ஒளவையார்:1: ந. சஞ்சீவி
சங்கக்காலச் சான்றோர்கள் – 10
2. ஒளவையார்
‘-ஒண்டமிழே!
பெண்களெல்லாம் வாழப் பிறந்தமையால் என்மனத்தில்
புண்களெல்லாம் ஆறப் புரிகண்டாய்.’ [1]
எனப் புனல் மதுரைச் சொக்கர் அழகில் சொக்கி மயங்கிய தலைவி, தான் அவர்பால் மாலை வாங்கி வரத் தூதாக அனுப்பும் தீந்தமிழிடம் கூறுகிறாள். என்னே அத்தலைவியின் பேருள்ளம்! பேருள்ளம் படைத்த அத் தலைவியின் வாயினின்றும் பிறந்த அச்சொற்களில் எவ்வளவு ஆழ்ந்த உண்மை அடங்கியுள்ளது!
———–
[1]. தமிழ்விடுதூது
———-
உலக மொழிகளுள்ளேயே-இலக்கியங்களுள்ளேயே-தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தனிச் சிறப்புண்டு. அத்தகைய சிறப்பினை நம் அருந்தமிழ் மொழி பெறுதற்குரிய காரணங்கள் பலப்பல. அவற்றுளெல்லாம் தலை சிறந்தது ஆடவரோடு மகளிரும் சரிநிகர் சமானமாய் விளங்கி இலக்கியத்தையும் மொழியையும் பேணி வளர்த்தமையேயாகும். இது வேறு எம்மொழியினும் நம் செந்தமிழ் மொழிக்கு உரிய தனிச் சிறப்பாகும். தமிழினத்தின் பொற்காலமாய்த் திகழ்ந்த சங்கக் காலத்தில் மட்டும் முப்பது பெண்பாற்புலவர் தமிழகத்தில் விளங்கி, அருந்தமிழ் மொழியைத் தம் ஆருயிர் எனக் கருதிப் போற்றி வளர்த்தனர் என்றால், தமிழினத்தின் பெருமையினையும், தமிழிலக்கியத்தின் வளத்தினையும் நிறுவிக்காட்ட வேறு சான்றும் வேண்டுங்கொல்? சங்க காலத்திற்குப் பின்னும் செந்தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் போற்றிப் புரந்த நல்லிசைப் புலமை மெல்லியலார் பலராவர். அவருள் தலை சிறந்தவராகக் குறிப்பிடத்தகுந்தவர்
‘அற்புதத்திருவந்தாதி’ பாடி அருளிய காரைக்கால் அம்மையாரும், ‘ஆத்தி சூடி’ முதலான அற நூல்களைப் பாடி அருளிய ஒளவைப்பிராட்டியாரும், அருள் சுரக்கும் ‘திருப்பாவை’ செய்தருளிய ஆண்டாளும் ஆவர். இவ்வாறு ஒரு நாட்டின் உண்மையான மேம்பாட்டை அளந்தறிய இன்றியமையாத அளவுகோலாய் விளங்கும் தாய்க்குலத்தின் மேதையில் தலை சிறந்து ஒளிரும் பேரும் பெருமையும் பெற்றிருந்தது தமிழகம். அத்தகைய தமிழகத்தில் அனைத்துலகும் கண்டு வியந்து போற்றும் பெருமிதம் மிக்க பொற்காலமாய்த் திகழ்ந்த சங்கக்காலத்தில்-தமிழினம் ஈன்றெடுத்த நல்லிசைப் புலமை மெல்லியலார்க்கெல்லாம் தலை மணியாய் விளங்கிய பெருமை ஒளவையார் என்னும் தமிழ் அன்னையாரையே சாரும்.
தமிழிலக்கிய வரலாற்றை ஆராய்ச்சிக்கண் கொண்டு நுணுகிப் பார்க்கும்போது ஒளவையார் பலராய் விளங்கல் ஒருதலை. கடைச்சங்க நாளில்-அதிகமான் காலத்தில்-வாழ்ந்த ஒளவையார் ஒருவர்; சமய காலத்தில்-சுந்தரரின் சமகாலத்தவராய் விளங்கிய ஒளவையார் ஒருவர்; காவியக் காலத்தில்-கம்பர் நாளில்-வாழ்ந்த ஔவையார் ஒருவர். இம் மூவரும் ஒருவராயிருத்தல் ஒல்லாது அன்றோ? கி.பி. முதல் நூற்றாண்டிலும் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டிலும் வாழ்ந்தவர் ஒருவர் ஆதல் எங்ஙனம் இயலும்? எனவே, ஒளவையார் ஒருவர் அல்லர் என்பது வெள்ளிடை மலை. இவ்வாறு ஒளவையார் பலராய் விளங்கக் காரணம், சங்கச் சான்றோருள் ஒருவராய் விளங்கும் பேறு பெற்ற அவ்வன்னையாரின் திருப் பெயரைத் தாமும் சூடிக்கொள்வதால் ஆகும் சிறப்பினைப் பிற்காலத்தவர். பெரிதும் போற்றினமையேயாகும், இவ்வாறு ஊழி உள்ள வரை தம் தாய் நாட்டில் வாழும் மக்கள் உள்ளத்து உறையும் பெரும்புலமையும் மிகு புகழும் படைத்த மூதாட்டியாராய் விளங்கினார் முதல்வராய ஒளவையார்.
ஒளவையாரின் பிறப்பு வளர்ப்புப்பற்றி நாம் ஏதும் அறிந்திலோம். எனினும், சங்க இலக்கியப் பாடல்களின் துணைக்கொண்டு அவர் பாணர் குடியில் பிறந்தவர் என்பதும், இளமை முதற்கொண்டே இன்கலை பல பயின்று நூலோடு மதி நுட்பமும் நிரம்பப் பெற்றவராய் விளங்கினார் என்பதும் தெளியலாம். முத்தமிழும் கற்றுத் துறை போய வித்தகச் செல்வியராய் விளங்கிய ஒளவைப்பிராட்டியார் அரசியற் பெரும்பணிகளை ஆற்றுவதிலும் நிகரற்றவராய் விளங்கிய தன்மை தமிழகத்திற்கு உலக அரங்கில் மன்பதை உள்ள வரை மங்காப் புகழைத் தேடித்தருவதாகும். ஈராயிரம் ஆண்டுகட்குமுன் இலக்கியப் புலமையும், அரசியல் திறமையும் ஒருங்கே கைவரப்பெற்ற ஒளவையாரனைய அரிவை நல்லார் எவரும் உலகின் எத்திக்கிலும் வாழ்ந்து விளங்கியதில்லை என்பதைத் துணிந்து கூறலாம். அத்தகு தனிப் பெரும்புகழினைத் தமிழகத்திற்குத் தம் வாழ்வால் வழங்கிய ஒளவைப்பிராட்டியார் அதிகன் ஆண்ட தகடூரிலேயே தம் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்திருத்தல் வேண்டும் என்பது புலனாகிறது.
‘வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலர்’ பெருமானுக்கு ஆருயிர்த் தலைவனாய்ப் பாரிவேள் விளங்கியது போன்றே ஒளவையார்க்கு அதிகமான் விளங்கினான்.
(தொடரும்)
முனைவர் ந. சஞ்சீவி
சங்கக்காலச் சான்றோர்கள்
Leave a Reply