ஒளவை அருளுக்குப்

பாராட்டும்

தமிழுக்குச் செய்ய வேண்டிய

ஆயிரமும்

மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக இருந்த முனைவர் ஒளவை அருள் நடராசன் தமிழ் வளர்ச்சி இயக்குநராகப் பணி அமர்த்தப்பட்டுப் பணிப் பொறுப்பேற்றுள்ளார்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.(திருவள்ளுவர், திருக்குறள் 517)

 என்பதற்கிணங்க முதல்வர் தக்கவர்களைத் தக்கப்பொறுப்புகளில் அமர்த்தி வருகிறார். அவர் பணிப்பொறுப்பேற்றதுமே அவரது நியமனங்கள் இதை மெய்ப்பித்தன. அவற்றின் தொடர்ச்சியாக இந்நியமனமும் அதனை உணர்த்துகிறது. அந்த வகையில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் பதவிக்குப் பொருத்தமானவராக ஒளவை ந. அருள் திகழ்கிறார். சில ஆண்டுகளாகவே அவரிடம் தமிழ் வளர்ச்சி இயக்குநராக அல்லது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநராக வர முயலுமாறு தெரிவித்துள்ளனே். அவரது முயற்சி கடந்த ஆட்சியில் பயனளிக்கவில்லை. இப்போதைய ஆட்சியல் கேளாமலே இப்பொறுப்பு வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

 உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் பெயரன், நாவரசர் ஒளவை து.நடரசான் மகன் என்ற முறையில் வழி வழியாகத் தமிழ்க் குடும்ப மரபில் வந்தவர் தமிழ் வளர்ச்சி இயக்குநராகப் பொறுப்பேற்றது மகிழ்ச்சியளிக்கிறது.

இயக்குநர் பொறுப்புடன் உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் பணயிடத்தைக் கூடுதல் பொறுப்பிலும் முந்தைய மொழிபெயர்ப்பு இயக்குநர் பதவியையும் கூடுதல் பொறுப்பிலும் பார்க்கிறார்.

சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ் இளங்கலைப் பட்டமும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டமும் “அன்றாட வழக்கில் அயற்மொழிச்சொற்கள்” என்ற தலைப்பில் இளநிலை ஆய்வியல் பட்டமும் பெற்றவர். புதுதில்லிப் பல்கலைக் கழகத்தில் “சேக்சுபியர் நாடகங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள், தழுவல்கள் பற்றிய ஆய்வு” குறித்து(Study on translations and adaptations of Shakespeare’s plays in Tamil) ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றுத் தன் இருமொழித் தேர்ச்சியையும் வெளிப்படுத்தியவர்.

முனைவர் பட்டம் பெற்றதும் தில்லிப் பல்கலைக்கழகத்தின் நவீன இந்திய மொழிகள் துறையில் (Modern Indian languages Dept., Delhi university)சில காலம் பணியாற்றினார். அடுத்துக், கிளீயா விளம்பரம் – சந்தைப்படுத்தல்(வ-து)நிறுவனத்தில் கிளை மேலாளர்(Branch manager, Clea Advertising and Marketing ltd) ஆகப் பணியாற்றினார். தொடர்ந்து, செய்தியாளர்(பிரசுமேன்) விளம்பரம் – சந்தைப்படுத்தல்(வ-து.)நிறுவனத்தில் துணைத் தலைவராகப்(Vice president, Pressman Advertising and Marketing ltd) பணியாற்றினார். இப்பணிகளில் அன்றாடப் பயன்பாட்டுச் சொற்களைத் திறம்படப் பயன்படுத்தும் வல்லமை எய்தினார்.

கணிணியியலிலும் வல்லமையும் ஆர்வமும் மிக்கவர். எனவேதான்,  2010 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் நடைபெற்ற செம்மொழித்தமிழ் மாநாட்டில், தமிழ் இணைய மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் பொறுப்பு இவரைத் தேடி வந்தது. அதையும் செம்மையாக முடித்தார்.

