(ஊரும் பேரும் 47 : இரா.பி.சேது(ப்பிள்ளை): கோயிலும் வாயிலும்  2- தொடர்ச்சி)

ஊரும் பேரும்

கோயிலும் வாயிலும்   3

திருமுல்லைவாயில்

     காவிரி யாற்றின் வட கரையில் கடலருகே யுள்ளது திருமுல்லை வாயில்.22 அது திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றது.

        “வரைவந்த சந்தொ டகிலுந்தி வந்து

        மிளிர்கின்ற பொன்னி வடபால்

        திரைவந்து வந்து செறிதேறல் ஆடு

        திருமுல்லை வாயில் இதுவே

என்னும் திருப் பாட்டில் கடற்கரையி லமைந்த முல்லை வாயிலின் கோலம் நன்கு விளங்குகின்றது. அங்குக் கோயில் கொண்டுள்ள ஈசன் முல்லைவன நாதர் என்று அழைக்கப் பெறுகின்றார்.

     ஞாழல் வாயில் என்பதும், முன்னே சொல்லிய ஞாழற் கோயில் என்பதும் ஒன்றெனத் தோன்றுகின்றன.23 இன்னும், சிவபெருமான் கோயில் கொண்டருளும் வாயிற் பதிகளைக் குறித்து,

        “மடுவார்தென் மதுரைநகர் ஆல வாயில்

        மறிகடல்சூழ் புனல்வாயில் மாடநீடு

        குடவாயில் குணவாயில் ஆன எல்லாம்

        புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே

என்று கூறியருளினார் திருநாவுக்கரசர்.

திருஆலவாயில்

     பாண்டி நாட்டுத் தலைநகராகிய மதுரையில் அமைந்த ஆலயம் ஆல வாயில் என்று தேவாரத்திற் குறிக்கப் படுகின்றது.

        “ஞாலம் நின்புகழே மிக வேண்டும் தென்

        ஆலவாயில் உறையும் எம் ஆதியே

என்று திருஞான சம்பந்தர் அதனைப் போற்றி யருளினார். இவ் வண்ணமே வாயிற் பதிகளை யெல்லாம் தொகுத்துரைத்த திருநாவுக்கரசரும், ‘மதுரை நகர் ஆலவாயில் ஈசனார் மருவும் இடங்களில் ஒன்றாகக் குறித்துப் போந்தார். ஆலவாயில் என்பது ஆலவாய் எனவும் வழங்கிற்று. ஆலவாயிற் கோயிற் கொண்ட ஆண்டவனை ஆலவாயான் என்றார் திருஞான சம்பந்தர்.

    இக் கருத்துகளை ஆராயும் பொழுது மதுரை யம்பதியில் அலகிலாத் திருவிளையாடல் புரிந்தருளிய ஈசன் ஆலந்தருவில் அமர்ந்திருந்தான் என்பது நன்கு விளங்குவதாகும்.

  புனவாயில்

    பாம்பாறு கடலிற் பாயும் இடத்திற்கு அருகே திருப்புன வாயில் என்ற   தலம் அமர்ந்திருக்கின்றது. அவ்வூரின் தன்மையை,

 “கற்குன்றும் தூறும் கடுவெளியும்

          கடற்கானல் வாய்ப்

          புற்கென்று தோன்றிடும் எம்பெருமான்

          புன வாயிலே

என்னும் சுந்தரர் தேவாரம் நன்குணர்த்துவதாகும். தஞ்சை நாட்டு அறத்தாங்கி வட்டத்தில் திருப்புன வாசல் என்ற பெயரோடு விளங்குகின்றது அப்பதி.

குடவாயில்

    தஞ்சை நாட்டில் குடவாசல் என விளங்கும் ஊரே குடவாயில் என்னும் பழம்பதி யாகும். முற்காலத்தில் சிறந்து விளங்கிய ஒரு பெரு நகரின் மேல வாசலாக அமைந்த இடம் பிற்காலத்தில் ஓர் ஊராயிற் றென்று தோன்றுகின்றது.

 அங்கிருந்த பழைய கோட்டை மதில்கள் தேவாரத்திலும் குறிக்கப் படுகின்றன.

