நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் இரா.இராகவையங்கார். : 18

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 17. தொடர்ச்சி)

4. பாரி மகளிர் (தொடர்ச்சி)

இதன்மேற் கபிலர், அவ்வூரை விடுத்து இளவிச்சிக்கோ என்பானிடஞ் சென்று இம்மகளிரது உயர்குடிப்பிறப்பு முதலியவற்றை எடுத்துரைத்து, இவர்களை மணஞ்செய்து கொள்ளும்படி அவனைப் பாடி வேண்ட, அவன் உடம்படாமையால் இருங்கோவேள் என்பானுழைச் சென்று அவனையும் அவ்வாறு வேண்ட, அவனும் அங்ஙனமே உடம்படானாய் மறுக்க, இதற்காக அவனை முனிந்துபாடி, பாரிகுடிக்கும் மூவேந்தர்க்கும் உண்டாகிய பகைமைபற்றி அரசரொருவரும் இவர்களை மணஞ்செய்துகொள்ள இயையாமையாற் கபிலர் அம்மகளிரைத் தமக்கினிய பார்ப்பார் சிலர்பாற் படுத்து, பாரியின் பிரிவாற்றாது வடக்கிருப்பாராயினர்.

இதற்கிடையிற் கபிலர் செல்வக்கடுங்கோவாழியாதன் என்னும் சேரமான்பாற்சென்று அவனைப் பத்துப் பாடல்களாற் புகழ்ந்துபாடி, நூறாயிரங்காணமும் அவன் மலையேறிக் கண்டு கொடுத்த நாடும் அவன்பாற் பெற்றனர் எனத் தெரிவது. இதுவே பதிற்றுப்பத்தினுள் ஏழாம் பத்தாவது. இவர், பாரி இறந்தபின்னேதான் அவனது நற்குணநற்செயல்கள் செல்வக்கடுங்கோவாழியாத னிடமும் இருப்பனவாகக் கேட்டு, அவனைக் காணச் சென்றனராவர். இதனை,*

பலாஅம் பழுத்த பசும்புண் ணரியல்
வாடை தூக்கு நாடுகெழு பெருவிற
லோவத் தன்ன வினைபுனை நல்லிற்
பாவை யன்ன நல்லோள் கணவன்
பொன்னி னன்ன பூவிற் பசியிலைப்
புன்கா லுன்னத்துப் பகைவ னெங்கோப்
புலர்ந்த சாந்திற் புலரா வீகை
மலர்ந்த மார்பின் மாரிவண் பாரி
முழவுமண் புலரா விரவல ரினைய
வாராச் சேட்புலம் படர்ந்தோ னளிக்கென
விரக்கு வாரே னெஞ்சிக் கூறே
னீத்த திரங்கா னீத்தொறு மகிழா
னமரா வள்ளிய னென்ன நுவலுநின்
னல்லிசை தரவந் திசினே

என்னும் பதிற்றுப்பத்தாலும் (8-ம் பத்து, 1), ‘படர்ந்தோன் என்பது, முற்று. அளிக்கென என்பது, நீ யெம்மை அளிப்பாயாக எனச்சொல்லி என்றவாறு. இரக்கு என்பது தன்வினை. எஞ்சிக்கூறேனென்பது உண்மையினெல்லையைக் கடந்து பொய்யே புகழ்ந்து சொல்லேன் என்றவாறு. யான், பாரி சேட்புலம் படர்ந்தான்: நீ எம்மையளிக்க எனச்சொல்லி இரக்கவென்று வந்து சில புகழ்ந்து சொல்கின்றேனு மல்லேன்; அஃதன்றி யான் உண்மையொழியப் புகழ்ந்து சொல்கின்றேனுமல்லேன்; ஈத்ததிரங்காமை முதலாகிய பாரிநற்குணங்களை நின்பாலுளவாக உலகஞ்சொல்லும் நின்புகழ் நின்பாலேதர வந்தேன்’ என்னும் அதனுரையானும் உணர்ந்துகொள்க. சேரன்பால் இவர் சென்ற காலத்தும் இப் பாரிமகளிரும் உடனிருந்தனர் போலும். இம்மகளிர் வரலாற்றினைப் புறநானூறொன்றே துணையாகக்கொண்டு ஆராயின், அதன்கண்,

(1) அற்றைத் திங்கள். . . . . . . . . .மிலமே (புறநானூறு – 112)

இது பாரிமகளிர் பாடியது.

