(சனாதனம் என்பது நிலையானதுதானா? (தொடர்ச்சி)

3. எல்லாரும் சமம் என்பது, எழுதவும் பேசவும் இனிப்பாக இருக்கும்; நடைமுறையில் அது சாத்தியமில்லை. ஒரே வண்டியில் பயணிப்பதால், உரிமையாளரும் ஓட்டுநரும் ஒன்றில்லை. – தினமலரின் சிந்தனைக் களத்தில் சானதனக் காவலாளி இரங்கராசு கூறிய செய்தியாகும்.- சரிதானா?


இஃது அனைத்துச் சாதியினரையும் சமமாகப் பார்க்கக் கூடாது என்பதற்குச் சொல்லப்படும் மறுப்பு விளக்கமாகும்.


பதவி முறையில் உள்ள வேறுபாடு நிலையானதல்ல. அப்பதவி மாறும் பொழுது அதுவும் மாறும். இன்றைய வண்டி ஓட்டுநர் நாளைய உரியமையாளராகலாம். உரிமையாளரும் ஓட்டுநராகும் நிலைக்கு வரலாம். ஆனால், சனாதனத்தில் பணியில் எந்த மாறுபாடு வந்தாலும் பிராமணன் பிராமணன்தான். அதுபோல் உயர்ந்த தொழில் பார்த்தாலும் வைசிகனோ சத்திரியனோ சூத்திரனோ பிராமணனாக முடியாது.
ஆனால், நடைமுறையில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் தமிழ்நெறியே சிறந்ததாகப் பின்பற்றப்படவேண்டும்.


பிராமணனுக்குரிய தொழிலைச் செய்தாலும் சூத்திரன் பிராமண சாதியாகமாட்டான். ஏனென்றால் அவனுக்குப் பிராமண சாதித் தொழிலில் அதிகாரமில்லை யல்லவா? சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் சூத்திர சாதியாக மாட்டான். ஏனென்றால், அவன் ஈனத் தொழிலைச் செய்தாலும் அவன் சாதி உயர்ந்ததல்லவா? இப்படியே இந்த விசயங்களைப் பிரம்மாவும் நிச்சயஞ் செய்திருக்கிறார். (மனு 10.73)


இவ்வாறு தொழில் அடிப்படையில் இல்லாமல் பிறப்பு அடிப்படையில் பிராமணனைச் சனாதனம் உயர்த்துவதைப் பாருங்கள்.
இல்லையில்லை எல்லாம் ஒன்றுதான் என்பவர்கள் பிற வருணத்தாரரைப் பிராமணர் செய்யும் சடங்குகளையும் பூசைகளையும் செய்ய அனுமதிக்கலாமே!

  1. சனாதனம் தொன்மையானதுதானா?
     மக்களை ஏமாற்றி ஈர்க்க வேண்டும் என்பதற்காகச் சனாதனத்தைத் தொன்மையானது என்கிறார்கள்.
     “சனாதனம் என்பது அனாதிக் காலத்தது (உலகம் தோன்றுவதற்கு முன்னரே தோன்றியது ; உலகம் தோன்றும்போதே தோன்றியது, காலம் இன்னது என வரையறுக்க முடியாதது) கடவுளால் படைக்கப் பட்டது. இவை, சனாதனவாதிகள் எல்லாவற்றுக்கும் சொல்லும் ஏற்புக்குச் சிறிதும் ஒவ்வாத அதீதக் கற்பனைகள் – நம்பிக்கைகள்” என்கிறார் செம்மொழி விருதாளர் முனைவர் கு.மோகன்ராசு.
    சனாதனம் என்னும் சொல் முதலில் மகாபாரதத்தில் – பகவத்து கீதையில்தான் வருகிறது எனச் சமற்கிருத அறிஞர்களும் வேத வல்லுநர்களுமே கூறுகின்றனர். அவ்வாறிருக்க அதனைத் தொன்மை எனக் கூறுவது தவறு என்கின்றனர்.
    மகாபாரதத்தில் 6 ஆவது பிரிவான பீசும பருவத்தில் 23 முதல் 40 இயல்களாகக் கீதை புகுத்தப்பட்டது. இவ்வாறு இடைச்செருகல் நேர்ந்தது கி.பி. 7 ஆம் நூற்றாண்டு என அறிஞர்கள் கூறுகின்றனர். கீதையில் தான் முதன் முதலில் சனாதனம் இடம் பெறுகிறது. அப்படி இருக்க எவ்வாறு இது தொன்மையாக இருக்க முடியும்?
    ஆனால் வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் சனாதனம் எனச் சில இடங்களில் வருகிறது. இந்த இடங்களில் பணி என்னும் பொருளில்தான் சனாதனம் இடம் பெற்றுள்ளது. ஒருவேளை இடைச்செருகலாக இருக்கலாம். சில இடங்களில் தரும(ம்) என வரக்கூடிய இடங்களை எல்லாம் சனாதன தருமம் என விளக்கம் தந்து அவ்வாறே சனாதன தரும(ம்) (‘தருமா’) இடம் பெற்றுள்ளதுபோல் தவறாகக் குறிப்பிட்டுள்ளனர். சனாதனம் என்பதற்குத் தொன்மையானது, நிலையானது என்பதும் பின்னர் இட்டுக்கட்டிக் கூறிய பொருளே யன்றி அச்சொல்லுக்குரிய பொருளல்ல. தொன்மையான தமிழ்நெறிக்குப் போட்டியாகக் கூற வேண்டும் என்பதற்காகக் கூறுகிறார்கள் என்பதன்றி வேறில்லை.
    சமற்கிருதச் சொற்களுக்கு, இல்லாத பொருள்களைக் கூறுவதே வடவர் வழக்கம். அதுபோல் சனாதன என்றால் நிலையான எனப்பொருளைப் புகுத்துகிறார்கள். சனா + தன என இரு சொற்களாகக் கூறினாலும் சனாதன என்பதை ஒற்றைச் சொல்லாகக் குறிப்பிட்டுத்தான் பொருள் கூறுகிறார்கள். தமிழின் சிறப்புகளை எல்லாம் தங்களுக்கு ஏற்றிக் கொள்வது சமற்கிருதர்களின் பழக்கம். அதுபோல் முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்த் தமிழ் இருப்பதைக் குறிப்பிடுவதை அறிந்து சமற்கிருதத்தையும் அவ்வாறு குறிப்பிட்டுச் சனாதனத்திற்கும் பழமைக்கும் பழமையானது, புதுமைக்கும் புதுமையானது என்று விளக்கம் தருகின்றனர். என்று பிறந்தனள் என்று அறிய முடியாத தொன்மை மிக்கது தமிழ் என்பதால் சனாதனத்தையும் பிறப்பு அறிய மடியாத தொன்மை வாய்ந்தது என்று பொய்யாகக் குறிப்பிடுகின்றனர்

(தொடரும்)