நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்இரா.இராகவையங்கார். : 14

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 13. தொடர்ச்சி)

3 . ஔவையார் (தொடர்ச்சி)

இதனான் இவர் பாண்டி நாடு புகுதற்கு முன்னே வேற்றுநாட்டு ஊர்கள் பலவற்றிற்குச் சென்றிருந்தனர் எனவும் ஆண்டெல்லாமில்லாத நல்ல தமிழைப் பாண்டியநாட்டேதான் கண்டன ரெனவும், அக்காலத்து அம்பர்நகரத்து வளமையும் வண்மையு மிக்க குடிகள் பல இருந்தன எனவும், திருவாவினன் குடியில் முத்தீயோம்பும் நான்மறை யந்தணர் நிறைந்திருந்தனர் எனவும் அறியப்படும். நல்லிசைப் புலவர் பல்லோர் ஒருங்கு குழீஇத் தமிழாயுநன்னா டாதலின், “நின்னாட்டுடைத்து நல்லதமிழ்” என்றார். இவர் அப்பாண்டியன்பால் இனிதுறையுங்காலத்து ஒருநாள் அப்பாண்டியன் தன் வாயிலில் ஐந்து பொற்கிழி கட்டி வைத்து, மூன்று கிழி சங்கிலி யிறப்பாடுக எனவும் ஒருகிழிக்கு நிறை நில்லாத கவிபாடுக எனவும் மற்றொன்றுக்கு நாலுகோடி கவிபாடுக எனவும், சொன்னபோது இவர்,

‘தண்டாம லீவது தாளாண்மை தண்டி
படுத்தக்கா லீவது வண்மை யடுத்தடுத்துப்
பின்சென்றா லீவது காற்கூலி பின்சென்றும்
பொய்த்தா னிவனென்று போமெ லவன்குடி
யெச்ச மிறுமே லிறு.’ (தமிழ் நாவலர் சரிதை)

‘வழக்குடையார் நிற்ப வரும்பொருள்கை வாங்கி
வழக்கை வழக்கழிவு சொல்லின் — வழக்குடையார்
சுற்றமுந் தாமுந் துடைத்தெழுகண் ணீராலேழ்
சுற்ற மிறுமே லிறு.’ (தமிழ் நாவலர் சரிதை)

‘சென்றுழு துண்பதற்குச் செய்வ தரிதென்று
மன்றுழு துண்பான் மனைவாழ்க்கை — முன்றலிற்
றுச்சி லிருந்து துடைத்தெழுகண் ணீராலே
ழெச்ச மிறுமே லிறு.’ (தமிழ் நாவலர் சரிதை)

என்னும் பாடல்களைப்பாடி முதன் மூன்று கிழிகளையும் இற்று வீழச் செய்து,

‘வையக மெல்லாம் வயலாய் வானோர்
தெய்வமா முகடு சேரி யாகக்
காணமு முத்து மணியுங் கலந்தொரு
கோடானு கோடி கொடுப்பினு மொருநா
ளொருபொழு தொருவனூ ணொழிதல் பார்க்கு
நேர்நிறை நில்லா தென்னு மனனே.’ (தமிழ் நாவலர் சரிதை)

என ஒரு நிறை நில்லாத அகவலும்,

‘மதியாதார் முற்ற மதித்தொருகாற் சென்று
மிதியாமை கோடி யுறும்.
உண்ணீருண் ணீரென்றே யூட்டாதார் தம்மனையி
லுண்ணாமை கோடி யுறும்.

கோடி கொடுத்துங் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுவதே கோடி யுறும்.
கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி யுறும். (தமிழ் நாவலர் சரிதை)

என நாலு கோடி கவியும் பாடித் தஞ் சொல்லின்மாட்சி யெல்லார்க்குந் தெரித்து, வேத்தவையேத்த விளங்கி வதிந்தனர்.

இதற்கிடையில் தமிழ்மூவேந்தரும் தம்மினுமேம்பட்ட வண்புகழுடையனாதலால் அழுக்காறுகொண்டு, பாரி என்னும் வள்ளற்றலைவனோடு பகைத்து, அவனது பறம்பாகிய மலையரணை நெடுங்கால முற்றியும் பாரியின் போர்வலியாலும் அவனுக்குயிர்த்துணைவராய்ச் சிறந்த கபிலரின் சூழ்ச்சியாலும் அவர்க்கு வெல்லற் கரிதாகவும் அவனை வஞ்சித்துக்கொல்ல, அக்காலத்து ஆண்டிருந்த கபிலர் அப் பாரிபால் வைத்த பேரன்பினால் துணையின்றிக் கழிந்த அவனது அருமை மகளிரை அப்பறம்பினின்று கூட்டிக்கொண்டு, அக்காலத்து வேளிருட் சிறந்த இருங்கோவேள் முதலியோர்பாற் போய் இவர்களை மணஞ் செய்துகொள்ள வேண்டியும், மூவேந்தர்க்கும் பாரிக்கும் நிகழ்ந்த பகைமைபற்றி அவர்கள் உடம்படாமையால் அம்மகளிரைத் தமக்கினிய பார்ப்பார் சிலரது பாதுகாப்பில்வைத்து அப்பாரியின் பிரிவாற்றாது வடக்கிருப்பாராயினர்.

இது தெரிந்த ஔவையார் மேனிகழ்ந்தவற்றிற்கு மனநொந்து அப் பாரிமகளிரிருந்த திருக்கோவலூர்க்கட்புக்கு அம்மகளிரைக் கண்டு அவர்கட்கு நேர்ந்த பெருந்துயர்க்கு மிகவும்வருந்தி, அவர்கள் அன்றிரவு தமக்கு இலைக்கறியிட அதனை யுண்டு மகிழ்ந்து,

‘வெய்தாய் நறுவிதாய் வேண்டளவுந் தின்பதாய்
நெய்தா னளாவி நிறையிட்டுப் — பொய்யே
யடகென்று சொல்லி யமுதத்தை யிட்டாள்
கடகஞ் செறியாதோ கைக்கு.’ (தமிழ் நாவலர் சரிதை)

என்னும் பாடலைப்பாடி, அவர்கள் ஒரு நீலச்சிற்றாடை கொடுக்க அப்போது, ‘பாரி பறித்த கலனும்’ என்னும் வெண்பாவினைப்பாடி, அவர்களை நன்னிலையினிறுத்துங் கவலையேபெரிதுடையராய், ஆண்டிருந்த தெய்வீகனென்னும் அரசனொருவனை இவர்களை மணம் புரியும்படி வேண்டி உடம்படுவித்தனர். இவ்வரியபெரிய மணத்திற்கும் தாம் பெற்ற தெய்வத்தன்மையால் வேண்டுவன அனைத்தும் உளவாக்கி, மூவேந்தர்க்கும் பாரிகுடிக்குமுள்ள பகைமையும் போக்கி, அம்மூன்றரசரையும் தம்மறிவின் வலியாற் கோவலூர்க்கண் வரவழைத்து, அப்பாரிமகளிரது திருமணத்தைச் சிறப்பவியற்றினர். 

இவ் வௌவையாரால் இப்பாரிமகளிர் மணம் சிறப்ப நிகழ்த்தப் பெற்றமையறியப்படுதலான், ‘கபிலர் பாரிமகளிரைப் பார்ப்பார்ப் படுத்தனர்’ என்பது, அவர் அம்மகளிரைப் பார்ப்பாரது பாதுகாப்பின் வைத்தமையே குறிக்கும். இப் பெருமணத்து ஔவையார் பனந்துண்டம் பழந்தரவும், பெண்ணையாறு நெய்பால் தலைப்பெய்து வரவும், வானம் பொன்மாரி பொழியவும் பாடித் தமது தெய்வவாக்கின் வலிமை யுணர்த்தின ரென்ப. பெண்ணையாறு இவர் பாடலுக்கு நெய்பால் தலைப்பெய்து வந்த கதை வில்லிபுத்தூரர் மகனார் வரந்தருவாரானும்,

ஔவைபா டலுக்கு நறுநெய்பால் பெருகி
யருந்தமி ழறிவினாற் சிறந்து
தெய்வமா நதிநீர் பரக்குநா டந்தத்
திருமுனைப் பாடிநன் னாடு.

