எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய் – பாரதியார்
தமிழா, பயப்படாதே, ஊர்தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாத்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்.
சாதி வேற்றுமைகளை வளர்க்காதே. ‘சாதியிரண்டொழிய வேறில்லை’ என்ற பழந்தமிழ் வாக்கியத்தை வேதமாகக் கொள்.
பெண்ணை அடிமை என்று கருதாதே. முற்காலத்துத் தமிழர் மனைவியை “வாழ்க்கைத் துணை” என்றார். ஆத்மாவும் சக்தியும் ஒன்று. ஆணும் பெண்ணும் சமம்.
தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதமிஞ்சி விட்டன. உனது மதக் கொள்கைகள், லௌகீகக் கொள்கைகள், வைதிக நடை-எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலைதூக்கி ஆட இடங்கொடுத்து விட்டாய். இவற்றை நீக்கிவிடு. வீட்டிலும், வெளியிலும், தனிமையிலும், கூட்டத்திலும், எதிலும், எப்போதும் நேர்மையிருக்கவேண்டும்; உண்மையிருக்கவேண்டும். நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது. பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர் பிறரை வஞ்சிப்பதையும் நீ இயன்றவரை தடுக்கவேண்டும். எல்லாப் பேறுகளைக் காட்டிலும் உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர். உண்மை சாத்திரங்களுக்கெல்லாம் வேர். உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி. உண்மை பரமாத்மாவின் கண்ணாடி. ஆதலால், தமிழா, எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய்.
– மாக்கவி பாரதியார்
Leave a Reply