(ஒளவையார்:1: ந. சஞ்சீவி தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 11

2. ஒளவையார் (தொடர்ச்சி)


அதிகமான், அருளும் ஆண்மையும் ஒருங்கே வடிவெடுத்தாற்போன்று விளங்கிய கடையெழுவள்ளல்களுள் ஒருவனாய்த் திகழும் பெருமை பெற்றவன். தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த அதிகமான் நாடு, புனல் வளமும் பூவார் காவின் அழகு வளமும் ஒரு சேரப்பெற்றுப் புலவர் பாடும் புகழ் படைத்திருந்தது. அதிகமான் நாடு பெற்றிருந்த இயற்கைத் திறத்தினும் அவன் நாட்டு மக்கள் பெற்றிருந்த ஆண்மைத் திறனும் அவர்கள் தலைவனான அதிகமான் கொடைத் திறனுமே பல்லாயிர மடங்கு பெரியனவாய் விளங்கின. அதிகமான் வீர வாழ்க்கையின் சிகரமாய் விளங்கினான். அவன் கீழிருந்த மழவர் படை போரையே உணவாகக் கருதி வாழ்ந்தது. கலைஞர்க்கும் புலவர்க்கும் கண்ணினும் இனிய தலைவனாய் விளங்கிய அதிகமான், மாற்றார் வாழ்விற்குக் காலனாகவே இருந்தான். இவ்வாறு ஆடும் விறலியர்க்கும் பாடும் பாணருக்கும் அமிழ்தினும் இனியோனாய் விளங்கிய அவனது நல்லிசைச் சிறப்பினை யெல்லாம் அவன் அரசவைப் புலவராய்த் திகழ்ந்த ஒளவையார் எண்ணற்ற பாடல்களால் இயற்றமிழின் சுவை கனி சொட்டச் சொட்டப் பாடியுள்ளார். அதிகமானது குடி தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. அதிகமான் உலகம் தோன்றிய நாள் தொட்டு உளதாகக் கருதப்படும் முடியுடை மூவேந்தர் குடியுள் ஒன்றாகிய சேரர் குடியைச் சேர்ந்தவன் எனவும், ‘இரும்பனம்புடையலை’ விரும்பிச் சூடுபவன் எனவும் இலக்கியம் போற்றும் பெருமை படைத்தவன். அவன் மரபின் முன்னோர் ‘அரும்பெறல் அமிழ்தம் அன்ன’ கரும்பைத் தேவர் உலகினின்றும் தென்தமிழ் நாட்டிற்குக் கொண்டு வந்தனர் எனப் போற்றப்படுகின்றனர்.

‘அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும்
அரும்பெறல் மரபிற் கரும்பிவண் தந்தும்
நீரக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின்நின் முன்னோர் போல’
        (புறநானூறு.99)

என அதிகமானையும்

‘அந்தரத்(து)
அரும்பெறல் அமிழ்தம் அன்ன
கரும்(பு)இவண் தந்தோன் பெரும்பிறங் கடையே.’
        (புறநானூறும். 392)

என அவன் மகன் பொகுட்டெழினியையும் ஒளவையார் பாராட்டுகின்றார், அதிகமான் முன்னோர், விறல் மிக்க வீரத்திருவினர்; கடல் கடந்து அயல் நாடுகளுக்குப் படை யெடுத்துச் சென்றனர்; பல நாடுகளை வென்றனர். அவ்வாறு வெற்றி கொண்ட நாடுகளுள் ஒன்றிலிருந்து தாங்கள் அடைந்த வெற்றிக்கு அறிகுறியாகத் தீஞ்சுவைக் கரும்பினைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தனர். அதற்கு முன் தமிழகத்தில் கரும்பு இல்லை. அதன் பிறகே கரும்பு இங்கும் பரவியது. இவ்வாறு வெற்றி கொண்ட மன்னன் தான் வென்ற நாட்டினின்றும் அரும் பெறல் பொருள் ஒன்றைக் கொண்டு வரலும், தோற்ற வேந்தனும் தன் தோல்விக்கு அடையாளமாகத் தன் நாட்டின் சிறந்த பொருள் ஒன்றைக் காணிக்கையாகத் தரலும் பழம்பெரும் புகழல்லவோ? அதை ஒட்டி நடந்த நிகழ்ச்சியையே ஒளவையார் ‘அந்தரத்துக்’ கரும்பு இவண் தந்ததாகப் பாடுகின்றார் எனக் கோடலே ஏற்புடைத்தாகும்.