என்பதனான் எடுத்தாளப் பட்டுள்ளமை தேறுக. இவற்றை யெல்லாம், தமிழ் நாவலர் சரிதையில் ஒளவையார் அங்கவை, சங்கவையைத் தெய்வீகனுக்குக் கல்யாணம் பண்ணுவிக்கிறபோது ஓலையெழுத விநாயகனை அழைத்த வெண்பா:

‘ஒருகை யிருமருப்பு மும்மதத்து நால்வாய்க்
கரியுருவக் கங்காளன் செம்மல் — கரிமுகவன்
கண்ணால வோலை கடிதெழுத வாரானேற்
றன்னாண்மை தீர்ப்பேன் சபித்து.’

சேர சோழ பாண்டியர்க்கு
விநாயகன் எழுதப் பாடிய வெண்பாக்கள்.

‘சேரலர்கோன் சேரன் செழும்பூந் திருக்கோவ
லூரளவுந் தான்வருக வுட்காதே — பாரிமக
ளங்கவையைக் கொள்ள வரசன் மனமியைந்தான்
சங்கியா தேவருக தான்.”

‘புகார்மன்னன் பொன்னித் திருநாடன் சோழன்
றகாதென்று தானங் கிருந்து — நகாதே
கடுக வருக கடிக்கோவ லூர்க்கு
விடியப் பதினெட்டா நாள்.

‘வையைத் துறைவன் மதுரா புரித்தென்னன்
செய்யத் தகாதென்று தேம்பாதே — தையற்கு
வேண்டுவன கொண்டு விடியல்பதி னெட்டாநா
ளீண்டு வருக வியைந்து.

மூவரும் வந்தபோது பனந்துண்டத்தைப் பாடியது.

திங்கட் குடையுடைச் சேரனுஞ் சோழனும் பாண்டியனு
மங்கைக் [*] கறுகிட வந்துநின் றார்மணப் பந்தரிலே
      [* அறுகிடுதல் – ஒரு மணவினை]

சங்கொக்க வெண்குருத் தீன்றுபச் சோலை சலசலத்து
நுங்குக்கண் முற்றி யடிக்கண் கறுத்து நுனிசிவந்து
பங்குக்கு மூன்று பழந்தர வேண்டும் பனந்துண்டமே.”

அந்தக் கல்யாணத்திற் பெண்ணையாற்றைப் பாடியது.

‘முத்தெறியும் பெண்ணை முதுநீ ரதுதவிர்ந்து
தத்திவரு நெய்யா றலைப்பெய்து — குத்திச்
செருமலைத்தெய் வீகன் றிருக்கோவ லூர்க்கு
வருமளவிற் கொண்டோ டி வா.’

அப்போது வருணனைப் பாடியது.

‘கருணையா லிந்தக் கடலுலகங் காக்கும்
வருணனே மாமலையன் கோவற் — பெருமணத்து
நன்மாரி தாழ்க்கொண்ட நன்னீ ரதுதவிர்த்துப்
பொன்மாரி யாகப் பொழி.’

என வருவனவற்றான் உணர்க. இவற்றால், அங்கவை சங்கவை யென்பார் பாரிமகளிர் என்பதும், அம்மகளிர் திருக்கோவலூரில் தெய்விகன் என்னும் அரசனுக்கு மணஞ் செய்யப்பட்டனரென்பதும், இம்மணம் ஒளவையாரது அறிவின்மாட்சியாலும் தெய்வத்தன்மையாலும் சிறப்ப நிகழ்த்தப்பட்ட தென்பதும், ஒளஔவையார் மூவேந்தரையும் இம்மணத்திற்கு ‘உட்காது’, ‘நகாது’, ‘செய்யத்தகாதென்று தேம்பாது’ வருக என்றழைத்தமையாற் பாரிகுடிக்கும் அவ்வேந்தர்க்கும் உளதாகிய பழைய செற்றம் போக்கிவருக என்றனரென்பதும், செயற்கரியன பலசெய்தனர் என்பதும், பிறவும் ஆராய்ந்தறிக.

(தொடரும்)
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்
 இரா.இராகவையங்கார்