(2) சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே
கோறிரண் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே.’ (புறநானூறு – 113)

இஃது அவன்(பாரி)மகளிரைப் பார்ப்பார்ப்படுக்கக் கொண்டுபோவான் பறம்புவிடுத்த கபிலர் பாடியது.

(3) ஈண்டுநின். . . . . . . . . .நெடியோன் குன்றே (புறநானூறு – 114)

அவன் மகளிரைக் கொண்டுபோங் கபிலர் பறம்பு நோக்கிநின்று சொல்லியது.

(4) இவரே. . . . . . . . . .பாரிமகளிர்
யானே, பரிசிலன் மன்னு மந்தணன்
நீயே, வரிசையில் வணங்கும் வாண்மேம் படுந
னினக்கியான் கொடுப்பக் கொண்மதி (புறநானூறு – 200)

இது பாரிமகளிரை விச்சிக்கோனுழைக் கொண்டுசென்ற கபிலர் பாடியது.

(5) இவர். . . . . . . . . .பாரிமகளிர் யானே
தந்தை தோழ னிவரென் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே (புறநானூறு – 201)

இது பாரிமகளிரை இருங்கோவேளுழைக் கொண்டுசென்ற
கபிலர் பாடியது.

(6) எவ்வி தொல்குடிப் படீஇயர் மற்றிவர்
கைவண் பாரி மகளி ரென்றவென்
றேற்றாப் புன்சொ னோற்றிசிற் பெரும (புறநானூறு – 202)

இருங்கோவேள் பாரிமகளிரைக் கொள்ளானாகக் கபிலர் பாடியது.

(7) கலையுணக். . . . . . . . . .பாலே.‘ (புறநானூறு – 239)

வேள்பாரி துஞ்சியவழி மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்த கபிலர் பாடியது என வருவனவற்றாற் பாரிமகளிர் ஒருசிலரென்பதும், அவர் பாடவல்லவரென்பதும், அப் பாரி இறந்தபின் அவனது தோழராகிய கபிலரென்னும் புலவரந்தணரால் இளவிச்சிக்கோ, இருங்கோவேளென்னும் அரசரிடம் தம்மை மணஞ்செய்து கொள்ளும்படி வேண்டப்பட்டனரென்பதும், அவ்வரசர் அதற்குடம்படாமையாற் கபிலராற் பார்ப்பார்ப் படுக்கப்பட்டனரென்பதும், இவரைப் பார்பார்ப் படுத்தபின் கபிலர் பாரிபிரிவாற்றாது வடக்கிருந்தனரென்பதும் அறியப்படும்.
இனித் தமிழ்நாவலர் சரிதையினையும் துணைக்கொண்டு நோக்கின்,

சேரலர்கோன் சேரன் செழும்பூந் திருக்கோவ
லூரளவுந் தான்வருக வுட்காதேபாரிமக
ளங்கவையைக் கொள்ள வரசன் மனமியைந்தான்
சங்கியா தேவருக தான்.’

