எத்தனை நாள் சிறையில் என்னை வைத்திருப்பீர்கள்? பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி: பாகம்-03
(பேரறிவாளன் குறிப்பேடு : தொடரும் வலி : பாகம் – 02 தொடர்ச்சி)
ஐயா, இன்னமும் எத்தனை நாள்
சிறையில் என்னை வைத்திருப்பீர்கள்?
பேரறிவாளன் குறிப்பேடு!
தொடரும் வலி – பாகம்-03
[வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!]
அப்போதெல்லாம் ஈழப்போராட்டத்துக்குக் குரல் கொடுத்தால், உதவி செய்தால் அவர்கள் மீது வழக்கு, தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும். 3 – 4 மாதங்களில் பிணை அல்லது ஓராண்டுச் சிறை பரிசாகக் கிடைக்கும்.
இது 1987-ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்குப்பின் ஈழத்தில் அத்துமீறி நடந்த இந்திய இராணுவத்தின் போருக்குப் பிறகான நிலை. இதற்குமுன் ஒரு நிலை இருந்தது.
தொடக்கத்தில் காந்திய வழி உரிமைப் போராட்டமாகத் தந்தை செல்வா தலைமையில் நடந்துவந்த ஈழத்தமிழர் போராட்டம் சிங்களப் பேரினவாதத்தின் அரச ஆயுத அடக்குமுறையின் விளைவால் மெல்ல மெல்ல ஆயுதப் போராட்டமாக உருமாறத் தொடங்கிவிட்டது.
அவை பல்வேறு ஆயுதம் தாங்கிய அமைப்புகளாக உருவாகிய சூழலில் அன்றைய இந்தியத் தலைமையர்(பிரதமர்) மறைந்த இந்திரா காந்தி அந்த அமைப்புகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டி அரவணைத்துக் கொண்டது மட்டும் அல்ல, அவர்களுக்கு இந்திய இராணுவத்தைக்கொண்டு ஆயுதப் பயிற்சியும் வழங்கிப் போரிட ஆயுதங்களும் கொடையளித்தார்.
அன்றைய மாநில முதல்வர் மறைந்த புரட்சித் தலைவர் எம்ஞ்சியாரோ தமிழகத்தில் அனைத்து அமைப்புகளும் ஆயுதப் பயிற்சி மேற்கொள்ள முகாம்கள் அமைத்துக்கொள்ள இசைவளித்தார்; பொருளுதவியும் அளித்தார்.
தமிழகச் சட்டப்பேரவையில் அறிவித்து தமிழ்நாட்டின் அனைத்து அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத்தைப் போராளி அமைப்புகளுக்கு நன்கொடையளித்தார். இவையெல்லாம் வரலாறு.
அவ்வாறு தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், தலைவர்களும் ஈழத்தில் நடந்த ஆயுதப் போராட்டத்துக்குப் போட்டி போட்டுக்கொண்டு உதவிய நேரத்தில் தொடங்கியதுதான் எனது வாழ்க்கையும்.
1984-இல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டுவிட்ட நிலையில் புதிய தலைமையராக இராசீவு காந்தி பொறுப்பேற்ற பின்பு ஈழப் போராட்டத்தில் மத்திய அரசின் போக்கில், அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. இருப்பினும் தமிழக ஆதரவு நிலை முன்பு போலவே நீடித்தது.
இலங்கையின் அன்றைய அதிபர் செ.ஆர்.செயவர்த்தனாவின் நரித்தனத்தால் ஏற்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தம், அதன் விளைவால் ஈழத்தில் இந்திய இராணுப் போர் என நிலைமை மாற்றமடைந்த காலத்தில் தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் வெளிப்படையாக ஈழப் போராட்டத்துக்குச் சார்பாக அரசியல் நிலைப்பாடு எடுத்தாலும் பொருளுதவி, அரசியல் உதவி, மருத்துவ உதவி போன்ற உதவிகளைச் செய்து வந்த ஆதரவாளர்களைக் கைதுசெய்வதும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்ச் சிறையில் அடைப்பதும் போராளிகளைத் தடுத்துவைக்க சிறப்பு முகாம்களை ஏற்படுத்துவதுமான நிலைப்பாடு எடுத்தனர்.
அந்தச் சமயத்தில் ஈழத்தில் நடக்கும் போராட்டத்துக்கு உதவுவது என்பது சட்டப்படி சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்ற நிலைஇருப்பினும் தார்மிக அடிப்படையில் எவருமே அதனைத் தவறாக எடுத்துக்கொண்டதில்லை.
இன்னும் சொல்லப்போனால் அவ்வாறு கைது செய்யப்படுவதைப் பெருமையாக அறிவித்துக் கொண்டவர்களும் உண்டு. அந்தப் பின்னணியில், அவ்வாறான செய்திகளை அறிந்திருந்த நானும், ஆதரவுக் கூட்டங்களை ஏற்பாடு செய்வது, துண்டறிக்கை, சுவரொட்டி அச்சிடுவது, காயம் அடைந்தவர்களுக்கு உதவுவது என்ற அளவில் செய்யும் உதவிகளுக்காகவும் அரசியல் பரப்புரைப் பணிகளுக்காகவும் சில மாதங்களேனும் சிறையிருக்க வேண்டி வரும் என்ற அளவில் மட்டும் அந்த வயதில் எனது அறிவுக்கு எட்டிய அளவில் சிந்தித்தேன்.
