kaniniyil thamizh2

  கணிணியியலில் ஆங்கில ஒலிபெயர்ப்பிலேயே கலைச் சொற்களும் தலைப்பெழுத்துச் சொற்களும் எண்ணிலடங்கா அளவு கையாளப்பட்டுத் தமிழ் மொழி சிதைந்து வருவதைப் பலரும் உணரவில்லை. ‘மணிப்பிரவாளம்’ என்ற பெயரில் மொழிக்கொலை புரிந்து பாழ்பட்ட நிலையிலிருந்து அண்மைக் காலத்தில் மீண்டுவரும் வேளையில் ஆங்கிலக்கலப்பு விளைவிக்கும் தீங்கைப் பெரும்பான்மையர் புரிந்து கொள்ளவில்லை. பிற அறிவியல் துறைகளில் நிகழும் சொல்லாக்கத் தவறுகள்தாம் கணிணியியலிலும் நடைபெறுகின்றன. ஆனால், பிற துறைகளுடன் ஒப்பிட முடியாத அளவு கணிணியியலில்தான் ஆங்கில ஒலிபெயர்ப்புச்சொற்கள் மிகுதியாகக் கையாளப்படுகின்றன. இவை முற்றிலும் உடனடியாகக் களையப்பட வேண்டும். சுருக்கக் குறியீடுகள், தலைப்பெழுத்துகள் என எந்த வடிவிலும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தாமல் சீன மொழியிலேயே குறிக்க வேண்டும் எனச் சீன அரசு ஆணை பிறப்பித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இது போல் தமிழ்நாட்டரசும் ஆணை பிறப்பித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

  சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே என்னும் பாரதியாரின் பொன்மொழியை உணர்ந்து, தமிழில் எண்ணித் தமிழிலேயே எழுதத் தொடங்கினால் அரிய கலைச் சொறகளைக்கூட அழகுதமிழில் அருமையாகக் கூற இயலும். தமிழ் எழுத்துகளில் அமைந்தன மட்டுமே தமிழ் என்பது நம் முன்னோர் கூற்று. ஆகவே, தமிழ்ப்படைப்புகளில் அயற்சொற்களும் கிரந்த எழுத்து முதலான அயல்எழுத்துகளும் பயன்படுத்தக்கூடா. இவற்றை ஊக்கப்படுத்துவதற்காக அரசு, தமிழ்க்கலைச்சொற்களைப் பயன்படுத்தும் நூல்களை மட்டுமே பாட நூல்களாக வைக்கவேண்டும்; கலப்பு நடையைக் கைவிட்டு நல்ல தமிழில் எழுதப்படும் நூல்களுக்கு மட்டுமே பரிசுகள் வழங்க வேண்டும். தமிழ்ப்பகைவர்களுக்குப் பட்டங்களும் விருதுகளும் பொற்கிழிகளும் வழங்கி மொழி இனஅழிப்பிற்குத் துணை போகாமல் தமிழ் அன்பர்களை மதித்துப் போற்ற வேண்டும்.

  கலைச்சொற்களை மட்டும் தமிழில் வழங்கினால் போதுமா? கணிக்கட்டளைகளையும் தமிழிலேயே அமைத்தல் வேண்டும். அதற்கு முதற்கட்டமாகக் கணிணிச் செயற்பாட்டுக் கட்டளைகளைக் குறிப்பிடும் விசைகளின் பெயர்கள் பின்வருவன போல் தமிழில் இருக்க வேண்டும்.

  • Enter Key – புகுவி விசை
  • Control Key – யாப்பு விசை
  • Alternate Key – வினை விசை
  • Delete Key – நீக்கி விசை
  • Escape Key – விலக்கி விசை
  • Home Key – ஆதி விசை
  • End Key – அற்றவிசை
  • Shift Key – முறைமை விசை
  • Tab Key – பெயர்த்தி விசை
  • Number Lock key- எண்தாழ் விசை
  • Scroll Lock Key – சுருணை விசை
  • Insert Key – செருகி விசை
  • Page up Key – ஏற்றி விசை
  • Page down Key – இறக்கி விசை
  • Pause Key – நிறுத்தி விசை
  • Print Screen Key – பதிப்பி விசை
  • Up Arrow Key – மேலம்பு விசை
  • Down Arrow Key – கீழம்பு விசை
  • Left Arrow Key   – இட அம்பு விசை
  • Right Arrow Key – வல அம்பு விசை
  • Back Space Key   – முன்னிட விசை
  • Functional Keys – செயல் விசைகள்
  • User Keys – பயனர் விசை
  • Caps.lock key – முறைமைத் தாழ் விசை

  இவை போன்று கட்டளைச் சொற்களையும் தமிழில் அமைத்து இம்முயற்சியை விரைவுபடுத்த வேண்டும் கணிப்பொறியின் பகுதிகளைத் தமிழிலேயே குறித்தல் வேண்டும் அப்பொழுதுதான் கணியியல் குறித்த முழுமையான தமிழ்நூல்களைப் படைக்க இயலும்.

  இவையனைத்தையும், தமிழில் அமைக்கக் கணிணியியலாளர்கள் முன்வரின் கணிணியியலில் தமிழ் தலைமையுற்றுத் திகழும். தமிழ்வழியாகக் கல்வி அமையாமையாலேயே நம் நாட்டில் புதிய புனையும் அறிஞர்களும் கண்டுபிடிப்பாளர்களும் உருவாகவில்லை என்பார் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார். கணிணி உலகில் நாளும் அறிஞர்கள் பெருக வாழும் மொழியாம் தமிழில் முழுமையாய் கணிணியறிவியல் அமைய வேண்டும்.

செயல் செய்வாய் தமிழுக்குத்

துறைதோறும் துறைதோறும் சீறிவந்தே

என்னும் பாவேந்தர் பாரதிதாசன் கட்டளைக்கிணங்க நாம் கணிணியறிவியலிலும் தமிழ்ப்பயன்பாட்டை முழுமையாகக் கொண்டு வர வேண்டும். அதுவே நாம் செய்யும் எப்பணிக்கும் முதற்பணியாய் அமைதல் வேண்டும்.

அனைத்திலும் தமிழ்!                                 கணியறிவியலிலும் தமிழ்!

.இலக்குவனார் திருவள்ளுவன்

பார்வைக்குரியன

கட்டுரையாளரின் படைப்புகள்

  1. ஒரு சொல் – பல பொருள் : கலைச்சொல்லாக்க வளர்ச்சியின்

முட்டுக்கட்டை ( உலகத் தமிழ் மாநாட்டுக் கட்டுரை, மலேசியா)

  1. இதழியல் சொல்லாக்கம் – திறனாய்வும் நெறிமுறையும் (உலகத் தமிழ்

மாநாட்டுக் கட்டுரை, மலேசியா)

  1. கணிணிக் கலைச்சொற்கள் (மதுரை காமராசர் பல்கலைக் கழக

வியாழன் வட்டக் கட்டுரை)

  1. இன்றைய தேவை குறுஞ்சொற்களே (உலகத் தமிழ் மாநாட்டுக் கட்டுரை,

தஞ்சாவூர்)

  1. அன்றாட நடைமுறையில் சொல்லாக்கம்
  2. கணிணியியலில் நேர்பெயர்ப்புச் சொற்களும் ஒலிபெயர்ப்புச் சொற்களும்

(ஐந்தாவது இணையத்தமிழ் மாநாட்டுக் கட்டுரை, அக்டோபர் 2009,

செருமனி)

  1. கணிவிசைப் பெயர்கள் (சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்

கருத்தரங்கக் கட்டுரை)

 

பிற

  1. Computer Dictionary (English – Tamil) – இராம்குமார்; தெ.சை.சி.நூற்பதிப்புக்கழகம்
  2. The Illustrated Computer Dictionary (Third Edition): Donald D.Spencer ; Universal Book Stall
  3. கணிப்பொறிக் கலைச் சொல் அகராதி : வளர்தமிழ் மன்றம், அண்ணா

பல்கலைக்கழகம்

  1. அறிவியல் அகராதி : பேராசிரியர் அ.கி.மூர்த்தி : மணிவாசகர் பதிப்பகம்
  2. ‘தமிழ் கம்ப்யூட்டர்’ முதலான இதழ்கள்