எவ்வாறு முத்தமிழறிஞர் கலைஞர் அறிஞர் ஒளவை நடராசன் அவர்களை நேரடியாகச் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் துணை இயக்குநராகப் பணியமர்த்திப் பின்னர்,  மொழிபெயர்ப்புத்துறை இயக்குநராகப் பணியமர்த்தினாரோ, எவ்வாறு கலைஞர் மொழிபெயர்ப்பு இயக்குநர் பணியை அருளுக்கு நேரடியாக அளித்தாரோ அதேபோல், அவரின் திருமகனார் இன்றைய முதல்வர் மு.க.தாலின், ஒளவை அருளுக்குத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் பொறுப்பை அளித்துள்ளார்.

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தைச் சிறப்பாகச் செய்யும் கனவுடன் இயக்குநர் பொறுப்பேற்றிருக்கும் முனைவர் ஒளவை அருளுக்குப் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். மாண்புமிகு முதல்வர் அவர்களும் தமிழ் வளர்ச்சித் துறைக்குரிய  அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் தமிழ்நலச் சிந்தனையுடன் செயல்படுவதால் அவர் எண்ணம் ஈடேறும் என எதிர்பார்க்கலாம்.

அதே நேரம், தமிழுக்குச் செய்ய வேண்டியன ஆயிரத்திற்கு மேல் உள்ளன. ஓராயிரம் செய்குறிப்புகளையாவது சொல்ல விழைகிறேன். இவற்றைத் தனித் தொடராக அடுத்தடுத்து அளிக்கிறேன். எனினும் சுருக்கமாகச் சிலவற்றைச் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின் இன்றைய அமைப்பில் அவர் கனவு கனவாகவே இருக்கவே வாய்ப்புகள் மிகுதி. எனவே, அதிக நம்பிக்கையில் இருந்து ஏமாற்றம் அடைய வேண்டா. வாழ்த்தில் குறிப்பிட்டதற்கும் இதற்கும் முரண்பாடாக இருக்கிறது என எண்ணுகிறீர்களா? வாழ்த்து கனவு நிலையில் குறிப்பிட்டது. இச்செய்தி நனவு நிலையில் குறிப்பிடுவது.

நான் தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் சேரும் வரை (1990) தமிழ் வளர்ச்சி இயக்ககத்தால் தமிழ் வளர்கிறதாக அப்பாவித்தனமாக எண்ணிக் கொண்டிருந்தேன். பிறகுதான் தெரிந்தது, தமிழ் வளர்ச்சியின் தேக்க நிலைக்குக் காரணம் தமிழ் வளர்ச்சி இயக்ககம்தான் என்று. அது மட்டுமல்ல தமிழ் வளர்ச்சி இயக்ககத்தை மூடினால்தான் தமிழ் வளரும் என்ற உண்மையையும் உணர்ந்தேன்.

அப்பதவியில் இருந்த பொழுது கண்டறிந்த உண்மையால் பதவியில் இருந்த பொழுதே தமிழைத் துரத்தும் தமிழ் வளர்ச்சித்துறை எனவும் எழுதி உள்ளேன். அப்போதைய தமிழ் ஆட்சிமொழி அமைச்சர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்களிடமும் இதைக் கூறி விளக்கியுள்ளேன். அதற்கு அவர், “நீங்கள் கூறுவது சரிதான் தம்பி. அதற்காக நாமே தமிழ்வளர்ச்சித்துறையை மூடினோம் என்ற அவப்பெயருக்கு ஆளாவதா” எனக் கேட்டார். பின் அவரே, அதுவே சரியான முடிவாக இருக்கும் என்று ஆணித்தரமாக நம்பினார். அதற்குக் காரணமான ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட விரும்புகிறேன்.

