58kandhuvatti02

கந்துவட்டியாளர்களுக்கு  அஞ்சித்

தலைமறைவு வாழ்வு நடத்திவரும் உழவர்கள்

உயிருக்குப் பாதுகாப்பு கேட்டுத்

தமிழக முதல்வருக்கு முறையீடு

  தேனிமாவட்டத்தில்; கந்துவட்டித் தொழில் செய்பவர்களுக்கு அஞ்சித் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, குள்ளப்புரம், செயமங்கலம், மேல்மங்கலம் பகுதியில் கடந்த சில வருடங்களாகப் போதிய மழையின்மையால் வேளாண்பெருமக்கள் கந்துவட்டிக்கு வாங்கிப் பயிர்த்தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள்.

  அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வேளாண்மை நடைபெறாததால் இழப்பு அடைந்தனர். ஆனாலும் தாங்கள் வாங்கிய வட்டிக்கு முறையாக மாதாமாதம் வட்டி கொடுத்து வந்துள்ளனர். இருப்பினும் ஒரு காலக்கட்டத்தில் வட்டி கட்ட முடியாமல் தவித்தனர். இதனைப் பயன்படுத்தி கந்துவட்டிக்கார்கள் அவர்களிடமிருந்து வாகனம், வீடு, நிலம் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு மேலும் நிரப்பப்படாத காசோலை, கடன்பத்திரங்களில் தாங்கள் விருப்பப்படி பணத்தை நிரப்பிக்கொண்டு கந்துவட்டிக்கு வாங்கியவர்களை இரவு நேரத்தில் மிரட்டுவதும், கும்பலமாகச் சேர்ந்து கொண்டு கடத்திக்கொண்டு போய் தங்கள் தோட்டங்களில் வைத்து அடித்து பணத்தைக்கொடுத்த பின்பு விடுவிப்பதும் என வன்முறையை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

  இதில் பலர் பாதிக்கப்பட்ட இரவோடு இரவாக அண்டை மாநிலமான கேரளா, கருநாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கூலி வேலைக்குச் சென்றனர். கந்துவட்டிக்கும்பல் அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு அங்கே சென்று அடித்து வந்து சித்திரவதை செய்து பணத்தை வாங்குகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் தற்கொலை செய்துள்ளனர்.

58heavyinterst_syed

காவல்துறையினர் வயிற்றுவலி எனப் புகாரைப் பதிவு செய்து வழக்கை முடித்துவிடுகின்றனர். இதன் தொடர்பாகப், பாதிக்கப்பட்ட சையது என்பவர் கூறுகையில், “நான் பார்த்த பயிர்த்தொழிலுக்கும் கால்நடைத் தொழிலுக்கும் கந்துவட்டிக்குப் பணம் வாங்கினேன். என்னால் தொடர்ந்து முதலைக் கொடுக்கமுடியவில்லை. ஆனால் மாதாமாதம் வட்டியை மட்டும் கொடுத்து வந்தேன். இருப்பினும் வட்டியைக் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் கந்துவட்டிக்காரர்கள் எனக்குக் கொலைமிரட்டல் விடுத்தனர். இரவு நேரங்களில் என்னைக் கடத்த முயற்சி செய்தனர். அவர்களிடமிருந்து தப்பித்து வேறு இடங்களுக்குச் சென்று தலைமறைவு வாழ்க்கை நடத்திவந்தேன். தற்பொழுது உடல்நலக்குறைவு ஏற்பட்டு என்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பி வந்துள்ளேன். நான் வந்ததை அறிந்தவுடன் கந்துவட்டிக்கார்கள் பணத்தைத் தராவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுகின்றனர். வீரணன் மகன் பெருமாள், சேக்மைதீன் மகன் காசாமைதீன், அப்துல் கரீம் மகன் நாசர், முத்துகாமு, முத்துச்சாமி மகன் செந்தில், பெருமாள் மகன் சேகர், கெண்டை பூசாரி மகன் சேது, கோட்டைச்சாமி மனைவி இலட்சுமி, குணசேகரன் மனைவி தனலெட்சுமி, அப்பர் ஆகியோர் என்னிடம் வெற்றுப் பத்திரத்திலும், கடன் ஆவணங்களிலும் கையெழுத்து வாங்கித் தங்கள் விருப்பப்படி பணத்தை எழுதி என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். எனவே என்னுடைய உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும் எனத் தமிழக முதல்வருக்கும், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளருக்கும் முறையீடு அளித்துள்ளேன்” என்றார்.

  இது போன்று தேனிமாவட்டத்தில் பெரியகுளம், தேனி, போடி, கம்பம், கூடலூர் முதலான ஊர்களில் வசிப்போர் கந்துவட்டிக்கு பயந்து ஊரைவிட்டு ஓடியுள்ளனர். ஒரு சிலர் தற்கொலை செய்துள்ளனர்.

ஆதலால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கந்துவட்டித்தொழில் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை  எடுக்கவேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்க்கின்றனர்.

காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கலாமா?58vaigai aneesu