(ஊரும் பேரும் 45 : இரா.பி.சேது(ப்பிள்ளை): தலமும் கோவிலும் தொடர்ச்சி)

ஊரும் பேரும் 46

கோயிலும் வாயிலும்

மாடக்கோயில்

    தமிழகத்தில் ஈசனார்க்குரிய கோயில்கள் எண்ணிறந்தன. அவற்றுள் மன்னரும் முனிவரும் எடுத்த கோயில்கள் பலவாகும். சோழ நாட்டை யாண்ட செங்கணான் என்னும் கோமகன் “எண் தோள் ஈசற்கு எழில்மாடம் எழுபது செய்தான்” என்று திருமங்கையாழ்வார் கூறிப் போந்தார். அம் மன்னன் எடுத்த திருக்கோயில்களைப் பற்றிய சில குறிப்புகள் தேவாரத்தில் உண்டு. தஞ்சை நாட்டைச் சேர்ந்த நன்னிலத்தில் உள்ள பெருங்கோயில் அவன் செய்ததென்று சுந்தரர் தெரிவிக்கின்றார்.1

    இன்னும் வைகல் என்னும் பதியிலுள்ள மாடக் கோவில் கோச்செங்கணான் கட்டியதென்பது,

         “வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்

         செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே

என்ற திருஞான சம்பந்தர் வாக்கால் விளங்கும்.

    அரிசிலாற்றங் கரையில் அமைந்த திரு அம்பர் மாநகரில், செங்கணான் கட்டிய கோயிலில் சிவபெருமான் வீற்றிருந்த செம்மை,

         “அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்

         குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே

என்னும் தேவாரத்தால் விளங்குகின்றது.

     திரு ஆனைக் காவில் வெண்ணாவல் மரத்தில் வெளிப்பட்ட ஈசனுக்கு அவ் வேந்தன் திருக்கோயில் எடுத்தான் என்று சேக்கிழார் அருளிப் போந்தார்.2

பெருங்கோயில்  

  ஈசனார் வீற்றிருக்கும் பெருங்கோயில் எழுபத்தெட்டு என்று

கணக்கிட்டார் திருநாவுக்கரசர்.

       “பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்

       பெருங்கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும்

       கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்

       கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்

என்று அவர் பாடுகின்றார். இப் பாசுரத்திற் குறிக்கப் பட்ட பெருங் கோயில் அனைத்தும் இக் காலத்திற் காணப்படாவிடினும் தேவாரத்தில் அவற்றைப்  பற்றிய சில குறிப்புண்டு.

     இந் நாளில் கொடவாசல் என வழங்கும் குடவாயிற் பதியில் ஒரு பெருங்கோயில் இருந்தது.3 நாகபட்டினத்திற்கு அண்மையிலுள்ள கீழ் வேளூரில் அமைந்த ஆலயமும் பெருங்கோயில் என்று பேசப்படுகின்றது.4

அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள கலய நல்லூர் என்னும் பதியில் ஒரு பெருங் கோயில் உண்டு. பூங்கமலப் பொய்கையின் இடையே அழகுற இலங்கிய அவ்வாலயத்தைச் சுந்தரர் பாட்டில் எழுதிக் காட்டியுள்ளார்.

       “தண்கமலப் பொய்கைபுடை சூழ்ந்தழகார் தலத்தில்

       தடங்கொள் பெருங்கோயில் தனில்தக்க வகையாலே

எழுந்தருளிய ஈசனை அவர் மகிழ்ந்து போற்றுகின்றார்.

     தலைச்சங்காடு என்னும் பதியில் பிறிதொரு பெருங் கோயில்

இருந்ததென்பது,

      “தண்டலையா ர்தலையாலங் காட்டி னுள்ளார்

      தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கி னார்தாம்

என்னும் திருநாவுக்கரசர் திருவாக்கால் அறியப்படுகின்றது.  பெருந்திருக்கோயில்

   வட ஆர்க்காட்டு வந்தவாசி வட்டத்தில் மருதநாடு என்ற பழமையான ஊரொன்று உள்ளது. அங்கமைந்த ஆலயத்தின் பெயர் பெருந்திருக் கோயில் என்பது சாசனத்தால் விளங்குகின்றது. இராசராசன் முதலாய பெருஞ் சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள் அங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சில காலம் விக்கிரம சோழ நல்லூர் என்ற மறுபெயரும் அதற்கு வழங்கியதாகத் தெரிகின்றது. பெருந்திருக்கோயில் என்பது இக் காலத்தில் புரந்தீஸ்வரர் கோயில் எனத் திரிந்து வழங்குகின்றது.5

சிறுதிருக்கோயில்

   தென்னார்க்காட்டுச் சிதம்பர வட்டத்தில் கொள்ளிட நதியின் வடகரையில் உள்ள எழும்பூர் என்னும் உருமூர் ஒரு பழமையான ஊர். இடைக் காலத்தில் விக்கிரம சோழ சதுர் வேதிமங்கலம் எனவும் அவ்வூர் வழங்கிற்று. அங்குள்ள கோயிலிற் கண்ட சாசனங்கள் சிறு திருக் கோயில் என்று அதனைக் குறிக்கின்றன.6 இப்பொழுது கடம்பவனேஸ்வரர் கோயில் என்று கூறப்படுவது அதுவே.