ஒருநாள் தமிழ்வளர்ச்சி இயக்ககத்திற்கு வந்த அமைச்சர் முனைவர் மு.தமிழ்க் குடிமகன், நூலகப் பொறுப்பிற்குரிய அம்மையாரை அழைத்துச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியை எடுத்து வருமாறு வேண்டினார். அப்படி ஒரு நூல் இல்லை என அவர் தெரிவித்ததும் “அதுதான் அம்மா, அகரமுதலி இருக்குமே! எடுத்து வாருங்கள்” என்றார். அப்பொழுதும் அவர் விழித்து நின்றதும் “பாவாணர் அகரமுதலி இங்கே இருக்கிறதா இல்லையா” என்றார். “என் வேலையைத் தவிர வேறு யாரையும் தெரியாது” என்றார். பாவாணரைப்பற்றி அறிவது தன் வேலை அல்ல என்பதுபோலும் பேசினார். அவரிடம், “அம்மா இயக்குநருக்குப் பின்பக்கம் படங்கள் மாட்டியுள்ளனவே அவற்றைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா?”  என்றார். இயக்குநர் தலைமாட்டுப்பக்கம் பாவாணர் படம் இருந்தது. அதனால்தான் அமைச்சர் அவ்வாறு கேட்டார். அதற்கு அந்த அம்மையார்,  “ஐயா, இயக்குநர் அறையில் என்னென்ன படங்கள் மாட்டியுள்ளன என்று பார்ப்பது என் வழக்கமல்ல. எனவே, அறைக்கு வந்தால், இயக்குநர் சொல்வதைக் கேட்டுவிட்டு, அதை நிறைவேற்றுவதுடன் என் வேலை முடிந்து விடும்” என்றார். கோபம் அடைந்த அவர், “ஏன், இயக்குநர் அறையில் நீலப்படங்களை மாட்டி உள்ளார்களா” என்றார். அதற்கு அந்த அம்மையார், “அது குறித்தெல்லாம் எனக்குத் தெரியாது” என்றார்.

பின்னர், அமைச்சர் அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடம், “நான் ஒரு பெண்ணிடம் நீலப்படம் என்றெல்லாம் பேசியிருக்கக் கூடாது. ஆனால், பொறுமையாக எப்படிக்கேட்டாலும் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் இருந்தும் அகரமுதலி தெரியவில்லை என்று கூறியதால் அவ்வாறு பேசினேன்” என்றார். நிகழ்ச்சியை விவரித்தபின் அவர், “(இலக்குவனார்)ஐயா மகன் கூறுவதுபோல் தமிழ்வளர்ச்சித்துறையை மூடினால்தான் தமிழ் வளரும் என்ற முடிவிற்கு நானும் வந்துவிட்டேன். ஆனால், தலைவர் ஆட்சியல் தமிழ் வளர்ச்சித்துறை மூடப்பட்டது என்ற அவப்பெயர் வரக்கூடாது என்று பார்க்கிறேன்” என்றார். முதல்வரும், “என்ன செய்வது இப்படிப்பட்டவர்களை வைத்துத்தான் நாம் தமிழ் வளர்க்க வேண்டியுள்ளது” என வேதனையுடன் தெரிவித்தார். (என் பணிகள் குறித்து வரும் செய்திகள் குறித்தும் நான் நடத்தும் நிகழ்ச்சி குறித்த அழைப்பிதழ்கள் குறித்தும் அவ்வப்போது முதல்வருடன் அமைச்சர் பேசுவது வழக்கம். கலைஞரின் ஆசிரியர் என்பதால்(இலக்குவனார்) ஐயா மகன் என்றுதான் குறிப்பிடுவார். அப்பொழுதும் (இலக்குவனார்) ஐயா மகன் என்று குறிப்பிட்டார்.)

