என்று கொண்டாடுவோம்

விடுதலை நாளை?

இலக்குவனார் திருவள்ளுவன்

வியாழன், 14 ஆக. 2014 , வெப்துனியா

(தமிழ்க் காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன், உரிமையற்ற நாட்டிலே விடுதலைக் கொண்டாட்டமா? என வினவுகிறார். ஆயினும் இவற்றைப் பேசும் உரிமை இன்னும் இருக்கிறது என்பதை நினைவூட்டி, இதனை  வெளியிடுகிறோம். – ஆசிரியர்)
“என்று தணியும் இந்தச் சுதந்திரத் தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
… … …
என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்”
என்று மாக்கவி பாரதியார் அடிமை ஆட்சியில் பாடினார். இன்றும் நாம் மனம் வெதும்பிப் பாடும் வகையில்தான் இந்திய நாடு உள்ளது. இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்று 67 ஆண்டுகள் நிறைவுற்ற பின்னும், நாம் நிறைவான வாழ்க்கைக்குப் போராட வேண்டி உள்ளது.
  1947ஆம் ஆண்டு ‘இலக்கிய’ இதழ் விடுதலை மலரில் அதன் ஆசிரியரான தமிழ்ப் போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், அரசியல் விடுதலை பெற்ற நாம், கல்வி முதலான ஒவ்வொரு துறையிலும் விடுதலை பெறுவது எப்போது எனக் கேள்வி கேட்டிருந்தார்; அந்நாள்தான் உண்மையான விடுதலை நாள் எனக் குறிப்பிட்டிருந்தார். இன்றும் அதே நிலைதான் என்னும் பொழுது அரசியல் விடுதலையின் பயனை நாம் பெறவில்லை என்றுதானே பொருள்.
  முன்பு தமிழ்நாட்டில் ‘குடிதழுவிய கோனாட்சி’ நடைபெற்றது. மன்னரின் தலைமையில் உண்மையான மக்களாட்சி நடைபெற்றது அப்போது. அமைச்சர்கள் தலைமையில் மன்னராட்சி நடைபெறுவது  இப்போது. மக்கள் தலைமையில் மக்களாட்சி நடைபெறுவது எப்போது?
  தடையற்று எண்ணுவதற்கு, எண்ணியவற்றை உரைப்பதற்கு, உரைத்தவற்றைச் செயற்படுத்துவதற்கு உரிமை உள்ள நாடே விடுதலை நாடாகும். ஆனால், இங்கோ, ஆட்சிக்கு எதிராக, ‘இம்’ என்றால் வழக்கு வாழ்க்கை, ‘ஏன்’ என்றால் சிறை வாழ்க்கை என்பதே வழக்கமாகி விட்டது.
  பல தேசிய  இனங்கள் வாழும் நாடு விடுதலை நாடெனில், அங்கே தேசிய இனங்கள் எழுச்சி பெற்று உரிமையுடன் வாழ வேண்டும். இங்கோ தேசிய இனங்கள் ஒடுக்கப்படுகின்றன. சமற்கிருதத்தாலும் இந்தியாலும் தேசிய மொழிகள் ஒழிக்கப்படுகின்றன. அப்படியென்றால் விடுதலை யாருக்கு?
  இங்கே சிலரிடம் செல்வம் குடி கொண்டுள்ளது. பிறரிடம் வறுமை அடைக்கலமாகியுள்ளது. சிலரின் மறைவான கறுப்புப் பணம் வெளியே வந்தால் அறுபது ஆண்டுகளுக்கேனும் வரி விதிக்காமல் ஆட்சி செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால், அச்சிலர் பெறும் பாதுகாப்பு, பிறருக்கு இன்மையால் பெரும்பான்மையர் அல்லலுறும் செல்வ நாடாக நம் நாடு திகழ்கிறது.
உறுபசியும் ஒவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு (திருக்குறள் 734)
என்னும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் தரும் நாட்டிற்கான இலக்கணம் இங்கே காணவில்லை! காரணம் அறிந்தும் களைவார் யாருமில்லை! பசியும் பிணியும் மேலோங்கிப் பகைமை விளையாடும் நாடாகவே நம் நாடு உள்ளது.
