(தோழர் தியாகு எழுதுகிறார் 189 : மணிப்பூர் வன்முறையை நிறுத்துக!-தொடர்ச்சி)

  மணிப்பூர் ஒலிக்கும் எச்சரிக்கை மணி!  

மணிப்பூர் என்றதும் எனக்கு வரக்கூடிய சில நினைவுகள்:   1)      மணிப்பூரில் இந்தியப் படை இழைத்த வன்கொடுமைகளை எதிர்த்து நடந்த அந்தப் போராட்டம்; படை முகாமுக்கு எதிரில் ஒரு பத்துப் பெண்கள் ஆடை களைந்து வரிசையாக நின்று “INDIAN ARMY RAPE US” (இந்தியப் படையே! எங்களை வன்புணர்வு செய்!) என்ற பதாகை தாங்கி நின்றார்களே, அந்தப் போராட்டம்!   2)      இந்தியப் படையை  மணிப்பூரிலிருந்து வெளியேறக் கோரி இரோம் சருமிளா நடத்திய அந்த நீண்ட நெடிய பட்டினிப் போராட்டம். அந்தப் போராட்டம் தன் கோரிக்கையில் வெற்றி பெறவில்லை என்றாலும் ஆய்தப் படைகள் சிறப்பதிகாரச் சட்டம் (AFSPA) போன்ற கொடுஞ்சட்டங்களையும், இந்தியப் படையின் கொடிய தன்மையையும் உலகின் பார்வையில் தோலுரித்துக் காட்ட உதவியது. இரோம் சருமிளாவின் போராட்டம் முடிந்த விதம் அந்த நீண்ட போராட்டத்துக்குப் பெருமை சேர்ப்பதாக அமையவில்லை என்ற குறை எனக்குண்டு.   3)     குடியேற்ற( காலனி)ஆதிக்கக் காலத்தில் மணிப்பூர் குறுநில அரசாக (சுதேச சமத்தானமாக) இருந்தது. அஃது இந்தியாவில் இணைக்கப்பட்டது எப்படி? என்பதை மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியர், மாந்தவுரிமைவுப் போராளி திரு ஓசுபெட்டு சுரேசு சொல்வார்:   அதிகாரக் கைமாற்றத்துக்காக இந்தியாவுடனும் பாகித்தானுடனும் பிரித்தானிய அரசு செய்து கொண்ட உடன்படிக்கையின் படி சமத்தானம் ஒவ்வொன்றும் தன் வருங்காலம் குறித்து மூன்றிலொரு முடிவு எடுக்கலாம்: (1) இந்தியாவுடன் இணைந்து கொள்ளலாம், அல்லது (2) பாகித்தானுடன் இணைந்து கொள்ளலாம், அல்லது (3) தனியரசாகத் தொடரலாம்.   மணிப்பூர் எந்த முடிவும் எடுக்காமலிருந்த போது மணிப்பூர் அரசரை இந்திய உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் பேச்சுவார்த்தைக்கு அழைத்தாராம். தில்லி வந்த மன்னரிடம் இந்திய அரசு இணைப்பு ஒப்பந்தத்தை நீட்டிக் கையொப்பம் இடச் சொன்னதாம்! இட்டால் பதவி, பணம், பகட்டோடு வாழலாம்; மறுத்தால் திகார் சிறைக்குப் போகலாம் என்று அச்சுறுத்தினார்களாம். மன்னரும் மணிப்பூரை இணைத்து விட்டு ஊர் திரும்பினாராம்.   எச். சுரேசு சொல்வார்: “நாளைக்கே மணிப்பூரில் சுதந்திர வாக்கெடுப்பு நடத்தினால், மணிப்பூர் இந்தியாவில் இருக்காது.”  