தமிழ்வளர்ச்சித்துறை செயல்பாடுகள் குறித்துக் கலைஞருக்குப் பெருங்கனவு இருந்தது. அவர் ஒரு சமயம் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனாரிடம் இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்ட அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு செய்தி மக்கள் தொடர்புத்துறையில் பணி வழங்குவதுபோல், இந்திஎதிர்ப்புப் போரில் ஈடுபட்ட தமிழாசிரியர்களின் பிள்ளைகளுக்குத் தமிழ் வளர்ச்சித்துறையில் பணி கொடுக்க எண்ணுகிறேன் என்றார். பேராசிரியர் இலக்குவனாரும் இது நல்ல திட்டம் என்றார். இது குறித்து இருவரும் பேசியபின், முதுகலைப்பட்டம் பெற்றவர்களுக்கு இவ்வாய்ப்பு நல்கலாம்  எனக் கலைஞர் தம் முடிவைத் தெரிவித்தார். ஆனால், அவருக்கு அடுத்த நிலையில் இருந்த நாவன்மை மிக்க அறிஞர் தமிழ்படித்தவர்களுக்கு ஆய்வுப் பணி தெரியாது. எனவே, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றார். வேண்டிய பயிற்சியை அளித்துத்தகுதியை உருவாக்கலாம் என்றதற்குத் தகுதியான அதிகாரிகள் இருக்கும் பொழுது இம்முயற்சி எதற்கு என்று மறுத்தார். எனவே, நேரடி நியமன எண்ணம் கைவிடப்பட்டு, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் பணிமாறுதலில் அமரும் வண்ணம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், இந்த அதிகாரிகளால் கலைஞர் எண்ணம் ஈடேறவில்லை.

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்

உள்ளியது உள்ளப் பெறின்(திருவள்ளுவர்)

என்னும் திருக்குறளுக்கு(எண் 540) இலக்கணமாகத் திகழ்பவர் கலைஞர் எனலாம். தான் நினைத்து முடியாதவற்றை நினைத்து நினைத்துத் திட்டமிட்டுச் செயல்படுத்துபவர். பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம் முதலிய பலவற்றைக் கூறலாம். எனவேதான், முதல் ஆட்சிக்காலத்தில் கைகூடாத திட்டத்தை மூன்றாம்முறை ஆட்சிக் கட்டிலில் ஏறியதும் செல்படுத்தினார்.

ஆய்வு நிறைஞர், முனைவர் பட்டங்களைத் தமிழில் பெற்றவர்களைத் தமிழாய்வு அலுவலர்களாக அமர்த்தினார்.

ஆனால், இவ்வாறு தமிழில் ஆய்வுப்பட்டம் பெற்றவர்கள் துறைக்கு வருவதை இயக்ககத்தினர் விரும்பவில்லை.  தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் இல்லாத மாவட்டந்தோறும் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுத்தான் தமிழாய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். எனினும் தமிழ் படித்தவர்களால் தங்களின் பதவி உயர்வு பாதிக்கப்படும், தங்களின் தமிழறியாமை வெளிப்படையாகத் தெரிந்து விடும் என்பவற்றால், இயக்ககத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழ் வளர்ச்சித் துறையின் பணித்தேக்கங்களுக்கும் இயக்ககத்தினர்தான் காரணம். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பணிக்கான தகுதி, பட்ட வகுப்பில் முதல் பிரிவில் தமிழில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், இதில் கூட வெற்றி காணாதவர்கள் தாங்கள் பட்ட வகுப்பில் தேர்ச்சி பெறும்வரையும் பணியிடங்கள் ஒழிவாக இருக்கச் செய்தனர். இதனால் ஒரு காலத்தில் தமிழ் நாடு முழுவதும் இயக்ககத்தில் மட்டும் சில அலுவலர்கள் இருந்து தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பணியிடங்களைக் கூடுதல் பொறுப்பில் பார்த்தனர். முழுவதும் பணிகளைப் பார்க்க இயலாது அல்லவா? எனவே, பணப்பட்டியல்களில் கையொப்பமிடும் வேலைகளை மட்டும் பார்த்தனர். பணப்பட்டியல்களை இயக்ககத்திற்குக் கொண்டு வருவோர் அதற்கான சம்பளத்தைத்தான் பெற்றனர். பிறரோ சம்பளம் வாங்கும் வேலைக்காகச் சம்பளம் வாங்கினர்.