      “வரையார் மதில்சூழ் குடவாயில் மன்னும்

      வரையார் பெருங்கோயில் மகிழ்ந்தவனே

என்பது திருஞான சம்பந்தர் பாட்டு. கோட்டையூராகிய குடவாசலில் ஈசன் விளங்குமிடம் பெருங்கோயில் என்று போற்றப்பட்டுள்ளது.

  குணவாயில்

   குணவாயில் என்னும் பெயடைய ஊர்கள் பலவுண்டு.24 சேர நாட்டின் தலை நகரமாகச் சிறந்திருந்த வஞ்சியின் அருகே ஒரு குணவாயில் இருந்ததென்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகின்றது. அந்நூலுக்கு உரை கண்ட ஆசிரியர் இருவரும் குண வாயிலைத் திருக்குணவாயில் என்று குறிப்பிடும் பான்மையைக் கருதும்பொழுது அது  தெய்வ நலம் பெற்ற ஊரென்று தோன்றுகின்றது. திருக்குணவாயில் என்பது ஓர் ஊர் என்றும், அது வஞ்சியின் கீழ்த்திசைக்கண் உள்ள தென்றும், உரை ஆசிரியராகிய அடியார்க்கு நல்லார் கூறுகின்றார்.

திருவிடை வாயில்

    இன்னும், சில வாயிற் பதிகளின் பெருமை சாசனங்களால் விளங்கும். நன்னில வட்டத்தில் உள்ள திருவிடை வாய்க்குடி நெடுங்காலமாக வைப்புத் தலங்களுள் ஒன்றாக வைத்தெண்ணப்பட்டது. அத் தலத்தைப் பற்றிய குறிப்பு, திருத்தொண்டர் புராணத்திலும் காணப்படவில்லை. எனினும், திருவிடைவாய் என்னும் தலம் திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றதென்பது கல்வெட்டால் விளங்கிற்று.25 தஞ்சை நாட்டு நன்னில வட்டத்தில் இப்போது திருவிடை வாசல் என வழங்கும் ஊரே இத்தலம் என்பது தெளிவாயிற்று.

மறியார் கரத்தெந்தை” என்றெடுத்து, “மாறில் பெருஞ் செல்வம் மலி விடைவாயை, நாறும் பொழில் காழியர் ஞான சம்பந்தன் கூறும் தமிழ் வல்லவர் குற்றமற்றோரே” என்று அழகுற முடித்த திருப்பதிகம் வடிவாகக் கல்வெட்டிலே காணப்படுகின்றது.26

திருவேங்கை வாயில்

    திருவேங்கை வாசல் என்னும் ஊர் புதுக்கோட்டை நாட்டில் உள்ளது. திரு மேற்றளி என்பது அங்குள்ள கோயிலின் பெயராகும். பெருவாயில் நாட்டுத் தேவதானமாகிய திருவேங்கை வாயிலிற் கோயில் கொண்ட திருமேற்றளி மகாதேவர்  என்று இராசராச சோழனது சானம் கூறுமாற்றால், அதன் பழமை விளங்குவதாகும்.27 திருவேங்கை வாயிலுடையார் கோயிலில் நிகழும் சித்திரைத் திருவிழாவில் சந்திக் கூத்து என்னும் ஆடல் புரியும் நாட்டிய மாதுக்கு விக்கிரம சோழன் விட்ட மானியம் ஒரு சாசனத்தால் விளங்குகின்றது.28

திருவள்ளை வாயில்

     செங்கற்பட்டைச் சேர்ந்த பொன்னேரி வட்டத்தில் திருவள்ளை வாயில் என்னும் பழம்பதியுண்டு. அவ்வூர்ப் பெயர் இப்பொழுது திருவேளவாயில் என மருவி வழங்குகின்றது. சுவாமீச்சுரம் என்று பெயர் பெற்ற ஆலயத்தில் அமர்ந்த ஈசனார்க்கு நான்கு ஊர் வாசிகள் நல்கிய நிவந்தம் அக்கோயிற் கல்வெட்டிற் காணப்படுகின்றது.29 எனவே, வள்ளை வாயிலைப் பழைய வாயிற் பகுதிகளுள் ஒன்றாகக் கொள்ளலாகும்.

