முத்திரை பதிக்கும் வித்தகர் மு.பொன்னவைக்கோ

  பிற துறைகளில் உள்ள தமிழ்ப்பற்றாளர்களால்தான் அறிவியல் தமிழ் வளர்ந்து கொண்டுள்ளது. அத்தகையவர்களுள் ஒருவராகவும் இலக்கியத் தமிழ் ஈடுபாட்டாளராகவும் திகழ்பவரே முனைவர் பொறிஞர் மு.பொன்னவைக்கோ.

  முந்தைய தென்னார்க்காடு மாவட்டத்தில் (இப்போதைய விழுப்புரம் மாவட்டம்) வானூர் வட்டத்தில் உள்ள செங்கமேடு என்னும் சிற்றூருக்குப் பெருமை சேர்க்கும் வகையில்,  மன்னர் பாரி வள்ளல் பரம்பரையைச் சார்ந்த தெய்வத்திரு. சு.முருகேசர், தெய்வத்திருவாட்டி மு.பொன்னிக்கண்ணு அம்மையார் வாழ்ந்தனர். இவ்விணையரின் மக்கள் எழுவருள் இளையமகனாகத் தை 17, 1975/30.01.1944 அன்று பிறந்தவர் இரத்தினசபாபதி. பெற்றோர் சூட்டிய பெயரைத் தமிழ்ப்பற்றின் பெயரால், சபாபதி என்ற சொல்லுக்கு அவைக்கோ என்றும் இரத்தினம் என்னும் சொல்லுக்கு மாற்றாக அம்மாவின் பெயரிலிருந்து பொன் என்ற சொல்லை எடுத்து அவைக்கோவிற்கு முன் சேர்த்தும்  பொன்னவைக்கோ என 1968-ஆம் ஆண்டு பொறியியல் படிப்பின் இறுதி ஆண்டில் மாற்றிக் கொண்டார்.

 

கல்வி

  1950இல் திண்ணைப்பள்ளியில் இவரது கல்விக்கால் ஊன்றப்பட்டது. தொடர்ந்து தொடக்கக்கல்வியை செங்கமேட்டு அரசுத் தொடக்கப் பள்ளியிலும்(1952-1956) உயர்நிலைப்பள்ளிக் கல்வியை வழுதாவூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியிலும்(1957-1963) பெற்றார். எல்லா நிலைகளிலும் முதல் மாணாக்கனாய்த தேறி ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.   பள்ளியில் பயின்ற காலத்திலேயே கவி புனையும் ஆற்றல் பெற்றுக் கவிஞரானார்.

  மின் பொறியியல் பட்டத்தையும் [B.E.(Electrical)-1969] முதுஅறிவியல்-பொறியியல் பட்டத்தையும் [M.Sc. (Eng.)-1972] சென்னையில் உள்ள கிண்டி பொறியியற் கல்லூரியில்  பெற்றார். இங்கு அவரின் தமிழ்ப்பற்றிற்கு  மடைகால் திறக்கப்பட்டது. ‘தமிழ் மன்றச் செயலாளராக’ப் பணியாற்றித் தமிழ்த் தொண்டாற்றினார். 4000 அறிவியல், பொறியியல் கலைச்சொற்கள் அடங்கிய ‘கலைச்சொல்’ தொகுப்பினை இத்தமிழ் மன்றத்தின் மூலம் வெளியிட்டார். படிக்கும் பொழுதே கல்லூரி ஆண்டு மலர்களிலும் கலைக்கதிர், தென்மொழி முதலான இதழ்களிலும் கட்டுரைகள் வெளியிட்டார். படிக்கும் பொழுது இவர் பெற்ற படைப்பார்வம் இன்றுவரை தொடர்ந்து அறிவியல் தமிழ்ப்படைப்பாளராகத் திகழ்கிறார்.

  புதுதில்லியில் உள்ள இந்தியத் தொழில் நுட்பக்கழகத்தில் (I.I.T.) மின்முறைமைத் திட்டமிடல்(Power System Planning) ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார்(1983).