இச்சூழலில் பட்டவகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமாவது பணியில் அமர ஒழிவிடங்களை நிரப்ப இயக்கத்தினரே ஒத்துழைத்தனர். ஆனால், தமிழ் படித்தவர்கள் வரக்கூடாது என்பதற்காக வெளியார் நியமனம், புதிய நியமனம் கூடாது என்ற போர்வையில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆட்சித்துறைக்குத் தமிழ் படித்தவர்கள் தேவையில்லை என்னும் பொருண்மையில் வழக்கும் தொடுத்தனர். நானும் மற்றொரு நண்பரும் தமிழ்நலம் கருதி எதிர் வழக்காடினோம். மாநிலத் தீர்ப்பாயத்தில் ஒரு நடுவர் இருந்தார். மூத்த நடுவர் என்பதால், வழக்குரைஞர்களைக் கடுமையாகப் பேசுவதும் அவர்களைப் பேசவிடாமல் செய்வதுமே தம் திறமை என்பதுபோல் செயல்படுபவர் அவர். அவர், தீர்ப்பாய நீதி மன்றத்தில் “தமிழ் படித்தவர்களுக்கு இங்கென்ன வேலை? வேறு எங்காவது செல்ல வேண்டியதுதானே” என்றார். மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன் எங்கள் சார்பில் வழக்காடினார். அவரை மையத் தீர்ப்பாயத்தில் உறுப்பினராக(நீதிபதியாக) நியமிக்கவும் இவர் கருத்தைக் கேட்டிருந்தனர். அவர் போன்ற சிலரிடம் மட்டும் அடக்கமாக அந்த நீதிபதி பேசுவார். அவர் மறுமொழியாகத்,  “தமிழ்வளர்ச்சித்துறையிலேயே தமிழ் படித்தவர்களுக்கு வேலை இல்லை என்றால் வேறு எங்குதான் அவர்கள் செல்ல வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?” எனக் கேட்டு அவர் வாயை அடைத்தார். இருப்பினும் நாங்கள் உச்சநீதிமன்றம் சென்றுதான் நீதி பெற முடிந்தது. தமிழ் வளர்ச்சித் துறையில் இருந்துகொண்டே தமிழ் வேண்டா என்பவர்களால் எங்ஙனம் தமிழ் வளரும் என்பதை உணர்த்தத்தான் இதைக் குறிப்பிட்டுள்ளேன். இருப்பினும் தமிழ்படித்தவர்களை விரும்பாத முந்தையவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. சிலவற்றைத் தெரிவிக்க விழைகிறேன்.

மதுரையில் சித்திரைப் பொருட்காட்சி அரங்கங்கள் ஆங்கில மயமாகக் காட்சி யளித்தன. இவற்றை மாற்றுவதற்காகத் தமிழில் எழுதும் துறைகளுக்கு நால்வகையில் மும்மூன்று பரிசகளாக 12 பரிசுகள் அளித்தேன். சிறப்பாக எழுத வழிகாட்டவும் செய்ததால் அரங்கங்கள் முழுமையும் தமிழாயின. ஆனால், “அரசாணை உள்ளதா? எப்படி இப்படிப் போட்டிகள் நடத்தமுடியும்” என இயக்ககத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.  ஆனால், செயலரின் தந்தை பெயரில், உரைவேந்தர் ஒளவை துரைசாமி கேடயங்கள் என அறிவித்திருந்தமையால் அடங்கி விட்டனர். தமிழ் வளர்ச்சி இயக்குநர், “சிறைத்துறையிலிருந்து தமிழ்வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டதுபோல், இங்கும் சொந்தப் பணத்தைச் சிறிது செலவழித்து இங்கும் தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுங்கள்” என்று சொல்லியிருந்தார். எனவே, அவர் பாராட்டினார்.

