(ஊரும் பேரும் 58 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – கருந்திட்டைக்குடி – தொடர்ச்சி)

ஊரும் பேரும்

சாத்தங்குடி


திருவாரூர்த் திருத்தாண்டகத்தில் சாத்தங்குடியிற் காட்சி தரும் ஈசன் பெருமை பேசப்படுகின்றது.
“எல்லாரும் சாத்தங் குடியிற்காண இறைப்பொழுதில் திருவாரூர்ப் புக்கார் தாமே”
என்பது திருநாவுக்கரசர் பாட்டு. இப் பாசுரத்திற் குறித்த சாத்தங்குடி, பாடல் பெற்ற திருப்புன்கூருக்கு ஒன்றரை கல் தூரத்தில் உள்ளது. தனிச் சாத்தங்குடி என்று திருநாவுக்கரசர் குறித்தவாறே இன்றும் அவ்வூர் முற்றும் கோயிலுக்கே உரியதாக உள்ளது.22


உருத்திரகோடி
திருக்கழுக் குன்றத்தின் அடிவாரத்திலுள்ள சங்கு தீர்த்தம் என்னும் திருக்குளத்திற்குத் தென் கிழக்கில் உருத்திர கோடீச்சுரம் உள்ளது.

கொண்டல்
கொண்டல் நாட்டுக் கொண்டல்” ஈசன் கோயில் கொண்ட இடம் என்பது சுந்தரர் தேவாரத்தால் அறியப்படும். சீர்காழிக்கு மேற்கே மூன்று கல் தூரத்தில் உள்ள கொண்டல் வண்ணன் குடியே இப் பதி என்பர். கொண்டல் வண்ணனாகிய திருமால் விரும்பிய வண்ணம் ஈசன் எழுந்தருளி, முருக வேளால் சிறையிடப்பட்ட பிரமதேவனை விடுவித்த பெருமையை அவ்வூர்ப் பெயர் உணர்த்தும் என்பது புராணக் கொள்கை. இதற்கேற்ப அங்கு முருகப்பெருமான் இன்றும் சிறப்பாக வழிபடப் பெறுகின்றார். பிரமதேவனை விடுவித்த பின்னர், தாரக மந்திரமாகிய பிரணவத்தின் பொருளை முருகன் வாயிலாகக் கேட்டு மகிழ்ந்தமையால் தாரக பரமேசுரம் என்னும் நாமம் அங்குள்ள ஈசனுக்கு அமைந்தது. ஆலயத்தின் ஒரு புறம் திருமாலின் திருவுருவம் காணப்படுகின்றது. இங்ஙனம் கந்தனார் தந்தையார் விரும்பியுறையும் இடம் இப்பொழுது கொண்டல் வள்ளுவக்குடி என்னும் பெயரால் வழங்குகின்றது.


மிழலை
மூவர் தேவாரமும் பெற்ற மூதூர்களில் ஒன்று திருவிழிமிழலை. இவ்வூர் வெண்ணி நாட்டில் உள்ளதென்று சாசனம் கூறும். மாதொரு பாகற்குரிய மற்றொரு மிழலையும் உண்டு என்று சுந்தரர் அருளிப் போந்தார். அது “மிழலை நாட்டு மிழலை” யாகும். மிழலை நாடெனப்படுவது மாயவரத்திற்கு அண்மையில் அமைந்ததாகும். அப் பகுதியில் மாயவரத்திற்கு மேற்கே பன்னிரண்டு கல் தூரத்தில் பாழடைந்த ஊராக இம்மிழலை காணப்படுகின்றது.


நாங்கூர்
நாங்கூர் நாட்டு நாங்கூர் நாதன் உறையும் இடம் என்றார் சுந்தரர். இத்தலம் சீர்காழிக் கருகேயுள்ள திருநாங்கூர் – ஆகும். இவ்வூரிலுள்ள சிவாலயம் பழுதுற்றிருப்பதாகத் தெரிகின்றது. சிதம்பரத்தில் நடம் புரியும் இறைவன்மீது திருஇசைப்பாவும் பல்லாண்டும் பாடிய சேந்தனார் பிறந்த ஊர் திரு நாங்கூரே.

புரிசை
புரிசை நாட்டுப் புரிசையும் இறைவன் உறையும் இடங்களுள் ஒன்றென்று குறித்தார் சுந்தரர். காஞ்சிபுர வட்டத்தில் உள்ள புரிசை என்னும் பதி சாலப் பழமை வாய்ந்ததாகும்.மணவிற் கோட்டத்தி லுள்ள புரிசை நாட்டுப் புரிசை என்று சாசனம் இவ்வூரைக் குறிக்கின்றது.23 திருப்படக் காடு என்னும் பெயரால் விளங்கிய புரிசைக் கோயில் தமிழரசரது ஆதரவைப் பெற்றிருந்தது. ஆதலால், புரிசையில் அமர்ந்த படக் காடுடைய பரமனையே சுந்தரர் குறித்தார் என்று கருதுதல் பொருந்தும்.


