கணித்தமிழ்ப்பேரவை உருவாக்கியுள்ள முதல்வருக்குப் பாராட்டும் நன்றியும்
கணித்தமிழ்ப்பேரவை உருவாக்கியுள்ள
முதல்வருக்குப் பாராட்டும் நன்றியும்
ஆவணி 14, 2046 / 31.08.2015 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவித்த புதிய கணித்தமிழ்க் கொள்கையில்(தகவல்தொழில்நுட்பவியல் துறையின் 2015-16 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் இடம் பெற்றுள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் புதிய செயல்திட்டங்கள்), கணித்தமிழ் வளர்ச்சியைப் பெருக்கிடும் நீண்டகால நோக்கிலும் அதன் முதன்மையை எதிர்காலத் தலைமுறையினர் உணர்ந்து செயல்படும் விதத்திலும் கல்லூரிகள் தோறும் கணித்தமிழ்ப் பேரவைகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற்றது. ஏட்டளவில் அறிவிப்பு நின்றுவிடாமல் செயல்பாட்டிற்கும் விரைந்து வந்து விட்டது.
இதன் தொடர்பிலான மகிழ்ச்சியை வேண்டுகோளுடன் தெரிவிக்க விரும்புகிறோம்.
கடந்த சில ஆண்டுகளாகவே, “இணையம் வழியாகத் தமிழ் வளர்ப்பதற்குக் கணிணியில் தமிழ்ப்பயன்பாடுகள் பெருக வேண்டும். இதற்கெனத் தமிழக அரசே, ‘தமிழ்நாடு இணையத்தமிழ் மன்றம்’ ஒன்றை அமைக்க வேண்டும்”.
“ ‘தமிழ்நாடு இணையத் தமிழ் மன்றம்’ / ‘தமிழகக் கணித் தமிழ் மன்றம்’ என்ற ஏதேனும் ஒரு பெயரில் இணைய வழியிலான அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கென ஓர் அமைப்பு இன்றியமையாது வேண்டப்படுகின்றது”
எனக் குறிப்பிட்டுக் கணித்தமிழுக்கான அமைப்பு ஒன்று ஏதேனும் பெயரில் தொடங்கப்பட வேண்டும் எனத் தமிழ்க்காப்புக்கழகம் சார்பிலும், இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பிலும் தோற்றுவிக்கப்பட வேண்டும் எனத் தமிழக அரசிடமும் மாண்புமிகு முதல்வர் அவர்களிடமும் முறையிட்டு வந்தோம்.
“கணியன்கள்(soft-ware) உருவாக்கம் முதலான கணிணி வினைநலன்களில் தமிழை முதன்மைப்படுத்தும் செயற்பாடுகளும் அதற்கான ஊக்கமும் வழிகாட்டுதலும் தேவை.
கணித்தமிழ்ப்பட்டறைகள், பயிலரங்குகள், கருத்தரங்குகள் நடத்தவும் பிழை திருத்தி, தேடுபொறி, சீர், தளை பிரிப்பி, சீர்மை எழுத்துரு, ஒளி எழுத்துணரி எனப் பலவகைக் கணியன்கள் உருவாக்கம், செம்மையாக்கம், இவற்றிற்குப் பொருளுதவி வழங்கல் முதலான பணிகளுக்கு ஓர் அமைப்பு தேவை.“
எனவும் குறிப்பிட்டு இருந்தோம்.
இது குறித்துக் கிழமை இரு முறை வெளிவரும் தமிழக அரசியல் இதழ் வாயிலாகவும் (- ஆரா, தமிழக அரசியல், நாள் 04.09.2013 வியாழன், பக்.22-23) இணையத் தமிழ் மன்றம் வேண்டும் – முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் என வேண்டுகோள் விடுத்து அதனை இணைத்தும் அரசிற்கு மடல் அனுப்பியுள்ளோம்.
. நம் முயற்சிகளுக்குத் தக்க பயன் விளைந்து மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்கக் கணித்தமிழ்ப்பேரவை கல்விநிலையங்கள் தோறும் தொடங்கப்பெற்று வருகிறது.
எனவே, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மாண்புமிகு தகவல் தொழில்நுட்ப அமைச்சர், மதிப்பிற்குரிய தகவல் தொழில்நுட்பச் செயலர், அன்பிற்குரிய தமிழ்நாடு இணையக்கல்விக்கழக இயக்குநர், ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம்.
கணித்தமிழ் வளர்ச்சிக்கான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்னும் வேண்டுகோளைப் பாரறியச் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்திய தமிழக அரசியல் இதழினருக்கும் நம் நன்றி.
தகவல்நுட்பச் செயலர் திரு தா.கு.இராமச்சந்திரன் இ.ஆ.ப., தக்காங்கு வழிகாட்டுவதற்கேற்ப,
த.இ.க.க. இயக்குநர் திரு உதயச்சந்திரன் இ.ஆ.ப.,தமிழ்ப்பற்றும் செயல்திறனும் கொண்டு தொடர்புடையவர்கள் கருத்தறிந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். எனவே, இருவருக்கும் பாராட்டுகள்.