என்பன முதலாக மேல் ஔவையார் வரலாற்றுள் எடுத்துக் காட்டிய பாடல்களானும், பிறவற்றானும் அப் பாரிமகளிர் அங்கவை சங்கவை என்பாரிருவரென்பதும், அவர் திருக்கோவலூரில் இருந்தனரென்பதும், அவ்வூரில் தெய்விகனென்னும் அரசனுக்கு மூவேந்தர்நடுவில் ஒளவையாருடைய நன்முயற்சியாற் சிறக்க மணஞ்செய்து கொடுக்கப்பட்டன ரென்பதும், பிறவும் புலனாகும். இத்தமிழ்நாவலர் சரிதைப் பாட்டுள், ‘பாரிமகள், அங்கவையைக் கொள்ள அரசன் மனமியைந்தான்’ என்பது, முன், அரசர் சிலர் இம்மகளிரைக் கொள்ள மனமியையாமை குறிப்பதாம். இதன் விரிவெல்லாம் ஒளஔவையார் வரலாற்றுட் காண்க.

இங்ஙனமன்றி, ‘பார்ப்பார்ப்படுத்தல்’ என்பது, பார்ப்பார்க்கு மணஞ்செய்யப்பட்டமையேயாம்: என்னை? ‘குறுந்தொடி மகளிர், நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே’ (புறநானூறு, 113) என மேல் வந்தது, பாரிமகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கொண்டுபோவான் பறம்புவிடுத்த கபிலர் பாடிய தாதலான்’ எனின்;– கூறுவேன். கபிலர் பறம்பினை விடுத்தபோதே இம்மகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கருதினாராயின், இளவிச்சிக்கோ, இருங்கோவே ளென்பாரிடம் இவரை மணஞ்செய்துகொள்ள வேண்டார். இவ்வரசர்பாற் சென்று வேண்ட அவருடம்படாத பின்னேதான் கபிலர்க்குப் பாரி மகளிரைப் பார்ப்பார்ப்படுக்கு மெண்ணம் உண்டாயிருத்தலாகும். அதன்பின்னரே பார்ப்பார்ப்படுத்தன ராவர்.

இம் முடிவுநிகழ்ச்சியை உட்கொண்டு, பிற்காலத்துச் செய்யுட்டொகை செய்தார், பறம்புவிடுத்தது முதலும் பார்ப்பார்ப்படுத்தது
இறுதியுமாக இவர்கள் செய்தி நிகழ்தலின் இடையினிகழ்ந்தன வெல்லாங் கூறாமல் இறுதியிற் ‘பார்ப்பார்ப் படுக்கக் கொண்டுபோவான்’ என்பதே குறித்துக்கொண்டார். ‘நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே’ எனப் பாட்டுட் கூறப்பட்டிருத்தலால் இம்மகளிர் மணத்தற்குத்
தக்க ஒருகுலக்கணவரைத் தேடுதலே பறம்புவிடுக்கும்போது கபிலர்க்குள தாகிய எண்ணமென்பது நன்கு புலனாம். நாறிருங்கூந்தற் கணவர் பார்ப்பாரே என முதற்கட் கருதினாரெனின் பார்ப்பார்ப் படுத்தற்குமுன் இளவிச்சிக்கோ, இருங்கோவேளென்னும் வேளிரிடஞ் சென்று வேண்டல் பொருந்தாதாகும். இம்மகளிர் வேளிர்குலக்கொடிகளாதலால் அக்குலத்து நல்லாண்மக்களையே தேடிச்சென்றன ரென்பது தெள்ளிது. ஆதலால், ‘நாறிருங் கூந்தற். . . . . .கிழவரைப் படர்ந்தே’ என்பதற்குக் கீழ்க்குறிப்பே துணையாகக்கொண்டு, பார்ப்பார்க்கு மணஞ்செய்யப்பட்டன ரென்றல் இயையாமை காண்க.

இனிப் பார்ப்பார்ப் படுத்தனெ ரென்பதுதானே, பார்ப்பார்க்கு மணஞ் செய்யப்பட்டன ரென்ப துணர்த்து மெனின் ;- அது ‘பாரிமக ளங்கவையக் கொள்ள வரசன் மனமியைந்தான்’ என்னும் ஒளவையார் பாட்டோடு மாறுகொள்ளும். இவற்றாற் ‘கபிலர் பாரிமகளிரைப் பார்ப்பார்ப் படுத்தனர்’ என்பது, அவர் அம்மகளிரை அரசரொருவரும் மணஞ்செய்து கொள்ளாமையால் தமக்கினிய பார்ப்பார் சிலரது பாதுகாப்பில் வைத்தமையே குறிக்கும். அன்றியும், பார்ப்பார்க்கும் வேளிர்க்கும் மணநிகழ்ச்சி கூறுதலும் இயையாதாம். கபிலர், மகளிரை அரசர்க்கு மணஞ்செய்யலாகாமற் பார்ப்பாரது பாதுகாப்பில் வைத்து வடக்கிருக்க, ஔவையார் அதுதெரிந்து தெய்விகன் என்னும் அரசனை, இம்மகளிரை மணஞ்செய்து கொள்ளும்படி உடம்படுவித்து அவர் மணத்தைச் சிறப்ப வியற்றினர் என்பதே இயைபுடைத்தாவது காண்க.

இம்மகளிர், புலவர் பேரணியாங் கபிலரந்தணர்பாற் பயின்றமைக் கேற்ற நல்லிசைப் புலமையே யன்றி, வரையா வள்ளியோ னாகிய பாரிமகளிர் என்றற்கேற்ற வள்ளற்றன்மையு முடையராயின ரென்பது,

மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்குநீருலையுட்
பொன்றந்து கொண்டு * புகாவாக நல்கினா
ளொன்றுறா முன்றிலோ வில்.

[* புகா என்பது உணவு. ‘புகாக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப், பகா விருந்தின் பகுதிக் கண்ணும்’ என்னுந் தொல்காப்பியத்து (களவியல், 16), நச்சினார்க்கினியர், ‘புகாக்காலை’ என்பதற்கு ‘உண்டிக்காலத்து’ எனக் கூறியவற்றா னுணர்க. ‘புகாவலை விலங்காய்’ என வளையாபதியினும் (புறத்திரட்டு, *] [* புலான்மறுத்தல், 7) வருதல் காண்க. இது நிலா நிலவு என வருதல் போலப் ‘புகவு’ எனவும் வரும். ‘அகநாட் டண்ணல் புகவே’ என்பது புறநானூறு(249). *]

என்னும் பழமொழிச் செய்யுளானும் (171), ‘மாரி யென்பதொன் றின்றி உலகம் வற்றியிருந்த காலத்தும் பாரிமடமகளிர் இரந்து வந்தானொரு பாண்மகற்குச் சோறுபெறாமையால் உலையுட் பொன்னைப் பெய்துகொண்டு திறந்து சோறாகவே நல்கினாளாதலால், ஒரு துன்பமுறாத மனையில்லை என்றவாறு. அல்லதூஉம், சோறும் அரிதாகிய காலத்துப் பொன்னே சோறாக உதவினாளாதலாற் சென்றிரந்தால் ஒரு பயன்படாத மனையில்லை என்றவாறு’ என்னும் அதனுரையானும் அறியப்படும்.

முன்னரே ஒளவையாரது வரலாற்றுள் இம்மகளிரது திருமணச்சிறப்பு முதலியன கூறப்பட்டனவாதலான், ஈண்டு வேறெடுத்தோதினேனில்லை. அதனால் ஒளவையாரென்னும் அறிவுடையாட்டி இம்மகளிர்பால் வைத்த பேரன்பு நன்குணரப்படும்.

இத்துணையுங் கூறியவாற்றால், புவிநிறை பெரும்புகழ்க் கபில ரௌவை அன்பு பாராட்டு மின்புடைப் பாரியி னருமை மகளிர் பெருமையுங் கல்வியும் ஒருவா றுணர்க.

(தொடரும்)

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்

 இரா.இராகவையங்கார்