ezhuthaikaappoam_munattai

 

  தமிழைப் பாதுகாப்பதாகவும் பரப்புவதாகவும் கூறிக் கொண்டு சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு எழுத்துச் சிதைவு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையில் பிற அனைத்து மொழிகளுடனும் ஒப்பிடுகையில் மிகச் சிறந்ததாயும் அறிவியல் முறையில் அமைந்ததாயும் உள்ள ஒரே வடிவப் பாங்கு தமிழ் மொழிக்குரிய வரி வடிவ அமைப்பாகும். இவ்வுண்மையைப் புரிந்து கொள்ளாத சிலர் தாங்களும் குழம்பிப் பிறரையும் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகையோர் மிகச் சிலராய் இருப்பினும் இவர்கள் செல்வாக்கு உள்ள இடங்களில் உள்ளமையாலும் திரும்பத் திரும்பக் கூறியதையே கூறி உண்மையாக இருக்குமோ எனப் பிறரை ஐயப் படுகுழியில் தள்ளப் பார்ப்பதாலும் நாம் மறுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அந்த வகையில் தமிழ் வரிவடிவச் சீர்மையையும் சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளும் சிதைவு முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதன் தேவையையும் நாம் காணலாம்.

குறைபாடுள்ள ஒன்றைத் திருத்துவதே முறையானது. மாறாகச் சீராக உள்ளதைத் திருத்துவது என்பது சீரழிப்பே ஆகும். அந்த வகையில் சீராக உள்ள தமிழ் வரிவடிவங்களில் சிதைவு ஏற்படுத்த வலியுறுத்துபவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் எளிய கவிதைகள் மூலம் தமிழன்னையை அழகுபடுத்தும் அறிஞர் வா.செ.குழந்தைசாமி ஆவார். அவர் குறிப்பிடும் கருத்துகளில் முதன்மையானவை தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை மிகுதியாக உள்ளதாலும் உயிர் மெய்க் குறியீடுகள் சீராக அமையாமையாலும் படிக்க முடியாமல் போகின்றது என்பதாகும். உண்மையில் தமிழ் எழுத்துகளில் உயிர் மெய்க் குறியீடுகள் என்பன அட்டவணை 1 இல் குறிப்பிட்டாற்போன்று கால், பிறை, விலங்கு, கீற்று, கொம்பு என ஐந்தாகும். இவற்றுள் கொம்பும் காலும் இணைந்த கொம்புக்கால் என்பது ஊகாரத்திலும் ஔகாரத்திலும் பயன்படுத்தப்படுகின்றது. இது ள என்னும் எழுத்து போன்று இருந்தாலும் (கொம்பும் காலும் இணைந்த) தனிக் குறியீடு என்பதால் அட்டவணை 1 இல் தனியாகக் காட்டப்பட்டுள்ளது.

ezhuthu_attavanai01

  ஐந்து உயிர் மெய்க் குறியீடுகளே அட்டவணை இரண்டில் குறிப்பிட்டாற்போன்று எழுத்துடன் இணைந்தும் முன்னால் அல்லது பின்னால் அல்லது முன்னும் பின்னுமாகச் சேர்ந்தும் பதினெட்டு வகையாகக் காட்சியளிக்கின்றன.
ezhuthu_attavanai02

  இவற்றுடன் மெய்யெழுத்தில் உள்ள புள்ளி நீக்கப்படுவதன் மூலம் உயிர்மெய் அகரம் உருவாகிறது. எனவே, உயிர்மெய் அமையும் வகை பத்தொன்பது என்று கொள்ளலாம். இவற்றை அட்டவணை 3 அ, அட்டவணை 3 ஆ, அட்டவணை 3 இ ஆகியவை விளக்குகின்றன.
ezhuthu_attavanai03 ezhuthu_attavanai03b ezhuthu_attavanai03c