பழையனூர்
தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து‘ என்னும் வாய்மொழிக்குச் சான்றாக நிற்பது பழையனுர் ஆகும். இச்சிற்றூரில் வாழ்ந்த வேளாளர் எழுபதின்மரும் வழிப்போக்கனாகிய வணிகன் ஒருவனுக்குக் கொடுத்த வாக்குப் பிழையாமல் தீப்பாய்ந்து உயிர் துறந்த சீலம் தமிழ் நாட்டில் நெடுங்கதையாக நிலவுகின்றது. திருவாலங் காட்டுக்கும் பழையனுருக்கும் இடையேயுள்ள குட்டைக் கரையில் காணப்படுகின்ற சதுரக் கோயிலிலே செதுக்கப்பட்டுள்ள உருவங்கள், அச்சத்திய சீலரின் ஞாபகச் சின்னம் என்று சொல்லப்படுகின்றன. பழனையென்று திருநாவுக்கரசர் பாசுரத்திற் குறிக்கப்பட்ட பழையனுரில் கொழுந்தீசர் கோயில் என்னும் பழமையான ஆலயம் உள்ளது. ஊருக்குக் கிழக்கே கைலாச நாதர் கோயிலும் உண்டு. ஆதலால், திருவாலங் காட்டுக்கு அணித்தாகவுள்ள பழையனுரும் வைப்புத் தலங்களுள் ஒன்றாகும்.

புலிவலம்
இன்னும் திருக்கயிலாச நாதர் காட்சி தரும் இடங்களைத் தொகுத்துக் கூறும் திருப்பாசுரத்தில்,
புலிவலம் புத்துர் புகலூர் புன்கூர்
புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்

என்று எடுத்துப் பாடலுற்றார் திருநாவுக்கரசர். இவற்றுள் புலிவலமும், பொய்கை நல்லூரும் வைப்புத் தலங்களாகும். செங்கற்பட்டு நாட்டிலுள்ள மதுராந்தக வட்டத்தில் உத்தரமேரூரின் அருகே திருப் புலிவனம் என்ற ஊர் உண்டு. அங்குள்ள பழமையான சிவாலயத்திற்குப் பராந்தக சோழன் முதலாய சிறந்த மன்னர் விட்ட நிவந்தங்கள் உத்தர மேரூர்ச் சாசனங்களிற் குறிக்கப்படுகின்றன. அவற்றில் அப்பதி திருப்புலிவல்ம் என்று காணப்படுதலால், திருநாவுக்கரசர் குறித்த தலம் அதுவே என்று கொள்ளுதல் கூடும்.


பொய்கைநல்லூர்
தொண்டை நாட்டுத் தாமற் கோட்டத்தில் பொய்கை நல்லூர் என்ற பழமையான ஊர் உள்ளது. அவ்வூரில் அமைந்த அகத்தீச்சுரம் என்னும் பொய்கைநல்லூர் சிவாலயத்திற்கு வயிர மேக வர்மன் வழங்கிய நிவந்தம் ஒரு சாசனத்திற் குறிக்கப்படுகின்றது. தேவார வைப்புத் தலங்களுள் ஒன்றாகிய இப் பொய்கைநல்லூர் இப்போது அரக்கோண வட்டத்திற் காணப்படும்.25


திருக்காரிக்கரை
தொண்டை நாட்டுத் தலங்களை வழிபட்ட திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் காளத்திநாதனைக் காணச் செல்லும் வழியில் திருக்காரிக் கரையைத் தொழுதார் என்று இருவர் வரலாறும் கூறுகின்றன. எனவே, திருக்காரிக்கரை தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்றென்பது தெளிவாகும்.
அத்தலம் தொண்டை நாட்டுக் குன்றவர்த்தனக் கோட்டத்தில் உள்ளதென்று கல்வெட்டுக் கூறுகின்றது. “குன்ற வருத்தனக் கோட்டத்து நடுவில் மலையிலுள்ள திருக் காரிக்கரை யுடையார்” என்பது சாசனத் தொடர்.26 எனவே, காரிக்கரை என்பது திருக்கோயிலின் பெயராகத் தெரிகின்றது. இராசராசன் முதலாய பெருஞ்சோழ மன்னர்கள் அக்கோயிலுக்கு அளித்த நிவந்தங்கள் கல்வெட்டிற் காணப்படும்.இந்நாளில் செங்கற்பட்டு நாட்டில் பொன்னேரி வட்டத்தில் இராமகிரி என்னும் பெயரால் அத்தலம் விளங்கு கின்றது.


திரிப்புராந்தகம்
தொண்டை நாட்டு மணவிற் கோட்டத்தில் அமைந்த கூகம் என்னும் ஊர் மிகப் பழமை வாய்ந்தது. திருஞான சம்பந்தரால் பாடப் பெற்ற திருவிற் , கோலமுடையார் அமர்ந்தருளும் பதி இப்பதியே. கோலத்தில் ஈசன் விளங்குமிடம் திருவிற் கோலம் என்பர்.27 திருவிற்கோலமுடையாரது ஆலயம் திரிபுராந்தகம் என்று பெயர் பெற்றது. இன்றும், திரிபுராந்தகம் என்பதே அங்குள்ள இறைவன் திருநாமம். இவ்வூர் மதுராந்தக நல்லூர் என்றும், தியாக சமுத்திர நல்லூர் என்றும் சாசனங்களிற் பேசப்படுகின்றது.

(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை), ஊரும் பேரும்

அடிக் குறிப்பு

25. பல்லவர்கள் (Pallavas,) பக்.144.

26. 646 / 1904.

27.“சிற்றிடை உமையொரு பங்கன் அங்கையில்
உற்றதோர் எரியினன் ஒருச ரத்தினால் வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தறச் செற்றவன் உறைவிடம் திருவிற் கோலமே” – என்பது திருஞான சம்பந்தர் தேவாரம்