எப்படி வளரும் தமிழ்? 1/3 கவிஞர் முடியரசன்
எப்படி வளரும் தமிழ்? 1/3
உலக நாடுகள் பலவும் தத்தம் தாய்மொழி வாயிலாக அறிவியல் முன்னேற்றங் கண்டு தலை நிமிர்ந்து நிற்பதை நாம் காணுகின்றோம். தமிழ் மொழியிலும் அறிவியல் வளர்ச்சி காணத் துடிதுடிக்கும் நல்லுள்ளங் கொண்டோர் சிலரும் ஈங்குளர் என்பதும் அதன் பொருட்டுப் பெருமுயற்சி மேற்கொண்டு உழைத்து வருகின்றனர் என்பதும் நமக்குக் களிப்பூட்டுவன வேயாகும். அப் பெருமக்கள் உரத்த குரல் கொடுக்கும் பொழு தெல்லாம் நம் உள்ளம் பூரிக்கத்தான் செய்கிறது. ஆனால், முரண் பட்ட கொள்கைகள் பரவிய தமிழ்நாட்டில் அக் குரல், காற்றுடன் காற்றாகக் கலந்து விடுகிறதே தவிர, நோக்கம் முழுமைபெற உதவுகிறதா என எண்ணிப் பார்க்கும்பொழுது வேதனைதான் மிஞ்சுகிறது. அடிப்படை யின்றி மாளிகை எழுப்ப இயலாது. அதுபோல அடிப்படையான மொழியுணர்ச்சியே இல்லாத பொழுது, அறிவியல் முன்னேற்றங் காண இயலாது.
இயற்கையும் செயற்கையும்
‘ஆங்கிலேயர் ஆங்கிலப் பற்றூட்டத் தங்கள் நாட்டிலே கழகங்கள், மன்றங்கள், சங்கங்கள் தோற்றுவிக்கவில்லை; சப்பானியர் தமது மொழியுணர்வூட்டவும் அதனைப் பரப்பவும் அவர்தம் நாட்டில் மன்றங்கள் அமைக்கவில்லை; செருமானியர் தம் மக்களுக்கு மொழியுணர்வூட்டக் கழகங்கள் காணவில்லை. மற்ற எந்த நாட்டினரும் ஏற்படுத்த முயலாதபோது, தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் மன்றங்கள் ஏன்?’ என வினவுவாரும் ஈண்டுள்ளனர். அஃது உள் நோக்கங் கொண்ட வினா; தமிழ் வளர்ச்சியில் அக்கறை காட்டாத நெஞ்சங்கள் வெளிப்படுத்தும் வினா. இன்னுஞ் சிலர், பிற நாட்டினர் செய்யாத ஒன்றை நாம் செய்துள்ளோமே என்று வியந்துகொள்வதும் உண்டு. இஃது அறியாமையில் முகிழ்த்த வியப்பு. பிற நாட்டினர்க்கு மொழிப் பற்று, மொழியுணர்ச்சி யென்பது இயல்பாக வாய்த்த ஒரு பண்பு.
தமிழ்நாட்டில் மட்டும் தமிழ்ச் சான்றோர் தட்டித் தட்டி யெழுப்பியும், அரசியல் தலைவர்கள் போர்ப்பறை சாற்றியும் மொழிப்பற்றை உண்டாக்க வேண்டிய ஓர் அவலநிலை இருந்து வருகிறது. அவ்வுணர்வு இயல்பாக அமைந்த நாடுகளுக்கு மன்றங்கள் வேண்டற் பாலனவல்ல. செயற்கையாக ஊட்ட வேண்டிய தமிழ்நாட்டில் மன்றங்கள் இன்றியமையாது வேண்டப்படுவன வேயாம்.
தமிழ்நாட்டின் நிலை
தமிழகத்தில் தமிழ்மொழிக்கு ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புகளும் இடையூறுகளும் எண்ணிலடங்கா. அறியாமை, தன்னலம், நயவஞ்சகம், வருவோர்க்கெல்லாம் தலை வணங்கல், எளிதில் நம்புதல் முதலியன மண்டிக் கிடக்குந் தமிழ்நாட்டில், தமிழன்னை எத்தனை யெத்தனை இடையூறுகளுக்கு ஆட்பட்டுக் கண்ணீர் சிந்துகிறாள் என்பதை மாசகற்றிய மனமுடையோர் நன்கு அறிவர். தமிழ்ப் பற்று என்று சொன்னாற் போதும்; “குறுகிய மனப்பான்மை” என்று பழி சுமத்தப்படுகிறது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றவுடனே ‘மொழிவெறி’ என்று இகழப்படுகிறது. பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழில் எழுதுதல் கூடாது எனினோ ‘மொழி வெறுப்பு’ எனத் தூற்றப்படுகிறது. எப்படியோ இரு வேறுள்ளங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன என்பதை ஒப்புக் கொண்டேயாதல் வேண்டும். அதனாற்றான் தங்குதடை யின்றித் தமிழ் வளர இயலவில்லை என்பதுதான் உண்மை. துறைதோறுந் துறைதோறும் தமிழ் புறக் கணிக்கப்படுகிறது என்பதை எவரால் மறுக்க முடியும்?
