(ஊரும்பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 13 தொடர்ச்சி)

ஊரும் பேரும் – 14

3. குடியும் படையும்

குடியும் படையும் நாடாளும் அரசனுக் குரிய அங்கங்கள் என்று திருவள்ளுவர் கூறியருளினார்1. ஆதியில் தமிழகத்தில் எழுந்த குடியிருப்பும் அதனைப் பாதுகாக்க எழுந்த படையிருப்பும் ஊர்ப் பெயர்களால் ஒருவாறு விளங்கும்.

இக் காலத்தில், இல் என்பது பெரும்பாலும் மக்கள் வாழும் வீட்டைக் குறிப்பதாகும். ஆயினும், அச்சொல் சில பழமையான ஊர்ப் பெயர்களிற் சேர்ந்திருக்கின்றது. திருச்சி நாட்டிலுள்ள ஊர் ஒன்று, அன்பில் இல் என்னும் அழகிய பெயரைப் பெற்றது.2 அன்பின் இருப்பிடம் ஆகிய அவ்வூர் இப்பொழுது கீழ் அம்பில் என்று வழங்கும்4. தேவாரப் பாடல் பெற்ற ஊர்களில் ஒன்று திருப்பாச்சில். அவ்வூர் இப்பொழுது திருவாசி என்னும் பெயரோடு சிரீரங்கத்தின் அருகே உள்ளது.

சில பழம் பெயர்களில் அமைந்த இல் என்னும் சொல், இக் காலத்தில் ஊர் என்று மாறியிருக்கக் காணலாம். ஆதியில் திருச்செந்தில் என வழங்கிய ஊர் இப்பொழுது திருச்செந்தூர் என்று அழைக்கப்படுகின்றது. தேவாரத்திலும் சாசனத்திலும் மைலாப்பில் என்று கூறப்படும் ஊர் பிற்காலத்தில் மைலாப்பூர் ஆயிற்று3. இன்னும் இடை மருதில் என்றும், புடை மருதில் என்றும் பெயர் பெற்ற ஊர்கள் இப்பொழுது முறையே திருவிடை மருதூர் ஆகவும், திருப்புடை மருதூர் ஆகவும் விளங்குகின்றன. தொண்ட்ை நாட்டு இருபத்து நான்கு கோட்டங்களில் ஒன்றாகிய மணவிற் கோட்டத்தின் தலைநகர் மணவில் என்பதாகும். அஃது இப்பொழுது மணவூர் என மாறியுள்ளது.

இன்னும் இல் என்னும் பெயருடைய சில ஊர்கள், பண்டைப் புலவர்கள் பெயரோடு இணைத்துச் சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றன. அரிசில் என்னும் ஊரிற் பிறந்த புலவர் அரிசில் கிழார் என்றும், அஞ்சில் என்னும் ஊரிலே தோன்றியவர் அஞ்சில் ஆந்தையார் என்றும், பொருந்தில் என்ற ஊரைச் சார்ந்தவர் பொருந்தில் இளங்கீரனார் என்றும், கள்ளில் என்ற ஊரிற் பிறந்தவர் கள்ளில் ஆத்திரைய ரென்றும் பழைய நூல்களிற் குறிக்கப்படுகின்றனர்.

அகம்

அகம் என்னும் சொல்லும் சில ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கின்றது. அச் சொல்லும் முதலில் வீட்டுக்கு அமைந்து, அப்பால் வீடுகளையுடைய ஊரைக் குறித்தது போலும், திரு ஏரகம் என்பது ஒர் ஊரின் பெயர். அது முருகனது படை வீடுகளில் ஒன்றாகும். பாண்டி நாட்டில் வைகை யாற்றங்கரையில் திரு ஏடகம் என்னும் ஊர் உள்ளது. இராமநாதபுரத்தில் மருதகம், கையகம் முதலிய பெயருடைய ஊர்கள் காணப்படுகின்றன. திருச்சி நாட்டில் கல்லகம் என்பது ஓர் ஊரின் பெயர்.

