கள் கைத்தொழிலின் சிறப்பினால் பேட்டை என்று பெயர் பெற்றன. தண்டையார்ப் பேட்டையில் இப்பொழுதும் நெய்யுந்தொழில் நடந்து வருகிறது. கம்பெனியார் காலத்தில் சில குறிப்பிட்ட ஆடை களைக் கைத்தறியின் மூலமாகச் செய்வதற்கென்று ஏற்படுத்தப்பட்ட ஊர் சிந்தாதிரிப்பேட்டையாகும்:

தஞ்சை நாட்டிலுள்ள அய்யம் பேட்டையும், அம்மா பேட்டையும் நெசவுத் தொழிலாளர் நிறைந்த ஊர்கள். அய்யம் பேட்டையில் நூலாடையோடு பட்டாடையும், பாயும் செய்யப்படுகின்றன. .

அடிக் குறிப்பு

9. 547 /1920.

10. இந்திர விழஆரெடுத்த காதை 16 – 17.

11. History of Madras – C. S. Srinivasachariar, P. 149

12. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கருநாடகத்தின் நவாபாக இருந்த முகமது அலி, வாலாசா என்றும் வழங்கப்பெற்றார். மேற்படி ப. 180.

13, 165 / 1903.

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்