தமிழகம்

ஊரும் பேரும்

முகவுரை

உலகை ஒழுங்கு முறையில்‌ இனிது நடாத்தி வரும்‌  அமைப்புகள்‌ பலப்பல. அவற்றுள் உயிர்ப்பாய்த்‌ திகழ்வது ஒன்று. அது நூல்‌ என்பது.

நூலின்‌ உள்ளுறை யாது? அறிவு. ஆதலின்‌, நூல் அமைப்பை அறிவுச்‌ சுரங்கம்‌ என்று கூறலாம்‌.

நூல்கள்‌ பல திறம்‌. பல திறத்துள்‌ இரவியும் தனித்தும்‌ நிற்பது வரலாறு. வரலாறு வான்‌ போன்றது. வான்‌ மற்றப்‌ பூதங்களிற்‌ கலந்தும்‌, அவற்றைக்‌ கடந்து தனித்தும்‌ நிற்பதன்றோ?

“ஊரும்‌ பேரும்‌” என்னும்‌ இந்‌ நூல்‌ வரலாற்றின்பாற்பட்டது. இவ்‌ வரலாறு தமிழ்‌ நாட்டின்‌ ஊரையும்‌ பேரையும்‌ விளக்குங்‌ கலங்கரை.

“ஊரும்‌ பேரும்‌’ என்னுந்‌ தலைப்பு விழுமியது. அது ஆழ்ந்த பொருண்மை யுடையது; சுரங்கம்‌ போன்றது.

“முழுமுதற்‌ பொருள்‌ ஊரில்லாதது – பேரில்லாதது’ என்று ஆன்றோர்‌ பலர்‌ . அருளிப்‌ போந்தனர்‌. ஊர்‌ பேர்‌ இல்லாத முழுமுதற்கு வழிபாடு நிகழ்ந்து வருகிறதா? இல்லையா? அதற்கு வழிபாடு நிகழ்ந்தே வருகிறது, எப்படி? ஊர்‌ பேராலேயே வழிபாடு நிகழ்ந்து வருகிறது. *ஒரு நாமம்‌ ஓருருவம்‌ ஒன்றுமில்லாற்கு ஆயினும்‌ திருநாமம்‌ பாடி நாம்‌ தெள்ளேணங்‌ கொட்டாமோ” என வரூஉந்‌ திருவாசகம்‌ ஈண்டுக்‌ கருதற்பாலது. ஊரும்‌ பேரும்‌ இறைக்குந்‌ தேவையாதலை ஓர்க. ஊர்‌ பேர்‌ மாண்பே மாண்பு!

நாம்‌ வாழும்‌ இவ்‌ வுலகம்‌, இற்றைக்குச்‌ சுமார்‌ இருநூறு கோடி ஆண்டுக்கு முன்னர்‌, பெரிய செஞ்ஞாயிற்றினின்றும்‌ பிளவுண்டு வீழ்ந்த ஒரு சிநிய துண்டு. வீழ்ந்த துண்டு, முதல்‌ ஒரு நூறு கோடி ஆண்டுவரை அனற்பிழம்பாய்க்‌ கொதிப்புற்றுக்‌ கிடந்தது. பின்னே அது படிப்படியே தணியத்‌ தொடங்கியது. அனல்‌ தணியத்‌ தணிய நிலவகைகள்‌, உயிர்‌ வகைகள்‌ முதலியன தோன்றலாயின.

நிலமும்‌ உயிருந்‌ தோன்றியவாறே பிண்டமாய்க்‌ கிடந்திருப்பின்‌, அவை என்றோ பட்டுப்‌ போயிருக்கும்‌. அவை படாமல்‌ வாழ்‌ வடைந்து வருதல்‌ கண்கூடு. காரணம்‌ என்னை? காரணம்‌ பலபடக்‌ கழறலாம்‌. ஈண்டைக்கு ஒன்றைச்‌ சிறப்பாகக்‌ குறித்தல்‌ நலம்‌. அது, நிலமும்‌ உயிரும்‌, ‘ஊரும்‌ பேரும்‌’ பெற்றமை என்க.

ஊரும்‌ பேரும்‌ : உலகை வாழவைக்கும்‌ பெற்றிமையுடையன என்பதை உன்னுக.