பின்வருவன முனைவர் பொன்னவைக்கோவின் வல்லமைத் துறைகளாகும்.

மின்திறன் முறைமைத் திட்டமிடல்(Power system Planning)

இணையவழிக் கல்வி(Virtual Education)

கணியப்பொறியியல்(Software Engineering)

கணிணி ஒப்புருவாக்கமும் படிம ஆக்கமும் (Computer Simulation and Modeling)

செயலாக்க ஆய்வு உத்திகள்(Operation Research Techniques)

மரபு வழிக் கணிப்புநெறி              Genetic Algorithm.

நரம்பு வலைமப்பணி(Neural Network)

தெளிவிலி ஏரணம்(Fuzzy Logic)

கணிணிப் பாடத்திட்ட மேம்பாடு(Computer curriculum Development).

வழி நடத்திய ஆய்வுத்திட்டங்கள்:

முனைவர் பட்ட ஆய்வுகள் (15), இளமுனைவர் (M.Phil) பட்டஆய்வுகள் (16), முதுகலை பொறியியல் பட்ட ஆய்வுகள் (7), இளங்கலை பொறியியல் பட்டம் ஆய்வுகள் (40) ஆகிய வகுப்புகளுக்கான ஆய்வு வழிகாட்டியாகத் திறம்பட நெறிப்படுத்தி யுள்ளார்.

பன்மொழியறிவு

  1. தமிழ், 2. ஆங்கிலம், 3. இந்தி, 4. பிரஞ்சு, 5. அரபி, 6. செருமன். மொழிகளைப் படிததவர்.
  2. மலையாளம், 2. கன்னடம், 3 தெலுங்கு மொழிகளைப் புரியும் அறிவர்.

பணிப்பாங்கு

தமிழ்நாடு மின்வாரியத்தில் புலப்பொறியாளராகத் தன் பணிவாழ்க்கையைத்(1969-1970) தொடங்கினார். அடுத்து அங்கேயே உதவிப்பொறியாளர் ஆனார். தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இந்தியன் அறிவியல் கழகத்திலும்(IISc) புதுதில்லியில் உள்ள பாரத மிகு மின் நிறுவனத்திலும்(BHEL) உதவிபொறியாளராகவும்ப் பணியாற்றினார்.

புதுதில்லியில் ஊரக மின்வாரியத்திதல் தனியதிகாரியாகப் பணி மாறிச்சென்றார்(1977 – 1984) எனவே, அடுத்து ஐந்தாண்டுகள் இலிபியாவில் பணியாற்றினார். இலிபியாவில் திருபோலியில் மின்கட்டமைப்பு நிறுவனத்தில்(ECCO, Tripoli) ஆட்சிக்குழுச்செயலர் & அறிவுரைஞர் ஆகப்(1984-1986) பணியாற்றினார்.

ஆடத் தெரிந்தவர் கால் ஓரிடத்தில் நிற்காது. அதுபோல் திறமையானவர்கள் இயங்கிக்கொண்டே இருப்பார்கள். பொன்னவைக்கோவும் இவ்வாறு பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். இலிபியாவில் இவரது பணி கல்வித்துறையின்பக்கம் மடைமாற்றமானது. ஃகூன்(HUN) நகரில்   நிறுவனத்தில்(HIMEE) பேராசிரியராகப்(1986 – 1989) பணியேற்றார்.

அடுத்துத் தமிழகம் திரும்பினார். திருச்சிராப்பள்ளியில் உள்ள மூகாம்பிகை பொறியியல் கல்லூரியிலும்(1989 – 1993)மண்டலப் பொறியியல் கல்லூரியிலும்(1993 – 1995) கணிப்பொறித்துறையின் தலைமைப்பேராசிரியர் ஆகக் கல்விப்பணியைத் தொடர்ந்தார்.