மதுரை மாநாகராட்சிப் பணியாளர்களுக்கு ஆட்சிமொழிச் செயலாக்கம் குறித்துக் கட்டுரைப்போட்டி நடத்தி ‘குறளியம் வேலா நினைவுப் பரிசுகள்’ வழங்கினேன். புலவர்மணி இளங்குமரன் ஐயா சிறப்புரை ஆற்றினார். தமிழ் வளர்ச்சி இயக்குநர் சிவஞானம் பரிசுகள் வழங்கினார். இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து இயக்குநரிடமும் முறையிட்டனர். அவர், “எனக்கு ஒன்றும் தெரியாது. அவர் என்னை அழைத்தார். நான் பங்கேற்கிறேன். அவ்வளவுதான்” என்று சொல்லி விட்டார்.

ஒரு முறை மதுரை வந்திருந்த தமிழ்வளர்ச்சித்துறைச் செயலர் அறிஞர் ஒளவை நடராசன், அங்கிருந்தவாறே திருவனந்தபும் சென்று அங்குள்ள தமிழ்ச்சங்கத்தில் உரையாற்ற இருப்பதாகக் குறிப்பிட்டார். என்னையும் அழைத்தார். அவர்கள் பணியையும் அறிந்து கொள்ளலாம். உங்கள் பணிகளையும் அவர்களிடம் நான் அறிமுகப்படுத்துகிறேன் என்றார். அடுத்த மாநிலம் என்பதால் இயக்ககத்தில் எதிர்ப்பு தெரிவிப்பர் என்றேன். “செயலரே அழைக்கின்றேன். இயக்ககத்தில் என்ன சொல்வது” என்றார். ஆனால், விளக்கம் கேட்டனர். அன்றைக்கு விடுப்பு விண்ணப்பிக்க வேண்டும் என்றனர். நான் மறுத்து விட்டேன். துறையின் மிக உயர் அதிகாரி அழைக்கும்பொழுது உடன் செல்வதுதான் முறை என்று கூறினேன். ஆனால், தொடர்ந்து எழுதி, அரசாணை இருந்தால் காட்டுங்கள் என்றனர். அடுத்து மதுரை வந்த ஒளவையிடம் தெரிவித்தேன்.  முகாம் மதுரை என்று குறிப்பிட்டு அவர் உடன் வருமாறு அறிவுறுத்தியும் இது அரசுப்பணி என்றும் குறிப்பிட்டுத் தட்டச்சிடச் செய்து தந்தார். இதை எதிர்பார்க்காத இயக்ககத்தினர் அமைதியாயினர்.