இப்‌ பரந்த அழகிய உலகை என்னுள்ளே தொடர்பு படுத்துங்‌ கருவி ஒன்றுள்ளது. அஃது உள்ளம்‌. உள்ளம்‌ ஓர்‌ அகக்கரணம்‌. அது, புலன்கள்‌ வழியே தன்‌ கடனை ஆற்றுகிறது. ஊர்‌ பேர்‌ இல்வழி உள்ளம்‌ என்‌ செய்யும்‌? அஃது எதனுடன்‌ தொடர்பு  கொள்ளும்‌? எக்‌ கடனை ஆற்றும்‌? ஊரும்‌ பேரூம்‌ இல்லையேல்‌ உள்ளம்‌ உறங்கியே போகும்‌. ஊரும்‌ பேரும்‌ உள்ள நிகழ்ச்சிக்கு இன்றியமையாதன.

வாழ்க்கைக்கு பல துறைகள்‌ தேவை. அவற்றுள்‌ ஆவி போன்றவை ஊரும்‌ பேரும்‌. ஊரும்‌ பேரும்‌ வாழ்க்கையை இயக்கி வளர்ப்பன என்று கூறல்‌ மிகையாகாது. ஊர்‌ பேரால்‌ உலகம்‌ இயங்கல்‌ வெள்ளிடைமலை. ஊர்‌ பேரே உலகம்‌: வாழ்க்கை; எல்லாம்‌ எல்லாம்‌.

இன்னோரன்ன சிறப்புகள்‌ பல வாய்ந்த ‘ஊரும்‌ பேரும்’ இந்‌ நூலுக்குத்‌ தலைப்பாய்‌ அமைந்தது. நூலின்‌ பொருண்மையை விளக்கத்‌ தலைப்பொன்றே சாலும்‌. நூலுக்கேற்ற தலைப்பு; தலைப்புக்கேற்ற நூல்‌.

சில நாடுகளின்‌ -ஊரும்‌ பேரும்‌ அடங்கிய ஆராய்ச்சி நூல்கள்‌ வெளி வந்து உலவுகின்றன. அத்‌ தகைய உலாவைத்‌ தமிழ்‌ நாட்டிற்‌ காண்டல்‌ அருமையாயிருந்தது. அவ்வருமையைப்‌ போக்கும்‌ வாய்ப்பு அறிஞர்‌ சேதுப்‌ பிள்ளை அவர்கட்குக்‌ கிடைத்தது, தமிழ்‌ நாட்டின்‌ தவப்‌ பயனாகும்‌. தமிழ்‌ கொழிக்கும்‌

பொருநைக்கரையில்பிறந்து, தமிழ்‌ பொங்கும்‌ பொதிகைத்‌ தென்றலில்‌ வளர்ந்து, தமிழார்ந்த மனமொழிமெய்களைப்‌ பெற்றுத்‌ தமிழ்‌ வண்ணமாய்த்‌ தமிழ்‌ மொழியும்‌ ஒரு பெருங்‌ கொண்டலிடை உதித்த மின்னொளி இந்‌ நூல்., இதைத்‌ தமிழ்‌ நாட்டின்‌ தவப்பயன்‌ என்று சாற்றலாமன்றோ?

ஆசிரியர்‌, நிலம்‌-மலை-காடு-வயல்‌-ஆறு-கடல்‌-நாடு-நகரம்‌- குடி-படை-கோ-தேவு-தலம்‌ முதலியவற்றை அடியாகக்கொண்டு இந்‌ நூற்கண்‌ நிகழ்த்தியுள்ள ஊர்‌ பேர்‌ ஆராய்ச்சியும்‌, ஆங்காங்கே பொறித்துள்ள குறிப்புகளும்‌, பிறவும்‌ தமிழ்ச்‌ சரித்திர உலகுக்குப்‌ பெருவிருந்தாகும்‌ என்பதில்‌ ஐயமில்லை. தமிழ்‌ நாட்டில்‌ சில ஊர்ப்பேர்கள்‌ சிதைந்தும்‌ திரிந்தும்‌ மருவியும்‌ மாறியும்‌ தத்தம்‌ முதனிலையை இழந்துள்ளன. அவை மீண்டும்‌ பழைய நிலை எய்திப்‌ பண்புறுதற்கு இந்‌ நூல்‌ பெருந்துணை செய்தல்‌ ஒருதலை.