இத்தகு தொன்மை சால் புகழ் படைத்த அதிகமானது பெருஞ்சிறப்பைப் பல்காலும் செவிமடுத்து விருப்புற்றிருந்த ஒளவையார், அவன் திருவோலக்கத்தைச் சேர்ந்தார்; தமிழிசையால் அவன் புகழ் பரவினார். ஒளவையார் தம் அரும்பெருஞ் சிறப்புகளை-யெல்லாம் முன்னமே கேட்டிருந்த அதிகனும், “பழுமரம் தேடிச் செல்லும் பறவை போல்பவர்கள் இப்புலவர் பெருமக்கள்; பரிசில் ஏதும் தந்திடின் ஒளவையார் விரைவில் விடை பெற்று வேறிடம் ஏகிடுவாரே! அவர் பிரிவை நாம் பொறுத்தல் ஒல்லுமோ!” எனப் பலப்பல எண்ணியவனாய்ப் பரிசில் ஏதும் தாராது நீட்டித்தான். மிக நுண்ணிய கலையுள்ளம் படைத்தவரல்லரோ ஒளவையார்? அதிகமானது இச்செயல் கண்டு அவர் வெகுண்டெழுந்தார்; தம் மூட்டை முடிச்சுக்களைச் சுருட்டிக்கொண்டு வெளிக்கிளம்புவார், வாயில் காப்பானைக் கண்டு பின் வருமாறு அஞ்சாது கூறினார்:

“வாயில் காப்போய், வாயில் காப்போய், வண்மை மிக்கோர் செவியாகிய புலத்தில் விளங்கிய சொற்களாகிய நல்விதைகளை வித்தித் தாம் கருதிய பரிசிலை விளைவாகப் பெறும் மன வலி மிகப் படைத்தோர் பரிசிலர். இங்ஙனம் மேம்பாட்டிற்கு வருந்தும் பரிசில் வாழ்க்கையினையுடைய இப்பரிசிலர்க்கு அடையாத வாயிலைக் காப்போய், விரைந்து செல்லும் குதிரைப் படையுடைய தோன்றலாகிய நெடுமான் அஞ்சி தன் தரம் அறியானோ? அன்றி, என் தரம் அறியானோ? அறிவும் புகழும் உடையோர் அனைவரும் மாண்டு ஒழிந்து இவ்வுலகம் இன்னும் வறியதாகிவிடவில்லையே! ஆகலான், யாழ் முதலிய இசைக் கருவிகளையும் அவை வைக்கும் பை முதலியனவற்றையும் மூட்டையாகக் கட்டினேம். மரத்தைத் துணிக்கும் கை வன்மைமிக்க தச்சனுடைய மக்கள் மழுவேந்திக் கானகத்தின் உட்புகுந்தால், அக்காட்டகம் அவர்கட்குப் பயன் படுமாறு போன்றே யாம் எத்திசைச் செல்லினும் அத் திசையெல்லாம் சோறு கிடைக்கும்.”

வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றில் நெடுமான்-அஞ்சி
தன்னறி யலன்கொல்? என்னறியலன்கொல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே! அதனால்
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்(து) அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’.         (புறம். 206)

இவ்வாறு புலமைக்கே உரிய பெருமிதம் புலப்பட வாயிற்காவலனிடம் கூறிவிட்டு விரைந்து வெளிப்போந்தார் ஒளவையார். இதை அறிந்தான் அதிகமான். வாளாவிருப்பானோ? விரைந்து சென்று ஒளவைப்பிராட்டியாரைத் தடுத்து நிறுத்தித் தலையார வணங்கித் தன் உள்ளத்தின் உண்மையைக் கரவின்றிக் கூறினான். நெஞ்சம் திறந்தோர் நிற்காண்குவரே!’ எனக் கூறி நின்ற மன்னனது மனமறிந்த ஒளவையாரும், “ஆ! ஆழ்கடல் முத்துப் போலன்றோ இவன் உள்ளத்தில் நம்பால் கொண்ட அன்பு மிளிர்கிறது!” எனக் கருதி வியந்து போற்றினார்; உவகையோடு அவன் நாளோலக்கத்துக்கு மீண்டும் வந்து, அவன் மனம் மகிழத் தங்கினார்; தம் புலமை நலம் கனிந்து ஒழுகும் பாடல்களால் அவன் கொடை வளத்தைச் சிறப்பித்தார். “யாம் ஒரு நாள் செல்லலம்; இரண்டுநாள் செல்லலம். பல நாளும் பயின்று பலர் எம்முடன் வரச் செல்லினும், முதல் நாள் போன்ற விருப்புடையவன் அவன். அணிகலம் அணிந்த யானையையும், இயன்ற தேரையும் உடைய அதிகமான் பரிசில் பெறும் காலம் நீட்டிப்பினும் நீட்டியாது ஒழியினும், யானை தன் கொம்பிடை வைத்த கவளம்போல அப்பரிசில் நம் கையகத்தது. அது தப்பாது. எனவே, உண்ணற்கு நசையுற்ற நெஞ்சே, நீ பரிசிற்கு வருந்தற்க! அதிகமான் தாள் வாழ்க!” என்னும் கருத்தமைய,

ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ:
அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டா(து) ஆயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் தது.அது பொய்யா காதே;
அருந்(த) ஏமாந்த நெஞ்சம்!
வருந்த வேண்டா; வாழ்கஅவன் தாளே!’         (புறம். 191)

என இவ்வாறு மழவர் பெருமான் வள்ளன்மையை வாயாரப் புகழ்ந்தார் ஒளவையார்.

(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள்