(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 12. தொடர்ச்சி)
3. ஔவையார் (தொடர்ச்சி)

 

இக்கதை,

‘எரி னியற்றுங் களைக்கோலை யீந்தன்ன மிட்டுநல்ல
பாரி பறித்தென்னும் பாடல்கொண் டோன்பண்பு சேர்பழைய
னூரி லிருப்பவ னௌவைதன் பாடற் குவந்தபிரான்
மாரி யெனத்தரு கைக்காரி யுந்தொண்டை மண்டலமே.’

என்னும் தொண்டை மண்டல சதகச் செய்யுளானும் அறியப்படும். பின் அக்காரிக்கு ஆடு வாங்கிக்கொடுக்கவேண்டி வாதவன் வத்தவன் யாதவன் என்னும் மூவரிடத்துப்போய்க் கேட்க அவர்கள் கொடாமையாற் சேரநாட்டுச் சென்று வஞ்சிநகர்புக்கு ஆண்டுள்ள சேரன்பால்,

வாதவர்கோன் பின்னையென்றான் வத்தவர்கோ னாளையென்றான்
யாதவர்கோன் யாதொன்று மில்லையென்றா–னாதலால்
வாதவர்கோன் பின்னையினும் வத்தவர்கோ னாளையினும்
யாதவர்கோ னில்லை யினிது. (தமிழ்நாவலர் சரிதை)

என்னும் பாடலைப் பாடித் தம்செய்தி கூற, அச்சேரன் மகிழ்ந்து, பொன்னாடு கொடுக்கப்பெற்று, அப்போது,

சிரப்பார் மணிமுடிச் சேரமான் றன்னைச்
சுரப்பாடு கேட்கவே பொன்னாடொன் றீந்தா
னிரப்பவ ரென்பெறினுங் கொள்வர் கொடுப்பவர்
தாமறிவர் தங்கொடையின் சீர். (தமிழ்நாவலர் சரிதை)

என்னும் பாடலைப்பாடிக் காரிபொருட்டெய்திய பொன்னாட்டை அவன்பாற் சேரவிடுத்து, அச்சேரனா லினிது ஓம்பப்பட்டுச் சிலகாலம் அவன்பாற் றங்கினர். இவர், சேரன் மாளிகையில் இனிதுண்டு வாழ்ந்திருந்தனர் என்பது, இவர் அவனைப் பிரிந்தபோது கூறிய,

சிறுக்கீரை வெவ்வடகுஞ் சேதாவி னெய்யு
மறுப்படாத் தண்டயிரு மாந்தி–வெறுத்தேனை
வஞ்சிக்குங் கொற்கைக்கு மன்னவனேற் பித்தானே
கஞ்சிக்கும் புற்கைக்குங் கை. (தமிழ்நாவலர் சரிதை)

என்னும் பாடலானறியப்படுவது. பின்பு இவர் சேரனுடைய வஞ்சியினின்று நாஞ்சின் மலைச்சென்று ஆண்டிருந்த வள்ளுவன் என்பானை அரிசி கேட்க, அவன் இவர்க்கு யானை கொடுத்தானாக, அப்போது அவனது கொடைமடத்தை வியந்து, ‘தடவுநிலைப் பலவி னாஞ்சிற் பொருநன்’ (140) என்னும் புறப்பாட்டைப் பாடி, ஏழிற்குன்றம் போய் ஆண்டுள்ள அரசன் ஒருவனைப்பாட, அவன் இவரது அருமையும் பெருமையும் அறியாமையால், அவனை,

இருடீர் மணிவிளக்கத் தேழிலார் கோவை
குருடேயு மன்றுநின் குற்ற–மருடீர்ந்த
பாட்டு முரையும் பயிலா தனவிரண்
டோட்டைச் செவியு [*] முள.
      [* முளை எனவும் பாடம்.]