++
நேற்றைய மடலில் மணிப்பூர் தொடர்பாக நானும் வழிமொழிந்துள்ள ஒரு வேண்டுகோள் அறிக்கையை (மணிப்பூர் வன்முறையை நிறுத்துக!) வெளியிட்டிருந்தேன்.  மணிப்பூர் வன்முறையில் பாரதிய சனதாக் கட்சிக்கும், இந்திய ஒன்றிய அரசுக்கும், மணிப்பூர் மாநில அரசுக்கும், மணிப்பூர் நீதிமன்றத்துக்கும் முகன்மைப் பங்கு உண்டு என்று சொல்லியிருந்தேன்:  1)      2023 ஏப்பிரல் 27ஆம் நாள் மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தலைமை நீதியர் எம்.வி. முரளிதரன் வழங்கிய தீர்ப்புதான் முதலில் கலகத்தைத் தூண்டியது. மைத்தி சமுதாயத்தை அட்டவணைப் பழங்குடியாக வகைபடுத்த இந்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை வழங்க நான்கு மாத அவகாசம் கொடுப்பதுதான் இந்தத் தீர்ப்பு. இது தவறான தீர்ப்பு என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதியர் முரளிதரன் தமிழ்நாட்டுக்காரர். மைத்தி சமுதாயத்தைப் பழங்குடி அட்டவணையில் சேர்ப்பது ஏற்கெனவே அந்த அட்டவணையில் இடம்பெற்றுள்ள குக்கி, சோ ஆகிய சமுதாயங்களின் உரிமைகளை, முகன்மையாக நிலவுரிமைகளை அச்சுறுத்துவதாக இருக்கும். இது இனமோதல் ஏற்படத் தூண்டுதலாக அமைந்து விட்டது.  2)      மைத்தி சமுதாயத்தையும் குக்கி (+சோ) சமுதாயத்தையும் ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு அரசியல் ஆதாயம் தேடுவது பாசகவின் முயற்சி. மறு புறம் பழங்குடிகளின் நிலவுரிமைகளைப் பறிப்பது இந்திய அரசின் புதுத்தாராளியக் கொள்கைக்குத் தேவைப்படுகிறது. பழங்குடி மக்களை “வெளியார்” என்றும் “வந்தேறிகள்” என்றும் “சட்டப்புறம்பானவர்கள்” என்றும் சொல்லி நிலவெளியேற்றம் செய்யும் முயற்சிகளை இந்த ஆண்டு சனவரி மாதமே பிரேன் சிங்கு தலைமையிலான மணிப்பூர் மாநில அரசு தொடங்கி விட்டது. இந்தப் பின்னணியில் குக்கிகளிடையே எழுந்த பதற்றத்தையும் அச்சத்தையும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு மோசமாக்கி விட்டது.   3)      மேத் திங்கள் முழுக்க மணிப்பூர் குட்டி (உ)ருவாண்டா போலவே மாறிப் போயிற்று. மைத்தி சமுதாய மக்களும் குக்கி சமுதாய மக்களும் மூர்க்கமாக மோதிக் கொண்டனர். படுகொலைகளும் பாலியல் வன்கொடுமைகளும் நிகழ்ந்தன. வழிபாட்டுக் கூடங்கள் தாக்கி அழிக்கப்பட்டன. காவல்துறையும் பிற ஆய்தப் படைகளும் இந்தக் குற்றங்களைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தன என்று சொல்வது குறைக்கூற்றே ஆகும். ஏனென்றால் இரு தரப்புக்கும் காவல்துறையே ஆய்தங்கள் வழங்கிற்று.  ஆங்கில இந்து நாளேடு சூன் 5 திங்கள் கிழமை இதழில் விசைத்தா சிங்கு எழுதிய செய்திக் கட்டுரை வந்துள்ளது. மணிப்பூரில் சூறையாடப்பட்ட காவல்துறை ஆய்தங்களில் 18% திருப்பித் தரப்பட்டதாக இதில் சொல்லப்பட்டுள்ளது. மே 3ஆம் நாள் மோதல் வெடித்த நாளில் சற்றொப்ப 1,600 ஆய்தங்கள் பறித்துச் செல்லப்பட்டன.  