கரக்கோயில்

   பாடல் பெற்ற கடம்பூரில் அமைந்துள்ள கோயில் கரக்கோயிலாகும்.

           “நன்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்

           தன் கடம்பைத் திருக்கரக் கோயிலான்

என்று தேவாரம் இக் கோயிலைப் போற்றுகின்றது.

ஞாழற் கோயில்

   நறுஞ் சோலைகளின் நடுவே யமைந்தது ஞாழற் கோயில் என்று தேவாரம் பாடிற்று. தஞ்சை நாட்டில் விளநகர் என வழங்கும் விளைநகரில் அமைந்த  கோயில் திருஞாழற் கோயிலாகும். ஞாழல் என்பது கொன்றை மரத்தின் ஒரு வகை. புலிநகக் கொன்றை என்றும் அதனைக் கூறுவர். கொன்றை மாலை சூடும் ஈசன் கொன்றையஞ் சோலையைக் கோயிலாகக் கொண்டார் போலும். ஆற்றங் கரையில் அழகுற அமர்ந்த திருஞாழற் கோயிலுடையார்க்கு அருத்தயாமக் கட்டளைக்காக உத்தமசோழனுடைய முதற்பெருந் தேவியார் அளித்த நிவந்தம் சாசனத்திற் காணப்படுகின்றது.7

கொகுடிக்கோயில்

   முல்லைக் கொடிகள் தழைத்துப் படர்ந்து மணங் கமழ்ந்த சூழலிற் கோவில் கொண்டார் சிவபெருமான். அது கொகுடிக் கோயில் என்று பெயர் பெற்றது கருப்பறியலூர் என்ற பழம் பதியிற் பொருந்திய அக் கோயில் தேவாரத்தில் இனிது எழுதிக் காட்டப்படுகின்றது.

       “கடிநாறும் பூம்பொய்கைக் கயல்வாளை

       குதிகொள்ளும் கருப்பறியலூர்க்

       கொடியேறி வண்டினமும் தண்தேனும்

       பண்செய்யும் கொகுடிக் கோயில்

என்னும் சுந்தரர் திருப்பாட்டில் முல்லைக் கோயிலின் கோலம் மிளிர்வதாகும். இத் திருக் கோயிலில் அமர்ந்த ஈசனைப் பிழையெல்லாம் பெறுத்தருளும் பெருமானாகக் கண்டு போற்றினார் திருஞான சம்பந்தர்.

       “குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில்

       கற்றென இருப்பது கருப்பறிய லூரே

என்றெழுந்த அவர் திருவாக்குக் கேற்ப அங்குள்ள இறைவன் திருநாமம் குற்றம் பொறுத்த நாதர்’ என்றே இன்றும் வழங்கி வருகின்றது.

இளங்கோயில்

  இன்னும், இறைவன் எழுந்தருளியுள்ள திருக்கோயில்களைத்

தொகுத்துரைக்க விரும்பிய திருநாவுக்கரசர்.

       “இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்

       இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்

       திருக்கோயில் சிவனுறையும் கோயில் வீழ்ந்து

       தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே

என்று பாடிப் போந்தார். இப்பாசுரத்திற் குறிக்கப்பெற்ற கோயில்களைத் தேவாரத்தாலும் சாசனங்களாலும் ஒருவாறு அறியலாகும்.

    மேலே குறித்த கடம்பூரில் ஈசனார்க்குத் திருக்கரக் கோயிலோடு இளங்கோயில் என்னும் மற்றோர் ஆலயமும் இருந்ததாகத் தெரிகின்றது.

       “கடம்பை இளங்கோயில் தன்னின் உள்ளும்

        கயிலாய நாதனையே காண லாமே

 என்றார் திருநாவுக்ரசர். கடம்பூரில் திருக்கரக் கோயிலுக்குக் கிழக்கே ஒரு கல் தூரத்தில் இளங்கோயில் அமைந்துள்ள தென்பர்.8

    தஞ்சை நாட்டுப் பேரளத்திற்கு அருகே மற்றோர் இளங்கோயில்

 உண்டு.

        “நெஞ்சம் வாழி நினைந்திடு மீயச்சூர்

        எந்தமை உடையார் இளங்கோயிலே

என்னும் திருநாவுக்கரசர் திருவாக்கால் இவ் விளங்கோயில் திருமீயச்சூரைச் சேர்ந்ததென்பது விளங்கும்.

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்