‘குறுகிய நோக்கம், மொழிவெறி, மொழிவெறுப்பு’ என்றெல்லாம் வான்பிளக்கக் கூவும் கூக்குரல் கேட்கிறதே அதில் உண்மையுளதா என நோக்குதல் வேண்டும். அக் கூக்குரல் தமிழ் வளர்ச்சி கண்டு, பொறுக்கா தெழுந்த குரல்; வெறுப்பாற் பிறந்த குரல்; வேறொன் றில்லை. அஃது உண்மை சிறிதுங் கலவாத பொய்ம்மைக் குரல் என்பதை உணர்தல் வேண்டும். தமிழ் மக்களிடம் வெறியுணர்வு மட்டும் இருந்திருப்பின் பிறமொழி இங்கே வாலாட்டுமா? தமிழன்றோ கோலோச்சும். அறிவுடையோர், நடுவுநிலைமை பிறழாதோர், உண்மையுணர்ந் தோர், உள் நோக்கம் இல்லாதோர், வெறி யென்றும் வெறுப் பென்றுங் கூறார். அவ்வாறு கூறின் காந்தியடிகள், தாகூர், இலெனின் போன்ற மேன்மக்களையும் அக் குற்றத்துக் குரியோராகக் கருத வேண்டிவரும்.
‘தாய் மொழியையும் அதில் உள்ள இலக்கியங் களையும் மதிக்காமல், வேறு மொழிகளுக்குத் தங்களை அடிமை யாக்கிக் கொண்டவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் அளவு வேறு நாட்டில் இல்லை’ என்று கூறியவர் யாரெனக் கருது கிறீர்கள்? ‘நோபல் பரிசு’ பெற்று, உலகப் புகழுக்குரியவராகத் திகழ்ந்த இரவீந்திர நாத் தாகூர்தான். இவர் பிறமொழி வெறுப் பாளரா?
‘நாம் உருசிய மொழியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம். தேவையின்றி அயன்மொழிச் சொற்களை நம்முடைய மொழியில் நாம் பயன்படுத்தி வருகிறோம். அயன்மொழிச் சொற்களை அவ்வாறு ஆளும்போதும் தவறாகவே ஆண்டு வருகிறோம். உருசிய மொழியில் Nedochoty, Nedostatki, Probely என்னும் சொற்கள் இருக்கையில் அயன்மொழிச் சொல்லை நாம் நம்முடைய மொழியில் ஏன் எடுத்தாளுதல் வேண்டும்? அண்மையில் எழுதப் படிக்கத் தெரிந்துகொண்ட ஒருவர், அயன்மொழிச் சொற்களை ஆளத் தொடங்குவா ராயின் அவரை மன்னித்துவிடலாம். ஆனால், அவ்வாறே செய்கிற ஓர் எழுத்தாளரை மன்னிக்கவே முடியாது. தேவை யின்றி அயன் மொழிச் சொற்களைப் பயன்படுத்துவதன் மீது ஒரு போரையே தொடுக்க வேண்டிய நேரம் இதுவன்றோ?” (பெங்களூர் குணா)
இவ்வாறு கூறியவர் யார்? உலகமே ஒன்றாக வேண்டும் என்று கைதூக்கிய, விரிந்த, பரந்த, அகன்ற மனப் பான்மை படைத்த, புத்துலகச் சிற்பி வி.ஐ.இலெனின்தான். இவரைக் குறுகிய மனப்பான்மையுடையவர் என்று எந்த அறிவாளி யாவது கூற முற்படுவாரா? நம்மைக் குறைகூறும் விரிந்த மனப் பான்மை படைத்த நிறைமதியாளர் இதற்கு என்ன மறுமொழி கூறுவர்?
உலகமே இவ்வாறுதான் இயங்குகிறது; தாய்மொழியை மதித்துப் போற்றி வளர்த்து வீறுநடை போடுகிறது. ஆனால், தமிழ்நாட்டிற்றான் இயற்கைக்கு மாறான நிலை! அரசியல் காழ்ப் புணர்ச்சிதான் அவர்களை அவ்வாறு பேசச் செய்கிறது. தமக்கும் தாய்மொழி தமிழ்தான் என்றவுணர்வு அவர்தங் குருதியில் வற்றி விட்டது. என் செய்வது? அவர்தம் உடலில் ஓடுங் குருதி, தூய்மை யடைந்து, தாய்மொழியுணர்வுடன் பரவும் நாள் எந்நாளோ?
கவிஞர் முடியரசன்
(இராசபாளையம் திருவள்ளுவர் மன்ற ஆண்டு விழா மலரில் வெளியிடப் பட்டது)
Leave a Reply