ஈடற்ற இணையத் தமிழ்ப்பணி

தமிழ் வழிக் கணிணியியலையும் கணிணி வழித் தமிழியலையும் வளர்க்கும் பேரார்வத்தில் செயல்பட்டார். இதற்கேற்ப தமிழ் இணையப்பல்கலைக் கழகத்தின் முதல் இயக்குநராகப் (2000 – 2003) பொறுப்பேற்றார்.

உலக மக்கள் பல் வேறு வளர்நிலைகளில் தமிழைக் கற்கவும் தமிழ், தமிழர் வரலாறு, பண்பாடு, நாகரிகம், கலை முதலானவற்றின் சிறப்புகளை அறியவும்  சான்றிதழ்க்கல்வி, பட்டயக்கல்வி, பட்டக்கல்வியை நடைமுறைப்படுத்தினார். மின்-நூலகம்அமைத்துச் சங்க இலக்கியம் முதல் இக்காலம்வரை இலக்கியங்களைப் படிக்கவும் தரவிறக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தார்.

அடுத்துத் திரு இராமசாமி நினைவுப்(SRM) பல்கலைக்கழகத்தின் இணையக்கல்வி இயக்குநராகப்(2003-2007) பணியாற்றினார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாங்கான பணிகள்

இவரது சிறப்பான கல்விப்பணியும் ஆட்சிப்பணியும்  அரசால் அறியப்பெற்றுப் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணை வேந்தராக(2007 – 2010) அமர்த்தப்பட்டார்.

செயல்செய்வாய் தமிழுக்குத்

துறைதோறும் துறைதோறும்

சீறி வந்தே!

என்னும் பாவேந்தர பாரதிதாசன் கட்டளையை ஏற்று இப்பல்கலைக்கழகத்தின் ஆட்சி மொழியாக – கல்விமொழியாகத் தமிழை நடைமுறைப்படுத்தினார். தமிழ் வழிபாட்டு மொழியாக நிலைப்பதற்கு வழி வகுக்கும் வண்ணம் அருட்சுனைஞர் பட்டயப்படிபை அறிமுகப்படுத்தினார். மாணாக்கர் எம் மொழியினராக, எந்நாட்டவராக இருப்பினும் தமிழைப்படிக்க விதி வகுத்தார். முனைவர்பட்ட ஆய்வேடுகள் தமிழில் தரப்பட வேண்டும் என்னும் விதிகளை உருவாக்கி ஆய்வாளர்கள் தமிழறிய வழி வகுத்தார்.

 மேலைநாடுகளில் மேற்படிப்பு படிக்க 4 ஆண்டு பட்டப்படிப்பு தேவை. எனவே, பல்கலைக்கழகநல்கை ஆணையத்திற்குக்  கருத்துரு அளித்து அதன் ஏற்பில் நான்காண்டு பட்டப்படிப்பைப் பல்கலைகழகத்தின் இணைவுக் கல்லூரிகளில் தொடங்கினார்(2009).

மின்னியல்-மின்னணுவியல் பொறியாளர்கள் நிறுவனத்தின் (Institute of Electrical and Electronics Engineers) கருத்துக்கற்றை(IEEE Spectrum) என்னும் ஆங்கில இதழைத் தமிழில் மொழிபெயர்த்துத் தொடர்ந்து வர வழி செய்தார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்  அறிவியல் தொழில்நுட்ப இதழ் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளுடன் வெளியிட ஏற்பாடு செய்தார்.

செய்தி மடல், ஆண்டறிக்கை என எல்லாவற்றிலும் தமிழ் இடம் பெறச்செய்து பல்கலைக்கழகத்தைத் தமிழ் மணமாக்கினார்.

 இவரது பணிக்காலத்தில் 32 நூல்களைப்  பல்கலைக்கழகப் பதிப்புத்துறை வெளியிட்டு்ளளது.

 மீநுண்அறிவியல் தொழில் நுட்பமையம்(Centre for Nano Science and Nano Technology),உயர் அழுத்த ஆய்வு மையம் (High Pressure Research Centre), புவியியல் தகவல் முறைமை (GIS Technology Centre),உயிரியத் தொழில்நுட்ப மையம், சித்தா-ஆயுர்வேதா மருந்துகள் ஆய்வு மேம்பாட்டு மையம், கலைஞர் வளர்தமிழ் ஆய்வு மையம், நேரு உயராய்வு மையம், அண்ணா இருக்கை, உயிரின வதையின்றி கணிப்பொறி தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி உயிரியஆய்வு செய்ய சுவிட்சர்லாந்து  உதவியுடன் மகாத்மா காந்தி-தோரன்கேம்ப்பு ஆய்வு மையம், என ஆராய்ச்சி மேம்பாட்டிற்கும் கல்வி நலனுக்குமாகப் பல மையங்களைத் தோற்றுவிததார்.

மேலும் கலைஞர் இலக்கிய களஞ்சிய வெளியீட்டுப் பணி, ஓலைச்சுவடிகளை இணையத்தில் பொதிவு(PDF) வடிவில் இடம்பெறச்செய்து பகுப்பாய்விற்கு உதவுதல் முதலான பணிகளையும் மேற்கொண்டார்.

விளையாட்டிற்கான ஓடு தடம், சிறப்பான விளையாட்டுத்திடல், கைப்பந்து, மட்டைப்பந்து, எறிபந்து, கூடைப்பந்து விளையாட்டுத் தளங்கள், மாணவர் குறைதீர் மையம், பெண்கள் விடுதிகளுக்கும் ஆண்கள் விடுதிகளுக்கும் தனித்தனி உணவகங்கள், அன்றாட வருகையாளர்களுக்காக இரண்டு இடங்களில் சிற்றுண்டிச் சாலைகள், விருந்தினருக்கு உண்டி உறையுள்வசதி என மாணாக்கர், ஆசிரியர்கள், பணியாளர்கள், வருகையாளர்கள் என அனைத்துத்தரப்பினர் நலத்திலும் கருத்துசெலுத்தி அனைவர் பாராட்டையும் பெற்றுள்ளார்.

 வணிக வளாகம், வருகைதரு பேராசிரியர் குடியிருப்பு, திருமணமான மாணவர் குடியிருப்பு,  தொடக்கப்பள்ளி, ஐந்தடுக்கு மருத்துவமனை போன்றவற்றிற்கான திட்டங்களை அளித்துப் பணிகளைத் தொடக்கி வைத்துள்ளார்.

பார் போற்றும் தமிழ்ப்பேராயப் பணி

பணிக்கால நிறைவிற்குப் பின்னர்,  தி.இரா.நி.(SRM) பல்கலைக்கழக முதன்மைக் ௧ல்வி அதிகாரி(2010-2011), அதன் துணைவேந்தர்(2011-2014), பாரத்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்(2014 – 2017) அதன் இணைவேந்தர்(4/2017-9/207) எனக்கல்விப்பணியாற்றி இப்பொழுதுநிகர்நிலைப் பல்கலைக் கழகமாகிய விநாயகா கல்விக்குழும ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்விப்பணியாட்சியராகத்(Provost)  திகழ்கிறார்.

 தி.இரா.நி.(எசு.ஆர்.எம்.) பல்கலைக்கழகத்தை முன் மாதிரிப் பல்கலைக்கழகமாக மாற்றும் முனைப்புடன் சிறப்பாகப் பணி யாற்றியுள்ளார். இவரது பணிகளில் நின்று புகழ் தரும் நிலையான பணி தமிழ்ப்பேராயம்(Thamizh Academy) உருவாக்கியது. தமிழின் மரபுச் செல்வங்களை இளைய தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லுதல், புதிய தமிழ்ப் படைப்புகளையும், தமிழ்ப்பணி ஆற்றி அருந்திறல் ஆற்றியுள்ள தமிழ் அறிஞர்களையும் பாராட்டி, உரூபா 22 இலட்சம் பெறுமான 11 விருதுகளை வழங்குதல், தமிழ் நூல்களைப் பிறமொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுதல், தமிழ் ஆராய்ச்சியைச் செழுமைப்படுத்துதல், அறிவியல் தமிழை வளர்த்தல், தமிழ்ச் சமயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் பட்டயம், சான்றிதழ் படிப்புகளை வழங்குதல், அயலகத்தமிழ் ஆசிரியப் பட்டயப் படிப்பு வழங்குதல், கருத்தரங்கு, பயிலரங்கு, ஆய்வரங்குகள் நடத்துதல், கணினித்தமிழ்ப் பயிற்சியளித்தல், தமிழ் கணியப்பொருள்(மென்பொருள்) உருவாக்குதல் போன்ற பல்வேறு பணிகளைத் தமிழ்ப்பேராயம் ஆற்றிவருகின்றது.

படைப்புச்சிறப்பு

24 புத்தகங்கள், 114 ஆய்வுத்தாட்கள், 54 ஆய்வறிக்கைகள் முதலான படைப்புகளுடன்

  1. ‘கணிமொழி சி’ – தமிழ்க் கணிப்பொறி மொழி
  2. ‘இணைய மொழி யாவா’ – தமிழ்க் கணிப்பொறி மொழி
  3. ‘இணையத் தளம் தேடு பொறி’, – தமிழ்த்தேடு பொறி
  4. தமிழ் விசைப்பலகை (TamilNet 99 Key Board)
  5. தமிழ் அனைத்து எழுத்தரு தரப்பாடு (TACE-16)

ஆகிய உருவாக்கங்களும் இவருக்குப் பெருமை சேர்ப்பன.

சிறப்பிக்கும் விருதுகள் சில

‘பாரதி சேவைச்செம்மல்’ விருது(பாரதியார் சங்கம், சென்னை,2014), ‘திருவள்ளுவர் விருது’ (செந்தமிழ்ச்செல்வர்) – சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம் – 2014, ‘செந்தமிழ்க் காவலர்’ விருது – திருவள்ளுவர் மன்றம், இராசபாளையம் – 2014, சாதனைத்தமிழர் விருது – பாரதி தமிழ்ச்சங்கம், கொல்கத்தா– 2012, பாரத ஒளி விருது,இளவரசர் இறையாண்மை முறைமை பெருந்தகை அண்டார்டிகா பெருந்தகை விருது(Knights of Sovereign order of Princes and Knights of Antarcticland),பிரேசிலில் வழங்கிய மதிப்புறு சான்றர்(Certificate of Honour), பாராட்டுச்சான்றிதழ், வாணாள் அருந்திறலர் விருது, தமிழுக்குச் சிறப்பான பணியாற்றுநர் விருது,சிறந்த பொறியாளர் விருது 2000, தென்னாப்பிரிக்க விருது 2017, சிறந்த திட்ட உரு விருது என நம் நாட்டிலும் பல்வேறு அயலக நாடுகளிலும் இவரது பணிகளைப்பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளனர்.

அயலகப் பயணங்கள்

1. அமெரிக்கா(1981). 2. கனடா(1981), 3. இங்கிலாந்து(இலண்டன்)(1981, 87), 4. சுவிட்சர்லாந்து(1987), 5. இத்தாலி(1987), 6. மால்டா(1987), 7. இலிபியா(1984-89), 8. நேபாளம்(1982), 9. சிங்கப்பூர்(2000),10. இலங்கை(2000, 2001, 2002), 11. மலேசியா(2001, 2007. 2013, 2014), 12. சப்பான்(2000, 2007), 13. தென்ஆப்பிரிக்கா(2002, 2014), 14. மரூசியசு(2002), 15. ஆத்திரேலியா(2013), 16. சீனா(2004, 2006), 17. கி.செருமனி(2005), 18. கானா(2004, 2006. 2012), 19. நெதர்லாந்து(2005), 20. தாய்லாந்து(2007, 2013), 21. தாய்வான்(2012) என முப்பதுக்கும் மேற்பட்ட அயலகப் பயணங்களை மேற்கொண்டு 21 நாடுகளுக்குப் பணியாற்றவும் பரப்புரை யாற்றவும் சென்று வந்துள்ளார்.

தமிழ் வளர்ச்சிக்கழகத் தலைவர்(2017 முதல்),  உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத் துணைத்தலைவர்(மே 2015 முதல்), தமிழகப்புலவர் குழு உறுப்பினர் (2014 முதல்) முதலான பல்வேறு பொறுப்புகள் மூலம் தமிழ்த் தொண்டும் தொழில்நுட்ப அமைப்புகளில் ஏற்றுள்ள பொறுப்புகள் மூலம் கணிநுட்பப் பணிகளும் ஆற்றி வருகிறார்.

குடும்பம்

 தஞ்சை மாவட்ட அச்சுதமங்கலம் ஊரைச் சேர்ந்த மறைத்திரு விசய கோபாலசாமி(உடையார்)-மறைத்திருவாட்டி வி. தாமரைவதனி அம்மையார் இணையரின் இளைய மகளான திருவாட்டி முனைவர் பூமா இவரின் இல்லத்தரசியாவார். மனையறிவியலிலும் குமுகவியலிலும் பட்டங்கள் பெற்றுள்ள இவர் சைவச்சமையல் உலகம்  அசைவச்சமையல் உலகம் ஆகிய நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் படைத்துள்ளார்.

அமெரிக்கா, பிரான்சு. லண்டன், இத்தாலி, சுவிட்சர்லாந்து, மால்டா, இலிபியா, துபாய், சிங்கப்பூர், மலேசியா, சப்பான், தென்னாப்பிரிக்கா, மொரீசியசு  முதலான அயல்நாடுகளுக்கும் சென்று வந்தவர். திருவாட்டி முனைவர் பூமா பொன்னவைக்கோ கணவருக்கேற்ற தமிழார்வம் மிக்க மனை மாண்பினராகத் திகழ்கிறார்.

இவ்விருவருக்கும் கல்வியில் சிறந்த நன்மக்கள் இருவர் உள்ளனர். மூத்தவர் முனைவர் பொறியாளர் பொ.பூங்கோவன், அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சேண்டகிளாரா நகரில் அமைந்துள்ள பிரோகேடு(Brocade) நிறுவனத்தில் துணைத்தலைவராகப் பணியாற்றுகிறார். இவர் மனைவி பொறி. பரணி பூங்கோவன் மைக்கிரோசாஃப்ட்டு நிறுவனத்தில் கணிப்பொறிப் பொறியாளராகப்  பணியாற்றுகிறார்.

இளைய மகன் முனைவர் பொறி.பொ.கோவேந்தன் அயலகங்களில் சில புகழ்மிகு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். இப்போது மாணாக்கர்களுக்கான செய்முறை அறிவியல் கல்வியைக் கற்பிக்கும் தூலருன் (DooLurn) என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் மனைவி மருத்துவர் சரசுவதி கோவேந்தன். சென்னை இ.தொ.க.(I.I.T) மருத்துவ மனையில் மருத்துவராகப் பணியில் உள்ளார்

மூத்தவர் வழி நித்திலா பூங்கோவன்(15) எனும் பேத்தியும் நிரல் பூங்கோவன்(8) என்னும் பேரனும் உள்ளனர். இளையவர் வழி யூகி கோவேந்தன்(8) என்னும் பேரன் உள்ளார்.

 கால் பதித்த இடங்களில் எல்லாம் முத்திரை பதிக்கும் வித்தகரான முனைவர் பொறிஞர் மு. பொன்னவைக்கோ மூவாத்தமிழ் போலும் என்றென்றும் வாழ்க!

 இலக்குவனார் திருவள்ளுவன்