உள்

உள் என்னும் சொல் மிக அரிதாக ஊர்ப் பெயரிலே காணப்படும். சென்னை மாநகர்க்கு இருபத்தைந்து மைல் தூரத்தில் வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகிய எவ்வுள் என்னும் ஊர் உள்ளது. திருமங்கை யாழ்வாரும் திருமழிசை யாழ்வாரும் அப்பதியைப் பாடியுள்ளனர். நாளடைவில் திரு எவ்வுள் என்றும், திரு எவ்வுளுர் என்றும் அழைக்கப்பெற்ற அவ்வூர், இக்காலத்தில் திருவள்ளுர் என வழங்குகின்றது.

வாயில்

வாயில் என்பது இல்லின்வாய்-வீட்டின்வாய்-என்று பொருள்படும். வாயிலும் சில ஊர்ப் பெயர்களில் வழங்கக் காணலாம். கோச் செங்கட் சோழன் தன்னோடு போர் செய்து தோல்வியுற்ற சேர மன்னனைக் குடவாயிற் கோட்டம் என்னும் சிறைக் கோட்டத்தில் அடைத்தான் என்று சங்க இலக்கியம் கூறுகின்றது. குடவாயில் என்னும் பாடல் பெற்ற பழம்பதி தஞ்சை நாட்டில் உள்ளது. சேர நாட்டை ஆண்ட செங்குட்டுவன் தம்பியாகிய இளங்கோ என்னும் செந்தமிழ்ச் செல்வர் துறவறம் பூண்டு, வஞ்சி மாநகரின் குணவாயிற் கோட்டத்தில் அமர்ந்து அருந்தவம் புரிந்தார் என்று அவர் வரலாற்றால் அறிகின்றோம். அக் குணவாயில் பிற்காலத்தில் ஓர் ஊராயிற்று.5

தஞ்சை நாட்டில் மேலவாசல் என்னும் ஓர் ஊர் மன்னார்குடிக் கருகே அமைந்திருக்கின்றது. சேலம் நாட்டில் தலைவாசல் என்னும் ஊர் காணப்படுகின்றது. புதுக்கோட்டைச் சாசனங்களில் பெருவாயில் நாடு, சிறுவாயில் நாடு, வடவாயில் நாடு என்னும் ஊர்ப் பெயர்கள், வருகின்றன. அவற்றுள் பெருவாயில் நாடு இக் காலத்தில் பெருமாநாடு என வழங்குகின்ற தென்பர். இன்னும் அன்ன வாயில், புன்னை வாயில், காஞ்சி வாயில் முதலிய ஊர்ப்பெயர்கள் கல்வெட்டுகளிலே காணப்படும்.

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்

அடிக் குறிப்பு

1. “படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு” – திருக்குறள்:

– இறைமாட்சி, 1

2. “அன்பிலானை அம்மானை அள்ளூறிய அன்பினால் நினைத்தார் அறிந்தார்களே

– திருநாவுக்கரசர், அன்பில் ஆலந்துறைப் பதிகம், 3.

3. சாசனங்களில் மயிலார்ப்பில் எனவும், மயிலாப்பில் எனவும் இவ்வூர்ப் பெயர் காணப்படுகின்றது. 333 / 1911, 355 / 1911.

4. புதுக்கோட்டை நாட்டிலுள்ள அழும்பில் என்னும் ஊர் அம்புக் கோயிலெனவும், சோழ நாட்டிலுள்ள வெண்ணில், கோயில் வெண்ணி யெனவும் இக்காலத்தில் வழங்கும். 223 / 1914; H. M. P. P. 1294. ,

5. சிலப்பதிகாரம், 1, அடியார்க்கு நல்லார் உரை,

6. 363 / 1908.

7. குறிஞ்சி நிலத்துருக்கும் சிறுகுடி யென்ற பெயர் உண்டு.

“குறும்பொறை, சீறுர், சிறுகுடி, குறிஞ்சியூர் : – பிங்கல நிகண்டு

8. 17 /1893. –