உள்துறை அமைச்சர் அமித்துசா மணிப்பூர் செல்லவிருந்த போது மே 27-28இல் 2,557 ஆயதங்கள் சூறையாடப்பட்டன. பெரும்பாலான ஆயதங்கள் பள்ளத்தாக்குப் பகுதியிலுள்ள காவல் நிலையங்களிலிருந்தும் ஆய்தச் சாலைகளிலிருந்தும் சூறையாடப்பட்டன.  சூறையாடப்பட்ட ஆய்தவகைகளை வரிசைப்படுத்திய பின் இந்து செய்திக் கட்டுரை சொல்கிறது:  “A senior government official said on condition of anonymity that most weapons were given away to groups belonging to the same community as those deployed in the police camps. In some cases, the weapons were taken away after huge mobs gheraoed police camps.”  இந்தச் செய்தியை மீண்டும் படித்துப் பாருங்கள். பெரும்பாலான ஆய்தங்கள் சூறையாடப்படவில்லை. அவை காவல் முகாம்களிலிருந்து வாரி வழங்கப்பட்டன. முகாம்களில் மைத்திக் காவலர்கள் இருந்தால் மைத்திக்களுக்கும் குக்கி காவலர்கள் இருந்தால் குக்கிகளுக்கும் வாரி வழங்கப்பட்டன. அவர்கள் ஒருவரை ஒருவர் கொலையும், பாலியல் வன்கொடுமையும் செய்து கொள்வதற்காக வழங்கப்பட்டன. மே மாதம் முழுக்க மணிப்பூர் பெருந்திரள் கொலைக் களமாக மாறிப் போனதற்கு ஆய்தங்களை வாரி வழங்கியதே காரணம். இந்திய அரசும் மாநில அரசும் – இரண்டும் பாசக அரசுகள் – முடிவெடுக்காமல் இது நிகழ்ந்திருக்க முடியவே முடியாது.  மணிப்பூர் அரசின் பாதுகாப்பு அறிவுரைஞர் குல்தீப்பு சிங்கு சொன்னதாக இந்து மேற்கோள் காட்டுகிறது, பல பகுதிகளில் ஆய்தங்களை ஒப்படைக்கும் படி மக்களுக்கு எடுத்துச் சொல்ல அரசியல்வாதிகள் கூடுதல் அவகாசம் கேட்டார்களாம். அரசுக்குச் சொந்தமான ஆய்தங்களை வன்முறைக் கும்பல்களிடம் வழங்கச் சொன்னதோடு, திருப்பிக் கொடுக்கச் சொல்லவும் அவகாசம் கேட்கின்றார்கள் இந்த அரசியல்வாதிகள் என்றால், மணிப்பூரில் நடந்த மூர்க்க வன்முறைக்கு இந்த அரசியல்வாதிகள்தானே பொறுப்பு? ஆடுகளை மோத விட்டுக் குருதி குடிக்கும் ஓநாய்கள்!  மணிப்பூர் மைத்திகளிடம் ஆயுதங்களை களையக் கூடாது என்று இந்துத்துவ மைத்திக் குழுக்கள் தில்லியில் நடத்தியுள்ள ஆர்ப்பாட்டம் மணிப்பூர் வன்முறை தொடர வேண்டும் என்ற இந்துத்துவ அக்கறையின் இன்னொரு வெளிப்பாடே ஆகும்.  மணிப்பூர் வன்முறையால் பழங்குடி மக்கள் ஏதிலியாக்கபடுவதன் விளைவுகள் மணிப்பூருக்கு வெளியே மிசோரம், நாகாலாந்து போன்ற வடகிழக்கு தேசங்களிலும் எதிரடித்து வருகின்றன.        ஆர்எசுஎசு பாசக கும்பல் மக்களைப் பிரித்து மோத விட்டு அரசியல் ஆதாயம் ஈட்ட எந்த அளவுக்குச் செல்லும் என்பதையே மணிப்பூர் நிகழ்ச்சிகள் உணர்த்துகின்றன.  ஆர்எசுஎசு – பாசக பாசிசக் கும்பல் தனது அரசியல் ஆதாயத்துக்காக மாந்த உயிர்கள் பலியாவதைப் பற்றியோ குமுக அமைதி கெடுவதைப் பற்றியோ கிஞ்சிற்றும் கவலைப்படுவதில்லை.  தமிழ்நாட்டில் இதெல்லாம் நடக்காது என்று நம்பி உறங்கிக் கொண்டிருந்தால் விழிக்கும் போது எதுவும் மிஞ்சியிருக்காது
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 219