எனவே ம.பு.துறையினர்(சி.பி.ஐ-யினர்) என்னை ஆனி 05, 2022 / 19-06-1991 அன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்திக் கைதுசெய்யப்பட்டதாக அறிவித்த போதுகூட எனது எண்ணமும் அப்படித்தான் சுழன்றது.
அதன் அடிப்படையில்தான் எனது வழக்கில் கைது செய்யப்பட்ட நண்பர்களிடம் நீதிமன்றக் காவலில் வந்த பின்பு, இன்னமும் மூன்று மாதங்களில் நான் பிணையில் சென்றுவிடுவேன் எனக்கூறி வந்தேன்.
எனக்கு மிக நன்றாக நினைவிருக்கிறது – ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஆவணத்தில் திரு.தியாகராசன், இ.கா.ப. அவர்கள் என்னிடம் கையொப்பம் பெற்ற சமயத்தில் காவல் துறை, சட்டம், நீதி குறித்து ஏதும் அறிந்திராத அந்த வயதில் அவரிடம் நான் கேட்ட ஒரே கேள்வி,
“ஐயா, இன்னமும் எத்தனை நாள் சிறையில் என்னை வைத்திருப்பீர்கள்?”… அவர் விடையாக என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.
எத்தனை நாள் நீ சிறையில் இருப்பாய்?… நான் சொன்னேன், ஒரு வருடம் இருப்பேன், ஐயா. அப்போது அவர், உனக்கு 5 வருடம் தண்டனை கிடைக்குமடா என்றார். ‘‘ஐயய்யோ, அவ்வளவு நாளெல்லாம் என்னால் சிறையில் இருக்க முடியாது” என்றேன்.
என்ன வேடிக்கை – அவர் குறிப்பிட்டதைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாக 25 ஆண்டுகள் கடந்துபோய்விட்டன. அவர் 5 ஆண்டுகள் எனச் சொன்னதிலும் பொருள் இருந்தது.
ப.சீ.த.(‘தடா’ )சட்டப்படி குறைந்த தண்டனையே 5 ஆண்டுகள்தான் என்பதைப் பின்னாளில் தெரிந்துகொண்டபோது புரிந்தது.‘தடா’ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் பயங்கரவாதம் – சீர்க்குலைவுகள் நடவடிக்கை தடுப்புச் சட்டம், 1987 (Terrorist and Disruptive Prevention Act, 1987) என்ற சட்டம் குறித்த அறிவு சிறிதும் எனக்கு இருக்கவில்லை.
எனக்கு மட்டுமல்ல, எனது வழக்கை சார்ந்த எவருக்கும், எங்கள் சார்பில் வழக்காடிய வழக்குரைஞர்கள், ஏன் தமிழகத்துக்கே அன்று அறிமுகம் இல்லாத புதிய சட்டம் அது.
இன்னும் சொல்லப்போனால் ‘ப.சீ.த.(தடா) சட்டம்’, ‘ப.சீ.த.(தடா)’ ஒப்புதல் வாக்குமூலத்தின் உண்மையான, முழுமையான பாதிப்புகள் குறித்து அதனைப் பதிவு செய்த திரு.தியாகராசன் அவர்கள்கூட அன்றைக்கு முழுமையாக உணர்ந்திருக்கவில்லை என்பதை இன்று அவரது நிலைப்பாட்டின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
அந்தச் சட்டத்தின் உண்மையான கோரமுகம் குறித்து அறிந்தபோது யாருமே மீட்க முடியாத தூரத்துக்கு எமது வழக்குப் போய்விட்டிருந்தது.
பூந்தமல்லி ‘தடா’ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டபோதுகூட நாங்கள் கொலைச்சதிக் குற்றத்தில் தொடர்பற்றவர்கள் என்பதால், அதன் முடிவு கடுமையானதாக இருக்கும் எனக் கற்பனை செய்திருக்கவில்லை.
அதிகம் போனால் விசாரணைக் காலத்தினை மட்டும் தண்டனைக் காலமாகக் கருதி விடுதலை செய்துவிடுவார்கள் என்றுதான் நம்பினோம்.
அதிகஅளவு 7 ஆண்டுகள் தண்டனை தந்துவிட்டால் 6 மாதங்கள் தண்டனைக் கழிவு தந்து அங்கிருந்தே விடுதலை செய்து விடுவது எனச் சிறை அதிகாரிகள் திட்டமிட்டு ஏற்பாட்டுடன் இருந்தனர்.
3 மாதங்கள், 1 ஆண்டு, 5 ஆண்டுகள் என இறுதியாக ஆறரை ஆண்டு சிறையோடு எங்கள் துன்பம் எல்லாம் தொலைந்துபோகப் போகிறது என்கிற கனவுகளோடு இருந்த வேளையில்தான் ‘ப.சீ.த.(தடா)’ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நவநீதம் அவர்கள் தை 15, 2029 / 28-01-1998 அன்று இந்திய நீதித்துறை, இன்னும் சொல்லப்போனால் போர்க்குற்றம் அல்லாத போர் சூழலற்ற எந்த உலக நாடுமே அதற்கு முன்பு அளித்திராத ஒரு தீர்ப்பை வழங்கினார்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பெண்கள் உட்பட 26 பேருக்கும் சாகும் வரை தூக்கிலிட உத்தரவிட்டார். ஆனால், உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் நீதிபதிகள் தமது பத்தி 358-இல் இந்தத் தீர்ப்பைக் கீழ்க்கண்டவாறு வருணித்திருந்தனர்.
“இஃது ஒரு நீதிப் படுகொலை.”
(வலிகள் தொடரும்)
–பேரறிவாளன்
இளைய விகடன் 03.07.2016
Leave a Reply