இணையக்கல்விக்கழக உதவி இயக்குநர்கள் முனைவர் தமிழ்ப்பரிதி, முனைவர் உமாராசு முதலான அலுவலகத்தினரும் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். எனவே, மதுரையில் செப்டம்பர் 05, 2015 அன்று தொடங்கப்பெற்ற கணித்தமிழ்ப்பேரவை, பல நகர்களிலும் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் கிளை பரப்பி வருகிறது. பயிலரங்கங்களும் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பில் மேலும் சில கருத்துகளை இணையக்கல்விக் கழகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல விரும்புகிறோம்.
எந்த அமைப்பும் தொடக்கத்துடன் நின்றுவிடாமல் தொடர்ந்து செயல்பட நிலையான அமைப்பு தேவை.
ஆண்டிற்கு ஒரு முறையோ இரு முறையோ கூட்டம் நடத்தும் கல்லூரிப்பேரவைபோல் கணித்தமிழ்ப்பேரவை அமைந்துவிடக் கூடாது.
ஆட்சி மாறினால் காட்சி மாறும் அவலத்திற்கு இலக்காகி அறிவியல் தமிழ் மன்றம்போல் முற்றாக்கப்படும் நிலைக்கும் வரக்கூடாது.
எனவே, இவற்றை ஒழுங்கு படுத்த மாவட்டந்தோறும் மாவட்டக் கணித்தமிழ்ப்பேரவை உருவாக்கப்பட வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்டக் கணித்தமிழ்ப்பேரவைகளை அமைப்பதைவிட, இவை, கல்வியகங்களைச் சார்ந்து தொடங்கப்பெற்று வருவதால் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தலைமையில் மாவட்ட அமைப்புகளை இயக்கலாம். பல்கலைக்கழக வரம்பு ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களைக் கொண்டுள்ளமையால், ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் துணைவேந்தரைத் தலைவராகக் கொண்டு தனித்தனி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். பல கல்விநிலைய அமைப்பினர், தனியார் உதவியைக்கூடத் தலையீடாகக்கருதிப் புறந்தள்ளும்போக்கு உள்ளது. துணைவேந்தர் தலைமையில் அமைவதால் தவறாமல் ஒத்துழைப்பு நல்குவர்.
இதன் தொடர்ச்சியாக மண்டல அளவிலும் மண்டலக் கணித்தமிழ்ப்பேரவை அமைக்கப்பட வேண்டும். மண்டல அமைப்பு அமையும் மாவட்டத்திலுள்ள பல்கலைக்கழகத் துணைவேந்தர் மண்டல அமைப்பிற்குத் தலைமை தாங்கலாம். அல்லது சுழற்சி முறையில் துணைவேந்தர்கள் தலைமைப் பொறுப்பு வகிக்கலாம். பிற துணைவேந்தர்கள் துணைத்தலைவர்களாக இருந்து ஒருங்கிணைக்கலாம்.
கணித்தமிழில் ஈடுபாடுகொண்ட, கல்வி நிலையம் சாராத தன்னார்வலர்களை மாவட்ட அமைப்புகளிலும், மண்டல அமைப்புகளிலும் சேர்த்து நாடு தழுவிய விழிப்புணர்வையும் கணித்தமிழ்ப் பரவலையும் ஏற்படுத்த வேண்டும்.
தமிழ் இணையக்கல்விக்கழகத்தின் சார்பு அமைப்பாகக் கணித்தமிழ்ப்பேரவை செயல்பட்டாலும், அதன் இயக்குநரைச் செயலராகக் கொண்டு மாநிலக் கணித்தமிழ்ப் பேரவை அமைப்பு உருவாக்கப்படுவது ஒருங்கிணைப்புப் பணியை எளிதாக்கும்.
ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள், நெறியாளர் அல்லது புரவலராகச் செயல்படுவது கணித்தமிழ்ப்பேரவையின் நிதியுதவி பெறுவதை எளிதாக்கும். ஆனால், அரசின் செயல்திட்டமாகக்கருதாமல் கட்சிக்கொள்கைபோல் தவறான எண்ணம் விளைந்தால் செயல்பாடு நின்று விடும். எனவே, கல்விசார்ந்த அமைப்பு என்பதால், அமைச்சர் முதலானோர் பொறுப்பில் இல்லாமலே உதவி வழிநடத்துவதே சிறப்பாக அமையும்.
கணித்தமிழ்ப்பேரவையை உரிய முறைப்படிப் பதிந்து பதிவு பெற்ற அமைப்பாகச் செயல்படச்செய்ய வேண்டும்.
கணித்தமிழை வளர்த்துக் கன்னித் தமிழை மேலும் சிறக்க முனைவோர் அனைவருக்கும் வாழ்த்துகள்!
எண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்(திருவள்ளுவர், திருக்குறள் 666).
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 101, ஐப்பசி 1, 2046 / அக்.18, 2015
தன் அயரா முயற்சிகள் மூலம் தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஒரு புதிய ஏற்றத்தையே கொண்டு வந்து விட்ட திருவள்ளுவர் ஐயா அவர்களுக்குச் சிரம் தாழ்ந்த நன்றிகள்!