இந்‌ நூலுள்‌ பொலி தரும்‌ சில ஊர்ப்பேர்களின்‌ வரலாறு, சாம்பியும்‌ சோம்பியும்‌ நலிந்தும்‌ மெலிந்துங்கிடக்கும்‌ நம்‌ மக்கட்கு அமிழ்தாகிப்‌ புத்துயிர்‌ வழங்கல்‌ உறுதி. நூலின்‌ நடைக்கண்‌ நடம்புரியும்‌ பீடும்‌ மிடுக்கும்‌ வீறும்‌ நாட்டின்‌ கவலையை நீக்கி, அதன்மாட்டு வேட்கையை எழுப்பி, அதை ஊக்குவனவாம்‌.

“ஊரும்‌ பேரும்‌” என்னும்‌ இந்‌ நூல்‌ காலத்துக்கேற்றது என்று சுருங்கச்‌ சொல்லலாம்‌. இவ்‌ விழுமிய நூலைச்‌ செவ்விய முறையில்‌ யாத்து உதவிய ஆசிரியர்க்கு என்‌ வாழ்த்தும்‌ நன்றியும்‌ உரியனவாக. அவர்க்குத்‌ தமிழ்நாடு கடமைப்படுவதாக. இத்தகைய ப நூல்‌ பல, ஆசிரியர்பால்‌ . முகிழ்த்தல்‌ வேண்டுமென்று தமிழ்த்‌ தெய்வத்தை வழுத்துகிறேன்‌. தமிழ்‌ வாழ்க; தமிழ்‌ வெல்க!

சென்னை,                                      திரு. வி. ௧.

16-7-1946.

நன்றியுரை

சென்னைப்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ சார்பாக நடைபெறுகின்ற ஆராய்ச்சிப்‌ பத்திரிகையில்‌ தமிழகத்தில்‌ வழங்கும்‌ ஊர்ப்‌ “பெயர்களை வகை செய்து ஆறாண்டுகளுக்கு முன்னே நான்‌ ஒரு கட்டுரை எழுதினேன்‌. இந்‌ நூலுக்கு அதுவே அடிப்படையாகும்‌. “ஊரும்‌ பேரும்‌” உருப்படுதற்குப்‌ பலபடியாக உதவி புரிந்த நண்பர்‌ பலர்‌. சென்னைப்‌  பூங்கோயிற்‌ பள்ளித்‌ தமிழாசிரியர்‌ திரு. பா. சொக்கலிங்கனாரும்‌, பரலி சு. சண்முக சுந்தரனாரும்‌ கையெழுத்துப்படி செய்து தந்தனர்‌. சென்னைப்‌ பல்கலைக்‌ கழகத்துச்‌ சரித்திரப்‌ பேராசிரியர்‌ திரு. வி. இரா. இராமச்சந்திர தீட்சிதர்‌ அவர்கள்‌ இதன்‌ வரலாற்றுப்பகுதியைச்‌ சரிபார்த்து உதவினார்கள்‌. தமிழ்ப்‌ பெரியார்‌ திரு. வி. கல்யாணசுந்தர முதலியார்‌ அவர்கள்‌ முகவுரையளித்து அருளினார்கள்‌. சென்னைப்‌ பச்சையப்பன்‌ கல்லூரித்‌ தமிழாசிரியர்‌ வித்துவான்‌ சண்முக வேலனாரும்‌, பவல்‌ கல்லூரித்‌ தமிழாசிரியர்‌ வித்வான்‌ சுந்தரனாரும்‌ அச்சுப்‌ பிழை திருத்தி உதவினர்‌. புரசையன்பர்கள்‌ திரு. பரந்தாமனாரும்‌, சானகிராமனும்‌ பெயரகராதியில்‌ ஒரு பகுதியைத்‌ “தொகுத்து உதவினர்‌. அச்சு வேலையைக்‌ கண்ணுங்கருத்துமாய்க்‌ கவனித்துதவினர்‌ திரு. பழனியாரும்‌, நகராண்மைக்‌ கல்லூரித்‌ தமிழாசிரியர்‌ வித்துவான்‌ திரு. வடிவேலனாரும்‌. இராசன்‌ அச்சகத்தார்‌ பல வகையான நெருக்கடிக்‌ கிடையே இதனை விரைவில்‌ நன்றாக அச்சிட்டுத்‌ தந்தார்கள்‌. இவ்‌ வன்பர்கள்‌

அனைவருக்கும்‌ என்‌ மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

சென்னை,

30-8-1946 இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்

இரா.பி.சேது(ப்பிள்ளை)

(தொடரும்)