(ஊரும் பேரும் 43 : இரா.பி.சேது(ப்பிள்ளை): அட்டானமும் அம்பலமும் தொடர்ச்சி)

ஊரும் பேரும் 44

மாடமும் மயானமும்

    மாடம் என்னும் பெயர் அமைந்த இரண்டு திருக்கோயில்கள் தேவாரத்திற் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று கடந்தையென்னும் பெண்ணாகடத்தில் உள்ள தூங்கானை மாடம்,

      “கடந்தைத் தடங் கோயில் சேர்

      தூங்கானை மாடம் தொழுமின்கனே

என்று தேவாரம் அம் மாடத்தைப் போற்றுகின்றது. இன்னும், ஆக்கூரில் உள்ள சுயம்பு வடிவான ஈசன் திருக்கோவில் தான் தோன்றி மாடம் என்னும் பெயர் பெற்றது. முன்னாளில் அறத்தால் மேம்பட்டிருந்த ஊர்களில் ஆக்கூரும் ஒன்றென்பர். அங்குச் சிறப்புற்று வாழ்ந்த வேளாளரின் வள்ளன்மையைத் தேவாரத் திருப்பாட்டில் அமைத்துப் புகழ்ந்தார் திருஞானசம்பந்தர்.

  “வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும்

   தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே

என்பது அவர் வாக்கு. அங்குள்ள மாடக் கோயிலில், இயற்கை யுருவாக ஈசன் விளங்குதலால், தான் தோன்றி மாடம் என்பது திருக்கோயிலின் பெயராயிற்று.1

நாலூர்-மயானம்

    மயானம் என்னும் சுடுகாடும் ஈசனது கோயிலாகும். “கோயில் சுடுகாடு, கொல்புலித்தோல் நல்லாடை” என்று பாடினார் மாணிக்கவாசகர். “காடுடைய சுடலைப் பொடி  பூசி, என துள்ளங் கவர் கள்வன்” என்று ஈசன் மேனியில் விளங்கும்

வெண்ணீற்றின் பெருமையை விளக்கினார் திருஞான சம்பந்தர். இத் தகைய

சீர்மை வாய்ந்த மயானங்களில் மூன்று தேவாரத்திற் கூறப்பட்டுள்ளன.

அவை நாலூர் மயானம், கடவூர் மயானம், கச்சி மயானம் என்பன.

     “நல்லார் தொழுதேத்தும் நாலூர் மயானத்தைச்

     சொல்லா தவரெல்லாம் செல்லாதார் தொன்னெறிக்கே

என்று தேவாரம் கூறுமாற்றால் நாலூர் மயானத்தின் பெருமை நன்கு

விளங்கும். அம் மயானம் இப்பொழுது திருநாலூர் என்னும் ஊருக்கு ஒரு

மைல் தூரத்தில் உள்ளது; திருமெய்ஞ்ஞானம் என வழங்குகின்றது.

திருக்கடவூர்-மயானம்

     திருக்கடவூர் மயானம் மூவர் தேவாரமும் பெற்றது. அங்கமர்ந்த

இறைவன் திருநாமம் ‘பெருமானடிகள்’ என்று குறிக்கப்படுகின்றது.

     “கரிய மிடறும் உடையார் கடவூர்

     மயானம் அமர்ந்தார்

     பெரிய விடைமேல் வருவார் அவர்எம்

     பெருமான் அடிகளே

என்று பாடினார் திருஞான சம்பந்தர்.2 அம் மயானம் திருக்கடையூர் என வழங்கும் ஊருக்குக் கிழக்கே ஒரு கல் தூரத்தில் உள்ளது. திருமயானம் என்பது அதன் பெயர்.

கச்சி மயானம்

    காஞ்சி மாநகரில் அமைந்த சிவாலயங்களுள் கச்சி மயானமும் ஒன்றென்பது, “மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான்” என்னும் திருநாவுக்கரசர் திருப்பாசுரத்தால் விளங்கும். கொடுமை புரிந்த பண்டாசுரன் என்பவனைக் காஞ்சிபுரத்தில் வேள்வித் தீயில் இட்டு ஈசன் ஒழித்தார் என்றும், அன்று முதல் அவ்விடம் கச்சி மயானம் என்று பெயர் பெற்ற தென்றும் காஞ்சிப் புராணம் கூறுகின்றது.3

    “அண்ணுதற் கரிய அத்தீ அன்று தொட்டிலிங்க மாகிப்

    புண்ணிய மயான லிங்கம் எனப்பெயர் பொலிவுற் றன்றே

என்ற பாட்டு கச்சி மயானத்தின் வரலாற்றைக் காட்டுவதாகும்.

                அடிக் குறிப்பு

1. தான்தோன்றி என்பது தமிழ்ச்சொல்; சுயம்பு என்பது வடசொல்

2. “திருமால் பிரமன் இந்திரற்கும்

   தேவர் நாகர் தானவர்க்கும்

   பெருமான் கடவூர் மயானத்துப்

   பெரிய பெருமாள் அடிகளே – சுந்தரர் தேவாரம்

3. காஞ்சிப் புராணம்; கச்சி மயானப் படலம்,19.  

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்