  விடுதலை நாள்களிலும் குடியரசு நாள்களிலும் உரைக்கப்படும் உரை ஒன்றே! நாள்தான் வெவ்வேறு! எனவே இவ்வெற்றுரைகளால் வறுமைக்கு முற்றுப்புள்ளியிட முடியவில்லை!
  கல்வியையே கேடற்ற சிறந்த செல்வமாகக் கருதுவது தமிழர் நெறி. இந்திய அரசோ கல்விக்கு ஒதுக்கும் நிதியின் அளவு, பிற நூறு நாடுகளை விடக் குறைவே! படைத் துறைக்கு மிகுதியாகச் செலவழித்தும் வல்லரசின் கனவில்தான் நாட்டுத் தலைவர்கள் உள்ளனரே தவிர, நம் நாடு வல்லரசாகவும் இல்லை! நல்லரசாகவும் இல்லை! எங்கும்  ஊழல்! எதிலும் ஊழல்! படைத் துறையிலோ ஊழலே ஆட்சி செய்கிறது! எனவே, நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
  இந்தியா பெரிய நாடு எனப் பெருமை பேசுகின்றனர். ஆனால், மிகச் சிறிய நாடான சிங்கள இலங்கை, இந்நாட்டு மக்களைக் கடற்பரப்பில் கொன்றொழித்து வரும் பொழுது தட்டிக் கேட்க இயலவில்லை.
  அணி சேராத் தனித்துவம் மிக்க நாடு என்றும் உலக நாடுகளின் உரிமைக்கு முதல் குரல் கொடுத்து உற்றுழி உதவும் நாடு என்றும் ஆளுவோர் பெருமை பேசுகின்றனர். ஆனால் பொருந்தாக் கூட்டணி அமைத்து, ஈழத்தில் பன்னூறாயிரத் தமிழ் மக்களை அழிப்பதையே தன் கடமையாகக் கொண்டு செயல்படுகிறது.
  தமிழ்நாட்டில் இரண்டு தலைமுறை மக்கள் தங்கள் தாய்மொழியான தமிழை அறியாமல் வாழச் செய்யும் கல்வி முறையும் ஆட்சி முறையுமே இங்கே உள்ளது.
  தமிழர்களின் உழைப்பிலும் செல்வத்திலும் கட்டப்பட்ட கோயில்களில் தமிழர்கள் தமிழுடன் நுழைய உரிமை இல்லை!
  மேல் அறமன்றங்களில் தமிழுக்கு அறம் மறுக்கப்படுகின்றது!
  இசையரங்கங்களில் தமிழிசையைத் தொலைப்பவர்களுக்கே தலைமை!
  ஊடகங்களில் தமிழைக் குற்றுயிரும் குறையுயிருமாக ஆக்குபவர்களுக்கே வாய்ப்பு!
  கலைத் துறைகளிலும் தமிழ், கொலை செய்யப்படுவதைத் தடுப்பாரில்லை!
 தமிழாய்ந்த தமிழர்க்குத் தமிழ்த் துறைகளில் இடமில்லை!
தமிழே அறியாமல் தமிழ்நாட்டில் படிக்கவும் பணியாற்றவும் முடியும் என்பதால் பணியிடங்களில் தமிழைக் காண இயலவில்லை! உணவகங்கள், பிற கடைகள், தெருக்களிலும் இதே அவல நிலை!
பிற மொழி எழுத்துகளையும் பிற மொழிச் சொற்களையும் கலந்து தமிழை இது வரை அழித்தது போதாது என மேலும் அழிக்கும் தமிழ்ப் பகைவர் கூட்டத்தினரின் மேலாதிக்கமே எங்கும்!