தஞ்சாவூர் உலகத்தமிழ் மாநாட்டில்  5 நாளும் பங்கேற்றேன். ஒரு நாள் கட்டுரையும் வாசித்தளித்தேன். 5 நாளுக்கும் தற்செயல் விடுப்பு விண்ணப்பம் அளிக்குமாறு கேட்டனர். பணிக்குறிப்பில் நான், உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்பதைக் குறிப்பிட்டுள்ளேன். இதனை அலுவல்முறையாகக் கருத வேண்டினேன். “மற்றொரு துணை இயக்குநரே தற்செயல் விடுப்பு பெற்றுச்  சென்றுள்ள போது, நீங்கள் மட்டும் தர மறுப்பது சரியல்ல” என்றனர். “உங்கள் தொல்லைக்குப் பயந்து அவர் விடுப்பிற்கு விண்ணப்பித்திருப்பார். தமிழ் வளர்ச்சித்துறையில் இருந்து தமிழ் மாநாட்டிற்கு விடுப்பு எடுக்க வேண்டும் என்றால் அநீதி. நான் தர முடியாது” என்றேன். “செய்தித் துறையில் எல்லா அலுவலர்களையும் பணி முறையில் வரச் செய்துள்ளனர். நீங்கள் அவ்வாறு அழைக்காததையே பிற துறையினர் அவமானமாகக் கருதுகின்றனர். எனவே, நான் விடுப்பு விண்ணப்பம் அளிக்க மாட்டேன். மீண்டும் கேட்டால் செய்தி யிதழ்களில் இதை வெளியிடச் செய்வேன்” என்றேன். நாங்களாகக் கழித்துக் கொள்கிறோம் என்றனர். எனக்கு விடுப்பு தேவைப்படும்போது இடர்ப்பாடு வந்தால் வழக்கு தொடுப்பேன் என்றேன். அதிமுக ஆட்சியில் நடைபெறும் மாநாடு. எனவே, இவ்வாறு கூறியிருப்பார்கள் என எண்ண வேண்டா. “கலைஞர் ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் யாவரும் தி.மு.க.வினர், குறிப்பாகத் தமிழ் ஆய்வு அலுவர்கள் அனைவருமே கட்சிப்பணி யாற்றுபவர்கள்” என்று மடல்கள் எழுதி அனைவரையும் நீக்க வேண்டும் என்றனர். இவர்களே கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்த பொழுது தங்களைத் தி.மு.க.வாகக் காட்டிக் கொண்டு பயனடைந்தனர். இவ்வாறு, ஆட்சித்தமிழ்ச் செயல்பாட்டில் மக்கள் பங்களிப்பும் தேவை எனக் கருத்தரங்கத்தை மக்கள் அரங்கமாகப் பொதுவெளியில் நடத்தியதற்கு எதிர்ப்பு என்பதுபோல், சொல்ல மிகுதியாக உள்ளன. பக்க அளவு கருதி முடித்துக் கொள்கிறேன்.

எல்லாத் துறைகளிலுமே தலைமை அலுவலகங்களில் உள்ள அமைச்சுப் பணியாளர்களால்தான் தீயனவும் நல்லனவும் நடைபெறுகின்றன. ஆகவே, இயக்ககப் பணியாளர்கள் கருத்தை நடைமுறைப்படுத்தாமல் உங்கள் கருத்தை நடைமுறைப்படுத்தச் செய்யுங்கள். அதே நேரம், பணியாளர்களின் பண நிலுவைகள், பதவி உயர்வு நிலுவைகள் போன்ற நலப்பணிகளிலும் கருத்து செலுத்துங்கள்.

‘தமிழ் ஆட்சிமொழிச்சட்டம் 2022’ எனப்புதிய சட்டத்தை நிறைவேற்றச் செய்யுங்கள். இப்பொழுது தமிழ் படித்தவர்கள் துறையில் சேர்ந்து விட்டனர். எனினும் பதவிக்காக மட்டுமே போராடியவர்கள் துறைத்தேர்வில் தமிழ் இலக்கியம், மொழிபெயர்ப்பு போன்ற தேர்வுகளை வைக்கச் செய்து தமிழறிவை வளர்க்கச் செய்யவில்லை. எனவே, துறை அலுவலர்கள் அனைவருக்கும் தமிழ்த்தகுதியை மேம்படுத்துங்கள். வெளியில் உள்ளவர்கள் “வளர்ந்த தமிழை வளர்க்க இவர்கள் யாவர்” எனக் கேட்பதை நீங்களே அறிவீர்கள். எனவே, துறையின் பெயரைத் ‘தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்துறை’ என மாற்றச் செய்யுங்கள். இவை போன்ற பலவற்றை அடுத்து நான் தெரிவிக்கின்றேன்.

“பிறரும் துறையின் நலன் கருதிக் கூறுவனவற்றைச் செவி மடுத்து நல்லனவற்றை விரைந்து ஆற்றுங்கள். உங்களால் இயலும் என்பதால், எண்ணிய எண்ணியாங்கு எய்துமாறு செயல்பட்டுத் தமிழ் வளர்ச்சித் துறையைப் பொலிவும் வலிவும் மிக்கதாக மாற்ற” வாழ்த்துகிறோம்.

ஒளவை முனைவர் ந.அருள் செயல்களில் நிறைவெய்தி நீடு வாழ்க! வெல்க அவர் பணிகள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல