(ஒளவையார்: 8 : ந. சஞ்சீவி தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 18

2. ஒளவையார் (தொடர்ச்சி)


மூண்டெழும் போருக்கெல்லாம் அடிப்படைக் காரணம் மண் வெறியும் புகழ் நசையுமே என்பதை நன்குணர்ந்த அச்சான்றோர், அம்மண்ணாள் வேந்தர் மனம் கொளும் வகையில் தம் இதயக் கருத்தை எடுத்துரைக்கலானார் : “தேவர் உலகை ஒத்த பகுதிப்பட்ட நாடு தம்முடையது ஆயினும், அஃது எப்போதும் தம்மோடு உரிமைப்பட்டே நடவாது; ஒருவர் அந்நாட்டிற்கு உரியவர் அல்லர். ஆயினும், நற்றவம் செய்தோராயின், அஃது அவர்க்கே உரித்தாகும். ஆகையால், நீவிர் யாசிக்கும் அறவோர் ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து, ஒண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய தண்கமழ் தேறல் மாந்தி மகிழ் சிறந்து, இரவலர்க்கு அருகாது ஈந்து, உங்கட்கு அறுதியிட்ட வாழ் நாள் முழுதும் வாழ்தல்வேண்டும். ஒருவர் பிறவிப் பெருங் கடலைக் கடக்கத் தாம் செய்த நற்கருமமன்றி நற்புணை பிறிதொன்றுமில்லை. அந்தணர் வேள்வியில் வளர்க்கும் முத்தீப்போலக் கண்ணுக்கினிய கவின் மிக்க காட்சியுடன் ஒருங்கிருந்த கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்தர்களே, இவ்வாறு நீங்கள் கூடி உறைதலால் உண்டான பீடும் பயனும் நன்மையும் புகழும் யானறிந்து உரைக்கும் அளவினவோ? உங்கள் வாழ்நாள் விண் மீனினும், மழைத்துளியினும் சிறந்து பெருகுவதாக!” எனத் தமிழக வேந்தர் உணர்ந்து உய்யும் வகையில் அறிவுரை கூறி வாழ்த்தினார்.

‘முத்தீப் புரையக் காண்டக இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்!
யானறி அளவையோ இதுவே?’         (புறநானூறு 387)

என்னும் இவ்வருமை சான்ற அடிகளைத் தன் அகத்தே கொண்டு சங்க இலக்கியத்துள்ளேயே ஒளி மிக்க மணியாய் விளங்கும் இப்புறப்பாடலைப் படிக்குங் தோறும் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே பல்லாற்றானும் சிறந்திருந்த இன்பத் தமிழகத்தைச் சீரழிக்கக்கூடிய கொடு நோய் எதுவென உணர்ந்து அங்நோய் தீர மருந்தும் காட்டிய அவ்வருந்தமிழ்த் தாயரை எண்ணி எண்ணி,
‘அன்னையீர், எங்கள் தலைமுறையிலேனும் ஒற்றுமையால் உய்ந்து உலகு போற்றும் ஒப்பற்ற சாதியாய் விளங்குவோம். அதுவேயன்றி, உமக்கு வேறென்ன கைம்மாறு செய்ய வல்லேம்?’ என்று நம் தமிழ் உள்ளம் உருக்கத்துடனும் உறுதியுடனும் முழங்குகின்றது அன்றோ?

இவ்வாறு தமிழகம் அன்றும் இன்றும் உய்வதற்கு உரிய ஒரு பெருநெறியினைக் காட்டி ஒற்றுமைச் சங்கொலித்த சான்றோராகிய ஒளவையாரின் பிறப்பைப் போன்றே அவர் முடிவைப் பற்றியும் நாம் ஏதும் அறிந்திலோம்.

ஒளவைப்பிராட்டியாரின் பொன்னுடலம்-அண்ணல் அதிகமான் அளித்த அருங்கனியால் நீண்ட நாள் தமிழகத்தில் வாழ்ந்து தொண்டு புரிந்த திருவுடலம்-எங்கு-எப்பொழுது-எவ்வாறு மறைந்ததோ! அந்தோ! அருந்தமிழ்ப் பெருமாட்டியாரின் பொன்னுடலம் மாய்ந்து ‘அவருடற் பூந்துகள் ஆர்ந்தது’ம் நாம் பிறந்து வாழும் இத்தமிழ் மண்ணிலேதான் என்பதை எண்ணும் போது நம் உடலெல்லாம் சிலிர்க்கிறது! அன்னையாரின் திருவுடலம் மறைந்தாலும், அவருடைய அருந்தமிழ்க் கவிதைகள் என்றும் நமக்கு வழி காட்டும் சுடர் விளக்குகளாய்த் திகழ்வது திண்ணம்.

