71pwd

தேவதானப்பட்டிப் பகுதிகளில்

நடைபெற்ற பணியினை மீண்டும் மீண்டும் செய்து

அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் பொதுப்பணித்துறை!

 

  தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி கண்மாய் ஏற்கெனவே குளத்தில் உள்ள கரைகளை மேம்படுத்திச் சீராக வைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் அப்பகுதியில் உள்ள உழவர்கள் பயனடைந்து வருகின்றனர்.இப்பொழுது பொதுப்பணித்துறை, ஏற்கெனவே செய்த வேலையை மீண்டும் உடைப்பு இயந்திரம் கொண்டு கரையை உயர்த்துகின்ற பணியினை செய்து வருகிறது. இதே போல செங்குளத்துப்பட்டி கண்மாயில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் தண்ணீர் வெளியேறும் வாய்க்கால் பணி நடைபெற்றது. அப்போது இயந்திரங்களைக்கொண்டு பணி நடைபெற்றது. மறுபடியும் அதே வாய்க்கால் கரையை உயர்த்தியும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அரசிற்கு இழப்பீடு ஏற்படுகிறது.

  குளங்களை ஆழப்படுத்துதல், கண்மாய்களில் உள்ள மண்களை எடுத்து ஆழப்படுத்துதல், கண்மாய்களின் வன்கவர்வுகளை அகற்றி நீர் தேங்க வழி வகை செய்தல், கண்மாய்களின் நீரினை உறிஞ்சி நீராதாரத்தைக் கெடுக்கும் கருவேலாம் மரங்களை அப்புறப்படுத்துதல் போன்ற ஏராளமான பணிகள் நிலுவையில் இருக்கும்போது ஏற்கெனவே செய்த வேலைகளை மீண்டும் செய்கின்ற மோசடி நடைபெற்று வருகிறது.

  மாவட்ட ஆட்சியர் களஆய்வு மேற்கொண்டு மோசடி நடைபெறும் இடங்களைப் பார்வையிட்டு மோசடி செய்யும் ஒப்பந்தக்காரர்கள் மீதும் அதற்கு உடந்தையாக இருக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீதும் துறை வழியிலாகவும் சட்டப்படியும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

71vaigainaneesu