தலைப்பு-கடின சந்திகளைப் பிரித்தெழுதுக : thalaippu_kadinasandhigalai_pirithuezhudhuga

  தமிழ்ப் புலவர்கள் தாம் எழுதும் நூல்களிற் சந்தி சேர்த்தே எழுதுகின்றனர். சந்திசேர்த்தெழுதலே தமிழிலக்கண மரபாயினும் வசன நடையிலும் அவ்வாறு எழுதுதல் வேண்டுமென்ற நியமமில்லை. முற்காலத்தே ஏற்பட்ட உரை நூல்களிலும், முற்றும் சந்திசேர்த்தெழுதியிருக்கக்காணோம். இக்காலத்திலும் பண்டிதர் பலர் சிலவிடங்களில் சந்திசேர்த்தும் சில விடங்களில் சந்தி சேராமலும் எழுதி வருகின்றனர். ஆதலின் கடின சந்திகளை எப்பொழுதும் பிரித்தெழுதுக. பொருள் மயக்கமாவது, பொருள் வேறு பாடாவது உண்டாக்க வல்ல சந்திகளைச் சேராமல் பிரித்தே எழுதுக. சந்தி சேராமையாற் பொருள் கெடுவதாயிருந்தால் அவ்விடத்திற் சந்திசேர்த் தெழுதுக. எளிய சந்திகளைச் சேர்க்கினும் சேராவிடினும் ஒன்றுதான். எளிய சந்திகளைச் சேர்ப்பதனாற் சாமானிய சனங்களுக்குப் படிப்பதிற் கட்டப்பட வேண்டிய-தொன்றுமில்லை. நன்று, இவ்விதிகளெல்லாம் வசன நடையில் அநுசரிக்கத் தருவனவாகும்; மற்றுந் தமிழ்ச் செய்யுணடையிலும் இவை தழுவத் தக்கனவோ? இது சிறிது வாதம் விளைக்கத் தக்கதோர் விசயம். செய்யுளின்கண் இவை மேற்கொள்ளப்படுமேல், செய்யுளை ஓசையூட்டி இசையறுத்துப் படிக்கும்போது இடர்ப்பாடு காணப்படும். ஆதலால் சந்திசேர்த்து இசை நலங்கெடாமல் ஒரு பாடந்தந்த பின்னர் சந்திபிரித்துப் பிறிதொரு பாடம் அதனடியில் தருதல் வேண்டும்.

ஆகவே சந்திபிரித் தெழுதும் விசயத்தில் எவ்வளவு மட்டில் இடர்ப் பாடின்றி மேற் கொள்ளலாமோ அவ்வளவையும் மேற்கொள்ளவே வேண்டும். இதன் கண்ணே தமிழ்வாணர் காலம் போக்கற்க.

– பரிதிமாற்கலைஞர்

தலைப்பு-தமிழ்மொழியின் வரலாறு : attai_thamizhmozhiyinvaralaaru