தமிழகம் கால வெள்ளத்தில் நீர்க்குமிழிபோல அழிந்தொழியாமல்-உலக இருள் போக்கும் ஒப்பற்ற கலங்கரை விளக்காய்த் திகழ வேண்டுமாயின், ஒற்றுமை யொன்றே அதற்குரிய வழி என்பதை இன்றும் நாம் உணருமாறு இருபது நூற்றாண்டுகட்கு முன்பே உணர்த்திய ஒளவைப் பெருமாட்டியாரின் அரியதொரு பாடல் தமிழகத்திற்கு மட்டுமன்றிக் கடல் குழ்ந்த காசினிக்கெல்லாம் அறிவுச்சுடர் கொளுத்தும் அணையா விளக்காய் ஒளிர்கிறது.

தம் வாழ்வில் எத்தனையோ மன்னர்களையும் வள்ளல்களையும் பார்த்தவர் ஒளவையார்; அவர்கள் ஆண்ட மண்ணையும் கடலையும், மலைகளையும் காடுகளையும் கண்டவர். அருமைத் தமிழகத்தின் ஐவகை நிலங்களின் அழகும் அவர் கண்ணாரக் கண்டு களித்ததே ஆகும். சோறு படைக்கும் சோழ நாடும், முத்தளிக்கும் பாண்டி நாடும், வேழம் மிகவுடைய சேரநாடும், சான்றோர் பலருடைத் தொண்டை நாடும் அவர் கண்டு பழகிய பகுதிகளே ஆகும். அத்தகையோர் தம் பரந்த அனுபவத்தில் கனிந்த உண்மை ஒன்றை உலகிற்குத் தம் வாழ்வின் காணிக்கையாக அளித்துள்ளார். “நிலனே, நீ ஒன்றில் நாடேயாக, ஒன்றில் காடேயாக! ஒன்றில் பள்ளமேயாக, ஒன்றில் மேடேயாக! எவ்வாறாயினும், எவ்விடத்து ஆடவர் நல்லரோ, அவ்விடத்து நீயும் நல்லையல்லது, நினக்கென ஒரு நலமுடையையல்லை. வாழிய நிலனே!” என்னுங் கருத்தமைய

நாடா கொன்றோ, காடா கொன்றோ
அவலா கொன்றோ, மீசையா கொன்றோ!
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே!’         (புறநானூறு, 187)

என அமைந்ததே அச்செய்யுள்.

இவ்வாறு தம்மையும், நம்மையும் ஈன்றெடுத்த மண் மகளை வாழ்த்தும் அருமையான பாடல், நாமும் வையகமும் உணர்ந்து உய்ய ஒளவையார் அளித்த சாவா மருந்தாகும்.

இருபது நூற்றாண்டுகட்கு முன்பு தாய்க்குலத்தின் பெருமையாய் வெற்றியாய்த் தமிழகத்தில் தோன்றிய ஒளவையார்- நல்லிசைப் புலமை சான்ற பெண்மணிகளுக்கெல்லாம் தலை மணியாய் விளங்கிய தமிழ்ச்சான்றோர்-உலகப் பெருமாதருள் ஒருவரென்பது தமிழகம் உலக அரங்கில் மேலும் மேலும் உயர்ந்து ஒப்பற்ற சமுதாயமாய் விளங்கும் பொன்னாளில் வையகம் முழுதும் ஏற்றுப் போற்ற இருக்கும் பேருண்மையாகும். அத்தகு பெருந் தாயரின் சான்றாண்மை மிக்க நெஞ்சின் உள்ளொளியாய் விளங்கும் அருந்தமிழ்ப் பாடல்கள் என்றென்றும் நம் வாழ்விற்கு இருள் நீக்கி ஒளி காட்டி-சிறுமை நீக்கிச் செம்மை கூட்டி-இறப்பு நீக்கி வாழ்வு ஊட்டி-வளம் புரிவதாக!

(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள்