கணித்தமிழ் அறிஞர் ந. தெய்வசுந்தரம்

 எல்லார்க்கும் எல்லா நிலைகளிலும் எல்லாப்பணிகளிலும் கணிப்பொறி என்பது தவிர்க்க இயலாததாக உள்ளது. எனவே, கணிப்பொறி பயன்பாடு சார்ந்த அறிவியலறிவு நமக்குத் தேவை. தொன்மை வாய்ந்த தமிழ் மொழி புத்திளமையுடன் திகழக் கணிப்பொறி பயன்பாடு தேவை. இத்தகைய சிறப்பு வாய்ந்த கணிப்பொறிப் பயன்பாட்டைத் தமிழில் அறிமுகப்படுத்தவும் பயன்படுத்தவும் கூடிய கணித்தமிழ் அறிஞர்களில் முதன்மையானவர்களில் குறிப்பிடத்தக்கவராகப் பேராசிரியர் முனைவர் ந.  தெய்வசுந்தரம் உள்ளார்.

பேரா. ந. தெய்வசுந்தரம் பயன்பாட்டு நிலைகளிலும் ஆய்வு நிலைகளிலும கணியன்களை(softwares) உருவாக்கித் தமிழுலகம் பயனுற உழைக்கிறார்.

அ) உருவாக்கிய பயன்பாட்டுக் கணியன்கள் (Application software)

                சுவிதா – தமிழ்ச்சொல்லாளர் (1999)

                தமிழ்ச்சொல் 2000

                மென்தமிழ் 2007 – தமிழ்ச் சொல்லாளர்

                பேச்சுத் தமிழ்க் கல்வி – பல்லூடகக் கணியன்(மென்பொருள்)

(சென்னைப் பல்கலைக்கழகம்)

                எழுத்துத் தமிழ்க் கல்வி – பல்லூடகக் கணியன்(மென்பொருள்)

(சென்னைப் பல்கலைக்கழகம்)

ஆ) ஆய்வுத் துணைமைகள்(Research Tools)

தமிழ் உருபன் பகுப்பி (Morphological Parser for Tamil)

                தமிழ்ச் சொற்பிழைதிருத்தி (Tamil Spell-checker)

                தமிழ்ச் சந்திப்பிழைதிருத்தி

                தமிழ் – ஆங்கிலம் கணிணி மின்- அகராதி (Tamil – English Reversible digital dictionary)

                கணினித்தமிழ் மைய இலக்கணம் (ப.ந.ஆ. ஆய்வுத்திட்டம்) (Computational Core Grammar of Tamil ( UGC                                                                          Major Project)

இயந்திரமொழிபெயர்ப்பு: தமிழ் – ஆங்கிலம் – இந்தி (ப.ந.ஆ. – UGC ஆய்வுத்திட்டம்) .

                தமிழ் தரவுத் தொகுப்பு ஆய்வு  (தமிழ் இணையப் பல்கலைக்கழகம்).

                தமிழ்ப் பிழை பார்ப்பி (தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்நாடு அரசு).

சிங்கப்பூர் எழுத்துத்தமிழ் தரவகம் (2018)

பிறப்பு

தமிழ் வளர்க்கும் திருநெல்வேலியில்  திரு. சிவ. நயினார்-திருமதி ந. பாப்பு அம்மாள் இணையரின் திருமகனாக  வைகாசி 19, 1981 /1.06.1950 இல்  தெய்வசுந்தரம் பிறந்தார்

கல்வித் தகுதிகள்

இயற்பியல் இளம் அறிவியல் பட்டம் பெற்றவர், தமிழின்பால் ஈர்க்கப்பட்டுத் தமிழ் முதுகலையிலும் மொழியியல் முதுகலையிலும் பட்டங்கள் பெற்றார். மொழியியல் துறையிலேயே பேராசிரியர் பொற்கோ அவர்களின் வழிகாட்டுதலில் முனைவர் பட்டமும் பெற்றார். இவரின் முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு ‘தமிழில் இரட்டைவழக்குச் சூழல்  ( Diglossic situation in Tamil)

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் மேற்படிப்பு முதுநிலை ஆய்வு மேற்கொண்டார் (1981-83)

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத் துறையில் ப.ந.ஆ.(  1983-1985 ) முதுநிலை ஆய்வாளராக ஈராண்டுகள்  ஆராய்ச்சி மேற்கொண்டார்.

சென்னைப்பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கினார் (1985-91). இணைப் பேராசிரியர் (1991- 97), பேராசிரியர் (1997 – 2010), மொழியியல் ஆய்வுப் பிரிவு இயக்குநர் (1999 – 2010) எனப்பல நிலைகளில் பணியாற்றி நிறைவாகத் தமிழ் மொழித்துறை துறைத்தலைவர் (2006 – 10) ஆகப்பணியாற்றினார். மாணாக்கர்களிடையே தமிழ் இலக்கியம், மொழியியல் சார் கருத்துகளை விதைத்ததுடன் கணித்தமிழில் ஆர்வமும் ஈடுபாடும் ஏற்படும் வண்ணம் பணியாற்றினார்.

 இப்போது சென்னையில் உள்ள என் டி எசு. லிங்க்சாப்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக உள்ளார். கணினித்தமிழ் ஆராய்ச்சியிலும் அதனடிப்படையில் தமிழுக்கான மென்பொருள் உருவாக்கத்திலும் இந்த நிறுவனம் ஈடுபட்டுவருகிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட இளமுனைவர் பட்ட ஆய்வினருக்கும் 25 முனைவர் பட்ட ஆய்வினருக்கும் வழிகாட்டியாக இருந்து நெறிப்படுத்தியுள்ளார்.

 

வல்லமை

பேரா.ந.தெய்வசுந்தரம் பின்வரும் துறைகளில் வல்லமையாளராகத் திகழ்கிறார்.

            தமிழ் இலக்கணம்

            கணிணித்தமிழ்

          நரம்பிய மொழியியல் (Nuero linguistics)

            நலிவிய மொழியியல் (Clinical Linguisitcs)

            மொழிக்கல்வி

நூலாக்கம்

            தமிழ் இரட்டைவழக்கு

            தமிழ் – தானியங்கு ஒலிநாடாவழிக் கல்வி (நூல் + 6 ஒலிப்பேழைகள்)

            இன்றைய தமிழ்

            தமிழில் மொழியியல் ஆய்வுகள்

ஆய்வுக் கட்டுரைகள்

தமிழியல், மொழியியல், கணித்தமிழ் சார்ந்த 30-க்கும் மேற்பட்ட கருத்தரங்க, ஆய்விதழ்க் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

கல்வி & ஆய்வு அயல்நாட்டுப் பயணம்

கல்விப்பணியும் ஆய்வுப்பணியும் சார்ந்த பின்வரும் அயலகப்பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

            சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள் (2001)

           கணினிமொழியியல் ஆய்வுமையம், கோபன்ஃகேகன்     பல்கலைக்கழகம், தென்மார்க்கு (2004)( Copenhagen Business School, Denmark)

            ‘சிம்’ பல்கலைக்கழகம், சிங்கப்பூர்(2009,2011)

  மலேசியா பல்கலைக்கழகம், கோலாலாம்பூர் (2011, 2017)

            கல்வி அமைச்சகம், சிங்கப்பூர் அரசு (2011) (தமிழ் ஆசிரியர்களுக்கான பயிற்சி)

            உலகத் தமிழாசிரியர் கழக மாநாடு, சிங்கப்பூர் – 2011

            உலகத் தமிழாசிரியர் மாநாடு, (2013) , மலேசியா

            பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு (2016) மலேசியா

ஏற்ற பொறுப்புகள்

செயற்குழு உறுப்பினர், உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் – உத்தமம்

உறுப்பினர், அறிவியல் கலைச்சொல்லாக்கக் குழு (இந்திய நடுவண் அரசு)

உறுப்பினர், நிதிநல்கைக் குழு, இந்தியமொழிகள் நடுவண் நிறுவனம், (உயர்கல்வித் துறை, இந்திய நடுவண் அரசு)

உறுப்பினர், தமிழகப் பல்கலைக்கழங்களில் பாடத்திட்டக் குழுக்கள்

இவரது கணித்தமிழ் சார்ந்த பணிகளை அரசும் மதித்து இவருக்கு முதலமைச்சரின் தமிழ்க்கணிமை விருது-2013 (Chief Minister Award for Tamil Computing -2013) வழங்கியது. இவ்விருது நிறுவப்பட்டதும் முதல் விருதே இவருக்குத்தான் வழங்கப்பெற்றது என்னும் பொழுது இவரது சிறப்பை விளக்க வேறு தேவையில்லை.

தமிழ் தொன்மைச்சிறப்புடன் திகழ்ந்தாலும் வளர்நிலையிலும் உள்ளது. எனவே, முழுமையான கணியன்களை உருவாக்குவது அரிதான செயல். பல் வேறு நிலைப்பாடுகளில்தான் உருவாக்க முடிகிறது. எனவே, பேராசிரியர் முனைவர் ந. தெய்வசுந்தரம் மேற்கொண்டு செம்மையாக்கத்திற்கும் புதியன படைப்பதற்கும் உழைத்து வருகிறார்.

அறிவியலிலும் தமிழ்! அனைத்திலும் தமிழ்!’ என்னும் நிலையை நாம் அடைய இவரது கணித்தமிழ்ச் செயல்பாடுகள் பேரளவு உதவியாக இருக்கின்றன. அரசுகளும் அமைப்புகளும் இவருக்குத் துணை நின்றால் இவர் மேலும் தமிழன்னைக்கு அணி சேர்க்கும் வண்ணம் உழைப்பார் என்பது திண்ணம்.

[பேராசிரியருடன் தொடர்பு கொள்ள:

பேசி : 97890 59414; மின் வரி: < ndsundaram@hotmail.com > ]

கணித்தமிழ் ஆராய்ச்சிச் செயற்பாட்டாளர் பேரா. தெய்வசுந்தரம் நீடு வாழ்க!

 –இலக்குவனார் திருவள்ளுவன்