திருப்பில வாசல்

     தொண்டை நாட்டிலே திருப்பில வாயில் என்னும் பதியொன்று உண்டு. அங்குக் கோயில் கொண்ட ஈசன் திரும்பில வாயிலுடையார் என்று கல்வெட்டிற் குறிக்கப்படுகின்றார். அக் கோயிலின் பழமை அங்குள்ள பல்லவ சாசனத்தால் நன்கு விளங்குவதாகும்.30 பிற்காலத்தில் பிலவாயில் என்பது பிலவாயலூர் என மருவி வழங்கலாயிற்று. இராசராசன் காலத்தில் சனநாத நல்லூர் என்னும் மறுபெயர் பெற்றது அவ்வூர்.31 ஆயினும், பழம் பெயரே பெரும்பாலும் வழங்கி வந்ததாகத் தெரிகின்றது. கால கதியில் அப் பெயர் வாயலூர் எனக் குறுகிப் பின்பு வயலூர் எனத் திரிந்து வழங்குகின்றது. அவ்வூர் வியாக்கிரபுரி என்னும் வடமொழிப் பெயரும் பெற்றிருந்ததாகத் தெரிகின்றது32. பில வாயிலூர் என்பதைப் புலிவாயிலூர் எனப் பிறழவுணர்ந்த காரணத்தால் அப்பெயர் அதற்கு அமைந்தது போலும்!

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்

அடிக் குறிப்பு

22. தொண்டை நாட்டில் மற்றொரு முல்லைவாயில் உண்டு. அது வடமுல்லை வாயில் எனப்படும். அப் பதியும் தேவாரப்பாடல் பெற்றுள்ளது.

23. கோயில் என்ற தலைப்பின் கீழ்க் கூறிய ஞாழற் கோயிலைக் காண்க.

24. குணவாயில் கொங்கு நாட்டில் உள்ள தென்பர் சிலர். (ஆராய்ச்சித் தொகுதி, ப.247) திருவஞ்சிக் குளம் என வழங்கும் திருவஞ்சைக் களத்தின் அருகேயுள்ள தென்பர் சிலர். திருவஞ்சைக் களம் என்னும் திருக்கோயிலையுடைய கொடுங் கோளூரில் (Cranganore) குணவாய் என்ற ஊர் உள்ளதென்று ‘உண்ணியாடி சரிதம்’ என்னும் மலையாளக் காவியம் கூறுகின்றது. இது பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப் பட்டதென்பர். வடமொழியில் இவ்வூர் குணகபுரம் எனவும், குணகா எனவும் வழங்கப்பெற்றுள்ளது. சில காலத்திற்கு முன்னர் வரைத் திருக்கணா மதிலகம் என்ற பெயர் இவ்வூர்க்கு வழங்கிற்றென்றும் அங்கிருந்த படிவத்தைப் போர்ச்சுகீசியர் அப்புறப் படுத்தினர் என்றும் சொல்லப்படுகின்றது. இப்பொழுது இவ்வூர் மதிலகம் எனக் குறுகி வழங்குகின்றது. (இச் செய்திகளை அறிவித்தவர் சென்னைப் பல்கலைக் கழகத்து மலையாளப் பேராசிரியர் முனைவர் சி.ஏ.மேனன் ஆவர்.)

25. 180 / 1894. இது, முதற் குலோத்துங்க சோழன் காலத்துச் சாசனம்.

26. இப் பதிகம் இப்பொழுது திருஞான சம்பந்தர் அருளிய மூன்று திரு முறைகளுக்கும் பின்னே இணைக்கப்பட்டிருக்கின்றது. (திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள் தேவாரம் -சைவ சித்தாந்த மகாசமாசப் பதிப்பு, ப.  655)

27. 240 /1914.

28. 253 / 1914.

29. 248 / 1912.

30. 368 / 1908. இப் பல்லவ சாசனத்திற் கண்ட குடி வழி பல்லவர் சரித்திரத்தை ஒழுங்குபடுத்துவதற்குப் பெரிதும் பயன்படுவதாயிற்று.

31. 364 /1908.

32. செ.மா.க.(I.M.P.), 469.