  இவற்றுள் ணா, றா, னா ஆகியவை மிக மிகத் தொடக்கக்காலத்தில் இவ்வாறேதான் எழுதப்பட்டு வந்துள்ளன. இவற்றைக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களும் குறிப்பிட்டுள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள கலைச்சொல் அகர முதலியிலும் ஆறாயிரம் எனத் துணைக்காலுடன் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது குறிக்கப் பெற்றுள்ளது. பின்னரே எழுதும்பொழுது ஏற்படும் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகப் பிறை என்னும் வடிவமிட்டு எழுதியுள்ளனர். முன்பே இவ்வாறு மாற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளது போல் இப்போது ஏற்றுக் கொண்டால் என்ன என்று சிலர் வினவலாம். குறியீடுகளை அறிவியல் முறையில் அமைக்கும் பொழுதே எழுதும் முறைக்கு முதன்மை கொடுத்து இவ்வாறு அமைத்துள்ளனர். ஆனால் கல்வெட்டுகளில் பெரியார் எழுத்து என்று இப்பொழுது நாம் சொல்லும் இந்த முறையைப் பின்பற்றியுள்ளனர். இவைபோல்தான் ணை, லை, ளை, னை ஆகியன எழுதுகையில் ஏற்படும் எழுத்து மயக்கத்தை அல்லது குழப்பத்தைப் போக்குவதற்காக துதிக்கை எழுத்து என்று இப்போது அறியாமல் அழைக்கப்படுகின்ற முன்வளைத் தலைகீற்று பயன்படுத்தப்பட்டது. இதனால் சுழிகளாக இணைந்து வருகையில் ஏற்படும் ஐயப்பாடு நீங்கியது. டி, டீ ஆகிய எழுத்துகள் உள்ளவாறே மேல் விலங்கு இடப்பட்டால் பி, பீ என்ற எழுத்து போல் தோன்றும் என்பதால் சற்று உள்வாங்கிக் குறியீடுகள் போடப்பட்டுள்ளமை போல்தான் மேலே குறிப்பிட்ட சில ஆகார ஐகாரக் குறியீடுகள் அறிவியல் முறையில் எழுதப்படுவதற்கு வாகாக அமைந்துள்ளன. இவற்றை அறியாமல் நாம் 1978 ஆம் ஆண்டு கொண்டு வந்த எழுத்துச் சீர்திருத்தம் தேவையற்றதாகும். எனவே, மீண்டும் பழைய முறையை நடைமுறைப்படுத்துவதே சிறந்ததாகும்.

அடிப்படையில் அனைவரும் தவறாக எண்ணிவரும் உகரக் குறியீடுகள் அனைத்தும் அறிவியல் முறையில் மிகச் செம்மையாக அமைந்துள்ளன என அட்டவணை நான்கைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். உகரக் குறியீட்டின் பொதுப்பெயர் கீற்று என்பதாகும். எழுத்து முடியும் இடத்திற்கேற்ப இதனைத் தொடர்ந்து குறிப்பிடும் வகையில் உகர உயிர்மெய் எழுத்துகள் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டும் என்றால், க என்னும் எழுத்துடன் கீற்றைக் (க+|)குறிப்பிடுகையில் த என்ற குழப்பம் வரக் கூடாது என்பதற்காகக் கீழ் விலங்குக் கீற்றாக ( ) அமைத்துள்ளனர்; த என்னும் எழுத்தில் முடியும் இடத்தில் கீற்றைக் குறிப்பிடுகையில் த எழுத்தில் இருந்து வேறுபடுத்த முடியாது என்பதால் மடக்கேறு கீற்றாகப் பயன்படுத்தியுள்ளனர். இவ்வடிப்படையில்தான் ஊகாரக் குறியீடுகளும் நேர்த்தியாயும் எழுதுவதற்கு வாகாகச் சீரியதாயும் அமைந்துள்ளன.

ezhuthu_attavanai04

(காப்பு தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்