என்னும் பாடலால் முனிந்து பழித்துரைத்தனர். ‘இஃது எழிற்கோவை ஔவை முனிந்து பாடியது’ எனப் பேராசிரியரும் (தொல். செய் 125) ‘இஃது எழிற்கோவை ஔவையார் பாடியது’ என நச்சினார்க்கினியரும், ‘எழிற்கோவைப்பாடிய அங்கதம்’ எனத் தமிழ்நாவலர் சரிதையுடையாரும் கூறினார். எழில் என்பது ஒருமலை; நன்னன் என்னுங் குறுநில மன்னனுடையது. நன்னனுடைய மலையரணாகிய பாழி யென்பதும் இதனோர் பகுதியதாகும். இதனை ‘நன்ன, னேழி னெடுவரைப் பாழிச் சிலம்பின்’ (அகம். 152) ‘நன்ன னன்னாட் டேழிற் குன்றத்துக் கவா அன்’ (அகம் 349) என வருவனவற்றானுணர்க.

இந் நன்னன்மரபிற் றோன்றிய இளவிச்சிக்கோ என்பானொருவன் இளங்கண்டீரக்கோ என்பவனோ டொருங்கிருந்தவழிச் சென்ற பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் இளங்கண்டீரக்கோவைப் புல்லி, இளவிச்சிக்கோவைப் புல்லாராக, அப்போது அவ்விளவிச்சிக்கோ, புலவரை நோக்கி, ‘நீர் என்னை என்செய்யப் புல்லீராயினீர்?’ என்று வினாவ, அதற்கவர், ‘அவன் மரபிற் பெண்டிரும் பாடுவார்க்குப் பிடிகளைப் பரிசிலாகக்கொடுக்கும் வண்புகழுடையனாதலின் அவனைப் புல்லினேன். நுமருளொருவன் பாடுவார்க்கடைத்த கதவு காரணமாக நும்முடைய மலையை எம்மனோர் பாடுதலொழிந்தனராதலால் யான் நின்னைப் புல்லேனாயினேன்’ எனவுரைத்தார் என்பது 151 – ஆம் புறப்பாட்டான் அறியப்பெறுதலால், அப் பாடுவார்க்குக் கதவடைத்தவன் நன்னனுக்கும் பெருந்தலைச்சாத்தனாராற் புல்லப்பெறாத இளவிச்சிக்கோவுக்கும் இடையிற்றோன்றியோ னொருவனெனத் தேறலாகும். இவ்வௌவையாரால் முனிந்து பாடப்பட்டவன் அக்கதவடைத்தவனாவன். பெருந்தலைச்சாத்தனார் வள்ளல்கள் எழுவரும் மாய்ந்தபின் னிருந்த புலவர் என்பது அவர் குமணனைப் பாடியுள்ளவைபற்றி அறியலாகும். இவ்வாறு எழிற்கோவை முனிந்து பாடி வழிச்செல்வார், ஓரூரில் ஒருநாட் பசியினாலே ஒருவன்மனையிற் போக, அவன், ‘சோறில்லை, போ’ என்று சொன்னபோது அவன்மனைவி முகமன் கூறி அன்னமிட்டாள். அப்போது,

‘அற்ற தலையி னருகிற் றலையதனைப்
பற்றித் திருகிப் பறியேனோ–வற்றன்
மரமனையா னுக்கிம் மனையாளை யீந்த
பிரமனையான் காணப் பெறின்.’ (தமிழ்நாவலர் சரிதை.)

என்னும் பாடலைப் பாடிப் பின்னுஞ் செல்வார், ஓரூரி லொரு குறவன் பலாமரத்தைப் பகைவர் வெட்டிப்போகிட, அவன் வருந்துவதற் கிரங்கி, அப்பலா வளரும்படி,

‘கூரிய வாளாற் குறைபட்ட கூன்பலா
வோரிலையாய்க் கொம்பா யுயர்மரமாய்ச்–சீரிய
வண்டுபோற் கொட்டை வளர்காயாய்ப் பின்பழமாய்ப்
பண்டுபோ னிற்கப் பணி.’ (தமிழ்நாவலர் சரிதை.)

எனத் தெய்வத்தை வேண்டிப் பாடி வளர்ப்பிக்க, அதற்குக் குறப்பிள்ளைகள் மகிழ்ந்து நாழித்தினை கொடுக்க அதனை அன்பாலேற்றுச் சோணாட்டு உறையூர் புகுந்து சோழன்பாற் சென்று பாட, அவன் இவர்க்குப் பரிசில் பலவளித்து வரிசைபலசெய்ய, அதற்குவந்து,

‘கூழைப் பலாத்தழைக்கப் பாடக் குறச்சிறார்
[*] மூழக் குழக்குத் தினைதந்தார்–சோழாகே
ளுப்புக்கும் பாடிப் புளிக்கு மொருகவிதை
யொப்பித்து நிற்கு முளம்.’ (தமிழ்நாவலர் சரிதை.)
      [* மூன்றுழக்கு என்பதன் விகாரம். உழக்கு காற்படி நாழி – ஒருபடி.]

என ஒரு செய்யுளுரைத்து, தினைத்துணை நன்றியையும் பனைத்துணையாகக் கருதுகின்ற தம்மியல்பினை யவனுக்கறிவுறுத்தி அவன்பாற்றங்கினர். ஒருநாள் இவர் சோழன்பா லொன்று பாடும்போது, அவன் ஒரு துகிலைப் பார்த்துப் பராக்காக இருப்ப அப்போது இவர்,

நூற்றுப்பத் தாயிரம் பொன்பெறினு நூற்சீலை
நாற்றிங்க டன்னிற் கிழிந்துபோம்–மாற்றலரைப்
பொன்றப் புறங்கண்ட போர்வே லகளங்கா
என்றுங் கிழியாதென் பாட்டு. (தமிழ் நாவலர் சரிதை)

என்னும் பாடலைப்பாடினர். அக்காலத்துச்சோழன், இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியென்பவன். அவன் இராசசூயம் வேட்டபோதும் ஆங்கிருந்து அவ்வேள்வியின்பொருட்டு ஆண்டெய்திய சேரன் மாவெண்கோவையும் பாண்டியன் உக்கிரப்பெருவழுதியையும் அச்சோழனையும் ஒருங்கு வாழ்த்திப் பாடினர் (புறம் 367). இவர் அச் சோணாட்டில் வெண்ணி, அம்பர், குடந்தை முதலிய பலவூர்கட்குஞ் சென்றுவா ரென்பது இவர் பாடல்களா னறியப்படுவது. இவர் ‘கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த’ (நற்றிணை 360) எனவும், ‘நல்லம்பர் நல்லகுடி யுடைத்து’ (திருமுருகாற்றுப்படை யுரைமேற்கோள்) எனவும் பாடுதலான் அறிந்து கொள்க. இவர் திருக்குடந்தையிற் சென்று, அங்கு ஒருவன் உலோபியும் ஒருவன் விதரணியுமாக இருந்தாரைக் கண்டு,

‘திருத்தங்கி தன்வாழை தேம்பழுத்து நிற்கு
மருத்தன் றிருக்குடந்தை வாழை–குருத்து
மிலையுமிலை பூவுமிலை காயுமிலை யென்று
முலகில் வருவிருந்தோ டுண்டு.’ (தமிழ் நாவலர் சரிதை)

என்னும் பாடலைப் பாடினரென்பவாகலான், இவர் திருக்குடந்தைக்குச் சென்றமை யுணரப்படும். திவாகரம் விலங்கின் பெயர்த்தொகுதி யிறுதிக்கட்டுரையில், ‘ஔவை பாடிய வம்பர் கிழவோன்’ என வருதலானும், இவரே அம்பரைச் சிறப்பித்துக் கூறுதலானும் அக்காலத்து அம்பர்நகரத்திருந்த அம்பர்கிழான் அருவந்தை என்பானையும் பாடி, அவனாலும் போற்றப்பட்டனராவர். பின் சோணாடுவிட்டுப் பாண்டியனாடு செல்வாராய் அக்காலத்துச் சித்தன்வாழ்வு எனவும் பெயர் சிறந்த திருவாவினன்குடிப் போந்து சின்னாட்டங்கி, அப்பாற் பாண்டியர் பதிக்கட்புக்கு, ஆண்டு அரசு புரிந்த உக்கிரப் பெருவழுதியையும் அவனா லினிதோம்பப்பட்ட பழுதில் கேள்வி முழுதுணர் பேரவை நல்லிசைப்புலவர் பல்லோரையும் கண்டு மகிழ்ந்து,

‘நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன்வாழ்
வில்லந் தொறுமூன் றெரியுடைத்து–நல்லரவப்
பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின்
னாட்டுடைத்து நல்ல தமிழ்.’ (திருமுருகாற்றுப்படையுரை)

என்னும் பாடலைப் பாடினர்.

(தொடரும்)
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்
 இரா.இராகவையங்கார்