  தனியர் உரிமை  என்பது மன்பதையின்  ஊடாகவே திகழவேண்டும் என்கிறார் காரல் மார்க்சு. இங்கோ தனியர் உரிமை என்பது மன்பதைக்கு எதிரான செல்வரின் கயமையாகவே உள்ளது. எனவே, செல்வத்தில், கோடியில் புரளுவோர் எல்லா உரிமைகளையும் தங்களுக்கு வாய்ப்பாகப் பெற்றுச் செழிக்கின்றனர்! பிறர் தெருக்கோடியில் புரண்டு அல்லலுறுகின்றனர்!
  இங்கே உரிமை  என்பது ஆட்சியாளர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் பெருஞ்செல்வர்களுக்கும் மட்டுமே என்பதே இலக்கணமாகிவிட்டதால் உண்மையான உரிமையை மக்கள் துய்க்க இயலவில்லை!
  தாய்மொழியில் கல்வி பயிலக்கூடப் போராட வேண்டி உள்ளது இங்கே! போராடியும் பயனற்ற நிலையே நிலவுகிறது இப்பொழுதும்! இதனால் உண்மையான அறிஞர்கள் இங்கே உருவாக முடியவில்லை! ஆங்கிலேயரை அகற்றிவிட்டு அவர்களின் ஆங்கிலத்தை ஏந்தி வாழும் சூழலில் தாய்மொழி அரியணை ஏறுவது எங்ஙனம் முடியும்? தமிழ்நாட்டில் தமிழ் எங்ஙனம் ஆள முடியும்?
 பிற இனத்தவரை வரவேற்கும் தமிழ்நாட்டில் தமிழின மக்களுக்குச் சிறைக் கொட்டடியைவிட மோசமான சிறப்பு முகாம்களே கட்டாயப் புகலிடம்! தமிழுக்கும் தமிழர்க்கும் குரல் கொடுத்துக்கொண்டே மறுபுறம் இன்னல் விளைவிக்கும் இழிநிலை!
“தமிழ்நலம் கொன்றே பிழைப்பவனும்
தமிழுக்குத் தீங்கே இழைப்பவனும்”
தமிழர்க்குத் தலைவர்களாம்!
தமிழைக் காக்கும் தகைமையாளர்களாம்!
“விடுதலையே இவனுக்கென்றும் இல்லையோ! – இவன்
வேற்றுமொழி அடிமைசெய்ய வேண்டிவந்த பிள்ளையோ!”
எனக் கவிஞர் சீனி நைனா முகம்மது கொண்ட கவலை நீங்கும் நாள் எந்நாளோ?
  இந்த நிலை மாறாமல் நாம் விடுதலை இன்பத்தைத் துய்ப்பது எவ்வாறு?
  இவ்வாறு உரிமையற்ற நாட்டில் வாழ்ந்துகொண்டு, உரிமை பெற்றதாக விடுதலை நாளைக் கொண்டாடும் கீழ்மையை அடுக்கிக் கொண்டே போகலாம்! ஆனால், இதற்கெல்லாம் காரணம் மக்களாகிய நாமும்தான்! நாம் நம்மளவில் பிறர் உரிமைகளை மதிப்பவர்களாகவும் ஊழலற்றவர்களாகவும் நேரிய வழியில் உழைப்பவர்களாகவும் ஊழலுக்கு இடம் தராதவர்களாகவும் இருந்தால், நம்மால் தேர்ந்தெடுக்கப்பபடும் ஆட்சியாளர்களும் அவ்வாறுதானே அமைவர்!
“மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர் ச
மானமாக வாழ்வமே!”
என்றும்
“எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்”
என்றும் மாக்கவி பாரதியார் கண்ட கனவை நடைமுறைப்படுத்துவோம்! சாதி,சமய வேறுபாடற்ற ஏழை, செல்வர் பாகுபாடற்ற, எல்லார்க்கும் எல்லாம் எளிதில் கிடைக்கும் விடுதலை நாடமைய உழைப்போம்!
  எனவே, நம்மைத் திருத்துவோம்!
  உண்மை விடுதலையை எய்தும் வகையில் ஆட்சியை அமைப்போம்! உண்மையான விடுதலை நாளை அடுத்த ஆண்டில் கொண்டாடுவோம்!
 webdunai-muthirai-logo