thamizhindia

எல்லாம் தமிழ்நிலமே! குறுஞ்செய்திகள் சில.

 

  1. புறநானூற்று 6ஆம் 17ஆம் பாடல்களில் தமிழகத்தின் எல்லை வடக்கே பனிமலையாம் இமயமலை என்றும் தெற்கே குமரி என்றும் குறிப்பிடுகின்றன. இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் தமிழ்நிலமே என்னும் பொழுது இதன் ஒரு பகுதியாகிய கருநாடக மாநிலமும் தமிழ் நிலமே.

 

  1. ஊர் என்ற பின்னொட்டும் தமிழுக்குரியதே. எனவே, மைசூர், பெங்களூர், மங்களூர், பிசப்பூர், சிக்மகளூர் எனக் கருநாடகத்தில் அமைந்துள்ள பல ஊர்களும் அவை தமிழ்ப்பகுதியாக விளங்கியமைக்குச் சான்றாகும்.

 

  1. எருமையூர் எனத் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்ட தமிழர் வாழ்ந்த பகுதி, எருமை = மகிடம் (எருமையின் ஒரு பெயர்)> மகிசம் > மைசூர் எனச் சமசுகிருதத் தாக்கத்தாலும் ஆங்கிலத் தாக்கத்தாலும் மாறியது.

 

  1. 15ஆம் நூற்றாண்டில் இருந்து 1947 வரை திப்பு சுல்தான் முதலிய இசுலாமியர் காலக்கட்டம் நீங்கலாக உடையார்கள் ஆட்சிபுரிந்துள்ளனர். உடையார் என்பதும் தமிழ்ப் பட்டமே. சான்று: இராசராசச் சோழ உடையார்.

 

  1. கொங்கு தேசத்தின் ஒரு பகுதியாக இருந்ததே மைசூர். இது ‘கங்க தேசம்’ என்றும் அழைக்கப்பட்டது. இங்கு உள்ளவர்கள் ‘கோசர்’ என அழைக்கப்பட்டனர். இவர்களின் வீரத்தாலும் நான்கு மொழியறிவினாலும் தமிழ் மன்னர்களின் படைகளிலும் இடம் பெற்றனர். கொங்கு தேசம் மூவேந்தர் முதலான தமிழ் மன்னர்களின் ஆட்சியில் இருந்துள்ளது.

 

  1. கல் என முடிவதும் தமிழ் ஊர்களே. சான்று: திண்டுக்கல், நாமக்கல். வெண் கல் நிறைந்த பகுதி வெண்கல் > வெண்கல் ஊர் என அழைக்கப் பெற்றது. இது வெண்கல்லூர் > வெங்கல்லூர் > வெங்கலூர் > பெங்கலூர் > பெங்களூர் > தற்பொழுது பெங்களூரு என மாற்றங்கள் பெற்றுள்ளது.

 

  1. பாகு என்பது தமிழ்ச்சொல். கற்கண்டு கலந்து செய்யப்பட்ட பாகு – கண்டப் பாகு – பெர்சியன் மொழியில் மிசிர பாகு எனப்பட்டது. ‘மிசிரி’ என்பது கற்கண்டைக் குறிக்கும் பெருசியச் சொல். மிசிரி பாகு > மைசிரி பாகு > மைசுரி பாகு > மைசூர் பாகு என மருவியது. மைசூர் பாகுவிற்கும் மைசூருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

 

  1. கன்னடர்கள் தாங்கள் தமிழ் வழியினர் என்பதையும் தங்கள் உடலில் தமிழ்க் குருதி கலந்துள்ளதையும் அறிந்தும் அறியாமலும் தமிழருக்கு எதிராகவே செயல்படுவது வருத்தத்திற்குரியது. இந்திய வரலாறு என்பது தமிழக வரலாறே என்னும் உண்மையை அனைவரும் அறியச் செய்து, ‘இந்தியா’ என்பது ‘தமிழ் இந்தியா’ என அழைக்கும் காலம் வந்தால்தான் விடிவு பிறக்கும். பாடம் புகட்டுவார் யாரோ!

 

[திரு. இலக்குவனார் திருவள்ளுவன் நாள்தோறும் குறுஞ்செய்திகள் அனுப்பி வருகிறார். இந்த வாரம் கருநாடக மாநிலம் தமிழ் நிலமே என அவர் அனுப்பிய குறுஞ்செய்திகள் சிலவற்றைக் களஞ்சியம் அன்பர்களுக்காக வெளியிட்டுள்ளோம். – தமிழோசை]

 

(பி.கு.: சில ஆண்டுகளுக்கு முன்னர் அன்றாடம் 700 முதல் 1000 பேருக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பிய பொழுது தமிழோசை நாளிதழில் களஞ்சியம் பகுதியில் இப்பகுதி வெளிவந்தது. குறுந்தகவல் வரையறைக்குப் பின்னர் அவ்வாறு அனுப்புவதில்லை.)

thamizhosai